Saturday, September 10, 2011

நன்றியுடன் அல்விதா..!

நன்றியுடன் அல்விதா..!

எங்கிருந்தோ வந்தனன் யான்.
இடச்சாதி என்றனை நீ..
இங்கிவனைப் பெற்றனன் நான்
என்ன தவம் செய்தேனென்றாய்..!

இன்றுனக்குக் கசந்தனன் யான்.
எந்தன் குற்றம் என்ன என்றேன்..
நன்றுனக்கு அறிகுதில்லை
நட்புவைக்க என்றுரைத்தாய்..

அன்றுனக்கு இனித்தது ஏன்
இன்றுனக்குக் கசந்ததுமேன்..?
என்றுனக்குப் பயனில்லையோ
நன்றி நான் பிரிந்து கொள்வேன்..!

என்றுனக்கு என் தேவை 
எதிர்கொள்ள நேரிடுமோ
அன்று என்னை ஸ்மரணிப்பாய்
வந்துனக்கு துணையும் நிற்பேன்...!

இன்று நான் செல்கின்றேன்..
என்றுமுனைப் பிரிந்திடிலேன்..
ஒன்று மட்டும் சொல்லிச் செல்வேன்
நன்றைமட்டும் நம்பிவாழ்வாய்..!


Sunday, September 4, 2011

குருடர் படித்த யானை..

குருடர் படித்த யானை..

படம்

பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன்.
விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்..!


முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம்
அன்னவர்க் கோஒரு தலைவனோ டைவராம்
முன்னரும் பின்னரும் யானையைக் கண்டிலர்
என்னசெய் வரவகக் கண்ணிலும் குருடராம்..


அந்தோ ஒருநாள் யானையைக் கண்டிட
சந்தோ ஷமுடனே வேகமாய்ச் சென்றனர்
முந்திய னொருவன் களிறினை முறமென
பிந்திய குருடனோ தூண்வா ரணமென..


ஆங்கே மூன்றா மவனும் செப்பினன்
தூங்கா விளக்கே கவின்மிகு யானையும்,
நான்கா மவனுக் கோர்வேழமே நாகமாம்
ஐந்தா மவனோ அனைத்துமே தப்பென


யானை என்பதோ தெருநா யென்றனன்
பானை போன்றொரு வயிற்றுடன் வலம்வரும்
பூனை போன்றொரு திருடனே யானையாம்
வானை யொத்ததோர் ஆனையோ சிரித்தது..


குருட்டுக் கூட்டணி திருட்டெனக் கூறிடின்
பெருமதி யுடையோர் தாழ்வரோ என்றுமே..?
பெருமைக் குரியதோர் ஞாயிறும் சீறுமோ
கருகியே ஞமலியும் குரைத்திடின் கதிரினை..?


ஆன்றோர் என்றும மைதியே கொள்ளுவர்
சான்றோ ரெனவே அதனாற் சிறந்தனர்..
மூன்றாந் தரமதி யுடையோர் பகர்ந்திடின்
தோன்றாப் புகழும் தொய்விடா தறிவீர்..!