Saturday, December 25, 2010

சாதனை நாயகன் ராஜா அண்ணாக்கு ஒரு சதகம்..!

நண்பர்களே, எனது உடன்பிறவா அண்ணன் திரு ராஜா அவர்கள் முத்தமிழ்மன்றத்தில் ஒரு லட்சம் பதிவுகள் பதிந்து சாதனை செய்ததை முன்னிட்டு அவருக்காக நான் எழுதிய நூறு பாக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்..!

ராஜா நூறாயிரம்.. கலையின் பாயிரம்...!

1.
அன்புக்கு அடிமையாகும் அகன்றதோர் விடநாகந்தான்
என்பினையும் ஈகும் மதயானையுந்தான் அன்பில்
முன்பின் அறியார்க்கோ காட்டுதல் இரக்கமென்பார்
என்பின் நின்றுலவும் அண்ணனோ அன்புக்கெல்லை.

2.
எங்குமே தேடிப்பின்னர் தேடலில் களைத்திட்டாலும்
தங்கிடா பொய்யன்பதனில் கலங்கினேன் உறவினுக்காய்
வங்கியில் போட்ட செல்வம் வட்டியுடன் வருதல் போல
இங்கு நான் கண்டறிந்தேன் அண்ணனின் அரும்பாசம்..!

3.
முத்தமிழக் கவிதை பலவும் பலவண்ணம் எழுதியுமென்
பித்தம் தெளியாது பிதற்றிநின்று களைத்தவேளை
இத்தகு அரியமன்றம் கிடைத்த போதெனுள்ளம்
எத்தனை மகிழ்ந்தனன் எழுதிட ஏலாதென்னால்..!

4.
முதன்முதல் எங்கு பார்த்தேன் அறுதிட இயலவில்லை
வதைத்திட்ட என் ஊழென்னை வாட்டிய போதினிலெந்தன்
பதைப்பது நீங்கிடவே இம்ம்னறம் வந்தேன்யானும்
கதைகள் பலகதைத்தோம் கண்டிங்கு உறவுகளை...!

5.
கண்டிக்க கடிதுபேச கனிவுடன் வழியும் காட்ட
உண்டிங்கு அண்ணனென்றே ஓடிவந்த ஒருமனிதர்
கொண்டனர் பேரன்பெனக்குக் கொடுத்தது எல்லையில்லை
வண்டது தேன்குடத்தில் போலவே மயங்கினன் யான்

6.
உருவினில் மட்டுமின்றி குரலிலும் கனத்தவர்தாம்
அருகினில் சென்று போது குழந்தையின் மனத்தவர்தாம்
திருவினில் குறைகளில்லை திருமதி இவர்தம் செல்வம்
மருவிலா குணக்குன்றாம் இவரது அருமை கேட்பின்.

7.
அரசனின் கொடைகள் எல்லாம் அரையினில் கட்டிநிற்கும்
புரவலர் இவர்தாமென்றே அனுபவங்கள் கூறும்
வரவேற்பதிலும் அன்பாய் உபசரிப்பதிலும் இவர்க்கு
தரமுடன் நிற்கவல்லோர் தரணியில் இன்னும் காணேன்.

8.
முதன்முதல் உரையாடலில்தான் முகவரி இவரைக்கண்டேன்
புதனன்ன மலரும்ம்முகத்தான் புத்துயிர் ஊட்டக்கண்டேன்
வதவதவென்றே உரையில் வளர்ப்பதும் இல்லைஎன்றும்
மிதமாய்ப்பேச்சு ஆயினும் இதமே காண்க்கண்டேன்..!

9.
மகளிர்முன் உரையில் என்றும் மயங்கிடப்பேசிக்காணேன்
உகந்ததைப் பேசிஎன்றும் உளம்கவர் மன்னன் இவர்தான்
அகமெலாம் மலரப்பேசும் முகமது கடுமை காணும்
இகம்புகழ் மேன்மென்றும் இவரது பேச்சின்கவனம்..!

10.
முத்தமிழ் மன்றமதிவரின் முகவரி எனினும் திறந்த
புத்தகம் போல்தான் இவர்தான் அனுபவக்குன்றே நாளும்
நித்தமும் புத்தம்புதிதாய் பிறந்தவர்போல்தான் இலங்கி
வித்தகம் புரியும்சொற்கள் இவர் குறியீடெனவே சொல்வேன்..!

11.
மன்றினி லிவர்தம்ரசிகர் எண்ணில எனினுமிவர்தான்
குன்றிடார் கர்வந்தன்னில் குன்றனை நிற்பார்நிலத்தே
என்றும் இவரது எழுத்தின் தகிப்பினில் எரியும்பதர்போல்
ஒன்றுமே பயனில்லா மூடர்கள் நம்பிக்கைதான்..!

