கலைவேந்தனின்.... காதல் கதை
பகுதி_ஒன்று
அவன்....
கல்லூரியில் நுழையும்போது
வெள்ளைத்திரையாகத்தான்
உள்ளத்திரை ஒளிர்ந்தது...
மங்கிய ஓவியமாகத்தான் அந்த
மங்கை முதலில் நுழைந்தாள்...
தனது கவிதைகளை
உரசிப் பார்க்கும்படி
அந்தக் கவிஞன்
அவளிடம் வேண்டினான்...
காகிதத்தின் கவிதையை மட்டுமா
அவனது சோக முகவரிக்ளையும்
அவள் சோதனை செய்தாள்...
உள்ளத்தின் ஓரத்தில்
சற்றே இடம் பிடித்தாள்...
விடிந்தும் விலகாத
விடியல் பனி போல்--அவன்
வியர்த்தான்..
பின்னர் அவளது காதலின்
மொழி பெயர்த்தான்....
கவிதைகளைப் பற்றிய விமரிசனத்துடன்
அவனைப்பற்றிய கரிசனமும் வெளியிட்டாள்...
அப்போது
உண்மைக்காதலின்
தரிசனமும் வெளிப்பட்டது....
பகுதி_இரண்டு
அந்தக் கவிஞனின் கவிதை வேள்வி
அவளது
ஆர்வ நெய்யால் வளரத் தொடங்கியது...
இருவரரின் இடைவெளியும்
தளரத் தொடங்கியது...
அவளது முக விசாலம்
அவளது அக விலாசத்துடன்
அரவணைந்த ஒன்று...
கவிதைகளாலேயே அவளுக்கு
ஆபரணங்கள் அணிவித்தான்...
அகத்தில் மட்டுமல்ல
முகத்திலும் அவள் குழந்தையே!
அவளுக்குச் சிரிப்பைப் புகட்டினான்..
தனது சோகத்தை அகற்றினான்..
தனது பெருமைகளை மட்டுமல்ல
வறுமைகளையும் அவளுக்கு
அறிமுகப்படுத்தினான்...
அன்பு வார்த்தைகள் மட்டுமல்ல..
ஏழ்மை வாழ்க்கையும் எடுத்துக்கூறினான்..
அந்த
வெள்ளைச் சிரிப்புக்காரி...
உள்ளத்தை மட்டுமே வேண்டினாள்
உள்ளதை ஏற்றுக்கொண்டாள்...
பகுதி_மூன்று
இரண்டு நாட்கள் சந்திக்கவில்லை எனில்
இருவருமே இறந்து பிழைத்தனர்...
கண்கள் சந்திக்கும்போது
கண்ணீர்தான் சாட்சியாய்
உள்ளக்கூண்டில் ஏறி நின்றது....
அவள் வியந்தாள் இப்படி:
'' என் இதயக் கோயிலில்
இத்துனை விரைவில்
இவ்வளவு அழகாக
அன்புநீர் தெளித்து
அழகிய கவிக்கோலம்
போட்டது யார்?''
எப்போதாவது அவன் முகத்தில்
துன்பரேகை மின்னலிட்டால்
துடித்துப்போனாள் அவள்!
'' என் உள்ளக் கண்ணாடியை
உன்னிடம் ஒப்படைத்தேன்..
எச்சரிக்கைக் குறைவால்
உடைத்து விடாதே ''
கவிஞனின் இந்த வேண்டுகொள்
'' நான் உடைந்தாலும் என்றும் உடையாது
எந்தன் கண்ணாடி ''
என்ற பதிலுடன் முத்தமிட்டது!
பகுதி_நான்கு
அன்றுவரை
பிறர் கூறிய காதல் அனுபவங்களே
அந்தக் கவிஞனின்
கவிதைகளாய்க் கருத்தரித்தது..
வாழ்வில் உணர்ந்த போது அவனுக்கு
வார்த்தைகள் திணறின...
அந்தக் கவிஞனைச் சந்திக்கும்வரை
ஆண்களைப் பொறுத்து அவள்
ஊமையாகவே இருந்தாள்...
அவளது நாணப் போர்வை
அவனது கவிதை வாளால் கிழிந்தது...
புதுப் பெண்மையுடன் அவள்
புத்துயிர்த்தாள்...
தாயின் முகவ்ரி கண்டிடாத அவன்
முதன்முதலில்
தாயுள்ளம் அறிந்தான்....
