Sunday, April 24, 2011

காதல் - சில குறிப்புகள்..!






1.வாழ்வும் இறுதியும்..



அன்றோரு நாள் 
நெற்றியில் 
குங்குமமும் விபூதியும் 
ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து 
இறைவழிபாட்டுக்கென 
கறை படா வெள்ளுடையில் வந்தாய்...
குங்குமம் நீ தரும் வாழ்வையும்
விபூதி என் இறுதியையும் 
அப்போதே காட்டி நின்றதோ...?





2. ஒட்டிய உதடுகள்..!

ஓர் இனிய கணத்தில்
உன் உதட்டை என் உதட்டால்
ஒற்றி எடுத்தேன் நான்...
மின்னலாய் ஒளிப்புன்னகை 
உன் முகத்தில் விரியக்கண்டேன்...

அடுத்த கணம்...

கார்மேகம் சூழ்ந்தது உன்னை...

நாம் இணைவோமா என்று 
ஏக்கக்குழந்தையாய் கேட்டாய் நீ..

உன் பிணைக்கைதியை 
இப்படிக் கேடகலாமா என்றேன் நான்...





3. உனக்கு மட்டும் ஏன்...?

இருமலும் ஜலதோஷமும்
ஒன்றாய் வாட்டுகிறதென
நாம் சந்தித்த கணங்களில் 
சிந்திக்கொண்டே முனகினேன்..

என் அருகில் உராய்ந்து 
முகமெல்லாம் உரசி 
எதையோ உறிஞ்சி சுவாசித்தாய்..

என்ன செய்கிறாய் என 
புரியாமல் கேட்டேன்...

உனக்கு மட்டுமேன் இந்த உபாதை?
எனக்கும் வரட்டும் ஜலதோஷமென்றாய்..

நான் சிலிர்த்துப் போனேன்...!





4. சாகவும் தயார்..!

வாழ்ந்து சலித்துவிட்டது.
சாகத்தோன்றுகிறது என்று 
சோகத்துடன் சொன்னேன் நான்...

கதிரவன் மறைந்ததும்
கூம்பிடும் தாமரையாய்
உன் வதனம்
சுருண்டு போயிற்று...

என் அருகாமை இருந்துமா அப்படி..
எனில் என்னை நேசிக்கவே இல்லையோ..?
எப்படி தோன்றும் அப்படி என்றாய்...

என் இறுதி ஊர்வலத்தில் 
நீயும் கலந்துகொள்வாய் எனில்
தினமும் சாகத் தயார் தான் என்றேன்...!





5. சரிதானா இது..?

பலவீனமான ஒரு கணத்தில் 
உன் இடையைச் சுற்றி வளைத்தேன் நான்...

புவியீர்ப்பு விசையினும் மேலாய் இந்த
கவியீர்ப்பு விசை வலிமையானது என்றாய்...

சரித்தேன் நான்
சரிந்தாய் நீ..

சரிதானா என்றேன் ..
தெரியாது என்றாய்..

மணமாகும் முன் இது 
சரியா என்றேன்...
வெட்கமாய்க் கவிழ்ந்தாய்..

விலகினேன் நான்...!





6. வினாயகர் சம்மதிப்பார்...

காதல் எனக்கு சலிக்கிறது என்றேன்...
விசை அணைத்த தொலைக்காட்சியாய்
இருண்டது உன் முகம்...

காதல் தான் சலித்தது எனக்கு
கல்யாணம் செய்வோமா என்றேன்..

என் மாமன் என்ன சொன்னார் என்று
ஏக்கமாய்க் கேட்டாய் நீ...

காதலித்தது நாம்..
கலக்கப்போவதும் நாம்..
அவர்கள் சம்மதமெனில் நல்லது ..

இல்லையெனில்
நமது கல்யாணத்திற்கு 
வினாயகர் சம்மதிப்பார் என்றேன்..

விண்மீன்களாய் உன் 
கண்மீன்கள் ஒளிர்ந்தன..





7 ஆடை நீ மீதி நான்...

ஏடு மிதக்கின்ற பாதாம் பாலினை
ஒரே பெரிய க்ளாஸில் 
இருவரும் குடித்தோம்...

