Tuesday, April 10, 2012

கலைவேந்தனின் ஹைக்கூவல்கள்..!

1. இதிகாசங்கள்

நால்வகை வர்ண
வானவில்லால்
தலைகொய்த பரிகாசங்கள்.

2.ஒரு சீதையின் ஒப்புதல் கடிதம்.

உனக்கான தீக்குளியல்களை மறுதலிக்கவில்லை
ஊருக்கான தீக்குளியல் அவசியமே இல்லை
இப்படிக்கு சீதை.

3. நியூட்டனும் விதியும்.

கீழே விழும் ஆப்பிளில்
நியூட்டனின் விதி தெரியவில்லை.
வயிற்றுப்பசி.

4. பரம்பரைச் சொத்து

பாட்டனின் பாத்திரத்தை
பத்திரமாக்கினான்
தந்தைக்காய் பேரன்.

5. வாக்காளர்

தலையில் தீ
இருந்தும் புன்னகை
மெழுகுவத்தி.

6. நிதர்சன‌ங்கள் 

உண்மை பொய் 
முறையே
தூற்றப்படும் போற்றப்படும்.

7. மூவர்ணம்.

வெண்சிரிப்பு
கருப்பு மனம்
காவியுடை.

8. சீதையின் வாக்குமூலம்

தீக்குளியல் 
உனக்காய் மட்டுமே
ஊருக்கல்ல..

9.தற்கொலை

கலையும் மேகங்கள்..
மின்னல் கயிறு..
தூக்கில் தொங்கியது நிலா.

10. நிரந்தரம்.

மேகக்கூட்டத்தில் 
யானை உருவம்..
எக்களித்தது குழந்தை.

11.வரவேற்பு

ஒளிக்கம்பளம் விரித்து
விட்டிலை வரவேற்றது
தீப்பந்தம்.

12. பெண்கள்

ஆண்கள் ஆச்சரியக்குறி ஆக‌
கேள்விக்குறியாய் 
ஆனவர்கள்.

13. பத்தினி

கெடுக்க நினைக்கும் 
கணவனுக்கும்
கொடுக்க மறுக்காதவள்

14. விதவை

நாக்கில் நீர்சொட்டும்
குரங்குகளுக்கு
எட்டாத தேனடை.

15. மனைவி

அடக்கிய கணவனை
முடக்க விடாமல் 
தாங்குபவள்.

16.ஞானம்..

காதல் ‘கத்திரி’க்காய்
பிரிவு ‘புண்’ணாக்கு
போங்கடா

17.புதிய பாரதம்:1

துச்சாதனன்கள் திருந்திவிட்டனர்
பாஞ்சாலிகளின் 
மறு பரிசீலனை.

18. புதிய பாரதம்:2

கண்ணன்தந்த சேலை
வேண்டாத வேலை
திரவுபதி ஆவேசம்.

19. புதிய பாரதம்:3

நல்லவேளை ..
குந்திக்கு 
ஐந்தே மகன்கள்..

20. புதிய பாரதம்: 4

மாது சிரித்ததால்
சூது சிரித்தது
மானம் போனது..
21. புதிய பாரதம்: 5

சுதர்சன சக்கரம் போல் 
எங்கள் பாட்டி 
முறுக்கு சுடுவாள்..

22. சும்மாச் சும்மா : 1

வளைந்து நெளியும்போதே
கண்டுபிடித்துவிடுகிறேன்
உன் பொய்களை.

23. சும்மாச் சும்மா : 2

அவிழ்ந்த கூந்தலில்
சில நரைமுடிகள்
மின்னல்..

24. சும்மாச் சும்மா : 3

அழகான ஓவியம்
குழந்தையின் கையில்
கரிக்குச்சி.

25. சும்மாச் சும்மா : 4

நேரம்..
கத்தியால் குத்தியது
அவனது நிழல்.

26. சும்மாச் சும்மா : 5

சுற்றிலும் பல ஈட்டிகள்
பின்னால்
உன் கண்ணசைவு..!

27. புதிய பாரதம்:6

ஆறாவதாய் 
பாஞ்சாலி விரும்பியதால் 
கர்ணனின் அகால மரணம்.

28. புதிய சிலம்பு :1

ஒற்றை எறிவில் மதுரை 
மற்றையது 
எவ்வூருக்காய்..?

29. புதிய சிலம்பு : 2

இன்று
மாதவிக்கும் கேவலமாய்
கோவலன் மனைவி.

30.காமம்.

இழுத்த இழுப்புக்கு
வளைந்து கொடுக்கும்
தேய் பிறை

31. கடவுள்

எத்தனை தாரமும் 
சம்மதம் என்னும்
’முற்றும்’ துறந்தவன்.

32. பக்தி

முட்டாள்களாக்க 
சமாளிக்கும்
யுக்தி

33. பயணம்

உயிர் என்பது 
ஒருதுளி விந்தின்
நீள் யாத்திரை



34. குழப்பம்.

எரிக்கவேண்டுமா புதைக்கவேண்டுமா..?
தீயில் கருகிச்செத்தவனின்
உறவினர் குழப்பம்.

No comments:

Post a Comment