Tuesday, December 25, 2007

தமிழகமே...தமிழகமே......!

இந்த ஏழைச் சோழர்களின்
கண்ணீர்த்துளிகளின்
வானவில் சிதறல்கள்
கண்ணகி உடைத்த
மாணிக்கப் பரல்களோ?
அரசாங்கப் பாண்டியர்கள்
நீதி வழுவா நீள்கை யாளர்களோ?
மதுரையைத் தழலிடுமுன்
கண்ணகியும் கடத்தப்படும்
அவலநிலை இங்கே!

பொற்கைப்பாண்டியனும்
கொற்கைப் பாண்டியனும்
மீன்கொடியை அடகு வைத்து
மீட்கமுடியாமல்
மேல்மூச்சும் கீழ்மூச்சுமாய்
கோர்ட்டுப்படிகளில்!
சிலப்பதிகாரம் எழுதிய
இளங்கோ சந்ததியோ
இங்கே
சில்லரை அதிகாரம் எழுதுவதில்
மும்முரம்!

இமயம் தொட்ட சேரலாதனின்
சோர வாரிசுகள்
குட்டிச்சுவர்களைக் காக்கும் போராட்டத்தில்
உண்ணவியலா விரதம்!
தமிழகமே குருக்ஷேத்திரமாகும்
தலைப்புச்செய்திகள்!

No comments:

Post a Comment