ஆடையை நீ எடு மீதியை 
நான் அருந்துகிறேன் என்றாய்...

அர்த்தமுடன் சிரித்தேன்..

ஆடையை நான் எடுத்தால்
மீதியும் எனக்கே என்றேன்...

புரியாமல் வழக்கம்பொல் 
அசடு போலச்சிரித்தாய்..

அர்த்தத்தை காதில்
மெல்ல விளம்பினேன்...

அடச்சீ ... காமாந்தகா என்று
செல்லமாய் அடித்தாய்..

இன்றுவரை எனக்கு அது
வலிக்கவே இல்லை...!





8. மழையில் நனைந்த மலர்...

நாம் சுற்றித்திரிந்த ஒரு பொற்காலத்தில்
மழையில் நனைந்து உன் ஆடை
உன் உடலோடு ஒட்டிக்கொண்டது..

அனைவரின் பார்வைக்கும் 
இரையாகிறேன் என்று அழுதாய் நீ..

***************************

ஊரார் பார்வையை 
சட்டையே செய்யாமல்
என் மேல்
சட்டையே இல்லாமல்
உன்னருகில் ஒட்டி நடந்தேன்..

கடவுளாய் என்னை உயர்ந்து நோக்கினாய்..





9. மல்லிகையும் காதலியும்..

நானே கேட்காமல் 
மல்லிகைப்பூ வாங்கியே 
தரமாட்டாயா..? என்றாய்...

கடவுள் கூட கேட்டதில்லை 
அதனால்
வாங்கித் தந்து பழக்கமில்லை என்றேன்...

இன்று வரை நான்
மல்லிகைப்பூ வாங்கித் தரவே இல்லை...

என்றாலும் 
என்னை அதற்காய் நீ 
வெறுத்ததே இல்லை...!





10. ச்சீ ... போடா... படவா...

சிறு வயது முதலாய் 
எனக்கு ஒரு கனவென்றாய் ஒரு நாள்...

நான் தானே அந்த கனவு நாயகன்
என்றேன் பல்லிளித்தே நானும்...

ச்சீ... போடா ... என்றுவிட்டு
உதட்டைக் கடித்துக்கொண்டாய்...

ஆகா என் செல்லம் எனக்கு
வரமளித்துவிட்டது என்றேன்..

இப்படி அழைப்பது தான் 
அந்த கனவு என்று சொல்லி
தரையினில் கால்விரல் கோலம் போட்டாய்..

கடவுளின் வரத்திற்காய் 
பக்தனின் ஏக்கம் கேள்விப்பட்டதுண்டு...
வரம் தர ஏங்கும் கடவுளை
முதன் முதலில் காண்கிறேன் என்றேன்...

ச்சீ... போடா... படவா ... என்றாய்..
புல்லரித்துப் போய் 
புதுப்பூவாய்ச் சிரித்தேன் நான்...





11. கோபம்..

கோபம் வந்தால் 
என் மார்பில் 
செல்லமாய்க் குத்துவாய் நீ...

அதற்காகவே பலமுறை
கோபப்படுத்திப் பார்த்தேன் நான்..





12. ஐ லவ் யூ...

என் முதுகில் என்னவோ 
எழுதினாய் ஒரு நாள் நீ..

என்ன எழுதினேன் சொல் என்றாய்..

புரியவில்லை என்றாலும் 
ஐ லவ் யூ என்றேன் நான்...

ச்சீ.. போடா...
கண்டுபிடிக்க முடியாமல் 
திகைக்கமாட்டாயா சிறிது நேரம் என்றாய்...

உண்மையை மறைத்துப் 
புன்னகைத்தேன் நான்..





13. உவப்பு மூட்டை..

என்னை முதுகில் சுமக்க 
முடியுமா உன்னால் என்றாய் ஒருநாள்..

அஞ்சு மூட்டை சுமப்பவன் நான்..
இந்த 
பஞ்சு மூட்டையை மாட்டேனா என்றேன் நான்..





14. ஈர மிட்டாய்...

