Tuesday, April 10, 2012

கலைவேந்தனின் ஹைக்கூவல்கள்..!

1. இதிகாசங்கள்

நால்வகை வர்ண
வானவில்லால்
தலைகொய்த பரிகாசங்கள்.

2.ஒரு சீதையின் ஒப்புதல் கடிதம்.

உனக்கான தீக்குளியல்களை மறுதலிக்கவில்லை
ஊருக்கான தீக்குளியல் அவசியமே இல்லை
இப்படிக்கு சீதை.

3. நியூட்டனும் விதியும்.

கீழே விழும் ஆப்பிளில்
நியூட்டனின் விதி தெரியவில்லை.
வயிற்றுப்பசி.

4. பரம்பரைச் சொத்து

பாட்டனின் பாத்திரத்தை
பத்திரமாக்கினான்
தந்தைக்காய் பேரன்.

5. வாக்காளர்

தலையில் தீ
இருந்தும் புன்னகை
மெழுகுவத்தி.

6. நிதர்சன‌ங்கள் 

உண்மை பொய் 
முறையே
தூற்றப்படும் போற்றப்படும்.

7. மூவர்ணம்.

வெண்சிரிப்பு
கருப்பு மனம்
காவியுடை.

8. சீதையின் வாக்குமூலம்

தீக்குளியல் 
உனக்காய் மட்டுமே
ஊருக்கல்ல..

9.தற்கொலை

கலையும் மேகங்கள்..
மின்னல் கயிறு..
தூக்கில் தொங்கியது நிலா.

10. நிரந்தரம்.

மேகக்கூட்டத்தில் 
யானை உருவம்..
எக்களித்தது குழந்தை.

11.வரவேற்பு

ஒளிக்கம்பளம் விரித்து
விட்டிலை வரவேற்றது
தீப்பந்தம்.

12. பெண்கள்

ஆண்கள் ஆச்சரியக்குறி ஆக‌
கேள்விக்குறியாய் 
ஆனவர்கள்.

13. பத்தினி

கெடுக்க நினைக்கும் 
கணவனுக்கும்
கொடுக்க மறுக்காதவள்

14. விதவை

நாக்கில் நீர்சொட்டும்
குரங்குகளுக்கு
எட்டாத தேனடை.

15. மனைவி

அடக்கிய கணவனை
முடக்க விடாமல் 
தாங்குபவள்.

16.ஞானம்..

காதல் ‘கத்திரி’க்காய்
பிரிவு ‘புண்’ணாக்கு
போங்கடா

17.புதிய பாரதம்:1

துச்சாதனன்கள் திருந்திவிட்டனர்
பாஞ்சாலிகளின் 
மறு பரிசீலனை.

18. புதிய பாரதம்:2

கண்ணன்தந்த சேலை
வேண்டாத வேலை
திரவுபதி ஆவேசம்.

19. புதிய பாரதம்:3

நல்லவேளை ..
குந்திக்கு 
ஐந்தே மகன்கள்..

20. புதிய பாரதம்: 4

மாது சிரித்ததால்
சூது சிரித்தது
மானம் போனது..
21. புதிய பாரதம்: 5

சுதர்சன சக்கரம் போல் 
எங்கள் பாட்டி 
முறுக்கு சுடுவாள்..

22. சும்மாச் சும்மா : 1

வளைந்து நெளியும்போதே
கண்டுபிடித்துவிடுகிறேன்
உன் பொய்களை.

23. சும்மாச் சும்மா : 2

அவிழ்ந்த கூந்தலில்
சில நரைமுடிகள்
மின்னல்..

24. சும்மாச் சும்மா : 3

அழகான ஓவியம்
குழந்தையின் கையில்
கரிக்குச்சி.

25. சும்மாச் சும்மா : 4

நேரம்..
கத்தியால் குத்தியது
அவனது நிழல்.

26. சும்மாச் சும்மா : 5

சுற்றிலும் பல ஈட்டிகள்
பின்னால்
உன் கண்ணசைவு..!

27. புதிய பாரதம்:6

ஆறாவதாய் 
பாஞ்சாலி விரும்பியதால் 
கர்ணனின் அகால மரணம்.

28. புதிய சிலம்பு :1

ஒற்றை எறிவில் மதுரை 
மற்றையது 
எவ்வூருக்காய்..?

29. புதிய சிலம்பு : 2

இன்று
மாதவிக்கும் கேவலமாய்
கோவலன் மனைவி.

30.காமம்.

இழுத்த இழுப்புக்கு
வளைந்து கொடுக்கும்
தேய் பிறை

31. கடவுள்

எத்தனை தாரமும் 
சம்மதம் என்னும்
’முற்றும்’ துறந்தவன்.

