இது எனது கல்லூரிக்காலத்தில் கல்லூரியில் நடந்த கவியரங்கில் நான் வாசித்த கவிதை.
தலைப்பு: " நில்... கவனி...செல் "
அறிவு எனும் இமயத்தை
அளந்துவிட்ட டென்சிங்கே
அவைத்தலைவா!
வணக்கம்,
காவிரிப்பாசனத்தை நம்பியுள்ள
கழனிகள் போல்
பாவிரிக்க வந்துள்ள
பாவலர்களே...
இந்த அவைக்கு ஏற்ற வயதில்லை
என்றாலும வாய்ப்பளித்த
கல்வி வித்தகரே முதல்வரே!
எல்லோருக்கும்
என் பணிவான வணக்கங்கள்!
மகன் தாயை வாழ்த்துவது
முறையல்ல என்றே
தமிழ் வாழ்த்தைத்
தவிர்க்கின்றேன் சிறு பிள்ளை நான்!
நில் கவனி செல்
எனும் தலைப்பில்
வா கவி சொல் என்ற
உங்கள் அடிபணிந்து
சமர்ப்பிக்கிறேன்:
பகட்டுகளின் பவனிகளை
பளபளக்கும் அணிவகுப்பை
நின்று..கவனித்து..செல்லும்
வருங்கால இந்தியத் தூண்கள்
விளக்கில்லா நெற்றிமாடங்களை
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை ஏன்??
பகல்களில் விண்மீன்களை
எதிர் நோக்கும் இளைஞரே
வெள்ளை நிலாக்களை
வெறுத்து ஒதுக்குவது ஏன்?
சற்றே கவனியுங்கள்:
இமைகளில் படபடப்பு
இந்தியக் கொடியினைப் போல்
கலைமகளின் சீருடையில்
கலைந்து போன ஓவியங்கள்..
சுழன்றடித்த சூறாவளியில்
அணைந்து போன
குங்குமத் தீபங்கள்...
கண்ணுக்குள் காமனின்
திருவிளையாடல்...
இமைகளில் செருகி விட்ட
மன்மதனின் மலர்க்கணைகள்..
இந்த தேய்பிறைகள்
ஏனோ
இளைஞர்களால்
வெறுக்கப் படுகிறது...
கவனியுங்கள்!
கவிஞர்களே.....
மரத்தின் உச்சாணிக்கொம்புகளையே
ரசித்துக் கொண்டு செல்லும்
சிந்தனைக் கவிஞர்களே..
நில்லுங்கள்...
உங்கள் காலடியில்
உயிர்விட்டுக் கொண்டிருக்கும்
இந்த இளம் குருத்துகளையும்
சற்று கவனியுங்கள்...
விண்ணில்
இந்திரன் மாளிகை எழுப்ப முயலும்
வித்தகர்களே சற்றே நில்லுங்கள்..
ஆட்டம் கொண்டுவிட்ட
அடித்தளத்தையும்
கவனியுங்கள்...
பின்னர்
ஆகாயக் கோட்டையை
ஆராயச் செல்லுங்கள்...
தேசீய அழுக்கினை
தேய்க்க சுறு சுறுக்கும்
அரசியல் வெளுப்பாளர்களே
நில்லுங்கள்...
உங்கள் உடையை
முதலில் கவனியுங்கள்..
சாதித் திரிக்கு
நெருப்பூட்டச் செல்லும்
வேலி ஓணான்களே..
நில்லுங்கள்...
உங்கள் தாடியின் நெருப்பைக்
கவனியுங்கள்...
ஓட்டுப் போட
ஓட்டமாய்ச் செல்லும்
ஆட்டுக் கூட்டங்களே...
நில்லுங்கள்...
வேட்பாளனின் கைகளைக்
கவனியுங்கள்...
அங்கே இருப்பது
கருணை யல்ல
கசாப்புக்கத்தி!
(இப்போது நிலை மாறுகிறது
இந்தக் கவிதைகளுக்குப் பின்...)
நில்லுங்கள்...
இங்கே
பல அடிமைகளின்
அணிவகுப்பு
அடிவருட அல்ல!
கவனியுங்கள்...
அவர்கள் கைகளில்
பணிவுகள் அல்ல
பயங்கர ஆயுதங்கள்...
ஆண்டான்களே
உயிர் பிழைத்துச் செல்லுங்கள்...
சுரண்டெலிக் கூட்டங்களே
நில்லுங்கள்...
புரண்டெழுந்துவரும்
புரட்சி வெள்ளத்தைக்
கவனியுங்கள்...
ஏழைகளின் ஆயுதங்கள்
எரிமலையில் பழுக்கப்பட்டவை..
இதயச் சம்மட்டியால்
இழைக்கப் பட்டவை..
விலகிச் செல்லுங்கள்
வேறு வழியே இல்லை...
No comments:
Post a Comment