Wednesday, February 29, 2012

தங்கைக்கோர் தாலாட்டு..!


                    தங்கைக்கோர் தாலாட்டு..!

எண்ணத்தில் தந்தையானேன் ஏங்கிடாதே மகளேநீ
அண்ணனா யரவணைத்து தந்தையா யாதரிப்பேன்
வண்ணமிகு உன்கனவை நனவாக்க நான்முயல்வேன்
சுண்ணமதில் தண்ணீராய் நானிருப்பே னுன்வாழ்வில்..


காலமது விரைந்துவிடும் கல்விகற்கும் நாளும்வரும்
வாலையது உயர்த்திநிற்கும் வானரமாய் நீபறப்பாய்
ஓலையதில் கண்டதெலாம் ஒருவினாவாய் கேட்டுநிற்பாய்
சேலையதை மேல்போர்த்தி தாயவளை ஒத்திருப்பாய்.


கல்விப் பருவமது கடந்தபின்னர் என்னுயிரே 
செல்வியாய் உருமாறி கவின்பருவம் நீபெறுவாய்
வல்வினைக ளில்லாத வாழ்க்கை யொன்றைநீகாண
நல்லிணை நான்தேடி தினமலைவே னுனக்காக..


தனக்கென்று ஓர்கணவன் என்றாகிப் போனபின்னர்
இனக்கணக்குப் பார்ப்பதில்லை எப்பெண்ணும் என்பதனால்..
உனக்கொரு நல்வாழ்க்கை நான்தேடி முடிக்குமுன்னே
எனக்கொரு நல்வாழ்க்கை வேண்டிடேன் என்மகளே..


தாயவளும் நானாகி தந்தையுமாய் உருமாறி
சேயவள்நீ கண்கலங்க சேர்த்திடுவேன் நல்லில்லம்
தூயவளே நீவாழும் மனைவாழ்க்கை கண்டுநிதம்
போயதொரு காலத்தை நினைத்திடுவேன் என்னாளும்..

Monday, February 27, 2012

தம்பிக்கோர் தாலாட்டு..!

                  தம்பிக்கோர் தாலாட்டு..!





சிறுவனுனைத் தாலாட்ட வயதேதும் எனக்கில்லை
மறுதாயாய் உனை மீட்க வழியேதும் புரியவில்லை
குறுகுறுக்கு முன்பார்வை என்விழியை நனைக்குதடா
மறுபடியும் நம்தாயை இறைவனிடம் வேண்டிடடா..!


என்வயிறைப் பற்றிஎனக் கேதுமொரு கவலையில்லை
உன்வயிற்றின் தீயடங்க வழிவகையைத் தேடுகிறேன்
முன்னொருநாள் நமக்காகத் தாய்பட்ட விதமெல்லாம்
பின்னொருநாள் நான்படுவேன் அதுவரையில் பொறுத்திடுவாய்..!


தமக்கையாய் நான்வாழ தான்பிறந்தேன் இப்போதாய்
சுமக்கும்மடி என்னிடம்தான் சுகமுணர்ந்து உறங்கிடுவாய்
எம‌க்கெனவென் றிறைவனவன் இட்டதொரு உணவதனை 
நமக்கனுப்பி வைத்திடுவன் நம்பியதை நீயுறங்கு..!


வானதுவே கூறைய‌தாய் புவிப்படுக்கை மெத்தையதாய்
தேனடைகள் நிறைந்திருக்கும் மாமரமே மேடையதாய்
ஊனமதை மறந்துதினம் கூடிநிற்கும் முக்கால்நாய்
கானமதை வழங்கிநமைத் தாலாட்டும் பைங்கிளிகள்..!


என்பசியை மறந்திருக்க நான்பாடும் பாடலது
உன்பசியைத் தீர்த்துவிடு மென்றே நான்பாடுகிறேன்
எம்பசியைத் தம்பசியாய் நினைப்போர்கள் வரும்வரைக்கும்
நம்பசியை மறந்திடுவோம் நம்பியதை நீயுறங்கு..!

