Tuesday, April 10, 2012

காதல் காதல் .. காதலைத்தவிர வேறில்லை..

1.

நீ போட்டுக்கொண்டதால்
பெருமை வந்ததாம்..
காற்றுடன் படபடத்து
பெருமை கூறியது..
உன் சட்டை..!


2.

ஒற்றைச்செடியில் 
இரண்டு மலர்களாம்..
ஒன்றை நீ சூடிக்கொண்டதால்
இன்னொன்று 
தற்கொலை செய்ததாம்..


3.

அசைந்து நடந்து நீ
கல்லூரி செல்லுகையில்
உன் கைகளுக்கும் 
மார்புகளுக்கும் இடையில்
சிக்கிக்கொண்டதால்
உண்டான மகிழ்ச்சியில்
மூச்சடைத்துச் செத்தன
நீ சுமந்த புத்தகங்கள்..


4. 

என்னைப்பார்த்து 
எக்களித்தது..
உன் உதட்டில் 
உட்கார்ந்து இருப்பதால்
கர்வம் கொண்ட 
உன் 
உதட்டுச்சாயம்..


5.

உன்னைத்தொட்டுத் 
தடவிய தென்றல் 
இனியாரையும் 
தொடுவதில்லை என்று
கற்பு விரதம் பூண்டுள்ளதாம்..
அதனிடம் சொல்லேன்
நான் உன் காதலன் தானென்று.


6. 

சேமித்த நிமிடங்களும்
நேசித்த நொடிகளும்
யாசித்த கணங்களும்
இனியொரு யுகத்தில்
உன்னைக் காணும்போது
என் பரிசுகளாய் 
உன் 
கைகளில் தவழும்..
அப்போதாவது உணர்வாயா
பிரிவின் வலி இன்னதென்று..?


7. 

உன் 
ஒற்றை முத்தத்தால்
உடைந்து போன 
என் 
பிரம்மச்சரிய பிரதிக்ஞை 
எந்த தவத்தால் 
மீண்டும் பிறப்பெடுக்கும்...? 

இப்படிக்கு
உன்னில் தொலைந்து போன 
சன்னியாசி.


8.


உன்முந்தானை நுனி 
லேசாகப்பட்டு 
என் கண்கள் கலங்கின..
உடனே பரிதவித்தாய்
அன்று நீ.

உன் சொற்கணைகள்
தோண்டிஎடுத்தன 
என் விழிகளை
இன்று.

காலம்தான் எத்தனை 
மானங்கெட்டது..
மாறிக்கொண்டே இருக்கிறதே.


9.

திருநாளுக்காய் புத்தாடை அணிந்து 
முதன் முதலாய் எனக்குக் காட்டிட 
ஓடிவந்தாய்..
புத்தாடையின் புதுமணமும்
முத்தாடும் உன் புன்னகையும்
என்னைத் தள்ளாடவைத்தது..
கிறங்கிப்போய் அணைக்கப்போனேன்
குரங்கே தள்ளுடா என்றாய்..
மதுவுண்ட குரங்காய்
மாறிப் போனேன்..!


10.

உனக்கான கருவொன்றைச் 
சுமப்பேன் என வந்தேன்..
உன் பிரிவுக்கான 
கருவைத் தந்து
சோகக்குழந்தையைப் 
பெற்றெடுக்கவைத்தாயே..
நீ என்ன..
இந்திரனா..?

No comments:

Post a Comment