Tuesday, December 25, 2007

கலைமகள் கனவில் வந்தாள்!

என் தலைமேல் சூழ்ந்த
கார்மேக விதியைக் கண்டு
கலங்கிப்போய் கண்ணயர்ந்தேன்!
அங்கே ஓர் அற்புத ஒளி!
யார் அது?
கையில்வீணையுடன்
வெள்ளுடைக் கோலத்தில்
வெண்மேகத்திடையே ஒரு
பெண் மேகம்!
மெல்ல இறங்கி என் தலை கோதி
வீணையே வெட்கும் குரலில் கேட்டாள்!

'' என்ன மகனே? ஏன் கலக்கம்?
கலைசூழ்ந்த உன் முகம்
களைபோனதெவ்விதம்?''

'' இல்லை தாயே ஒன்றுமில்லை தாயே!
ஒன்றுமே இல்லை ''
வார்த்தைகளில் ஒரு சோக நாதம்!
அப்போது லேசாகக் கனைத்தபடி
அபயமளித்தாள் அந்த கலைமகள்!

'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவ‌றியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இள‌மையைக் க‌ட‌ந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இள‌மையுட‌ன் இருக்கும்
உன் வியப்பான ர‌க‌சிய‌த்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''

1 comment:

  1. கலை இதுதான் இருவேறு உலகத்து இயற்கை என்று கூறுவதோ!!!!! ஒரு கவிதையால் மனதில் ஒரு பாறையை இறக்குகிறாய். ஒரு கவிதையால் மென்மலர்த்தூவி மெல்லச்சிரிக்கிறாய். கவிமகளின் மாட்சி நீயே. கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது கலைமகளின் காட்சி உனக்கு மட்டும் கிடைத்த்தை எண்ணி.கலைமகளின் காட்சியில் காதல் மகளை மற நண்பா. எழு மகனே உன் கவித் திறத்திற்கு ஏழுலகமும் உன் காலடியில்.

    அன்புடன்
    ஆதிரா

    ReplyDelete