தங்கைக்கோர் தாலாட்டு..!
எண்ணத்தில் தந்தையானேன் ஏங்கிடாதே மகளேநீ
அண்ணனா யரவணைத்து தந்தையா யாதரிப்பேன்
வண்ணமிகு உன்கனவை நனவாக்க நான்முயல்வேன்
சுண்ணமதில் தண்ணீராய் நானிருப்பே னுன்வாழ்வில்..
காலமது விரைந்துவிடும் கல்விகற்கும் நாளும்வரும்
வாலையது உயர்த்திநிற்கும் வானரமாய் நீபறப்பாய்
ஓலையதில் கண்டதெலாம் ஒருவினாவாய் கேட்டுநிற்பாய்
சேலையதை மேல்போர்த்தி தாயவளை ஒத்திருப்பாய்.
கல்விப் பருவமது கடந்தபின்னர் என்னுயிரே
செல்வியாய் உருமாறி கவின்பருவம் நீபெறுவாய்
வல்வினைக ளில்லாத வாழ்க்கை யொன்றைநீகாண
நல்லிணை நான்தேடி தினமலைவே னுனக்காக..
தனக்கென்று ஓர்கணவன் என்றாகிப் போனபின்னர்
இனக்கணக்குப் பார்ப்பதில்லை எப்பெண்ணும் என்பதனால்..
உனக்கொரு நல்வாழ்க்கை நான்தேடி முடிக்குமுன்னே
எனக்கொரு நல்வாழ்க்கை வேண்டிடேன் என்மகளே..
தாயவளும் நானாகி தந்தையுமாய் உருமாறி
சேயவள்நீ கண்கலங்க சேர்த்திடுவேன் நல்லில்லம்
தூயவளே நீவாழும் மனைவாழ்க்கை கண்டுநிதம்
போயதொரு காலத்தை நினைத்திடுவேன் என்னாளும்..
haiyooo anna semayaa irukku...
ReplyDeleteenakkaga ezuthuna maariye irukku neenga...