Monday, February 13, 2012

காதலர்களுக்கு மட்டும்..



காதல்..
வெட்டிய வாழையின் கண்ணீர் போல்
விரைவாய்த்துடிப்பது..


காதல்..
எட்டி நின்றாலும் எத்திலீனைப்போல்
பற்றி எரிவது..


காதல்.. 
பலமணி நேரம் எழுதிய தேர்வின்
நொடிப்பொழுது பரிணாமம்..


காதல்..
சொற்களில் நிறைவாய் சோகங்கள் குறைவாய் 
சொக்கி இழுப்பது..


காதல்..
எங்குதிரும்பினாலும் வடதிசை நோக்கும்
காந்தமுள் போன்றது..


காதல்..
எத்தனைப் பச்சைகிடைப்பினும் தன்
வறண்ட நிலம் தாண்டாதது..


காதல்..
எச்சொல் எவரிடம் கேட்பினும் அச்சொல்
கவர்ந்தவனிடமே யாசிப்பது..


காதல்..
எத்தனை தொலைவாயினும் இதயத்தின்
அருகாமை தொலைக்காதது..


காதல்..
தன்னவன் முகத்தையும் பிறரதன்
முதுகையும் காண்பது..


காதல்..
கொண்டவனுக்கே எச்சில்விழுங்கி
குறுகுறுத்துப் பார்ப்பது..


காதல்..
மன்னனேயாயினும் துச்சமாய் எண்ணி
தன்னவனுக்காய் தனித்தே வாழ்வது..


காதல்.. 
கொலையனே யாயினும் கொண்டவன்
கூற்றே நீதியென உரைப்பது..


காதல்..
வருடங்களாய் கண்கள்அயர்ந்தும்
தளராமல் காத்திருப்பது..


காதல்..
ஒற்றை வார்த்தையில் கட்டிப்போடும்
இன்பவிலங்கு..


காதல்..
உயிரை இழந்தாலும் தன் 
இணையை இழக்காதது..


உலகெங்கும் வாழும் உன்னதக்காதலர்களுக்கு என் அன்பான காதல்சமர்ப்பணம்..!

Tuesday, February 7, 2012

சறுக்கல்..


ஒற்றைக் காம்பில் உதித்த மலர்..
தன்னை உணர்ந்த போதிமரம்..

ஒருகாலை பூமியில் ஊன்றி 
மறுகாலுக்காய் மனதை ஊன்றிய
ஊன்றுகோல் ஒட்டவைத்த சான்றுகோல்..

வானுயர்ந்த எண்ணக்கோபுரங்களுடன் 
ஓர் ஒற்றைத்தூண்..

அடிமரம் பழுதானாலும் அங்கங்க‌ள் விழுதாகும்
ஆலமரம்..

ஒருக்கால் சறுக்கியதால்
மறுகால் படைக்க மறந்த 
இறைவனுக்கும் ஊனமோ..?

Thursday, January 26, 2012

குடியரசு தின வாழ்த்து..


குடியரசுதின வாழ்த்து..

எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌
அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌
பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எங்க‌
வத்தின இடுப்புக்கு ஓர்வழியும் இல்லையே..

ஆண்டுக்கு ரெண்டுதரம் கொடியேத்திட்டு 
வாண்டுகளுக் கெல்லாம் முட்டாய் தந்தாங்க‌
மாண்டு போன தமிழங்களை மறந்து போனாங்க‌
ஏண்டு கேக்க ஆளில்ல‌ன்னு பறந்து போனாங்க..

தேர்தலுன்னு ஒருவிழா எப்பவும் உண்டு அப்ப‌
போர்முனைக்கு போவதுபோல் பொங்கி நிப்பாங்க‌
ஏர்முனையில் வதங்கினவங்க ஏங்கி நின்னாங்க‌
சீர்திருத்த வந்தவங்க சிரிக்கவைச்சாங்க..

