Tuesday, April 10, 2012

ஏங்க வைத்த பொற்காலம்..!

படம்

ஏங்க வைத்த பொற்காலம்..!

சற்றே முகம் நோக்கி 
முறுவலிக்கும் போதினிலென்
நெற்றிமேல் விழுந்த 
கற்றைக்குழல் விலக்கி நீயும்
பற்றோடு பரிந்து தந்த 
பகல் முத்தம் மீள் வருமோ...?

சற்றேனும் சிணுங்கி விட்டால்
சட்டெனத்தாவியே 
ஒற்றைமுலையில் வெகுவிரைவில் 
மூச்சடைக்க முட்டவைத்து 
நீதந்த முலையமுதும் 
மறந்திடுமோ என் வாயும்..?

கூன் விழுந்து குனிந்து நீயும் 
தரைதடவிப் பார்க்கையிலே 
யான் விழுந்து மருளுகின்றேன்
தாயுன்னைக் காண்கின்றேன்
அடிவயிறும் கலங்குதம்மா..!

நானிழந்த உன் பாசம் 
தேனிழந்த ஈக்களைப்போல்
மேன்மேலும் ஏங்கவைத்து 
ஊனிழக்க வைத்து உனை
உருக்குலைந்து பார்க்கையிலே
குலைநடுங்கிப் போகுதம்மா..

உன்நினைவை நீயிழந்து
சுயசிந்தனையும் இழந்து
எங்கோ வெறித்திருக்கும் 
உன்முகம் பர்ர்க்கையிலே
எங்கோ வழிதவறிக் 
காட்டிடை புகுந்துவிட்ட 
குழந்தையாய் தவிக்கின்றேன்..

தங்கமாய் நீஎன்னைத் 
தாங்கித் தழுவிநிதம்
பள்ளிக்கு அனுப்பிவைத்த
பொற்காலம் மின்னுதம்மா ...
தற்காலம் உன் மனது 
கற்சிலை யாய் ஆனதம்மா..

மின்னசைக்கும் ஒருபோதில்
கண்ணசைத்தே கடிதினில்
உன்வசம் நீமீண்டு 
ஓடிவந்து தாவிஎனை
அணைத்திட மாட்டாயா
ஆருயிர் அன்னைநீயே..!

No comments:

Post a Comment