காதலின் அர்த்தத்தை
காதலியாய் விளக்கினாள்...
மனைவியின் மகத்துவத்தை
மனத்தளவில் உணர்த்தினாள்...
ஆம்...
தாயாய் காதலியாய் மனைவியாய்
பரிணமித்தாள்...
இருவரும் தததமக்குள்
குழந்தை ஆயினர்....
தமக்குள் சிறு குடில் கட்டினர்..
உறவுகளைத் தம்முடன் ஒட்டினர்..
மனத்தளவில் அந்தக் குழந்தைகள்
குழந்தைகளை ஏந்தினர்..
மகிழ்ச்சிக் கடலினுள் நீந்தினர்...
பகுதி_ஐந்து
கவிஞனின் துன்பத்திற்கு
புன்னகை மருந்து பூசினாள்..
மெல்ல மெல்ல இருவரது உள்ளமும்
ஒட்டி உறவாடியது...
ஆனால்
ஒருவரை ஒருவர்
மூச்சுக்காற்றால் கூடத்
தொட்டுக்கொள்ளவில்லை
இருவருக்கும் இடையில் பண்பாடு
கை கோர்5த்து உலவியது...
அவனது அர்த்தமுள்ள பார்வையை
'' இந்தப் பிறவியில் மட்டுமல்ல
வரும் பிறவி தோறும்
இருவரும் கைகோர்த்து
உலாவரவேண்டும்.....''
என்று அவள் மொழி பெயர்த்தாள்....
கடவுளுக்குச் சூட்டக் கூட
பூ வாங்கியறியாத அவன்
அவளுக்கு அழகூட்ட
பூக்கடை தோறும் மலர்களின்
விலாசம் விசாரித்தான்...
அவள் கன்னங்களின் ஒப்புமையால்
ரோஜா மலர்
அவளால் அழகு பெற்றது....
முதல் முறையாக அவன் இதயம்
ஒருகணம் நின்றது!
பகுதி_ஆறு
ஒருவருக்கொருவர்
குடும்பச்செய்திகளை
பரிமாறிக்கொண்டனர்..
அவள் இருந்து வரும்
நாற்றங்கால் பற்றியும்
வளரப்போகும் வயல் வெளி பற்றியும்
விசாலமான விலாசம் கண்டனர்...
இடை இடையே சிலநேரம்
இருவரது உடல்களும்
கூட்டல் கணக்காகிவிடத் துடித்தது...
ஆனாலும்
பண்பாட்டுப் பெருக்கல் தான்
இருவரது மனங்களையும்
வகுத்துச் சென்றது..
வார்த்தைச் சுகங்களாலேயே
வாழ்க்கைச் சுகங்கள் கழிந்தன...
தனிமை ஒருமுறை இவர்களைத்
தள்ளாட விட்டது உண்மை
ஆனால்................
அவளது பெண்மையும் அவனது உணமையும்
விரகத்தீயை விரட்டிவிட்டது!
காதல் பாடம் வளர்ந்து வரும்போதே
கல்லூரிப் பாடம் குறுகிவந்தது
கல்லூரிவாழ்க்கை முடியப்போவதை எண்ணி
கண் கலங்கினர்...
ஒருவர் புன்னகை மற்றவர் கண்ணீரைத் துடைத்தது...
அப்போது......
திடீரெனப் பத்து நாட்கள்
தீயென வந்தது!
பகுதி_ஏழு
பத்து நாட்கள் பாட விடுமுறை...
அவள்
உயிரை இவனிடம் விட்டுவிட்டு
உடலுடன் சென்னை சென்றாள்..
இவன் உயிர்
உடலை இங்கே விட்டுவிட்டு
அவளுடன் சென்னை சென்றது!
மனத்தளவில் பிரிவில்லை எனினும்
நான்கு கண்கள் பத்து நாட்கள்
இமைக்க மறந்தன....
காவிரி மணலில் படுத்து
விண்மீன்களிடையே
அவளைத்தேடினான்....
சூன்யம் கண்டு வாடினான்...
கல்லூரிபாடங்கள்
கண்களில் ஏறவில்லை..
காதலி ஏக்கம் அவனை
அனாதைக் குழந்தை ஆக்கியது....
தினசரி அவள் வரவை எண்ணி
கண்கள் பூத்தன...
கண்ணீர்ப்பூக்கள் கோர்த்தன...