12.
மாசறுஎண்ணம் எனினும அதன்மேல் கடுமைஏடு...
வீசருவாளைப் போல்தான் தீங்கதன்மேலே தாவும்
மோசமிக்கோபம் என்றே முனைந்தே கூறின் அவரோ
வாசமிது பிறவிக்குணந்தான் போகட்டும் விடுவோமென்பார்..!

13.
தாயதைக் காணா இதயம் தந்தையின் பாசமதனில்
ஆயதுகலைகள் எல்லாம் அறிந்திட ஆர்வம்கொண்டு
போயதும்வந்ததும் பொல்லாங்கு பலவும் கற்றும்
மாயவலைதனில் என்றும் மயங்கிடா உறுதிகொண்டார்..!

14.
மெய்யினைப் பகிரஎன்றும் உளமெஃகு வாதல்வேண்டும்
பொய்போல் கவர்ச்சிஏதும் இல்லாத காரணம்தான்
மெய்க்கோர் அழகில்லை என்பர்நம் பெரியோரென்றும்
தயக்கமோ ஏதுமின்றி மெய்தனைப்பகிர்வார் இவரே..!

15.
வந்தது போனதென்று முளைத்திடா குறுங்கன்றெல்லாம்
பந்தது போலேஇவரை பறைந்திட்டபோதும் பாங்காய்
தந்தது நாகரீகம் மிக்கதோர் சொற்கள் தானே..
விந்தையான மனிதர் என்றும் விவேகந்தனை இழவார்..!

16.
நான்கிரு சொற்கள் கற்றால் நானிலம் அளந்ததே போல்
ஊனது உருக தசைகள் முறுக்கிட நிற்கும் புல்லோர்
சேனையாய் வந்து நின்று மீசையும் முறுக்கிநிற்பார்
சேனையாய் தனியிவர்எனினும் அவையது அடக்கம் கொள்வார்..!

17.
குறும்பினில் இவரை வெல்ல குவலயம் முழுதும் பாரீர்
எறும்பினை யொப்பார் பிறரே யானையாய் நிற்பார் இவரோ
கறுமையின் நிறத்தோன் எனினும் மனமோ கொக்கின்வெள்ளை
உறும்பகை கண்டபோதும் உறுமிடும் வேங்கை இவர்தான்..!

18.
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட் டாய்வரும் மழையும்
வல்லார் இயல்பில் எனினும் வணங்கிடும் அடக்கம்கொண்டோர்
இல்லார்கண்டே எள்ளும் இகழ்குணம் இல்லாதோரால்
கல்லாய் கடவுள் போகார் அன்னார் இவரே அன்றோ..?

19.
என்னிலும் மட்டுமின்றி இவரது பகிரும் அன்பில்
மின்னிடும் பொன்னாய் மகளாம் இலங்கையின்பேறாம் அவளும்
அன்னையின் அன்பும் அன்புத் தன்றியின் பாசம் பெற்றாள்
முன்னிலும் தெளிவுபெற்றே முதிர்கவிஎன்றானாளே..!

20.
நட்பிலும் இவரின் உள்ளம் நச்சிடும் அன்பினாலும்
புட்பமாய் புன்னகைக்கும் புன்னகை அரசியுந்தான்
நுட்பமாய் இவரின் எண்ணம் உணர்ந்த ஓர் தூயநட்பில்
கட்புலன் அறியவந்தாள் அழகான பெண்மாதவளே..!

21.
கற்றது கையளவென்பார் கருத்துக்கள் காணும்போதோ
பெற்றது பெண்ணோ அன்றி கலைமகள் வயிறோ என்பீர்
உற்றது உரைக்கும் வன்மை நெஞ்சில் பட்டதைப் பகிரும் தன்மை
மற்றது முன்கோபம்தான் முந்திரிக்கு விதைமுன்போல்தான்..!

22.
நகைச்சுவைதன்னில் இவர்போல் நானெங்கும் கண்டதில்லை
வகைவகையாய் மொழிகள் வளர்பிறையாய் வளரும்
சிகையலங்காரம் சினிமாக்குதவுதல் போல்தான் இவரின்
தகைநல் குறுஞ்சொல் வளமை தந்திடும் பேரின்பந்தான்..!

23.
காமுறுவர் கற்றோர் மற்றோர் கற்றோரை என்பார் பெரியோர்
பாமுறுவலென்ன பகிரும் அறிவியல் விந்தை என்ன
தாமுணர்ந்த ஒன்றைப் பகிரும் தன்மைதான் என்னஎன்ன
நாமுகன் மனைவியவளின் அருளையும் பெற்றார் இவரே..!

