ஒரு கவிஞனின் கடைசி வரிகள்...
அந்த கவிஞன் பிறந்த போது
அவன் தொப்புள் கொடியிலிருந்து
தாயைப்பிரித்து புதைக்க நேர்ந்தது...
முலைப்பால் இல்லாது பிழைப்பானா இவன்
மலைப்பால் வியர்த்தன உற்றவர் மனங்கள்...
தாயின் ஸ்தானத்தை கொடுத்துத் தாங்கின
பசுவின் ஸ்தனங்கள்...
ஒற்றைக்கொடியாய் உலாவந்தது
அந்த சிற்றுளி...
அது செதுக்கிய சோகச்சிற்பங்கள்
காட்சிக்கின்றியே கரைந்து போயின...
வந்த தாயின் முலைக்கரங்கள்
சொந்த குழவிக்கே அன்புக்கரங்களாயின...
சோர்ந்து போன இந்தக் குழந்தை
சோகவரிகளை சொந்தமாக்கியது...
ஓர்வயதில் மெல்ல நடந்து
தானே விழுந்து தானே எழுந்து
காயங்களைக் கணக்குப் பார்த்து
சாபங்களை லாபங்களாக்கின..
இரண்டாம் வயதில் ஈரடிவைத்து
முரண்டு பிடித்த விதியின்
முரட்டுக்கரங்களை
விரட்டி வளர்ந்தது அந்தக் குழந்தை...
சோற்றுப்பாலிலும் நீற்றுப்பாலிலும்
ஆற்றிக்கொண்டது தன் அரும்பசியை
வேற்றுமனிதர் தேற்றுவாரின்றி
வேதனை தீர்த்தது மூன்றாம் வயதில்...
நல்ல குழந்தைகள் நாலில் பேசுமாம்
தெய்வக்குழந்தையோ நாட்பட பேசுமாம்..
ஜுனைதாவின் ஃப்ராக்கைப் பிடித்து
சுற்றிக்களித்தது நான்காம்வயதில்...
ஆரம்பப் பள்ளியின் வாசலைமிதித்து
வாழ்க்கையின் புதுக்கணக்கு போடச்சென்றதும்
தமிழைக்கரைத்துக் குடிக்கப்போகுமுன்
அகரம் முதலாய் அளந்ததும் ஐந்தில்...!
குளத்தங்கரையின் குதூகலப்பள்ளியில்
நிலத்தடி நீரும் அமெரிக்க கோதுமையும்
வளர்த்து வந்தது வாடிய பயிரை
வயிற்றுக்காகவே விடுமுறைஇல்லை...
பட்டு நூலும் சொட்டுத் தேனீரும்
விட்டுவிடாமல் உயிரைக்காத்ததாம்..
வரிக்கு வரிதமிழைக் குடித்தவன்
வரிக்கியுடன் வாழ்க்கை கழித்தான்..
பத்மினி அக்காவும் பானுமதி அக்காவும்
தனலட்சுமி தோழியும் விஜயாவும் வாசுகியும்
துரைப்பயலும் சேகரும் சேர்ந்து
பத்து வயதுவரை இவனுடன்
பாங்காய் களித்தனர் பால்யவயதில்...
தொடர வாய்ப்புண்டு...!..
No comments:
Post a Comment