Sunday, May 25, 2008

பெண்மை வாழ்க!

பெண்மை வாழ்க!


தேனிலினிய சொல்வழங்கி
தேற்றுவிக்கும் பெண்மனம்!
ஊனில் கலந்து உயிரை உருக்கி
உயர்வு செய்யும் பெண்ணினம்!
வேனில காலத்தென்றலாக
வாழவைக்கும் உயிரினம்!
மானிடத்தைக் கருத்தரிக்கும்
பெண்மை என்றும் வாழ்கவே!

ஆணினத்தின் தவறுகளை
அனுசரிக்கும் பெண்மனம்
பேணிப்பேணி உறக்கமின்றி
பேதையாகும் ஓரினம்
நாணிக்கோணி சுயமிழந்து
நாளும்தேயும் பெண்ணினம்
ஏணியாக மானிடத்தை
ஏற்றும் பெண்மை வாழ்கவே!

தாய்மையெனும் பாரந்தாங்கி
தரணி காக்கும் பெண்குலம்
வாய்மையெனும் தீயில்தினம்
வாட்டம்காணும் மெல்லினம்
தூய்மையெனும் தூபம் காட்டி
துலங்கவைக்கும் உயரினம்
ஓய்மை இன்றி நித்தமும்
உருகும் பெண்மை வாழ்கவே!

1 comment:

  1. என்ன சொல்வது?? பெண்ணை மிதிக்கும் சமூகத்தில் பெண்ணை போற்றுவோரும் உண்டு இதோ அதற்கு சான்று உன் கவிதை...
    பெண்ணினமே வாழ்க என்று
    கூறி நிறுத்தாமல் அவருடைய
    தியாகங்களும் அழகாய் எடுத்து சொல்லி இருக்கே... கவிதை மிக அருமை கலை.....

    ---------- மஞ்சு

    ReplyDelete