24.
நரிமுகம் கண்டோர்பெறுவர் நானிலம் முழுதும் நன்மை
கரிமுகன் வணங்கினோர்தான் கலைவர்தம் கருமம்தன்னை
விரிமலர் தாமரைமேல் அமர்ந்தவள் அருள்வாள் செல்வம்
கிரியவர் நண்பர் இவரோ உவகையைத் தருவார் என்றும்..!

25.
இவரது அக்குறும்பைத் தாயாய் ரசித்திடும் தலைமையுள்ளம்
சுவரது பந்தாய்மீண்டும் இவர்மேல் பொழியும் அன்பும்
நிகரது இவருக்கென்றும் இனியெவர் உண்டென்றெண்ணம்
தவறது பொறுக்கும் நட்பில் தகையவர் இவரும்கிரியும்..!

26.
சிரமம் சிலநேரம் இவர்தந்தாலும் அதனை
வரமாய் என்றும் சீரியமுறையில் உள்ளும்
பரம்சோதி என்றும் நட்பாம் பகிர்ந்திடும் பாசமுண்டாம்
நிரடல்கள் இல்லை அதனால் இவரின் குணத்தாலென்றும்..!

27.
மோகனம் பாடும் மன்றில் மோகனாம் அறிஞருண்டு
ஏகமாய் இவருக்கெதிரில் என்ணங்கள் வைப்பார் என்றும்
வேகமாய் எதிர்ப்பாரிவரும் எனினும் பண்பார் உள்ளம்
சோகமாய் ஆனதில்லை சோர்ந்திடும் வகைஞர் இல்லை..!

28.
தாகமாம் அறிவுச்சுனையில் தக்கதோர் ஓடமொன்றாய்
ஏகமாய் அறிவில்விளக்கம் ரங்கனாம் அன்பரிவரால்
மேகமாய்ப் பொழியும் அன்பால் ஞானப்பறவை எனவே
மோகமாய் அழைத்தார் அன்றே அத்தகு பண்பார் இவரே..!

29.
வாதங்கள் பலசெய்யும் வக்கீலின் குணமும் உண்டு
மோதல்கள் வந்தபோதும் மோனையும் எதுகையும்தான்
நாதமாய் இனிக்கும் என்றும் நண்பராய் வந்த அன்பர்
மாதவர் இவரும் சேர்ந்தால் மாகளம் மன்றில் உண்டு..!

30.
எக்கால்மும் உணர்ந்த ஏற்றமும் அறிவும் கொண்டே
முக்காலமும் கற்ற முதுநிலை அறிஞரிவர்க்கும்
அக்காவாய்த் திகழ்ந்த அன்னை இசக்கியம்மாளும் மன்றில்
அக்காலத்தில் ஆண்ட அன்பாட்சி மன்றம் உள்ளும்..

31.
நல்லதோர் துணை வருகை நன்மைகள் சேர்க்குமென்பார்
அல்லவை செய்திடினும் அன்பாய்த்திருத்தி நிற்கும்
இல்லறம் செழித்திருக்கும் இணையதன் கரங்களாலே
முல்லையாய் மணக்கும் இவர் இல் கண்ண்ம்மா கரங்களாலே..!

32.
உள்ளத்தில் இருப்பதெல்லாம் உருக்கமாய் சொல்லி நிற்கும்
கள்ளமும் கபடுமின்றி கனிவுரை நல்கி நிற்கும்
மெள்ளவே மாற்றும் முரட்டுக் காளையைக் காராம்பசுவாய்
அள்ளித்தரும் அன்பினால் அண்ணனும் அகமகிழ்ந்தார்...!

33.
ஒருமுறை நேரிலிவர் வெற்றியின் உளவறிந்தேன்
திருமணப் பரபரப்பில் திசைதிசையாய் திரிந்தபோதும்
திருமுகம் வாடவில்லை கனிவுடன் வரவேற்பும்
விருப்பான உபசரிப்பும் கண்களில் நிற்குதம்மா..!

34.
அன்னையின் முகமறியேன் அறிந்திடும் வாய்ப்பறியேன்
உன்னைநான் கண்டபோது அன்னையை உணர்ந்தறிந்தேன்
சின்னதோர் கனிவுமுகம் மஞ்சளில் மலர்ந்தமுகம்
என்னையும் வணங்க வைத்து மனதினில் மகிழ்வறிந்தேன்..!

35.
பாரதியின் கண்ணம்மா எங்ஙனம் உணர்ந்துள்ளேன்
பா ரதன் அவரது பாக்களில் பகுத்துணர்ந்தேன்
சாரதிஇவர் ராஜாவின் இனியதோர் ரதத்திற்கு
பாரதிசயமெனவே பாங்குடன் அயர்ந்து நின்றேன்...!

36.
கண்ணுக்கு அழகான துணையவர் அமைந்திடிலோ
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்திடுவார் இக்காலம்
கண்ணெனப் பாதுகாக்கும் கனிவான துணையிருந்தால்
மண்ணில் ரகுபதிக்கு நேரில்லை எனப்பறைவேன்..!

