Friday, September 21, 2012

நீ அழகுதான் கண்ணே..

Image


நீ அழகுதான் கண்ணே!


சித்திரத்தில் கண்ட உன்னை
சிதறாமல் பார்த்தபோது
தத்தித்தாவி தகித்துப்போய்
தவிக்கின்ற இதயத்தை
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
பலவிதமாய் முயற்சித்தேன்!
ஒத்திருக்க வில்லையடி
உன் முகமும் சித்திரமும்!


முதன் முதலாய் கண்டுவிட்டு
முத்தமிட ஆசைப்பட்டேன்...
வதனம் கண்டு தயங்காமல்
வாரிக்கொள்ள ஆசைப்பட்டேன்...
தனியான இடம் பாத்து 
தழுவிகொள்ள் துடித்திருந்தேன்....
இனியாரும் நமைப்பிரிக்க 
இயலாதென யோசித்தேன்!


வாகனத்தில் நாம் வந்தோம்
வானத்தில் நான் மிதந்தேன்
பாகம் ஒரு உமை கொண்ட
பரமசிவன் போல் களித்தேன்...
யாரும் பார்க்காமல் 
இன்பமாய் தழுவிகொண்டேன்
சீரும் சிறப்புமாய்
சிந்தாமல் வாழவைப்பேன்!


சக ஊர்தி பார்க்குமென்று 
சங்கடங்கள் மிகக் கொண்டோம்
சகபயணி இலையெனினும் 
சாரதியின் கண் மறைத்தோம்
முகம்பார்த்து அகம்வேர்த்தோம்
முடிந்தவரை மூச்சுவிட்டோம்!
நகம் கடித்து தரைசுரண்டி நீ
நகைமுகத்தால் நளினம் செய்தாய்!


அகமகிழ்ந்து அணைத்துன்னை 
இட்டதொரு கனிமுத்தம்
முகமலர்ந்து ஏற்றனைநீ 
முன்வந்து முறுவலித்தாய்..
சிகைகோதி உன்கழுத்தை 
சீண்டிவிளை யாடுகையில் 
முகைவிட்ட முன்கொடிபோல்
மடிதன்னில் விழுந்தனை நீ..


சிரந்தாழ்த்தி நாம்செய்த 
சிறுக்குறும்புதனை எண்ணி
வரந்தந்த தேவனுக்கு 
வாழ்த்துகளைச் சொரிந்துநின்றோம்..
புரவிதனில் போகுமொரு 
புதுவீரன் நானானேன்..
இரதமொன்றில் வீற்றிருக்கும்
இலக்குமியாய் நீயானாய்..


எல்லையின்றி நீண்டிடாதோ
எம்பயணம் என்றேங்கி 
நல்லாள் நீ என்மார்பில் 
நாணியே நீசுகித்தாய் 
வில்லை வளைத்தொரு 
விந்தையைச் செய்தான்போல்
முல்லைக் கொடியாளுன்
முகம் நோக்கி கர்வங்கொண்டேன்..!

No comments:

Post a Comment