எல்லாரும் பாடுபட்டு எங்களுக்காக 
நல்ல நல்ல திட்டமெல்லாம் தீட்டிப்புட்டாங்க‌
சல்லாடை கண்ணு போல கிழிந்ததுணிதான்
சாசுவதம் எங்களுக்கு கண்டுபுட்டோங்க..

Monday, January 23, 2012

இன்றெனது சோகங்கள் பகிரவே வந்தேன்..


இன்றெனது சோகங்கள் எழுதவே வந்தேன்..

எழுத்தென்றால்.. 

சிதறிய இரவுகளின் மிச்சங்கள்
தொலைதூர வானில் நட்சத்திரங்களாய்..

சிலநேரம் வாய்க்கும் சீரிய தென்றலோ
சிந்தையை மயக்கி கீதங்கள் இசைக்கும்..

இன்றெனது சோகங்கள் பகிரவே வந்தேன் ..

அவள் என்னை நேசித்ததும் நான் அவளை யாசித்ததும்..
பகிரத்தான் வந்தேன்..

ஆகாயம் கூரையாய் அதனடியில் நாங்கள்
வாகாக முத்தங்கள் பகிர்ந்ததும் 
மீண்டும் மீண்டும் அவளை முகர்ந்ததும்

பகிரத்தான் வந்தேன்.. 

அவளை நேசிக்காத குருடரும் இல்லையெனில்.. 
அவள் நயனம் கண்டவரோ ஊமையராயினர்..

மலையளவு சோகங்கள் உரைத்திடவே வந்தேன்..

நான் அவளைப் பெறாத சோகமும் 
பெற்றும் தொலைத்திட்ட ஊழ்வினைக் காயங்களும்

மனதின் சோகங்கள் மாற்றிடா நிலையதை
மறைக்காமல் இங்கே கரைத்திடவே வந்தேன்..

புல்வெளி மீது சயனிக்கும் பனித்துளிகள் 
ஆழ்ந்த உறக்கத்தில் நீள்வதைப்போன்றே 
கனத்த இரவுகள் அவளன்றி என்னைக் 
கனத்த மாலைகள் பகிரவே வந்தேன்..

என் அன்பால் அவளைப் பிணித்திடா ஏலாமை
அவளில்லா இரவுகள் பிணி தந்த கொடுமை 
இவைகளை உங்களிடம் இறைக்கவே வந்தேன்...

எங்கோ ஒலிக்கும் இன்குரல் கூட 
இங்கே அவளில்லா சோகங்கள் கூவிடும்..
அந்த இசையிலும் அவளை இழந்திட்ட‌
சந்தமே மாறி மாறி செவிகளைக் குதறும்.. 

என் நயனங்கள் வெறிச்சோடி அவள் முகம் தேடின..
இதயமோ அவளில்லை இல்லவே இல்லை என 
உதயமில்லாத முகாரிகள் இசைத்திடும்...

அவளில்லா சோகங்கள் குறைத்திட எண்ணியே
எவை எவை பற்றியோ எழுதவே வந்தேன்..

அந்த இரவும் பால் போன்ற நிலவும் 
எந்த மாற்றமும் பெறவில்லை என்றாலும்
தந்தத்தில் செதுக்கிய அந்தப்பாவையோ 
வந்திடா சோகம்மட்டும் பரவியே தகித்ததே..

என் மனதில் அவளில்லை என்பதான சோகமோ 
அவளென்னை நினைத்திடா வேதனை தாக்கமோ 
என் குரல் அவளுணர்வை யாசிக்கும் ஏக்கமோ
எதுவாகினும் யான் எழுதவே வந்தேன்...