அவளது வழக்கமான வழித்தடங்களை
கண்களால் முத்தமிட்டான்...
மனதுக்குள் மட்டும் சத்தமிட்டான்...
பத்து நாட்களில்
பதது வகை நரகங்கள்
பரிச்சயமாயின....
அவளும் சென்னையில்
நடமாடும் பிணமானாள்...
நாயகன் நினைவுடன்
நாட்களை ஓட்டினாள்...
அந்தக் குழந்தை
தனது இந்தக் குழந்தைக்காக
பரிசுகள் வாங்கி வந்தபோது...
இந்தக் குழந்தை
கையில் பரிசுகளுடன்
அந்தக் குழந்தையைத் தாங்கியது!
பத்து நாட்களின் சோகங்களை
பார்வைகளில் கரைத்தனர்...
மீண்டுமொரு வசந்த காலம்
பூத்துவந்தது...
இருவரது உயிர்களையும் காத்துவந்தது..
பகுதி_எட்டு
இவர்களது காதல் வளர்ச்சியை
பலர் விமரிசனம் செய்தனர்.
சிலர் கரிசனம் காட்டினர்..
அவளது தோழிகள் அவளை
வார்ததைகளால் அறைந்தனர்..
காதலைத் தொல்காப்பியம் மட்டுமே
தத்து எடுத்துள்ளதா?
அகநானூறு மட்டுமே காட்டும்
சித்து விளையாட்டா அது?
காப்பியங்கள் மட்டும் காதல் உரிமை
காப்பிரைட் எடுத்துள்ளதா?
தாஜ்மகாலை வியக்கும் மனித உள்ளம்
ஷாஜஹானையும் மும்தாஜையும்
மறந்து போனதேன்?
உண்மைக் காதலைச்
சுற்றி நினறு தூற்றுவதேன்??
அவசர அவசரமாய் அதற்கு
சவப்பெட்டி தயாரிப்பதேன்?
நாட்டு மக்களிடமிருந்து காதல்
நாடு கடத்த வேண்டிய ஒன்றா?
படித்தவராக வேடமிடும் பாமரர்கள்
சுற்றி நின்று அக்காதலரைச்
சுட்டெரித்தனர்..
ஆனாலும் அந்த
ஆனந்தக் குயிலகளுக்கு
ஆதரவுச் சாமரம் வீசிய
நட்பு வள்ளல்களும் இருந்தன!
இணைப்பறவைகளின்
இணைப்பைப் புரிந்து கொண்டு
எதையும் செய்யத் துடித்தது ஓர் இதயம்...
அந்தக் காதல் இதயங்களைக்
கனிவுடன் வருடியது...
பகுதி_ஒன்பது
நாளொரு கடிதமும்
பொழுதொரு பூரிப்புமாய்
இன்ப வானில் மிதந்தன
அந்த மென்மைப்பூக்கள்!
பல்கலைக்கழகப் பாடத்திட்டமோ
ஆய்வேட்டின் வடிவில் அவர்களுக்கு
ஆதரவு கொடி ஏற்றியது...
ஆய்வுச்சிந்தனைகளும்
வாழ்வுச் சிந்தனைகளும்
பின்னிப்படர்ந்து பிணைத்தது அவர்களை!
பொறுப்புள்ள தாம்பத்யம் போல்
திட்டமிட்டு வளர்ந்தது அவர்கள் ஆய்வு!
இடையிடையே......
மனதுக்குள் அவர்கள் நடத்திய
குடும்ப நாடகத்தில்
குழந்தை உறுப்பினர்களும்
குடியேறினர்....
காதல் மொழியால்
தாலாட்டும் பாடினர்....
ஒருநாள் இருவரும்
கும்பேசுவரனை
கும்பிடப் போயினர் தனியாய்...
மெல்ல கை கோர்த்து
பிரகாரம் சுற்றினர்...
முதல் முதலாய் அந்த
கன்னிகையின்
கை தொட்டபோது
மனதுக்குள் நிறைய மத்தாப்பூ!
கைகளை இறுக்கினான்
காதலி மெய் மறந்தாள்..
தணலி இட்ட நெய் போல் உருகினாள்!
கோயில் என்ற நினைவிருந்தும்
சிற்பங்களைக் கண்டபோது
கட்டவிழ்ந்தது இருவரின் கட்டுக்கோப்பு!