37.
துணையைக் காண்பிப்பாய் உன்வாழ்வை நான் பறைவேன்
இணையது இயக்குகின்ற படகுநீ என்ப ஆன்றோர்
அணைத்துநல் அறமருளி அனைத்திலும் அங்கமாய்
அணைசேர்த்த வெள்ளமென பயனுற்றாய் வாழியநீ..!!

38.
என்றேனும் அவ்வன்னை முகம்பார்க்க ஏலுமெனில்
நன்றாகப் பார்த்தனை உன் பார்த்தனை நானென்பேன்
இன்றேபோலென்றுமே எழிலுறும் வாழ்வுகாண்பாய்
உன்றன் இணையதுவே ஊழிக்காலம் வரைவாழி..!

39.
அழகுறும் மைந்தர்கள் இருபெரும் முத்துக்கள்
பழகுதற்கினியராய் பணிவுடன் உபசரித்தார்
நிழலது இருள்வரை பிரியாத நிலையதுபோல்
கழலதைப் பிரியாத கவின் நகம் போல்வாழி..!

40.
பாங்கான மைந்தரைப் பெற்றதோர் நல்வினைபோல்
ஓங்கியபுகழொடு வாழ்ந்திட வந்தே நல்
சேய்ங்குழல் நாதமாய் இசைத்ததோர் மருமகளும்
தீங்கிலா நல்வாழ்வு பெறவேண்டி வழுத்துவன் யான்..!

41.
அரிதான கவிதைகள் இவரெழுதிப் பதிந்ததுண்டு
புரியாத பலகதைகள் அக்கவியுள் புனைவதுண்டு
பெரியாரைப்போலவே இவர்கருத்து கடுமையுண்டு
மரியாதை மிக்க கவிஞராய் திகழ்ந்ததுண்டு..!

42.
நன்றிகள் நவில்வதிலும் புதுமைகள் புகுத்தி அதில்
இன்றியமையாத இன்செய்தி பகிர்ந்துவிட்டு
ஒன்றுமறியாத குழந்தையைப்போல் குதூகலித்து
வென்றது அனைவரது மனம் அறியாமல் நகைப்பதுண்டு..!

43.
நல்லதோர் வியாபாரி எனும் நற்சான்று பலபெற்று
வல்லமையால்வென்று விட்ட சுவடொன்றும் அறியாமல்
பல்லோர் புகழ்ந்துரைத்தும் தற்பெருமை அறியாது
வெல்ல அரிதிவரெனும் நற்பெருமை பெற்றாரிவர்..!

44.
கார்காலம் வந்துவிடின் கான மயில் அரங்கேறும்
ஊர்கோலம் பூண்டுவிடும் உறுநல்விழா வரினோ
தேர் ஓடும் திருவீதி குமிந்துவிடும் பக்தர்களால்
பார் மன்றம் கலகலக்கும் ஏயாரார் வந்துவிடின்..!

45.
அதிசயச்செய்திகள் ஆர்தருவார் இவருக்கென
விதிர்த்துப்போய் நின்றதுண்டு விழிப்பதுண்டு பலநேரம்
எதிலண்ணா உம்வெற்றி எனக்கேட்டேன் ஒரு நாளில்
அதியசமல்ல விழிசெவி திறந்துவிடின் வருமென்றார்..!

46.
எண்ணற்றோர் வியக்குமிவர் கவிப்பதுண்டு சிலநேரம்
பண்ணதிர எழுத்துவளம் பலபெற்ற இவர்பலமோ
மண்ணுதித்த அனுமன் பலம் ஊக்குவித்து வியந்ததுண்டு
விண்ணதிரும் வார்த்தை நயம் வியக்கவைத்ததுண்டு எனை..!

47.
அன்பை நாடிசில அவர்தேடும் நிழல்களுண்டு
என்பதிலே எனக்குமுண்டு எண்ணிலா வியப்பதுவே
முன்பொரு காலமொன்று இவரடைந்த நட்பதுவும்
ஒன்பது மாதமதில் தவறவிட்ட சோகமுண்டு..!

48.
தீயதை எண்ணமாக்கி தீஞ்சுவை சொற்கொண்டு
மாயதோர் உலகம் காட்டிடும் மனிதருண்டு
ஓயாமல் நல்லெண்ணம் ஆயினும் கடுமையாய்
காயமாக்கும் கோபகுணம் மலரடியில் முள்ளாகும்..

49.
பெற்றதும் இழந்ததும் கணக்கிட்டு நோக்கிடின்
உற்றது போயினும் உறுதுணை நல்வரம்
மற்றவை காற்றினுள் கரைந்திட்ட மேகமதே
சற்றேதும் கவலையின்றி கலகலப்பாய் மன்னையரே..!