சுகமாகப் பகிர்ந்திட்ட‌ சுவைமிகு இதழொற்றுகள்
அகம்மகிழ கலந்திட்ட அனைத்து சொற்றொடர்கள்
தீட்சண்ய பார்வைகள் தீப்பிழம்பாய் அவள்தேகம்
எதுவுமே எனதில்லை பிறர் சொத்து என்பதாய்
வதைத்திடும் வாட்டங்கள் வரைந்திடவே வந்தேன்..

காதலிக்கும் காலங்கள் எத்தனை சிறிதெனவும் 
வேதனைக் காலங்கள் எவ்வளவு நீளமென்றும்
நேசிக்காத நிலையில் இன்றென் மனமிருந்தும்
நேசிக்கா எதிர்காலம் நிச்சயமில்லை என்றும்
வாசித்துப் போகவே வாடிப்போய் வந்தேன்..

இன்றெனது சோகங்கள் எழுதிடவே வந்தேன்..

என் தோளில் அவள் சாய அவள் மனமோ எனை ஈர்க்க‌
அவளில்லா பொழுதுகளை ஏற்றிடா என் ஆன்மா
படும்பாட்டை பக்குவமாய் எழுதவே வந்தேன்..


இன்றோடு அவள் தந்த சோகங்கள் உதிர்ந்திடுமோ 
என்றெண்ணி எழுதினேன் இவ்வரிகள் இறுதியாய்..
என்றாவது மீண்டும் மீட்டென்னை நேராக்கி
நன்றாக எழுதவே நான் வருவேன் என்றெண்ணி
இன்றெனது சோகங்கள் கொட்டிடவே வந்தேன்..





இந்தக் கவிதை கீழ்க்கண்ட கவிதையின் மொழிபெயர்ப்பு..



PABLO NERUDA


Tonight I can write the saddest lines 


Tonight I can write the saddest lines.


Write, for example,'The night is shattered
and the blue stars shiver in the distance.'


The night wind revolves in the sky and sings.


Tonight I can write the saddest lines.
I loved her, and sometimes she loved me too.


Through nights like this one I held her in my arms
I kissed her again and again under the endless sky.


She loved me sometimes, and I loved her too.
How could one not have loved her great still eyes.


Tonight I can write the saddest lines.
To think that I do not have her. To feel that I have lost her.


To hear the immense night, still more immense without her.
And the verse falls to the soul like dew to the pasture.


What does it matter that my love could not keep her.
The night is shattered and she is not with me.


This is all. In the distance someone is singing. In the distance.
My soul is not satisfied that it has lost her.


My sight searches for her as though to go to her.
My heart looks for her, and she is not with me.


The same night whitening the same trees.
We, of that time, are no longer the same.


I no longer love her, that's certain, but how I loved her.
My voice tried to find the wind to touch her hearing.


Another's. She will be another's. Like my kisses before.
Her voide. Her bright body. Her inifinite eyes.


I no longer love her, that's certain, but maybe I love her. 
Love is so short, forgetting is so long.


Because through nights like this one I held her in my arms
my sould is not satisfied that it has lost her.


Though this be the last pain that she makes me suffer
and these the last verses that I write for her.

Sunday, January 15, 2012

இவ்வாண்டு இனிதே நல்கட்டும்..

இவ்வாண்டு இனிதே நல்கட்டும்..

சென்றவை அனைத்தும் செல்லரித்து மனதைக்
கொன்றவை யாவும் செல்லட்டும் மறைந்து..

வசந்த வருகைக்காய் வாழ்ந்திருக்க இவ்வாண்டில்
கசந்தவை அனைத்தும் காற்றினிலே கரையட்டும்..

வந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோ மென்றில்லாது 
தந்தோம் தருவோம் முடிவேதும் இல்லாதென...

சொற்களின் புயல்தனில் சிக்கினோம் செயலற்றே
புற்கள் பெறாதவைக்காய் புரிந்துவிட்டோம் போரொன்றை..

தக்க வைத்திடும் தகுதியொன் றில்லாமல் 
விக்க லொன்றுக்காய் அமிலமதைக் குடித்தோம்..