நீ காத்திருந்த கணங்களில் 
ஒரு நாள்
நான் வரத் தாமதித்தேன்..

கடைசித்துண்டு கடலைமிட்டாயை
உன் வாயில் நீ இட்ட கணம்
என் வரவால் வருந்தினாய்நீ...

எனக்கு 
உலர்ந்த மிட்டாயை விட
ஈர மிட்டாய் பிடிக்குமென்று
இதழ்களிலிருந்தே 
இதழ்களால் பறித்துக்கொண்டேன்...





15. பிறந்த நாள் ட்ரெஸ்..

உன்னை ஒரு முறை 
உன் பிறந்த நாள் ட்ரெஸில் 
பார்க்க வேண்டும் என்றேன்..

அடடா பிறந்த நாளுக்கு இன்னும் 
நாள் இருக்கிறதே என்றாய்..

இன்று கூட சாத்தியம் தான் என்று
நமுட்டுச்சிரிப்பு சிரித்தேன் நான்..

புரிந்த பின் என்னைத் 
துரத்தித் துரத்தி அடித்தாய் நீ...













































16. பார்த்தால் பசி தீருமா..?

மாலை நேரம் .. பூங்காவில் நாம்..

பசிக்கிறது என்றேன்..

என் தங்கமே.. கொண்டு வந்த லஞ்ச்சும் தீர்ந்ததே.. 

என்ன செய்வேன் என்று பதைத்தாய்..

நான் உன் மடியில் சாய்ந்துகொண்டேன்..

*******************************************************
*******************************************************

பார்த்தால் பசிதீரும் என்று சொன்னது பொய்யல்லவா என்றேன்..

ஏன் அப்படி சொல்கிறாய் என்றாய்..?

உண்டபின் தானே என் பசி தீர்ந்தது என்றேன்..

வெட்கமுடன் போடா படவா என்றாய்..





































17. பிரார்த்தனை..


எனக்கான தேவைகளுக்கு 
நான் செய்த பிரார்த்தனைகளை விட 
உனக்கானதே அதிகம் என்றேன்..

அட மடையா..

உன் பிரார்த்தனையே என்னை வேண்டி தானே..?
பின் எதற்காக இந்த அங்கலாய்ப்பு..?
சுயநலக்காரா...
என்று என் முகத்தில் இடித்தாய்..

களவு பிடிபட்டவனாய் 

காதல் தழுவ பார்த்தேன் நான்..
என்மேல்
கால் நழுவ சாய்ந்தாய் நீ..!

Friday, April 22, 2011

























வாழ்த்தும் வசவும்..!

வாழ்த்தே வரமாகும் விந்தையும் கண்டேன்
வாழ்த்தே சாபமாய் மாறவும் கண்டேன்..
வாய்க்குள் சுழல்கின்ற நாவும் தான் அறியுமோ
தூயமனத்தின் வாய்மையும் உணருமோ..?


வாழ்த்திய வாயினை வசப்படுத்தினேன்.
வசவிட்ட வாயினை என்செய்குவன் யான்?
போற்றிய மனமும் புன்னகைத்த முகமும்
தூற்றிய பின்னும் துலங்குதல் விந்தையே ..


புன்னகை அணிந்த நன்முகம் கண்டேன்
வெந்நீர் தெளிக்கும் சாரலும் உணர்ந்தேன்
மென்னகை மட்டுமே முன்னொரு நாளது
முன்நகை மறந்து முள்ளுமாய் ஆனது..!


போற்றினாய் புன்னகை கொண்டனன் நாளும்
தூற்றினாய் துர்முகம் கொண்டிலன் யானும்
சாற்றியே உண்மைகள் சோர்ந்திடேன் இன்முகம்
ஆற்றலும் ஆக்கமும் நீயென நகைத்தேன்.

Sunday, March 20, 2011

அவனும் அவளும்..

அவன்..
அவள் ஒருத்திக்காக
உலகையே ஒதுக்கினான்..

அவளோ
உறவுகளுக்காக
அவனையே ஒதுக்கினாள்...

அவன்
புற்றுநோயால்
புலம்பிக்கொண்டு இருந்த வேளையில்
அவள்
புத்தாண்டைக் கொண்டாடினாள்..