50.
இற்றைய நாள்வரை எண்ணமதில் நேர்மைவழி
கற்றையாய்ப் பணமதுவால் நாணயம் தோற்கவில்லை
ஒற்றையாய்ப் பிறந்து ஒருதுணை இன்றிடினும்
சற்றேனும் தளராத தகையுடைய மானிடன்நீ..!

51.
மனம்கறகும் மாவித்தை கண்டவர்தான் என்றாலும்
சினம்முந்தி நிற்பதனால் சிலபேர்கள் வருந்திநின்றார்
முனமிருந்த முன்கோபம் இல்லைதான் எனினும்நீர்
வினவுகின்ற சொற்களில் மெல்லினமும்தான் சேர்ப்பீரே..!

52.
ராகவனின் தமையனுக்கு கட்டியம்தான் கூறிநிற்கும்
சோக்மொன்று இவ்வையம் காட்டிவரும் நற்புகழை
ஆகமது சொல்வதனை நான்மறுத்துக் கூறிநிற்பேன்
மாகலைஞன் ராவணனின் தம்பிஎன நான் மகிழ்வேன்..!
(இங்கே உவமையை தவறாக எடுக்காதீர்கள் நண்பர்களே..)

53.
மூதறிஞர் கூறுவது முழுமையுமே உகப்பாகாம்
வேதமுதல் விகடன்வரை வழுவிநிறப் தியற்கையன்றோ
சாதனைகள் செய்துவரும் ரகுபதியுன் கூற்றினிலும்
பேதமுண் டெனக்கூறும் துணிவுண்டெனக் கறியாயோ..?

54.
நற்குணமும் நற்றமிழும் நகமெனவே வளர்ந்துவரும்
பொற்குன்றே பொறுமையது கைக்கொண்டாய் அனுப‌வ‌த்தில்
மற்போ ரல்லவிது மனம்கலந்த அன்ப‌றிந்தே
பொற்பாவை பெண்மனமும் புனிதநட்பு மறிந்தவரே.!

55.
சிறியோர்தம் அறம்பிழைத்தால் சிறப்பாகச் சொல்லிநிதம்
வறியோருக்குதவுதல் போல்வாரியிறை அன்புரையை
குறிப்புணர்ந்து அவர்மனம்தான் குழையவிடலாகாம‌ல்
சிறியதோர் ஈர்க்குழலும் பல்குத்த உதவுமென்பீர்..!

56.
சீர்குணங்கள் ஏராளம் உண்டெந்தன் அண்ணனிடம்
போர்குணங்கள் குறைந்துநல் பொறுமையும் கைக்கொண்டார்
மார்தட்டிப்புக்ழந்திடுவேன் வானளாவப் புகழ்ந்திடுவேன்
வார்த்தெடுத்த தங்கமிது வாய்நிறைய வாழ்த்திடுவீர்..!

57.
சிலநேரம் எனக்குண்டு சிறியதோர் ஐயமது
உலகவியல் அறிந்தொழுகும் உத்தமர்தான் என்னண்ணன்
கலகமது உருவாக்கும் கழகமதில் ஏன்நாட்டம்
உலகுய்ய அவரையன்றி வேறெவரும் தெரிகிலையோ...?

58.
அன்பான மகவிரண்டு அன்பொழுக வளர்த்தவரே
துன்பமது அறியாமல் துணைநின்று காத்தவரே
வன்பதங்கள் வாயினின்றும் வருகிடாது காத்தவரே
மென்பதங்கள் தமிழ்க்கவியில் கற்றுத்தர வில்லையதேன்..?

59.
நியாயங்கள் கூறிநிற்கும் நல்லாசான் நீயன்றோ
வியாபார நுணுக்கங்கள் கற்றநிறை குடமன்றோ
தயாளக் குன்றெனவே தரணியெல்லாம் சிறந்தவரே
வியாதிகளேதுமின்றி வெகுகாலம் நீர் வாழி..!

60.
இன்னும் செப்பிடவே எத்தனையோ குணமுண்டு
முன்னும் நீவாழ்ந்த இளமையதைக் கூறிடவே
பின்னால் சென்றெனக்கு பிற்காலம் நினைவுறவே
பொன்னான இம்மன்றம் பொறுத்திடுமோ சிறுநேரம்...?

61.
எப்போது எதைச்செய்வார் என்னண்ணன் கணக்கில்லை
தப்பேதும் செய்வதில்லை தரக்குறைவாய்ப் போவதில்லை
செப்பியது சரியென்றே செவ்வனவே பகர்ந்திடுவார்
தப்பாது அவர்வாதம் தடைவரினும் முடங்காது...!

