1.
வள்ளலே ஞானப் பெருஞ்சுடர் ஜோதியே
அள்ளினும் தேயாத செல்வமே - முள்ளில்
விளைந்திட்ட பூஞ்சோலை போல்யானும் இங்கே
களைத்திட்டேன் காத்திடுவாய் நீ!
2.
நானே அறியா சிதம்பர மந்திரத்தை
தானே அறிந்திட்ட என்மகனே - மானேஉன்
மூவாறு ஆண்டினிலே முற்றிலும் ஆய்ந்தறிந்து
ஏவாது நோய்தீர்ப்பாய் நீ.
3.
நின்றேன் நெடுமரமாய் நானும் உவகையுடன்
ஒன்றேன் இனிஉலகில் எப்பொழுதும் - நன்றே
உனைஎண்ணி வாழ்ந்திடுவேன் நாள்தோறும் அன்பே
பனைமரத்தின் வண்டென நான்.
4.
கேளிரும் வாரார் சடுதியில் மானேயுன்
தோள்சுமை ஏற்றிடவே தோல்வியில் - வாளிப்பு
சற்றே குறைந்திடினும் ஏகிடுவர் தூரமாய்
கற்றே தெளிந்திடு நீ!
5.
அறிந்திடேன் உன்னுள்ளம் ஆய்ந்திடேன் சித்தம்
எறிபந்து பாய்ந்திடும் அன்ன - குறிநோக்கி
தீப்பரவும் வேகமதில் உன்னன்பில் என்மனமே
மூப்புவரை வாழ்ந்திடுவேன் நான்.
No comments:
Post a Comment