அவனது
கனவுக்கோட்டை
செங்கல் செங்கலாய்
உதிர்கின்ற வேளையில்
அவள்
பொங்கலோ பொங்கல் என்று
உறவுகளுடன்
கரும்பு கடித்துக்கொண்டிருந்தாள்...

அவனது
உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த
உருக்கமான நேரத்தில்
தொடர்பிலா பிறப்பிற்கு
கேக் ஊட்டினாள்...
பரிசுகளும் பார்ட்டியுமாய்
பரபரப்பில் இருந்தாள்...

செம்புலப்பெயல் நீர்
கொஞ்சம் கலந்ததைப் போல்
நெஞ்சங் கலந்ததாம்
அவர்களின் நேசம்...

அவனது உயிர்மூச்சு
பிரிகின்ற நேரம்
அவளது பெருமூச்சு
காத்திடவில்லை..

Friday, March 4, 2011

எட்டு எட்டு எட்டும் வரை எட்டு..!

எட்டு எட்டு
எட்டும் வரை எட்டு..உன் இலக்கு
எட்டும் வரை எட்டு..!

எட்டும் வரை உன் லட்சியம்
எட்டும் வரை
முட்டும் வரை உன் சிரம்
வானில் முட்டும் வரை எட்டு..!

உன்வெற்றி எட்டுத்திக்கிலும்
முட்டும்வரை
கைகள் ஓய்ந்து தட்டும் வரை எட்டு..!

உன் வியர்வை கொட்டும் வரை
உழைப்பின் பெருமை தட்டும் வரை
விண்ணேறி வானைக்
கட்டும்வரை எட்டு..!

உலகெலாம் உன்பெருமை எட்டும்வரை
ஊரெங்கும் உன்புகழ் முரசொலித்துத் தட்டும் வரை
எட்டு எட்டு எட்டும் வரை எட்டு..!

எட்டாத கனவென்று ஏதுமில்லை என்றே
மட்டின்றி மாய்ந்துவிட போதுமில்லை என்றே
எட்டு எட்டு நீ எட்டும் வரை எட்டு..!

வானுனக்கு எல்லை இல்லை மேலும்
மானுனக்கு நிகரில்லை வேகம்
எட்டு எட்டு எட்டாத உயரமெல்லாம் எட்டு..!

தொட்டுவிட்ட பகை முடிக்க நீயுந்தான்
வெட்டுப்பட வெட்டுப்பட முளைத்திடுவாய் என்றே
எட்டு் எட்டு எட்டுத்திக்கும் எட்டும் வரை எட்டு..

ஒரு சந்தேகம்...
















விரலில் தீப்பற்றினால்
வெடுக்கென்று
உதறுவாய் நீ...!

பலகாரம் சுடும் மனைவிமீது
கொதிக்கும் எண்ணை பட்டுவிட்டால்
சட்டியை உடைத்தெறிவாய் நீ..!

தீக்குள் விரலை வைக்கும்
அறியாத தன்மகனை
தாவி அணைத்தே
ஆறுதல் தருவாய் நீ..!

அடுத்த வீட்டில் பற்றிய தீயை
பரிதாபம் என்றில்லாவிட்டாலும்
பாதுகாப்புணர்வு கொண்டேனும்
பறந்தோடி அணைப்பாய் நீ..!

எங்கோ நடந்த
எதிர்பாரா விளைவுகளுக்காய்
மதம் பிடித்துப்போய்
தீக்கொள்ளி கையிலேந்த
மனம் வந்ததெப்படி நண்பா..?

நாங்களும் இந்தியர் தான்..!

நீங்கள்
மாலையில் மணக்கத்தான்
நாங்கள்
நார்களானோம்...

நீங்கள்
கொடிகளாய்ப் படரத்தான்
நாங்கள்
வேர்களானோம்...

நீங்கள்
நிழல்களில் இளைப்பாறத்தான்
நாங்கள்
தருக்களானோம்...

நீங்கள்
நிறம் ஒளிரத்தான்
நாங்கள்
கருக்கலானோம்..