நிரந்தரம் எதுவென்றே நினைத்திட வழியின்றி
நிதம் நிதம் சமர்செய்தோம் நிந்தனையில் வீழ்ந்திட்டோம்..

வரந்தரும் வார்த்தைகள் திசைஎட்டும் வலம்வந்தும்
சிரங்கொய்யும் சிற்றினமாய் சிக்கலில் தாழ்ந்திட்டோம்..

இனியொரு யுகமொன்றில் இனித்திட வாழ்வோமா
கனிபல நிறைந்திருந்தும் காய்தனைத்தான் சுவைப்போமா..?

காலத்தின் வயிற்றுக்குள் கணக்கில்லா நொடிப்புழுக்கள்
சோலையென சுகம் தருமோ செத்துவிழ ஏலாமோ..?

இந்த இக்கணம் மனத்தினில் நினைத்திருப்போம் 
வந்த மறுகணம் அதையழிக்க செயலற்றோம்..

மயன்சொன்ன கதைநிஜமோ ஞாலமிது அழிந்திடுமோ
லயமிக்க நல்வாழ்க்கை காலந்தான் காட்டிடுமோ..?

ஈதேதும் அறியாமல் நிலையற்ற இவ்வுலகில் 
வாதேதும் புரிந்து நிதம் வாழ்த்திட விழைவில்லை.

நான்செத்துப்போனாலும் என் நிழலும் கேடுசெய்யா
மானொத்து வாழ்ந்திட்டேன் மரணமும் சுகமெனக்கு..

வாழ்ந்திட ஏலுமெனில் வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்
தாழ்ந்தே போய்மறைந்தாலும் தரமிழந்து செயல்புரியோம்..

வந்துதிக்கும் புத்தாண்டில் வளமெல்லாம் உனைச்சேர
சந்ததிகள் வாழ்ந்திடவே வாழ்த்திடுவேன் இப்பேதை..!

Monday, December 5, 2011

இன்று புதிதாய்ப் பிறந்தேன்...

உருவப்படம்

இன்று புதிதாய்ப் பிறந்தேன்...

கண்கள் திறந்தன இன்று..

இமைமூடிய மயக்கத்தில் 
இமயமலைச் சாரலாய்ப் பொழிந்த 
உன் சாகசப்பேச்சுக்களில்
சாரலாய்ப் பொழிந்த அந்த 
குளிர்ப்போர்வைகள் 
என் இதயச்சூட்டைத்தணித்ததாய் எண்ணி
கருகும் இதயம் 
புகைவிட்டழுததை உணராமலேயே 
காலம் போயின...

விழிகெட்ட பின் என்ன 
வேதாந்தம் என்று கேட்கலாம் ...

விழிகள் கெட்டன..
இதயம் சருகாய்க் கருகின..

ஆயினும்

உயிர்த்துடிப்பு அடங்கும்முன்
உணர்வைப் பெற்றுவிட்டேன்..

கோடி நன்றிகள்..

உன் சாதுர்ய சிற்றொடர்கள்
உண்மையாய் எனக்கான மட்டுமான‌
சொற்றொடர்கள் என்று 
புளகாங்கிதமடைந்திட்ட போதினில்

கண்களில் படும் அனைவருமே உனக்கு
கண்ணாடிக்கோப்பைகளாய் 
உனக்கான பொழுதுபோக்கு விசைகளாய்..
என்பதை அறிந்து 
என்னையும் தேற்றிக்கொண்டேன்..

என்போன்றவர்கள் உன்னிடமிருந்து 
பிழைத்தெழ பிழை திருத்தி எழ‌
கண்கள் மூடி பிரார்த்திக்கிறேன்...

Sunday, November 27, 2011

ஒரு நடிகனின் கதை..

ஒரு நடிகனின் கதை..

