ஞானதீப மேற்றவேண்டி ஞாலமுழுதும் சுழன்றியே
தீனமான மானிடம் திமிர்ந்து நடை போட்டிட
ஊனமான உள்ளமும் உயர்ந்த பார்வைபெற்றிட
போனதிசை யாவும்வென்றவி வேகானந்தர் பயணமே!
நடந்த கால்கள் நொந்திடப் பயணம் கொண்ட காந்தியும்
இடைஞ்சல் கோடிகண்ட போதும் என்றும்தளர வில்லையே!
கடந்த பாதை எங்கினும் கற்கள் கோடியாயினும்
உடைந்து போக வில்லையே உறுதிகுலைய வில்லையே!
வெள்ளையரும் கொள்ளையரும் வேட்டையாடி பாரதத்தின்
கொள்ளை நோயாய் கூடியிங்குக் கொலுவிருந்த வேளையில்
வெள்ளையுள்ளக் கோபத்துடன் வெகுண்டெழுந்த பாரதி
பள்ளுத்தமிழ் பாட்டெழுதிப் பயணம் கொண்டான் பவனியில்!
மூடநம்பிக் கைகள்யாவும் மூண்டெழுந்து நாற்புறம்
ஓட ஓட விரட்டியதில் ஒடுங்கி சாய்ந்த மனிதமோ
ஆடம் பரத்தை உதறிவிட்டு அறிவுப் பயணம் தொடங்கியே
பாடம் சொன்ன ராமசாமிப் பெரியாரால் நிமிர்ந்ததே!
அறிவுப்பயனை எடுத்துச் சொல்ல யாருமின்று இல்லையே
செறிவுபெற்று செழித்துவாழ செல்வமிங்கு இல்லையே
முறிந்துபோன வாழ்க்கைச்சகடம் முடுக்க யாருமில்லையே
உறைந்துபோன தமிழன் உள்ளம் பயணம் மறந்து போனதே!
No comments:
Post a Comment