Monday, January 18, 2010

அல்விதா...!




அல்விதா.......!


நீயும் நானும் ஒன்றுதான்....
எப்படி என்று கேட்பாய்
நம்மில் யார் தவறு செய்தாலும்
தண்டனை இருவருக்கும் தானே....!

நேற்று நான் செய்த தவறுக்கு
இருவருமே தண்டித்துக்கொண்டோம்...
இன்று உன் தவறு.....
தண்டனை என்னவோ பொதுதானே...?

தண்டனை அனுபவிக்கும் போது
உனக்கும் வலிக்கும்தான்
எனக்கு இதயச்சுனாமியே
எட்டிப்பார்த்துப் போகிறதே....!

யாரைக்குறை சொல்ல...?
நம்மைப் படைத்த இறைவனைத்தானே...?
நாம் விதைத்த வினைகளுக்கு
வேறுதினையா முளைக்கும்...?

நீ என்னவோ சாதாரணமாகச் சொல்லிப் போனாய்...
சம்மட்டிகளாக விழுந்த அந்த
சண்ட மாருத இடிகள்
என் சகலத்தையும் குதறிப் போனதை
நீ அறிவாயா...?

கொடுமையிலும் கொடுமை என்ன தெரியுமா?
நம்குழந்தை இன்னொரு பெண்ணைத் தாயென்று அழைப்பது....
அதனினும் கொடுமை என்னவென்று சொல்லட்டுமா...?
அருகிருந்தும் அன்னைமடி கிடைக்காத
குழந்தையின் அழுகை தான்...!

என்றோ ஒருமுறை நீ சொல்லிப் போனாய்...
உன்னைக்காணாத போது
என் கண்களிரண்டும்
புண்களிரண்டாய் மாறிப்போகிறது என்று...
இன்றுதான் அதன்அர்த்தம் உணர்ந்தேன்...!

எத்தனை முறை விரட்டினாலும்
எத்தனம் விடாத ஈக்களைப் போல
இதயம் என்னவோ உன்னைச் சுற்றிதான்...
பூச்சிக்கொல்லி திணறடிக்கும் போதும்
இறக்க விரும்பி இடைவிடாத பறப்பு...!

கொன்ற இதயத்தைத் திரும்பிப்பார்க்காமல்
சென்றுவா....!
என் இதயச்செல்கள் இறந்துவிட்டாலும்
இரத்த வெப்பம் தணியாது
உன்னை மீண்டும் காணும்வரை....!

No comments:

Post a Comment