இவ்வுலக மோரங்க நாடக மேடை 
நவ்வுத லோடே* ஆடவர் மடந்தையர்
பவ்விய மாகவே படைத்தனர் பாத்திரம் 
செவ்விய வாழ்வதும் செத்துமோர் வீழ்வும்
அவ்வளவே யதன் நுழைவும் புறமும்..


மானிடன் வாழ்வது மாந்திடில் அறிவாய்
ஊனுடன் உயிரதும் கொண்டது கோலம்..
கோனவன் ஆயினும் கொடுங்கையராயினும்
தேனதும் தேளதும் கொட்டிடும் வாழ்வில்
ஏனது கேட்டிடில் ஏழது அங்கமாய்..


முதலாம் அங்கம் முற்றுமே அறிந்திடா
நுதலது சிறந்திடும் மழலையின் வாழ்வாம்.
முதலது தேவை பசிக்கொரு உணவாய்
அதனது இழப்பில் அழுகையும் சிணுங்கலும்
வதனம் நிறைத்திடும் மென்னகை முழுமையாய்…


ஈரது பருவம் பாலகன் தோற்றம் 
கூரிய அறிவும் கொண்டதோர் கல்வியும்
வாரிய கூந்தலும் வண்டதன் குணமும்
நேரிய தோற்றமும் நேர்மையும் கொண்டொரு
ஓரது நத்தையின் நடையதில் தயக்கம்..


மூன்றா மங்கம் காதலில் மயங்கும்
தோன்றா கவிதைகள் தோன்றியே முயங்கும்
ஆன்றோர் பகர்ந்தது ஆங்கே கசந்திடும்
ஊன்றிடும் காதலில் ஆட்டமும் பாடலும்
தோன்றிடும் உலகம் தோழியின் முகமதில்..


அங்கமது நான்கினில் பலவகை உறுதிகள்
எங்கது காணினும் வீரமே முழங்கிடும்
தொங்கிடும் வாளது தலையதன் மீதினில்
பொங்கிடும் வீரமோ விதியையும் வளைக்கும்..
அங்கமே போயினும் மானமே உயிராம்…


ஐந்ததன் அங்கமோ அன்புடன் அறிவுரை
ஐம்பதைத் தொட்டிடும் அனுபவ நியாயமும்
வயிறது விரிந்திடும் கண்ணது அயர்ந்திடும்
அயரா அனுபவம் அருங்கதை கூறிடும்
வயிரமாய் வார்த்தைகள் வந்திடும் வளமதாய்..


ஆறினில் அடங்கிடும் ஆண்மையின் தோற்றம்
வேறது உடலென வளைந்திடும் கூனதில்
ஏறிய இடைத்துணி இறங்கிடும் நழுவியே
தேறிடா நயனங்கள் சுருங்கிடும் தேடலில்
கூறிடும் வாழ்க்கையின் கொடியதோர் முடிவை..


ஏழா மதனது அங்கமே இறுதியாம்
வாழா ததொரு வாழ்வினை ஏங்கிடும்
கோழையாய்ச் சுருங்கிடும் குழந்தையாய் மனதும்
தோழமை தேடியே தொலைந்தவை யாசித்து
ஏழையின் ஐம்புலன் போய்த்திரை விழுமே..





• நவ்வுதல் - மிகுந்த ஆர்வமுடன் விரும்புதல்

எழுத ஊக்குவித்த ஷேக்ஸ்பியருக்கு நன்றி.

All the World's a Stage monologue by Shakespeare

All the world's a stage,
And all the men and women merely players:
They have their exits and their entrances;
And one man in his time plays many parts,
His acts being seven ages. As, first the infant,
Mewling and puking in the nurse's arms.
And then the whining school-boy, with his satchel
And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover,
Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress' eyebrow. Then a soldier,
Full of strange oaths and bearded like the pard,
Jealous in honour, sudden and quick in quarrel,
Seeking the bubble reputation
Even in the cannon's mouth. And then the justice,
In fair round belly with good capon lined,
With eyes severe and beard of formal cut,
Full of wise saws and modern instances;
And so he plays his part. The sixth age shifts
Into the lean and slipper'd pantaloon,
With spectacles on nose and pouch on side,
His youthful hose, well saved, a world too wide
For his shrunk shank; and his big manly voice,
Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,

Saturday, November 19, 2011

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - ஐந்து

41.2002.