62.
விளையாட்டில் ஆர்வமுண்டு வியக்கவைக்கும் ஞானமுண்டு
களைப்பேதும் இல்லாமல் கலகலக்கும் செய்தி உண்டு
தளைபோட இயலாத தக்கதொரு களிப்பிள்ளை
வளையாத இவர்மனதில் சானியாக்கும் இடமுண்டு..!

63.
இவர்வாழ்வின் அனுபவங்கள் சிலிர்ப்பூட்டும் களிப்பூட்டும்
தவமிருந்து பெற்ற இணை இவர்வாழ்வில் வளமூட்ட
அவர்காட்டும் வழிகாட்டல் பலவிபத்து காத்திருக்க
எவருண்டு இவ்விணை போல் வியந்துல்கம் வணங்கிநிற்கும்..!

64.
மன்றத்துச் சிறுபூசல் சிலபோது மயங்கவைக்கும்
தென்றலாய்ப் பதிவிடாது பலநேரம் தயங்கவைக்கும்
குன்றியது சினமெனிலோ சீறிப்பாயும் பதிவினங்கள்
வென்றது பலர்மனதை இவர்பதிவு மிகையில்லை..!

65.
அணுவளவும் தயக்கமில்லை அனுபவங்கள் பகிருவதில்
நுணுக்கமான விவரங்கள் வியக்கவைக்கும் பலர்மனதை
கணுவதனின் இடையிலினில் கரும்புச்சுவை இனிப்பதுபோல்
மிணுமிணுக்கும் ஆதிரையாய் மிளிர்ந்து நிற்கும் இவர்பதிவே..!

66.
தேய்த்துத் துலங்கும் தங்கமாய் இவர்குணந்தான்
ஏய்த்துப் பிழைக்கும் இனமில்லை இவர்மனந்தான்
தோய்த்துத் துவைத்த துகிலினைப் போல்பளபளக்கும்
தூய்மையது இவருளம்தான் துணிவுகொண்ட தூயவர்தான்..!

67.
வாய்மையது இவர்பகிர்வால் வாயது பெரிதாமோ
வாய்த்ததொரு நல்துணையால் வாழ்வினில் மிக உயர்ந்தார்
வாய்*கண்டு நல்லுழைப்பால் வாய்ப்பது இவர்முன்னால்
வாய்பொத்திக் குனிதல் கண்டேன் வாழிய என் அண்ணாநீ..!
*வாய் = வழி

68.
நெடிய்தோர் உருவுகொண்டார் கடியதோர் முகம்கொண்டார்
வடிவழகில் இவருருவம் தெலுங்குலக வில்லனைப்போல்
முடிசூடா மன்னனைப்போல் மிடுக்குடனே நடந்திடுவார்
துடிப்பான வாலிபனை யன்னதோர் *கிழவனிவர்..!
*கிழவன் = தலைவன்

69.
இவரது நகைச்சுவைக்கு எத்தனையோ கதைகளுண்டு
தவறாது ஒன்று சொல்வேன் தம்பற்றி இணையத்தில்
இவர்பகிர்ந்த வாசகம்தான எடையிலது செஞ்சுரியாம்
இவரிடுப்பு அரைச்சதமாம் இவருக்கிணை எவருண்டு...?

70.
மன்னையின் மைந்தனிவர் குமிழ்ச்சிரிப்பில் குழந்தையிவர்
தன்னை அணுகிட்டோர் தாம்மகிழச் செய்திடவே
த்ன்னே ரில்லாத தமிழ்வலைகள் இவர்கண்டார்..
முன்னேறும் இளைஞர்க்கு நல்லுரைகள் இவர்தந்தார்..!

71.
ஒட்டிப்பிறந்த இருமலர்கள் அவை இரண்டும்
குட்டிப்பேரன்கள் குதூகலிக்க வைக்குமென்பார்
எட்டிநின்று ஏங்கவைக்கும் நம்மனதை இறையருளால்
அட்டியின்றி அவர்பெற்ற பேறன்றோ அம்மகிழ்ச்சி..!

72.
ஒருநாள் இவரில்லை மன்றினில் என்றிடிலோ
வருவோ ரெல்லோரும் வருந்திநின்று தேடிநிற்பர்
திருநாளில்லாத தெருபோலே வெறிச்சோடும்
தருவோரில்லாத இரவலர் போல்வாடிநிற்கும்..!

73.
புகைப்பட வித்தகர் வேணு அண்ணன் வியந்துநிற்பார்
தகையோரிவர்பதிவில் பசுபோலே மயங்கி நிற்பார்
பகட்டேதும் இல்லாத பச்சைமண்ணாய் படமதற்கு
திகட்டாமல் தரும் பஞ்ச்சில் மகிழ்ந்திடுவார் அண்ணலவர்..!