32. பக்தி

முட்டாள்களாக்க 
சமாளிக்கும்
யுக்தி

33. பயணம்

உயிர் என்பது 
ஒருதுளி விந்தின்
நீள் யாத்திரை



34. குழப்பம்.

எரிக்கவேண்டுமா புதைக்கவேண்டுமா..?
தீயில் கருகிச்செத்தவனின்
உறவினர் குழப்பம்.

பாராட்டப்படும் போது..

பாராட்டப்படும் போது..

பாராட்டப்படும்போது
ஒருகுழந்தை 
வெட்கப்படுகிறது..

ஒரு காதலி
கால் மண் துழாவுகிறாள்..

ஒரு மாணவன்
உறுதி எடுக்கிறான்
இன்னும் உழைப்பேனென்று..

ஒரு மனைவி
இன்னும் சுவையாக சமைக்கிறாள்.

ஒரு நண்பன் 
வசமிழக்கிறான்..

ஒரு எதிரி
அடிமை ஆகிறான்..

ஒரு ஞானி 
துறவு இழக்கிறான்..

ஒரு கவிஞன் 
கர்வமடைகிறான்
இன்னும் அதிகமாய்
கர்ப்பமடைகிறான்..

பாராட்டப்படும் போது 
பூக்கள் கூட மேலும் 
மணக்கின்றன..

ஒரு பசு இன்னும் 
அதிகமாய்ச் 
சுரந்து பீய்ச்சுகிறது..

ஒரு கைதி 
உணரத் தொடங்குகிறான்..

ஒரு கணவன் 
பாராட்டப்படும்போது 
மேலும் 
காமுறுகிறான்..

பாராட்டப்படுகையில் 
ஒரு தாய் 
புன்னகைக்கிறாள்..

பாராட்டுவதால் 
பலவித பயன்களுண்டு..

பாராட்டுங்கள்..
பாசம் கிடைக்கும்..

பாராட்டுங்கள்..
உலகம் உங்கள் வசம்..!!

நீ நலமா..?

படம்

நீ நலமா..?

நலமா..?

உடலற்ற உயிராய் நீ..
நலமா..?

மணமிழந்த மலராய் நீ..
நலமா..?

விழியற்ற ஓவியமாய் நீ..
நலமா..?

கருவற்ற கவிதையாய் நீ..
நலமா..?


நான் இங்கு 
நலமில்லை..!

நாணில்லா வில்லாய் நான்..
நலமில்லை..!

நீரில்லா குளமாய் நான்..
நலமில்லை..!

வேரில்லா மரமாய் நான்..
நலமில்லை..!

இரையில்லா மானாய் நான்..
நலமில்லை..!

நீயின்றி நான் நலமில்லை..
நலமின்றி நீ.. நான் நலமில்லை..


பின்
உன் பிடிவாதம்
உன் ஆக்ரோஷம்..
உன் அறியாமை..
இவை மட்டும் நலமெப்படி..?

தோற்றுவிட்டேன்..

தோற்றுவிட்டேன்..

படம்


வாழ்க்கைக்கும் வாய்ப்புக்கும் 
இடையில் நடந்த போரில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்..

வாய்மைக்கும் பொய்மைக்கும் 
நடந்த வழக்கில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்.

புரிதலுக்கும் முரிதலுக்கும் 
இடையிலான இழுவையில்
நான் தோற்றுத்தான்விட்டேன்..

சமாதானத்துக்கும் சாகசத்துக்கும் 
இடையிலான தீயில்
நான் தோற்றுத்தான்விட்டேன்..

சாமிக்கும் சாத்தானுக்குமிடையில்
இழுத்த பிரச்சினையில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்..

வாக்குவன்மைக்கும் வாய்ச்சாடலுக்கும் 
மத்தியிலான விவாதத்தில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்..

தன்னம்பிக்கைக்கும் தற்கொலைக்குமான 
இழுபறிப் போராட்டத்தில்
நான் தோற்றுத்தான்விட்டேன்..

இனியாவது..

வாய்ப்பில்லா வாழ்க்கையும்
பொய்மையற்ற வாய்மையும்
முரிதலில்லா புரிதலும்
சாகசமில்லா சமாதானமும்
சாத்தானில்லா சாமியும்
வாய்ச்சாடலில்லா வாக்குவன்மையும்
தற்கொலையில்லாத த‌ன்னம்பிக்கையும்

நானின்றி
என் பேரின்றி
என் அடையாளமின்றி
என் இடையூறுகளின்றி

வெற்றிபெறட்டும்..

ஆமென்..

Thursday, March 1, 2012

கிள்ளைக்கோர் தாலாடல்..


கிள்ளைக்கோர் தாலாடல்..


