Thursday, June 12, 2008

என்னுயிர்த்தோழி மஞ்சு!






















தன்வச மாக்கினள் தரணியெலாம் அன்பினால்
தன்னையே தந்தென் மனதினில் நிறைந்தனள்
உன்விதி உன்கையில் உன்வெற்றி உறுதியே
என்வசம் தந்திடு சோகமெலா மென்றனள்...


என்றேனும் என்கண்ணில் நோக்கிடில் நீர்த்திவலை
அன்றெல்லாம் மனம்கசிந்து கொண்டனள் மனக்கவலை
நன்றே பலபகிர்ந்து நகையூட்டி எனைஎன்றும்
முன்றானை தனில்முடிந்து கொண்டனள் என்தாயாய்...


நானுண்ணக் கண்டென் முகம்நோக்கி நின்றனள்
தேனுன்னும் குழந்தையாய் தெவிட்டாமல் நோக்கினள்
ஊனில் கலந்தேன் உதிரத்தில் கரைந்தனள்
வானில் உறைந்திட்ட என் தாயை ஒத்தனள்...


காரிருள் தனில்மூழ்கிக் கரைந்திட்ட என்னையே
ஓரிரு நாட்களில் உயிரூட்டி நிறைத்தனள்
தூரிகை எனும் அன்பால் தூயனாய் என்னையே
மாரிபோல் பொழிந்தென் மனதில் உறைந்தனள்...


முத்தாய் நகைத்து்என் முகம்துடைத்து கொஞ்சினள்
வித்தாய் நல்லெண்ணம் தனைஎன்னில் விதைத்தனள்
சொத்தாய் அன்பையும் பண்பையும் கொண்டனள்
அத்தாய் யாருமில்லை என்னுயிர்த் தோழியே!

3 comments:

  1. விமரிசனம் என்று இருக்கவேண்டும் தோழரே..!

    ReplyDelete
  2. வணக்கம் கலைவேந்தன் அவர்களே உங்களது கவிதைகள் அனைத்தும் கண்டேன் அருமை.நன்றாக மரவு கவிதை எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.நன்றி
    அன்புடன்
    கல்பனாசேக்கிழார்
    http://kalpanase.blogspot.com

    ReplyDelete