Monday, January 18, 2010

தேன் துளிகள் பகுதி - 8

ஏன்...?

இல்லை என்பார்க்கும் உண்டென்பார்க்கும் ம‌றைவாய்
எல்லையின்றி எங்கும்நிறைந்து எமையாளும் எம்மானே
தொல்லையில்லா உல‌க‌ம்த‌னை வ‌ழங்கித் தொலைக்காம‌ல்
கல்லாகிப் போன‌தேன் க‌ட‌வுளே ப‌தில்சொல்வாய்...!



நாமென்று சொல்வோம்...!


நாமெனும் சொல் மறைந்திடும் அங்கே
நாகமாய் ஐயமுனைக் கடித்திடும் போது
ஆமென்று சொல்லி அடங்கிடும்போதே
ஆண்டான் அடிமை உருவாகிடுந்தான்
தீமைகள் மறையும் தீப்போன்ற‌ தூய்மையில்
தீர்ந்திடும் வாதங்கள் சொல்லிடும் வாய்மையில்
ஆமைகள் போன்றதோர் எண்ணங்கள் சாய்ந்திடும்
ஆங்கே குவிந்திடும் அன்பும் காதலும்...!


வார்த்தைக்காய் காத்திருந்து....

வார்த்தைக்காய்க் காத்திருந்து வசமிழந்தான் தன்னையே
வார்த்தெடுத்த சிலையவளின் மனமறிய‌ எண்ணியே
வேர்த்தமுகம் வழிந்திருக்க வேதனையில் வாடினான்
கோர்த்துவைத்த மலர்மாலை ஏற்பின்றி வாடியதாய்....!

வாடியதாய் ஒருநேரம் வாத்சல்யம் மறுநேரம்
கூடிநின்று கலந்திடத்தான் கோடிஎண்ணம் பலநேரம்
ஓடிய மணித்துளிகள் ஒன்றொன்றும் யுகயுகமாய்
கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம் அவளே....!


நாய‌ம்கேளுநீ...!

நாரணனே வந்துதித்து நாயம் கேளுநீ
சோரம்போன அர்ச்சகனை நொந்து போகநீ
ஓரடிதான் முதுகில்தந்து சொர்க்கம் சேருநீ
சீரழியும் பக்தர்களை வந்து காருநீ...!

வாடிப்போன பக்தருக்கு சோறு போடுநீ
ஓடிப்போன நீதிகளை தேடிப் பாருநீ
மோடிவித்தைக் காரங்களை மோட்சம் தாருநீ
கோடிநன்மை வந்துசேரும் எம்மைக் காருநீ..!


குறள் படிப்போம்...


குறளதை தினம் படித்தே நாம் நிதமதன் வழிநடந்தே
பிற‌ரது நிலை ம‌தித்தே மன வ‌லிமைக‌ள் பல ப‌டைத்தே
திற‌மைக‌ள் ப‌ல‌வ‌ள‌ர்த்தே தின‌ம் திருவ‌ருள் பெற‌நினைத்தே
ம‌ற‌வ‌ழித‌னை ம‌றுத்தே குலம் தழைத்திட வாழ்ந்திடுவோம்....

வினைதீர்க்கும் வழி...

உயர்கேள்வி ஞானம் உய்வெய்தும் ஆர்வம்
துயர்போக்கும் தானம் துணைநிற்கும் ஆக்கம்
அயர்வில்லா தீனம் அசைவில்லா மோனம்
வியர்வில்லா நாணம் வினையாவும் தீர்க்கும்!

No comments:

Post a Comment