74.
மகளிரணி படையெடுப்பில் இவர்திரிகள் கொடிபறக்கும்
முகத்துதி அல்லயிவர் முகம்மலரும் அழகுகண்டே
அகத்திருக்கும் அன்புவெள்ளம் மடைதிறந்து பாயந்துவரும்
தகப்பனென சிலர்மகிழ்வார் அண்ணனென சிலர் புகழ்வார்..!

75.
பகட்டாக அணிவதற்கு பல்லுடைகள் இருந்தாலும்
திகட்டாது இவருக்கு விருப்புட னிவரணியும்
அகண்டநல் கட்டமிட்ட கைலியும் பனியனும்தான்
அகம்மகிழும் எனச்சொல்வார் அண்ணலிவர் என்னிடமே..!

76.
தொழிலுக்காய் அங்கங்கே அலைந்தாலும் இவர்மனம்தான்
எழில்பொங்கும் மன்னையின் பேரழகில் மயங்கிநிற்கும்..
தொழில்நகரம் என்றாலும் கவினுக்குப் பஞ்சமில்லை
விழிகள்விரி கோயில்கள் நிறைந்த நல்மன்னையது..!

77.
எத்தனை பேர்வந்தாலும் இனியிவரின் சாதனைகள்
அத்தனையும் கடந்துநிற்க இயலுமெனச் சொல்லுவது
பத்தனவன் பொன்னிலொரு குன்றிமணி அளவேனும்
எத்தனம் செய்திடாமல் பொன்னகையும் செய்வதுபோல்..!

78.
முத்தமிழின் மன்றமிதில் ஏனிந்த நாட்டமென
இத்தமிழனிடம் கேட்பின் இனியதொரு புன்னகையால்
புத்தம்புதுமலர் போல மலர்ந்து நிற்கும் முகமதிலே
சொத்தல்ல எனவிருப்பம் சொந்தமது ஈங்கென்பார்..!

79.
திருமலை வேங்கடன்தான் இவருக்கு முழும்தலாம்
வருடமொருமுறையேனும் சென்றுவர வில்லையெனில்
கருடனில்லா மாலவன்தான் தவிப்பது போல்தவித்திடுவார்
திருவருளை வேங்கடவன் திட்டியின்றித் தந்தானே..!

80.
பதிலடிசரியாகத் தருவதிலே மன்னவன் தான்
எதிரிலுள்ளோர் மனமறிந்து சரிக்குச்சரி ஈந்திடுவார்
அதிலொன்று இவரிடத்தில் எதிர்வாதம் செய்தவர்தான்
கதியின்றி அடங்கினராம் பேருந்துப் பயணமதில்..!

81.
கண்ணம்மா எனும்சொல்லே கட்டிச்செல்லும்
கண்ணிற்கு இமைபோல ஒட்டிச்செல்லும்
விண்ணிற்கு அண்ணலை இட்டுச்செல்லும்
மண்ணிலே இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...!

82.
மாமனை மணந்த ஓர்மாதவச் செல்வியாம்
ராமனைப் பின்தொடரும் கருணைமிகு பூதேவி
தூமனை செழித்திட உற்றவர் ஓங்கிட
சேமமாய் இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...!

83.
பேரர்கள் வந்ததும் பேச்சிலர் ஆயினாய்
காரிருள் போல்வந்த நோயதும் விலகிட
ஓரிறை என்சாயி இறையினை வேண்டுவேன்
சேரனே இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...!

84.
எல்லாரும் மகிழ்ந்திட நகைச்சுவை வழங்கிடும்
வல்லா ரிவருக்கு வாழ்விலே ஓருகுறை
அல்லாவின் அருளால் அத்துயர் நீங்கிட
வல்லவா இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...!

85.
சீறிடும் சிங்கத்தை சிறைசெய்து காத்திட்டாய்
வேறேதும் எண்ணமின்றி கண் அவன் கருத்தினில்
மாறாது ஒழுகிடும் அண்ணனின் மகுடம்நீ
அண்ணியே இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...!

86.
ஆண்டவை சென்றன அரைசதம் தாண்டின
வேண்டியவண்ணமே வாழ்க்கையும் சென்றது
யாண்டுலர் இவரைப்போல் என்றதோர் பேறினை
ஆண்டனை இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...!

87.
மகவிரண்டை முத்தாக வளர்த்தனை வாழ்த்தினை
தகவுகொள் வண்ணமே அப்பயிரைக் காத்தனை
புகழ்பெற வைத்தனை புதுப்புனலாக்கினை
சிகரமே இன்னுமோர் நூறாண்டு வாழிநீ..!

88.
சோதனைக ளனைத்தையும் சோர்வின்றிக் கடந்தஉன்
பாதம்பின் பற்றினோர் வாழ்வாங்கு வாழ்ந்தனர்
சேதங்கள் வருமுன்னே சேர்ந்தோரைக் காத்தனை
நாதனே இன்னுமோர் நூற்றாண்டு வாழிநீ..!

