எம் பாவம் தானென்ன...?
உழைத்தால் சோறு உண்டென் றார்கள்
பிழைத்தால் மானமாய்ப் பிழைஎன் றார்கள்
இழைந்தே பொழுதை இழுத்திட முயன்றும்
குழைந்த எம்வயிறு நிறைந்திட வில்லை...!
கெட்டும் பட்டணம் போ என்றார்கள்
கிட்டும் உனது பேறென் றார்கள்...
எட்டும் திசையிலும் ஏகினோம் ஆயினும்
ஒட்டும் வயிற்றுக் குணவிலை எங்கிலும்..!
கலைக்கொரு உயர்நிலை எங்குமேயுண்டு
விலையிலா இசையது உருக்கிடும் என்றனர்..!
நிலையிலா மனிதரைப் பாடுத லததினும்
தலைவனின் புகழைப் பாடினோ மெங்கும்..!
வந்தனர் கேட்டனர் மகிழ்ந்தனர் ஆயினும்
தந்தது என்னவோ பாராட்டொன்றே...
இந்தஉம் மிசைக்கு ஈடிலை என்றனர்..
தந்த புகழுரை உண்டியும் நிறைக்குமோ...?
எங்கள் வறுமை எத்தனை கொடிது
எங்கினும் நோக்கினும் கிடைத்தலும் அரிது..
தங்கச்சிலையாய் செழித்த எம்மக்கள்
அங்கம் கறுத்தே அழகை இழந்தனர்..!
நாமகள் கையதன் நல்லதோர் வீணையாம்
யாமேன் இங்ஙனம் புழுதியில் படிந்தோம்..?
தாழையின் அகந்தை அழித்தவன் பிரமன்
ஏழைஎங்களைக் காத்திட வல்லனோ...?
superp
ReplyDeleteஅய்யா வணக்கம்!நான் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தை சேர்ந்தவன்,உங்கள் வலைத்தளம் நன்றாக உள்ளது.தமிழ் வளர்க்க அழைக்கும் உங்கள் அழைப்பிற்கு மிகவும் நன்றி!இங்கே வல்லம் தமிழ் சங்கம் என்ற அமைப்பு செயல் பட்டு வருகிறது விவரங்களுக்கு,http://www.vallamthamil.blogspot.comசென்று பார்க்கவும்.நன்றி!
ReplyDeleteஅருமை கலக்குறீங்க
ReplyDeleteஎத்திப் பிழைக்கும் ஈன அரசியல் ;
ReplyDeleteநத்திப் பிழைக்கும் நம்பிக்கைத் துரோகம்
விழிப்பற்றுக் கிடக்கும் வெள்ளந்தி மக்கள் ;
மொழிப்பற்றில் கூட முகமூடி வேஷம் ;
எங்கும் கலவரம் என்னும் நிலவரம் ;
இதுதான் இந்தியா என்னும் போது
பசித்த வயிறுகள் பார்ப்பவர் ஏது..!
புசிப்பதற்கே நேரமில் லாமல்
பணத்தைப் புசிக்கும் வேட்டை நாய்கள்
ஆளும் நாட்டில் ஆட்சியா நடக்கும்..!
நாளும் இதுபோல் காட்சிதான் நடக்கும்..!
எழுச்சிக் கவிஞர் கங்கை மணிமாறன்
அத்திப்பட்டுக் குடியிருப்பு
சென்னை-120
செல்:9443408824