வாழ்க்கை
பல கற்றும் பெருந்தன்மை கொண்டவன்தான் மனிதன்
படைப்பினிலே உயர்வுபெற்ற தூய நல்ல புனிதன்!
சலனமின்றி அமைதி பெற்ற மௌனநிலை மனதும்
சலிப்பின்றி கண் துஞ்சா உழைப்பும் தான் வாழ்க்கை!
கொடுத்தவர்க்கே கிடைத்திருக்கும் புரிந்த புதிர் அன்பு,
கொடுமையான மனிதருக்கும் உதவுகின்ற பண்பு,
எடுத்தாலும் குறையாத நிறைசெல்வம் கல்வி, இவை
எப்போதும் நிறைந்திருக்கும் பெட்டகம்தான் வாழ்க்கை!
மதுவழகி மயக்கத்தில் மயங்கிடாத ஆணும்
மமதையெனும் கிறக்கத்தில் விழுந்திடாத பெண்ணும்
எதுவரினும் எதிர் கொள்ளும் இரும்பு போன்ற மனமும்,
எப்போதும் நிம்மதியும் நிறைந்ததுதான் வாழ்க்கை!
இரண்டு பெற்று இனிதாக வளர்த்துவரும் திறமை
இல்லையெனில் வறண்டிடுமே இல்லறத்து வளமை,
மிரண்டு வரும் மழலைக்கு மகிழ்வான முத்தம்
மிச்சமின்றி வழங்கிவிடும் தாயன்பே வாழ்க்கை!
இல்லாமை இல்லாமல் ஆட்சி செய்யும் இல்லாள்
இறையன்பும் நிறைந்திருக்கும் இதயம் கொண்ட நல்லான்
கல்லாமைஎனும் ஆமை நுழையாத இல்லம்
கற்கண்டாய் இனித்திடுமே இவை நிறைந்த வாழ்க்கை!
No comments:
Post a Comment