Sunday, May 25, 2008

தமிழ்த்தாயே நீ வாழி!

தமிழ்த்தாயே நீ வாழி!

தமிழ்மொழியைச் சொல்லசொல்ல
உள்ளமெல்லாம் குளிர்ந்திருக்கும்
அமிழ்தமிழ்தென பலமுறை சொல்
தமிழெனத் தான் ஒலித்திருக்கும்
உமிழ்ந்ததெலாம் கவிகள் என்றே
பிறமொழிகள் உரைத்திருக்க
துமியளவும் குறையாநல்
சுவைமிகுந்த மொழி தமிழே!


இயலிசையும் நாடகமும்
இயைந்த மொழி தமிழ் மொழியாம்
குயிலோசை சந்தத்திற்கும்
கவிவரையும் மொழிவளமாம்
தயிர்கடையும் ஓசையிலும்
தகுதிபெற்ற கவிப் பாக்கள்
உயிரூட்டம்தரும் வார்த்தை
உடைந்ததையும் ஒன்று சேர்க்கும்!

வருமழையின் சடசடப்பு
கவிதை மழை ஆகும்தமிழ்
தருவதெலாம் ஓசைநயம்
தகரஒலி மொழியல தமிழ்
முருகன் முதல் அருகன் வரை
மொழிந்தமொழி தமிழ்மொழியாம்
அருவி யொலி குறவஞ்சியும்
குதுகலிக்கும் மொழியெம்மொழி!


இசையுடனே பாடஒரு
இனிய கவி பாரதியும்
வசையற்ற பண்ணிசைத்து
வழங்கிநின்ற பலகவிகள்
விசையுற்ற பந்தினைபோல்
இயங்கிவரும் மானிடமும்
தசைகுருதி யாய் இணைந்துநல்
தமிழ்மொழியைப் போற்றினரே!

No comments:

Post a Comment