மொழியிலா…. மோனமே….எல்லையில்லா எந்தன் வானமே..
விழியசைய வந்துநிற்கும் .. கைகள்கட்டி அந்த விண்மீன்களெல்லாம்..
மொழியிலா…. மோனமே….எல்லையில்லா எந்தன் வானமே.
விழியசைய வந்துநிற்கும்.. கைகள்கட்டி அந்த விண்மீன்களெல்லாம்..
லலலா லலலா லலலலா லலா ஆகா.. ஆகா.. ஆகாகா ம்ஹூஹூம் ம்ஹூஹூ,ம்…

காண் அம்புலியைக் காண் உன்வழி தேடுவான்.. 
தாலாட்டுப் பாடியுறக் கிடுவான்.. 
காண் அம்புலியைக் காண் உன்வழி தேடுவான்.. 
தாலாட்டுப் பாடியுறக் கிடுவான்.... 
பாரா கணங்களோ தாக்கிடும் வெம்மையால்
வாராதெனக்கென வந்திட்ட பதுமையே..
வாராதெனக்கென வந்திட்ட பதுமையே..

மொழியிலா…. மோனமே….எல்லையில்லா எந்தன் வானமே.
விழியசைய வந்துநிற்கும்.. கைகள்கட்டி அந்த விண்மீன்களெல்லாம்..
லலலா லலலா லலலலா லலா ஆகா.. ஆகா.. ஆகாகா ம்ஹூஹூம் ம்ஹூஹூம் ஹூஹூம்.ஹூஹூம்…


உள்ளம் களிகொள்ளும் ,,ஓடிப் போயள்ளும்
தேனாகிச் சேயுந்த னிதழ் நிறையும்..
உள்ளம் களிகொள்ளும் ,, ஓடிப் போயள்ளும்
தேனாகிச் சேயுந்த னிதழ் நிறையும்..
பூவாயுன் பாதமோ வாய்த்ததென் வேதமாய்
மோவாய் மோதிடுமென் எழிலமுதே..
மோவாய் மோதிடுமென் எழிலமுதே..

மொழியிலா…. மோனமே….எல்லையில்லா எந்தன் வானமே.
விழியசைய வந்துநிற்கும்.. கைகள்கட்டி அந்த விண்மீன்களெல்லாம்..
லலலா லலலா லலலலா லலா ஆகா.. ஆகா.. ஆகாகா ம்ஹூஹூம் ம்ஹூஹூம்…ஹூஹூம்.ஹூஹூம்



தயவு செய்து மேற்கண்ட பாடலை கீழ்க்கண்ட எம் பி 3 பாடலை அல்லது யூ ட்யூப் ஒலிக்கவிட்டு அதில் வயலின் இசைக்கேற்ப அந்த மெட்டில் தமிழில் பாடிப்பார்க்கவும். அப்போதுதான் இப்பாடலின் இனிமையையும் அழகையும் உணர இயலும் என்பது என் எண்ணம். 




நீதானா அது..?

நீதானா அது..?


என்னில் உருவாகி 
என்னுள் கருவாகி
என்னுள் சமைந்ததாய்
சொன்னது நீதானா அது..?

என் உயிரில் கலந்து
என்குருதியில் மிதந்து
எனக்குள் ஊக்குசக்தியாய்
இருந்தது நீதானா அது..?

என் முடிகலைந்தபோதும்
உலகமே புரண்டுபோனதாய்
ஒதுக்கி வைத்து அழகுபார்த்த
ஒரே ஒருத்தி நீதானா அது..?

சற்றே பின்னிய என்கால்கள்
கற்றையாய் என்னை வீழ்த்தியபோது
சட்டெனத்தாங்கி என்னை நிலைநிறுத்திய
பெண்மையும் நீதானா அது..?

வாழ்க்கையின் துரத்தலில் 
ஓடிக்களைத்த போதில்
வாட்டமாய் ஒத்தடம் தந்து
பாதங்கள் நீவியது நீதானா அது..?

என் அழகுக் கருப்பனின்
கண்மலர்கள்மேல் பனித்துளி
சோபனம் தரவில்லை என
சுண்டிவிட்டது நீதானா அது..?

விதியின் விபத்தினால் 
நம்பிக்கை இழந்தபின்
நம்பிக் கைகொடுத்த
நலம் விரும்பி நீதானா அது..?

சுழற்றி அடித்த சுனாமியில் 
சோர்ந்திடாமல் காத்து
ஆறுதல் படகோட்டிவந்து
அரவணைத்தது நீதானா அது..?

இன்று..

குறுகிய மலைப்பாதையில்
தவழ்ந்து முட்டிகள் பெயர்ந்து
அனாதைக்குழந்தையான எனக்கு
அறைகொடுத்தனுப்பியதும் நீதானா அது..?

எனில் சீசராகி நான் 
மண்ணில்விழுவதில்
மட்டற்ற மகிழ்ச்சியே..!