Sunday, September 9, 2007

அன்னையே வணங்குகிறேன்!




அன்னையே வணங்குகிறேன்!

அழகிய மலரினில் அமர்ந்திட்ட தேவியே
அடியவன் வேண்டுதல் கேட்டிடு நீ!
தழலினில் விழுந்திட்ட புழுவினைப் போலிங்கு
தவித்திடும் இவன் குரல் கேட்டிடு நீ!
நிழலினைப் போலிங்கு தொடர்ந்திடும் விதியெனை
நிம்மதி குலைப்பதைப் பார்த்திடு நீ!
இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!

கொடுமைகள் புரிந்திட்ட அசுரரைக் கொன்றன்று
கொற்றனைக் காத்திட்ட தேவியும் நீ!
அடுத்தடுத் தெனையிங்கு ஆட்டிடும் ஊழ்தனை
அற்றொழித் துடனென்னைக் காத்திடு நீ!
விடுதலை யொன்றின்றித் துடித்திடும் அடியவன்
வீழ்ந்துந்தன் பாதங்கள் பணிந்திடுவேன்!
குடுகுடு வென்றுடன் சடுதியில் காத்திட
குமரனின் தாயுன்னை வேண்டுகிறேன்!

ஐங்கரன் தாயுனை அனுதினம் போற்றியே
அடிதொழு துளமுடன் வணங்கிடுவேன்!
பைங்கனி சுவையொத்த உன்பெய ரோங்கிட
பாமரன் நானுனைப் போற்றிடுவேன்!
பைங்கிளி தோளினில் பாங்குடன் அமர்ந்திட
பார்ப்பவ ருளம்குளிர் விப்பவளே!
பைங்குழல் மகுடத்தைத் தாங்கிட ஜோதியாய்
பாரினில் வந்தெனைக் காத்திடுவாய்!

No comments:

Post a Comment