Tuesday, April 10, 2012

கோடிகள் குவித்திடுமோ குதூகலம்..?

கோடிகள் குவித்திடுமோ குதூகலம்..?

மாடிகள் பலகட்டி மாடங்கள் பலகூட்டி
கோடிகள் கொட்டிவைத்து கட்டியதோர் மாளிகைதான்.
தேடிய விடமெங்கும் பலகணிகள் இன்பமுற‌
நாடிய நிம்மதியோ எம்மூலை தெரியவில்லை.


வாஸ்துகள் எல்லாமே சரிதான் பிசகில்லை
காற்று நுழைந்து சரசரக்கும் கட்டிடம்தான்
செங்கல்லும் சிமென்ட்டும் சரிவிகிதக் கலவைதான்.
மார்பிள் பலவிருந்தும் மார்பில் பதியவில்லை.


ஈசான மூலைகளில் இருப்பவை மிகச்சரிதான்
லேசான மிதவெளிச்சம் புகுந்துவரும் வீடிதுதான்
காணும் இடமெங்கும் கண்ணாடிப் பள‌பளக்கும்
அறைகள் பலவிருந்தும் அறையவில்லை மனசளவில்.


படுத்தால் உடல்புதையும் பஞ்சணைக்குப் பஞ்சமில்லை
அடுத்தடுத்து பலமேசை அடுக்கடுக்காய் புத்தகங்கள்
எடுத்து வைக்கும் அடியெல்லாம் மலரைப்போல் மெல்லினந்தான்
தொடுந்தூரம் குளியல‌றை தொட்டணைக்க யாருமில்லை..


கோடிகள் பார்த்ததனால் கூடிய சொந்தங்கள்
ஓடியே வந்தன ஒற்றுமையாய் உதவிபெற‌
ஆடிப்பாடி இங்கு ஆரவாரம் செய்துபல‌
தேடிய செல்வங்கள் கிட்டியபின் ஓடினவே..


என்னை உணர்ந்திங்கு என்மனதைத் தான்புரிந்து
தன்னில் ஒன்றாக்கி தன்வயம் எனைக்கொண்டு
முன்னில் மட்டுமின்றி பின்னாலும் தான்போற்றி
என்னில் வரும்வரை குவிந்திடுமோ குதூகலம்..?

No comments:

Post a Comment