பணியதில் அவன் நேர்மை பணிவினில் பண்பதனில்
பிணியெவர்க் கெனினுமவன் பரிவினைக் காட்டியதால்
துணிவுக் கொருமனிதன் என்றபேர் பெற்றதனால்
கணிணியில் சிறப்பெனவும் பணியிடம் போற்றியதே..!


42.2003.

ஓர்தங்கை கரைசேர்த்த கடமையைச் செய்தயிவன்
நார்தனி நூலாக நொந்தது போல்நொந்தும்
மார்நிறை மனத்துடனே மறுதங்கைக் கோர்வரனை
வேர்வரை வெந்தாலும் கனிமுகத்துடன் சேர்த்தான்..!


43.2004 

தனக்கென ஓர்பொருளை வாங்கிடத் தயங்கிடுவான்
சினமதை நாசியினில் சடுதியில் கொண்டாலும்
மனத்தள வில்சேர்ந்தோர் மேலது பரிவுகொண்டு
கனத்ததோர் சுமையிருந்தும் கனிவுடன் காத்திடுவான்..!


44.2005.

பணிகளில் முன்னேற்றம் பல்வித மாணாக்கர்
அணிகல னாக்கிடவே அவர்க்கொரு வழிகாட்டி
மணிகளில் மாமணியாய் மாற்றிட துணை செய்து
பிணியெது மின்றியவன் பிழைத்திருந் தனன் காணீர்..!


45.2006.

வழமையில் வாழ்வதுவும் கடமையில் கருத்ததுவும்
குழம்பிய மனத்துடனும் குமுறிடும் கடனதுவும்
நிழலெனத் தொடர்ந்திடவே நிம்மதி இழந்திடினும்
குழந்தையைப் போலவன்தான் குடும்பத்தில் வளையவந்தான்..!


46.2007

பஞ்சினில் பெருந்தீயும் பாய்ந்தது போலொருநாள்
பிஞ்சன்ன அவன் இதயம் இயங்கிட மறுத்ததுகாண்
மஞ்சென ஒருதோழி மறுதாயாய் வந்தவுடன்
தஞ்சமென தன்தாயை அவளினில் கண்டனனே..!


47.2008

அன்னையை அவன்மனந்தான் அனைவரில் கண்டாலும்
முன்னைய மாதரிடம் நுகர்ந்திடா வாஞ்சையதை 
கன்னலைத் தோற்கடிக்கும் கவின்மொழி யாளவளில்
தன்னையும் மறந்தனனே அன்னையை உணர்ந்தனனே..!


48.2009

சொத்தேதும் சேர்த்ததில்லை சொந்தமெனத் தங்கையரின்
அத்தனை சுகத்தினுக்கும் இவன்வழி காட்டிடினும்
பித்தனைப் போலிவனை பின்புறம் தூற்றினரே
அத்துடன் பெண்களிலே தங்கைகள் வெறுப்பானார்..!


49.2010

எத்தனை நல்லவனாய் இவன்வலம் வந்தாலும்
முத்தனை குணங்களதை முழுமையாய்க் கொண்டாலும்
பித்தனிவன் கடும்சீற்றம் பின்னுக்குத் தள்ளியதே 
செத்திவன் விழும்போது இக்குறை மாறிடுமோ..?


50.2011

இன்றுடன் இவன்வாழ்வில் சினமதைக் கைவிடுவான்
நன்றுடன் நல்வாக்கு நலம்பெற வழங்கிடுவான்
ஒன்றல்ல இரண்டல்ல ஓரைம்ப தைத்தொட்டான்
என்றும் அன்புடனே எவருடனும் இணைந்திருப்பான்..!