நாங்கள்
நெருங்கிவந்தால் மட்டும்
நீங்கள்
வெறுக்கலாமோ..?

Sunday, February 27, 2011

காத்திருப்பில் ....!

உருவப்படம்

நேற்று வரை
அன்புக்குரியோரின்
அழகான பரிசாய் இருந்தது
அந்த மலர்க்கொத்து..
இன்று வாடிவதங்கிக்
குப்பைத் தொட்டிக்குள்...

சிறுபிள்ளை சிலிர்த்து விளையாடிய
சிங்கப்பொம்மை
பல்லிழந்து காது தொங்கிப்போய்
பகட்டெல்லாம் உலர்ந்து போய்...
உடைந்த சாமான்களின்
உப்பரிகையில் இன்று..

காதலில் கனிந்து உருகி
கனவுகளுடன் வழங்கப்பட்ட
ராதை கண்ணன் அரவணைப்புச் சிலை
கையுடைந்து நிறம் மங்கி
செல்லரித்துச் சிதைந்த நிலையில்
களையவும் மனமின்றி காக்கவும் உணர்வின்றி
அட்டைப்பெட்டியில்
அடக்கமாய்க் காத்திருக்கும்..
பழைய சாமான்காரனின் வரவுக்காய்...

யார் சொன்னது மனித உணர்வுகள்
மகத்தானவை என்று...?

Wednesday, January 12, 2011

தேர்தல் வருது... தேர்தல் வருது...!




















தேர்தல் வருது... தேர்தல் வருது...!

யானைகள் அம்பாரிகள் சேனைகள் பவனிங்க...
கால் வழுக்கும் மைதாப்பசையில் கொஞ்சம் கவனிங்க..

நிறையபேரு வருவாக இனி..
நிறையும் கொஞ்ச நாள் வயிறும் இனி...

எத்தனை பேரு வந்தாலும் செருப்பு தைப்பவர்
அடுப்பில் நெருப்பு எரியுமா சொல்லுங்க..!

ஒட்டி நிக்கும் எங்க வயிறு கெட்டியாகி நிறையுமா...?
சட்டி சோறும் கட்டிக்க துணியும் காலங்காலம் நிலைக்குமா..?

இலவசங்கள் எங்களை ஆக்கலையே பரவசங்கள்..
அடுப்பில் நிக்கலையே பூனைகளின் பிரசவங்கள்...

விடியும் என்று தான் சொல்லிச் சொல்லி போறாங்க
இடியும் நிக்கலை மழையும் நிக்கலையே...!

டி வி தந்த மவராசன் எங்க சொந்தங்களின்
டி பி போக்கலையே...சாவும் நிக்கலையே...!

பலபேரு பலவிதமா பரவசமா பேசுறாங்க...
பொலபொலன்னு கண்ணீரு ... கேக்க நல்லா இருக்குங்க...

வானம் பாத்த பூமிக்கு வழிவகை செய்தாக்கா
மானம் காக்க எங்களுக்கும் வழி பிறக்கும் யோசிங்க...

மணலைக்கூட கயிறா திரிப்போம்னு சொன்னாங்க..
மழலைக்கு எதிகாலம் என்னன்னு சொல்லலையே..

வெங்காயம்னாங்க விலைவாசின்னாங்க நல்லாத்தான் சொன்னாங்க...
எங்க காயம் என்னன்னு விவரம் தெரியாம போனாங்க...

உங்க காரியம் முடிஞ்சாக்கா ஒருவேளை ஜெயிச்சாக்கா
எங்க காரியத்தை கொஞ்சம் ஓய்வால கவனிங்க...

தெருவோடு பாலாறு .. இது எல்லாம் வேண்டாங்க..
கருவாடு கடிச்சுக்க கலய கஞ்சி போதுமுங்க..

எங்க ஓட்டு தானே வேணும்... தாராளமா எடுத்துக்கோங்க...
ஆனா ஓட்டுக்கு நீங்க தரும் திருவோடுமட்டும் வேண்டாங்க...

இப்படிக்கு
திருவாளர் பொதுஜனம்.