காத்திருப்பது எனக்குப்பிடிக்கும்...
அந்தக் கணங்கள்
நம்மைப்புடம் போடுவதால்...!
உள்நோக்கிய பார்வையில்
உள்ளக்கிடவுகள் உயிர் பெற்று
ஒளிரும் என்பதால்..!
ஒருவரை
எத்தனை நேசிக்கிறோம் என்பதை
காத்திருக்கும் கணங்கள் தான்
நிர்ணயிப்பதால்...!
புல்வெளி கரைந்தபின்
புதிய புல் முளைத்து வர
காத்திருக்கும் பசுவினங்கள்...!
அவற்றைக் கேளுங்கள்
காத்திருப்பதன் அருமை சொல்லும்..!
தொலை தூர மனித வரிசையில்
கால்கடுக்கக் காத்திருந்து
நம்முறை வரும்போது
காத்திருந்த கணங்களின்
சுமைகள் கரையுமல்லவா?
காக்க வைப்பவர் உயிருக்குள்
சமைந்திருந்தால்....
காத்திருப்பது எனக்குப்பிடிக்கும்...!
No comments:
Post a Comment