ஆம்....
கட்டியணைத்தனர் காலம் மறந்து!
ஐந்து நிமிடங்கள் இன்னும் அந்த கவிஞனின்
ஐந்து யுகங்களாய் ஆழ்மனத்தில்....
பகுதி_பத்து
இன்னுமொரு ஐந்து நாடள்
இடியாய் வந்தது...
அவளின் குடும்பம் சுற்றுலா போனது...
பெங்களூர் நகரம் இவளது வரவால்
மேலும் குளிர்ந்தது...
பிருந்தாவனத்தில் காதல் கனவுகளுடன்
காதலன் நினைவுகளுடன்
உலா வந்தது அந்த
திருவாரூர்த் தேர்!
மைசூர் அரண்மனையில்
மகாராஜாவாய் அவனையும்
மகாராணியாய்த் தன்னையும்
பதவிப் பிரமாணம் செய்வித்து மகிழ்ந்தாள்...
அவளது மகிழ்ச்சியில்
இவன் மனம் நெகிழ்ந்தது...
அன்றொருநாள்-----
கல்லூரிப் பழமரம் தேடி
களிப்புடன் வந்த பறவைகள்
தங்கள் கூட்டுக்குப் பறக்குமுன்
பிரிவு உபசாரவிழா நடத்தியது...
இந்த காதல் பறவைகள்
சுமக்கவியலாத சோகத்தையும்
விளக்க இயலாத விசாரத்தையும்
ஒருங்கே சந்தித்தன...
ஒரு வகுப்புப் பறவைகள் அனைத்தும்
உள்ளம் திறந்து கூவின!
வகுப்புச் சட்டசபையில்
காதல் பிரேரணையை
வாழ்க்கை உறுப்பினர் அரங்கேற்றினர்..
மற்றக் குயில்களும் இவர்களுக்கு
வாழ்த்துப்பா இசைத்தனர்...
புகைப்படம் எடுக்கும்போதும்
உள்ளங்களைப் போலவே
ஒன்றி நின்றனர்....
அந்தக் கவிஞனின் மறக்கவியலா
மனக்காட்சிகளில்
இதுவும் ஒன்று!!
பகுதி_பதினொன்று
எததனையோ ஏக்கக் கனவுகளுடன்
தேர்வுகளுக்குப் படித்தனர்...
ஒருவருக்கொருவர்
உரையாடிஉரையாடி
தேர்வு நாட்களை
வசந்த ஊஞ்சலில் வைத்துப் பார்த்தனர்...
இறுதித் தேர்வன்று அவன்
உறுதி இழந்து உருகிவிட்டான்..
அவள் மறுநாள்
தனது சொந்த ஊரைச்
சிறப்பிக்கப் போகிறாள்...
கல்வி பயின்ற மண்ணை விட்டு
கால் பிரிய மனமில்லை...
கவிஞனின் நினைவு அவள்
காலைச்சுற்றி வந்தது...
அவள் தழுது கூறினாள்:
'' எங்கிருந்தாலும் நாம்
ஒன்றாகவே சுவாசிப்போம்...
நான்.....
தாய் வீடு செல்லும்
உங்கள் மனைவி!!
விரைவில் உங்கள் இல்லம் கண்டு
உயிர் பிழைப்பேன்!!
அது வரை
உறுதிக் கயிற்றால் உங்கள்
உடலைக்காப்பேன்...
நீங்கள் என் உயிரைக் காருங்கள்!
நாற்றங்காலின் முழுச்சம்மதம்
கிடைத்தாலும் அல்லவெனினும்
இந்தப் பயிர் உங்கள்
வயலுக்கே சொந்தம்''
இப்படிக்கூறி
இதயத்தை இறுக்கிகொண்டு
அவள் விடை பெற்றாள்....
பகுதி_பனிரெண்டு
எப்படியோ அந்த
இரண்டு உயிர்களும்
தனித்தனியே
சுவாசிக்கலாயின...
வாரம் ஓரிரு மடல்களாயினும்
வரைவேன் என்றாள்..
'' உன் மடல் கண்டு தான்
என் உடல் இயங்கும் '' என்றான்..
வந்த மடலுக்கு இவ்வாறு
விடையளித்தான்:
'' வேலை கிடைத்ததும்
வேளையும் வந்து விடும்...அந்த
நாளை எண்ணி
நாட்காட்டி பார்த்திரு
இடையில் வேறு மாலை வந்தால்--
பணிவுடன் மறுத்து விடு பூவே! ''
தேர் உல்வும் ஆரூரில் அவள்
தேயலானாள்....
