1.நாயும் கடலும்
ஓங்கியே ஆர்ப்பரிக்கும் வெண்ணுரை தள்ளிடும்
தீங்கிழைக் குஞ்சில போதினில் - ஆங்கே
இரவிலு றங்கிடும் நன்மை பயக்கும்
அரவந்த ருங்கடல் நாய்.
கடல்:
ஓங்கி ஒலிஎழுப்பி ஆர்ப்பரிக்கும்; வெண்மையான நுரை தரும்; சில போழ்து தீமை பயக்கும்; இரவு நேரத்தில் அமைதியாய் இருக்கும்; நன்மை தரும்;பாம்புகளைக் கொண்டிருக்கும்.
நாய்:
ஓங்கி ஊளையிட்டு ஆர்ப்பரிக்கும்; வேகமாய் ஓடி வாயில் நுரைதள்ளும்; சில ச்மயம் கடித்து தீங்கு பயக்கும்; இரவில் உறங்கிடும்;ஆனாலும் அரவம் தந்து நன்மை பயக்கும்!
2.இரயிலும் காதலும்
கூவிய ழைத்திடும் பக்கம்வந் தாலதிரும்
மேவிய வண்ணமாகும் மேன்மையில் - சாவுதரும்
சத்தமே கூடும் வெளிப்படும் போதென்றும்
அத்தகு காதல் ரயில்.
ரயில்:
கூவிவரும்;பக்கம் வரும்போது நம்மையே அதிரவைக்கும்; சிறந்த அழகு தரும்; சாவைத்தரும்;
திருப்பத்திலிருந்து வெளிப்படும்போது சத்தம் அதிகமாகும்.
காதல்:
எதிர்ப்பால் மனிதரைக் கூவி அழைக்கும் காதல் உணர்வு; காதலர் பக்கத்தில் வரும்போது இருவருக்குமே அதிர்வு தரும்; காதல் சிறந்த அழகான ஒன்று; காதல் தோல்வியால் சாவும் உண்டு;
காதல் வெளிப்படும்போது அங்கே பரபரப்பான சூழ்நிலை வரும்.
அத்தகைய சிறப்பை இரண்டுமே கொண்டுள்ளது!
3.தமிழும் ஆதவனும்
ஆதியோ டந்தமிலா பேர்பெற் றதினானும்
வேதமுதல் நூல்கூறி வாழ்த்திடவும் - ஓதியே
கூற்றுவனும் சாய்த்திடாச் சீர்பெற் றதினானும்
போற்றுந் தமிழ்க்கதிரோன் நேர்.
தமிழும் ஆதவனும் ஆதியும் அந்தமும் அறிய இயலாத பேர்பெற்றவை. வேதம் முதலான நூல்களால் வாழ்த்தப்பட்டு வந்துள்ளவை. அனைத்தும் அழிக்கும் ஊழியான எமனாலும் அழிக்க இயலாத புகழ் பெற்றவை.இவ்வாறான ஒற்றுமைகளால் தமிழும் ஆதவனும் ஒன்றே!
4.காலணியும் கண்ணாடியும்.
பாதா ரவிந்தம் சுமந்திடும் மாற்றினால்
சேதாரம் செய்திடும் மாறியே - மாதருக்கு
ஆர்வமாய் சேவையில் தன்னொளி மாய்த்திடும்
சீர்பா தணியாடி நேர்!
செருப்பு :
பாதம் முதல் உச்சிவரை நம்மைச்சுமந்திடும்! கால் மாற்றி அனிந்தால் இழப்பு நேரவைக்கும்!இடறிவிடும்!
அதிகமாய் பெண்களுக்கு அலங்காரப்பொருளாய் சேவைகள் செய்து தன் பளபளப்பை இழக்கும்! தேயும்!
சிறப்பு மிக்க காலணியும் கண்ணாடியும் ஒன்றே!
கண்ணாடி :
பாதம் முதல் உச்சிவரை நம்மை சுமந்து நம் பிரதிபிம்பம் காட்டிடும்! கண்ணாடியை சற்றே மாற்றினால் நம் உருவம் இழக்கவைத்து விடும்! எப்போதும் பெண்களாலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டு கண்ணாடி தன் ஒளி இழக்கும்! இவ்வாறாக சிறப்பு மிக்க காலணியும் கண்ணாடியும் ஒன்றாகும்!
No comments:
Post a Comment