ஆண்டுக்கொருமுறை வரும்அறுவடை நாளுக்காய்
அன்புநீர் தெளித்து விழி வாசலில் காத்திருந்தான்....
மனவயல் முழுக்க நம்பிக்கை நாற்றுகள்
எதிர்பார்ப்புக் காற்றில் சிலு சிலுத்தன...
எகிறிப்பறந்துவரும் சூழ்நிலை வெட்டுக்கிளிகளை
தன் கைப்பொமமையைத் தக்கவைக்கப் போராடும்
பலவீனக் குழந்தையாய் விரட்டினான்...
திருவிழா வசந்தங்கள் தரும் திகட்டாக சுவை புசிக்க
புது வகுப்புச்செல்லும் சிறுமாணாக்கனாய்க் காத்திருந்தான்...
இளம்பச்சை நாற்றுகளைப் பசிகொண்ட ஆடுகள்
புசித்திட விட்டுவிடாது விழிவியர்க்க பார்த்திருந்தான்...
கடும்புயல் மழைகளை கட்டுப்படுத்த இயலாதெனினும்
தன்வயல் பட்டுவிடாமல் க்டவுளிடம் உருகிநின்றான்...
சதிவலிது தானெனினும் அதனைவிட
விதிவலிது என உணர்ந்து
மதிமுழுக்க நல்லெண்ணம் நிறைத்து நின்றான்...
அந்த நாளும் வந்தது.....
காத்திருந்து விருந்து புசிக்கும் இரவுப்பிச்சைக்காரனாய்
கால்கடுக்க நின்று செய்த தவம் பயனுறுமோ என எண்ணி
காலதேவனின் அலட்சியப்பார்வையை லட்சியம் செய்யாமல்
கவலையுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது.....
வடித்துச் சமைத்து வடிவாகப்பறிமாறும் நேரம்
வாய்வைக்கவந்த நாயின் விதி சொல்வதா...?
கருக்கொண்ட மேகங்கள் பொழிந்துவிடத் தயாராகும்போது
எங்கிருந்தோ வந்த சூறாவளிப் பெருங்காற்று
எங்கோ தள்ளிப்போன சோகம் புனைந்துரைப்பதா...?
ஏழைகளுக்குமட்டுமே சந்தர்ப்ப சூழல்கள்
எதிராக நிற்பதேன்....?
காரணம சிந்திப்போம் களைவோம்...
களைய முடியாதவற்றை கருவறுப்போம்....!
எது எப்படியாகினும்
ஏழைப்பசியாளனின் உணவுக்கனவுகள்
கருக்கலைய சம்மதியோம்....!
No comments:
Post a Comment