89.
திருமலை வாழ்தெய்வம் அரங்கனின் அருளினால்
ஒருமலைபோல் வரும் துன்பங்கள் மாய்ந்திட
கருமேகமன்ன்வே கடந்திடும் சோகங்கள்
பெருமையுடன் இன்னுமோர் நூற்றாண்டு வாழிநீ..!

90.
முன்னிற்கும் கடமைகள் இனிதாக ஆற்றினாய்
பொன்சேர்த்துப் பொருள்சேர்த்துப் புகழையும் ஈட்டினாய்
பின்வரும் படையொன்றை முன்னின்று காட்டினாய்
சென்னியே இன்னுமோர் நூற்றாண்டு வாழிநீ..!

91.
விடம்கக்கும் நாகமும் அன்புகண்டு தொழுதிடுமாம்
இடம்நோக்கி இயல்பினால் குயிலிசை பயந்திடுமாம்
நடம்செய்து நிற்குமாம் கருமேகம் கண்டுமயில்
முடமாக்கிப் போவீரோ முத்தமிழ் மன்றமிதை...?

92.
அரவணைத்த தாயென்பேன் ஆர்ப்பரித்த கூடமென்பேன்
வரவதனைப் பாராது வரமருளும் மன்றமென்பேன்
அரவமின்றி இன்னிலையில் அலங்குலைந்து நிறப்துமேன்
புரவலனே நீயுமிதைப் புறக்கணித்தல் சரியாமோ...?

93.
மூத்தோர்தம் முடிவெடுத்து உறவதனைப் பிரிவதுண்டோ
காத்தோமே இத்தனைநாள் காப்பதினி நம்கடனே
கோர்த்திடுவோம் புதுமணியைப் பொன்மாலை ஆக்கிடுவோம்
பார்த்த்னுக்கு சாரதியாய் நீநின்று காத்திடுவாய்..!

94.
நீரைவிட்டு மீனும்தான் பிரிந்திருக்கும் என்பதா?
காரிருளை விட்டுநீங்கி விளக்கும் தானொளிர்ந்திடுமோ?
சேர்ந்திருக்கும் சொந்தங்களை சோகமாக்க மனம்துணிமோ?
வேரதுவை நீங்கி மண்ணும் விளங்கிடுதல் முறையாமோ..?

95.
இக்கவிகள் தொடங்கிடுமுன் என்கண்கள் கசிந்தனவே
முக்கனிகள் தரும்சோலை மூத்தவனே நீயின்றி
எக்கதியாம் என்றெனக்கு எல்லையற்ற வேதனையாம்
இக்கவிகள் முடியுமுன்னே உன்தெளிவும் கிட்டியதே..!

96.
சாதனைகள் முடிந்ததெனச் சோர்ந்திடாதீர் முதுதமிழே
சாதனைக்காய் முனைபவர்க்கு சார்ந்திருந்து உதவிடுவீர்
போதனைகள் வழங்கிடவே விளையாட்டு அறிஞருண்டே
வேதனைகள் இருப்போர்க்கு வேய்ங்குழலாய் இசைப்பீரே..!

97.
எத்தனையோ சொல்லிவிட்டேன் என்றாலும் தீரவில்லை
அத்தனையும் என்மனதில் அடித்தளத்தில் இருந்ததைய்யா
முத்தனைய பாடலுக்கு முழுமுதலாய் முனைந்துநிதம்
சித்தமுடன் உதவிசெய்த சினேகிதிக்கும் நன்றி சொல்வேன்..!

98.
என்மொழிக் கிசைந்தவண்ணம் எப்படியோ எழுதிவிட்டேன்
முன்மொழிந்த முழுக்கருத்தும் உளமுருகி வந்தவைதான்..
புன்மொழியாய் புரிந்திடினோ புன்னகைத்து மறந்திடுவாய்
நன்மொழியென் றறிந்திடிலோ புகழனைத்தும் உனைச்சேரும்..!

99.
இத்தனை வரிகளிலும் ஒன்றுமட்டும் வடித்திடுவேன்
அத்தனையும் உன்பெருமை அவ்வளவும் உன்னன்பே
எத்தனை பேர்வந்தாலும் உன்னிளவல் நானெனவே
கத்தியுரைத் திடுவன்யான் கர்வமிகு குரலாலே...!

100.
என்னாலியன்றவரை உன்பெருமை பகிர்ந்திட்டேன்
முன்னாளொரு நாளில் நாம்கலந்து பேசிநின்றோம்
இன்னுமொருவாய்ப்பு உமைக்காணும் படிவரினோ
பொன்னாளாய்ப் பார்த்திருப்பேன் வாழ்த்திடுவாய் சோதரனே..!

No comments:

Post a Comment