Tuesday, December 25, 2007

பயணம்

ஞானதீப மேற்றவேண்டி ஞாலமுழுதும் சுழன்றியே
தீனமான மானிடம் திமிர்ந்து நடை போட்டிட
ஊனமான உள்ளமும் உயர்ந்த பார்வைபெற்றிட
போனதிசை யாவும்வென்றவி வேகானந்தர் பயணமே!

நடந்த கால்கள் நொந்திடப் பயணம் கொண்ட காந்தியும்
இடைஞ்சல் கோடிகண்ட போதும் என்றும்தளர வில்லையே!
கடந்த பாதை எங்கினும் கற்கள் கோடியாயினும்
உடைந்து போக வில்லையே உறுதிகுலைய வில்லையே!

வெள்ளையரும் கொள்ளையரும் வேட்டையாடி பாரதத்தின்
கொள்ளை நோயாய் கூடியிங்குக் கொலுவிருந்த வேளையில்
வெள்ளையுள்ளக் கோபத்துடன் வெகுண்டெழுந்த பாரதி
பள்ளுத்தமிழ் பாட்டெழுதிப் பயணம் கொண்டான் பவனியில்!

மூடநம்பிக் கைகள்யாவும் மூண்டெழுந்து நாற்புறம்
ஓட ஓட விரட்டியதில் ஒடுங்கி சாய்ந்த மனிதமோ
ஆடம் பரத்தை உதறிவிட்டு அறிவுப் பயணம் தொடங்கியே
பாடம் சொன்ன ராமசாமிப் பெரியாரால் நிமிர்ந்ததே!

அறிவுப்பயனை எடுத்துச் சொல்ல யாருமின்று இல்லையே
செறிவுபெற்று செழித்துவாழ செல்வமிங்கு இல்லையே
முறிந்துபோன வாழ்க்கைச்சகடம் முடுக்க யாருமில்லையே
உறைந்துபோன தமிழன் உள்ளம் பயணம் மறந்து போனதே!

கலைமகள் கனவில் வந்தாள்!

என் தலைமேல் சூழ்ந்த
கார்மேக விதியைக் கண்டு
கலங்கிப்போய் கண்ணயர்ந்தேன்!
அங்கே ஓர் அற்புத ஒளி!
யார் அது?
கையில்வீணையுடன்
வெள்ளுடைக் கோலத்தில்
வெண்மேகத்திடையே ஒரு
பெண் மேகம்!
மெல்ல இறங்கி என் தலை கோதி
வீணையே வெட்கும் குரலில் கேட்டாள்!

'' என்ன மகனே? ஏன் கலக்கம்?
கலைசூழ்ந்த உன் முகம்
களைபோனதெவ்விதம்?''

'' இல்லை தாயே ஒன்றுமில்லை தாயே!
ஒன்றுமே இல்லை ''
வார்த்தைகளில் ஒரு சோக நாதம்!
அப்போது லேசாகக் கனைத்தபடி
அபயமளித்தாள் அந்த கலைமகள்!

'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவ‌றியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இள‌மையைக் க‌ட‌ந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இள‌மையுட‌ன் இருக்கும்
உன் வியப்பான ர‌க‌சிய‌த்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''

எது தான் வாழ்க்கை...?

வாழ்க்கையின் ஒவ்வொரு அடிக்கும்
வாதங்கள் பிரதிவாதங்கள் உண்டு...
அடிகளே வாழ்க்கையாகும்போது
அடித்தளம் அசையும் கூடாரம் -வாழ்க்கை!

நேர்மைக்கு என்றும் சோதனைகள் உண்டாமே..?
நேசத்துக்கும் அது சொந்தம் தானாமே...?
நிறைய பொய்சொல்லி நேசம்வளர்ப்பதை விட
நெஞ்சு நிறைய வாழ்த்துச் சொல்லி பிரிவதே - வாழ்க்கை!

அன்புற்றோர் கலங்குதல் கண்டும் அசைவிலா மனிதம் உண்டா?
ஆடையது நெகிழ்தல் கண்டும் அசைவிலா கைகள் உண்டா?
என்பும் தருமாமே நட்பு எங்கிருக்கிறது அதுபோல் இன்று..?
தன் சுகம் தன் பணி இதுதான் இன்றைய நிதர்சன வாழ்க்கை!

நட்பென்பது யாதெனின்.......!

நட்பென்பது வெறும்
நன்மையில் மட்டுமா?
கண்ணில் தூசு விழும்போது
மூளையின் உத்தரவுக்கு
காத்திருக்குமா இமைகள்?
நான் நலம் நீ நலமா
என்பதுவா நட்பு?
நீ இங்கு நலம்
நான் அங்கு நலமா
என்பது தான் நட்பு!

தமிழகமே...தமிழகமே......!

இந்த ஏழைச் சோழர்களின்
கண்ணீர்த்துளிகளின்
வானவில் சிதறல்கள்
கண்ணகி உடைத்த
மாணிக்கப் பரல்களோ?
அரசாங்கப் பாண்டியர்கள்
நீதி வழுவா நீள்கை யாளர்களோ?
மதுரையைத் தழலிடுமுன்
கண்ணகியும் கடத்தப்படும்
அவலநிலை இங்கே!

பொற்கைப்பாண்டியனும்
கொற்கைப் பாண்டியனும்
மீன்கொடியை அடகு வைத்து
மீட்கமுடியாமல்
மேல்மூச்சும் கீழ்மூச்சுமாய்
கோர்ட்டுப்படிகளில்!
சிலப்பதிகாரம் எழுதிய
இளங்கோ சந்ததியோ
இங்கே
சில்லரை அதிகாரம் எழுதுவதில்
மும்முரம்!

இமயம் தொட்ட சேரலாதனின்
சோர வாரிசுகள்
குட்டிச்சுவர்களைக் காக்கும் போராட்டத்தில்
உண்ணவியலா விரதம்!
தமிழகமே குருக்ஷேத்திரமாகும்
தலைப்புச்செய்திகள்!

வாழ்க்கையை வாழ்ந்து பார்.......!

எல்லா இறகுகளையும்

இழந்துவிட்ட பறவை கூட

இறகுகளின் எச்சங்களால்

எத்தனிக்கும் மீண்டும் வான் அளக்க....!

ஒற்றைக்கம்பத்தின்

உச்சிமீது நிற்கும்போது கூட

கழைக்கூத்தாடியின் இதயம்

தன் அன்புக்குரியவளின்

தனிமையை நினைத்துருகும்...!

சில போழ்து நாமும்

செக்குமரம் சுற்றிவரும்

சுயசிந்தனை மறந்த மாடுகள்

போலதான் சிந்திக்கிறோம்!

பலமுறைவீழ்ந்த சிலந்தியும்

கடைசியில் வெற்றிபெறும்!

படித்த நாமேன் இப்படிப்

பதட்டத்தைப் போர்த்தி அலைகிறோம்...?