முண்டுகட்டி கார்கூந்தல் முடிச்சுபோட்டுப் போகும்பெண்ணே
செண்டுகட்டி ஆடுதடி எந்தன்மனம் உன்னைக் கண்டு
ரெண்டுதரம் மூச்சடைச்சே ரெக்கை கட்டிப்பறந்ததடி
உண்டுஇல்லை என்ற இடை உன்மத்தம் ஆக்குதடி....!
ஆடிமாதக் காத்துவந்து ஆளைமாத்திப் போட்டதடி
ஓடி வந்து கட்டிக்கடி ஒடிஞ்சு போகும் எந்தன் நெஞ்சு
சேடிப்பெண்கள் கூட என்னை சேட்டை செய்யும் கோலமடி
வாடி வந்து கட்டிக்கடி வாடிப்போகும் என் மனசு...!
கண்டாங்கிச் சேலையில் கணுக்காலும் தெரியுதடி
கொண்டாட நானிருக்கேன் கொஞ்சிப்பேச வாடிப்புள்ளே
வண்டாடும் சோலையிலே வக்கனையாக் காத்திருப்பேன்
பொண்டாட்டி யாகி நீயும் புருஷனாக ஏத்துக்கடி...!
ஊரெல்லாம் என்னைப்பாத்து ஒதுங்கித் தான்போகுதடி
பேரைக்கூட மறந்து விட்டேன் உன்னை மட்டும் மறக்கவில்ல
சீராக என்னை ஏந்தி சின்னதாகக் கண்ணடிச்சு
நாராகக் கிழிச்சுபோட்டு நர்த்தனமா ஆடுகிறே...?
No comments:
Post a Comment