Monday, January 18, 2010

தேன் துளிகள் பகுதி - 7

நாவ‌ட‌க்க‌ம்...

அடங்கும் நாவினுக்கு அவனியே அடங்கும்
அடக்கும் விழைவதுவோ அமரருள் அடக்கும்
அடங்கா நாகமது மகுடிக்கு அடங்கும்
அடங்கா காயமது நிலத்தினுக்கு அடங்குமே!

சிவ‌ன் குற‌ள்....

அவனுள்ளே நானென் றுளத்திலெண்ணி - நித்தமும்
சிவனுள்ளே ஆழ்ந்திடுவாய் நீ.

உறுதிகொள் நீ....

கருணைப் பார்வையாலும் கள்ளமிலாச் சிரிப்பினாலும்
திருவான முகத்தாலும் திமிரிலாக் குணத்தாலும்
உருவான அன்புப் பேழையே எனதுயிரே
ஒருநாளும் மறவேனுனை உறுதிகொள் இதைநீயே...!


உனக்காக...!

உன்னோடென் றானவரை உயிருடனே வாழ்ந்திருப்பேன்
என்னஇடர் தான்வரினும் எதிர்த்துநின்று போரிடுவேன்
சின்னதொரு துயருனையே சீரழிக்க வந்தாலும்
என்னையே இழந்தெனிலும் உன்னையே காத்திருப்பேன்...!


தாய்....


உந்தன் நலம்மட்டு மென்றும் கருதியே
தந்தனள் தன்னுதிரம் தனையுருக்கிப் பாலாக்கி
சிந்திய வியர்வையைச் சோறாக்கி ஊட்டினள்
சிந்தித்துப் பாரந்த அன்னையின் தியாகத்தை...!

முன்னேறு....!

முன்னேறு முகம்திரிந்து நோக்காமல் என்றும்
உன்னாலும் முடிமென் றெண்ணம் விதைத்திடு
பின்னால் வருவதை எண்ணிநீ கலங்காமல்
என்னவலி வந்திடினும் உதறிநீ முன்னேறு...!

தோல்விகள் உன்னைத் துவள‌வைக்கும் போதெல்லாம்
சேல்விழியாள் அபிராமி அவளை என்றும் தொழுதிடு
ஊழ்வினை நம்மை உறுத்துமென் றெண்ணாமல்
வாழ்க்கையில் முன்னேறு கால்விழும் தோல்விக‌ள்...!

ப‌டைத்தாயே...

படைப்பாயா எம்மையுமோர் மடைப்பாயாய் எல்லோரும்
ம‌ட‌க்கியே அட‌க்கியே வைத்திடும் பாயானோம்
உடைப்பாயா எம்துய‌ர‌ம் உன்னையே ச‌ரணடைந்தோம்
துடைப்பாயா எம்க‌ண்ணீர் தூய‌வ‌னே எம்மிறையே...!

ஆணினந்தான் என்றென்றும் எமையாண்டு இய‌ந்திர‌மாய்
பேணுகிறோம் என‌ச்சொல்லி பேதைமையை எள்ளிநித‌ம்
பூணுகிறோம் கைவில‌ங்கு க‌ழுத்தினில் தாலிஎன்றே
நாணுகிறோம் எம்நிலைக்கு காத்திடுவாய் எம்மிறையே...!

No comments:

Post a Comment