Wednesday, January 12, 2011

தேர்தல் வருது... தேர்தல் வருது...!




















தேர்தல் வருது... தேர்தல் வருது...!

யானைகள் அம்பாரிகள் சேனைகள் பவனிங்க...
கால் வழுக்கும் மைதாப்பசையில் கொஞ்சம் கவனிங்க..

நிறையபேரு வருவாக இனி..
நிறையும் கொஞ்ச நாள் வயிறும் இனி...

எத்தனை பேரு வந்தாலும் செருப்பு தைப்பவர்
அடுப்பில் நெருப்பு எரியுமா சொல்லுங்க..!

ஒட்டி நிக்கும் எங்க வயிறு கெட்டியாகி நிறையுமா...?
சட்டி சோறும் கட்டிக்க துணியும் காலங்காலம் நிலைக்குமா..?

இலவசங்கள் எங்களை ஆக்கலையே பரவசங்கள்..
அடுப்பில் நிக்கலையே பூனைகளின் பிரசவங்கள்...

விடியும் என்று தான் சொல்லிச் சொல்லி போறாங்க
இடியும் நிக்கலை மழையும் நிக்கலையே...!

டி வி தந்த மவராசன் எங்க சொந்தங்களின்
டி பி போக்கலையே...சாவும் நிக்கலையே...!

பலபேரு பலவிதமா பரவசமா பேசுறாங்க...
பொலபொலன்னு கண்ணீரு ... கேக்க நல்லா இருக்குங்க...

வானம் பாத்த பூமிக்கு வழிவகை செய்தாக்கா
மானம் காக்க எங்களுக்கும் வழி பிறக்கும் யோசிங்க...

மணலைக்கூட கயிறா திரிப்போம்னு சொன்னாங்க..
மழலைக்கு எதிகாலம் என்னன்னு சொல்லலையே..

வெங்காயம்னாங்க விலைவாசின்னாங்க நல்லாத்தான் சொன்னாங்க...
எங்க காயம் என்னன்னு விவரம் தெரியாம போனாங்க...

உங்க காரியம் முடிஞ்சாக்கா ஒருவேளை ஜெயிச்சாக்கா
எங்க காரியத்தை கொஞ்சம் ஓய்வால கவனிங்க...

தெருவோடு பாலாறு .. இது எல்லாம் வேண்டாங்க..
கருவாடு கடிச்சுக்க கலய கஞ்சி போதுமுங்க..

எங்க ஓட்டு தானே வேணும்... தாராளமா எடுத்துக்கோங்க...
ஆனா ஓட்டுக்கு நீங்க தரும் திருவோடுமட்டும் வேண்டாங்க...

இப்படிக்கு
திருவாளர் பொதுஜனம்.

5 comments:

  1. அருமையான கவிதை! இதுவும் அது போல என்னுடைய முயற்சி

    கட்சிகள் பொங்கினால்...
    தொண்டர்கள் பொங்கிட வாழ்த்துகள் வழங்கிடும் கட்சிகள் பொங்கினால் எப்படி இருக்கும்..?ச்சும்மா ஒரு ஜாலி கற்பனை ...

    அடுக்கு மொழி அடுப்பில்
    ஒரு ரூபாய் அரிசியுடன்
    வார்த்தைஜால வெல்லம் கலந்து
    இலவச நெய் ஊற்றி
    `கை`பார்த்து இறக்கினால்
    தி மு க பொங்கல்

    கணக்கு கேட்டு கனன்ற அடுப்பில்
    எம் ஜி ஆர் பானை ஏற்றி
    அம்மா களைந்த அரிசியுடன்
    அதிரடி வெல்லம் கொட்டி
    கொஞ்சம்
    ஆன்மிக ஜோதிட நெய் கலந்தால்
    ஆச்சு ...அ தி மு க பொங்கல்

    கதிர் அறுவாள் கொண்டறுத்த
    வெண்மணி அரிசியுடன்
    கைசுத்தி வென்றெடுத்த
    வியர்வையை வெல்லமாக்கி
    நெய்யற்று நீரற்று வறண்ட
    போராட்ட அடுப்பில் எழும்
    சிவந்த தழல் மேலே
    பொங்கி பொங்கி எழுந்தால் அது
    காம்ரேட்களின் கம்யூனிஸ்ட் பொங்கல்

    நேரு குடும்ப அடுப்பில்
    காந்தி பெயரிட்ட பானையில்
    மதசார்பற்ற நெல் குத்தியெடுத்த
    மைனாரிட்டி அரிசியுடன்
    கூட்டணி வெல்லம் கொட்டி
    கோஷ்டி மார்க் நெய் ஊற்ற
    எமர்ஜென்சி மறந்து பொங்கும்
    காங்கிரஸ் பொங்கல்

    அகிம்சை அரிசியுடன்
    சத்திய சர்க்கரை கலந்து
    எளிமை நெய் ஊற்றி
    இறக்கினால்
    பாவ்ம் யாரும் சாப்பிட விரும்பாத
    காந்தி பொங்கல்

    ReplyDelete
  2. தங்கள் கவிதை "நந்தலாலா இணைய இதழி"ல் வெளிவந்துள்ளது!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete
  4. வருகை புரிந்தேன்.. கருத்தும் பதிந்தேன் ... நன்றியும் நவில்கிறேன்..

    ReplyDelete
  5. உண்மைகளை மட்டுமே உரைக்கிறது இக்கவிதை!

    ReplyDelete