விரைவில் அவளை அடைய வேண்ட
வேலை தேடித் தேடி
வேதனையில் அழுந்தினான் அவன்!
சிறு தூறலுடன்
மழை நின்றுவிடுவது போல
சில மடல்களுக்குப் பின்
அவள் சிலையானாள்..ஆம்
அவள் சிறையானாள்!!
தினமும் வானம் கண்டு ஏங்கும்
ஏழை விவசாயி போல
தபால் காரன் வழி பார்த்து
தடம் மயங்கினான்...
பகுதி_பதின்மூன்று
அந்த இலக்கியப் பட்டங்கள்
அனைத்தும் அவனுக்கு
வேலை வாய்ப்பைத்
தரவில்லை---ஆம்
ஏழைக்கு வாய்ப்பேது??
அந்த தேவதையை
உயிர்ப்பித்த சிற்பிகள்
நல்லவர்கள் தாம் ஆனாலும்
அவர்கள் சமூகக் கயிற்றால்
ஆட்டிவைக்கப்பட்ட
தோல் பொம்மைகளே!
எந்தத் தகுதியின்மை
அந்தக் கவிஞனின்
மறுதலிப்புக்குக் காரணமோ?
சாதி வேலிதான்
பாதித்ததோ?
அவர்களின் ஆகாயமனங்கள்
குறுகிப்போனது
சாதி இருட்டினாலா?
அந்தக் கவிஞன் ஏழையானது
காதல் குற்றமோ?
அதன் தண்டனை
இரண்டு இதயங்களின்]
ஆயுள் அழுகையோ?
இயற்கை வெளியில்
இயங்கிப் பறக்கும்
இணைப்பறவைகள்
தங்களுக்குள் சாதிப்போர்வை
போர்த்துகிதறதா?
சுகமாய்த் திரியும் புள்ளிமான்கள்
திருமணத்திற்காக
அந்தஸ்து பேரம் பேசுகிறதா?
பல வண்ணங்கள் கொண்டாலும்
மயில்தோகை அழகல்லவா?
சந்திரனைத்தொட்டுவிட்டு
செவ்வாய்க்குத் திட்டமிடும்
ஆறறிவுப் பிறவிகள் மட்டும்
சாதி பார்ப்பதேன்? அந்தஸ்து தேடுவதேன்?
சாதி மாறினால்
இரத்த தர்மம்
பச்சை நிறத்தில் பரிணமிக்கிறதா?
ஏழையின் குருதி அசுத்தமானதா?
பகுதி_பதினான்கு (கடைசி???)
கடவுளே இல்லையென்று
பகுத்தறிவு பந்தயம் வைக்கிறது...
சாதியை பட்டும்
சந்தனமாய் கருதுகிறதே...
தமிழ் நெறிகளில் ஆண் பெண் எனும்
இரண்டே சாதிகள்தானே
காலம் காலமாய் கருதப் பட்டன?
நல்லவர் தீயவர் சான்றோர் கீழோர்
இவர் தவிர
எங்கே முளைத்தனர்
செட்டியார்களும் பிள்ளைமார்களும்?
எது எப்படியோ
சாதி அரக்கனோ அந்தஸ்து வேடனோ
அந்த இணைப்பறவைகள்
அறுக்கப்பட்டன...
(நீண்ட காலம் போய் விட்டது)
இதோ
அவள் மனத்திலஒருவனையும்
உடலில் ஒருவனையும்
சுமக்கிறாள்...
அவன்....
வாழ்க்கைச் சூறாவளியில்
எங்கோ சுற்றி
இதோ
உங்களிடம் நியாயம் கேட்கிறான்....
'' காதலிப்பது குற்றமா?
அதன் தண்டனை
ஆயுள் அழுகையா?''
Excellent poem!
ReplyDeletevegu naatkal kazhithu nallathoru kavithai paditha maghizhchi!
This comment has been removed by the author.
ReplyDeleteannaaa solla varththai illai aannaa ....
ReplyDeleteromba unarvaa ezuthi irukeenga ...touchin eh irukku ...
maru jenmathilaavathu neenga rendu berum sernthu vaazha vaendum nu iravanidam vaendik kolgiren