Wednesday, February 29, 2012

தங்கைக்கோர் தாலாட்டு..!


                    தங்கைக்கோர் தாலாட்டு..!

எண்ணத்தில் தந்தையானேன் ஏங்கிடாதே மகளேநீ
அண்ணனா யரவணைத்து தந்தையா யாதரிப்பேன்
வண்ணமிகு உன்கனவை நனவாக்க நான்முயல்வேன்
சுண்ணமதில் தண்ணீராய் நானிருப்பே னுன்வாழ்வில்..


காலமது விரைந்துவிடும் கல்விகற்கும் நாளும்வரும்
வாலையது உயர்த்திநிற்கும் வானரமாய் நீபறப்பாய்
ஓலையதில் கண்டதெலாம் ஒருவினாவாய் கேட்டுநிற்பாய்
சேலையதை மேல்போர்த்தி தாயவளை ஒத்திருப்பாய்.


கல்விப் பருவமது கடந்தபின்னர் என்னுயிரே 
செல்வியாய் உருமாறி கவின்பருவம் நீபெறுவாய்
வல்வினைக ளில்லாத வாழ்க்கை யொன்றைநீகாண
நல்லிணை நான்தேடி தினமலைவே னுனக்காக..


தனக்கென்று ஓர்கணவன் என்றாகிப் போனபின்னர்
இனக்கணக்குப் பார்ப்பதில்லை எப்பெண்ணும் என்பதனால்..
உனக்கொரு நல்வாழ்க்கை நான்தேடி முடிக்குமுன்னே
எனக்கொரு நல்வாழ்க்கை வேண்டிடேன் என்மகளே..


தாயவளும் நானாகி தந்தையுமாய் உருமாறி
சேயவள்நீ கண்கலங்க சேர்த்திடுவேன் நல்லில்லம்
தூயவளே நீவாழும் மனைவாழ்க்கை கண்டுநிதம்
போயதொரு காலத்தை நினைத்திடுவேன் என்னாளும்..

Monday, February 27, 2012

தம்பிக்கோர் தாலாட்டு..!

                  தம்பிக்கோர் தாலாட்டு..!





சிறுவனுனைத் தாலாட்ட வயதேதும் எனக்கில்லை
மறுதாயாய் உனை மீட்க வழியேதும் புரியவில்லை
குறுகுறுக்கு முன்பார்வை என்விழியை நனைக்குதடா
மறுபடியும் நம்தாயை இறைவனிடம் வேண்டிடடா..!


என்வயிறைப் பற்றிஎனக் கேதுமொரு கவலையில்லை
உன்வயிற்றின் தீயடங்க வழிவகையைத் தேடுகிறேன்
முன்னொருநாள் நமக்காகத் தாய்பட்ட விதமெல்லாம்
பின்னொருநாள் நான்படுவேன் அதுவரையில் பொறுத்திடுவாய்..!


தமக்கையாய் நான்வாழ தான்பிறந்தேன் இப்போதாய்
சுமக்கும்மடி என்னிடம்தான் சுகமுணர்ந்து உறங்கிடுவாய்
எம‌க்கெனவென் றிறைவனவன் இட்டதொரு உணவதனை 
நமக்கனுப்பி வைத்திடுவன் நம்பியதை நீயுறங்கு..!


வானதுவே கூறைய‌தாய் புவிப்படுக்கை மெத்தையதாய்
தேனடைகள் நிறைந்திருக்கும் மாமரமே மேடையதாய்
ஊனமதை மறந்துதினம் கூடிநிற்கும் முக்கால்நாய்
கானமதை வழங்கிநமைத் தாலாட்டும் பைங்கிளிகள்..!


என்பசியை மறந்திருக்க நான்பாடும் பாடலது
உன்பசியைத் தீர்த்துவிடு மென்றே நான்பாடுகிறேன்
எம்பசியைத் தம்பசியாய் நினைப்போர்கள் வரும்வரைக்கும்
நம்பசியை மறந்திடுவோம் நம்பியதை நீயுறங்கு..!

Monday, February 13, 2012

காதலர்களுக்கு மட்டும்..



காதல்..
வெட்டிய வாழையின் கண்ணீர் போல்
விரைவாய்த்துடிப்பது..


காதல்..
எட்டி நின்றாலும் எத்திலீனைப்போல்
பற்றி எரிவது..


காதல்.. 
பலமணி நேரம் எழுதிய தேர்வின்
நொடிப்பொழுது பரிணாமம்..


காதல்..
சொற்களில் நிறைவாய் சோகங்கள் குறைவாய் 
சொக்கி இழுப்பது..


காதல்..
எங்குதிரும்பினாலும் வடதிசை நோக்கும்
காந்தமுள் போன்றது..


காதல்..
எத்தனைப் பச்சைகிடைப்பினும் தன்
வறண்ட நிலம் தாண்டாதது..


காதல்..
எச்சொல் எவரிடம் கேட்பினும் அச்சொல்
கவர்ந்தவனிடமே யாசிப்பது..


காதல்..
எத்தனை தொலைவாயினும் இதயத்தின்
அருகாமை தொலைக்காதது..


காதல்..
தன்னவன் முகத்தையும் பிறரதன்
முதுகையும் காண்பது..


காதல்..
கொண்டவனுக்கே எச்சில்விழுங்கி
குறுகுறுத்துப் பார்ப்பது..


காதல்..
மன்னனேயாயினும் துச்சமாய் எண்ணி
தன்னவனுக்காய் தனித்தே வாழ்வது..


காதல்.. 
கொலையனே யாயினும் கொண்டவன்
கூற்றே நீதியென உரைப்பது..


காதல்..
வருடங்களாய் கண்கள்அயர்ந்தும்
தளராமல் காத்திருப்பது..


காதல்..
ஒற்றை வார்த்தையில் கட்டிப்போடும்
இன்பவிலங்கு..


காதல்..
உயிரை இழந்தாலும் தன் 
இணையை இழக்காதது..


உலகெங்கும் வாழும் உன்னதக்காதலர்களுக்கு என் அன்பான காதல்சமர்ப்பணம்..!

Tuesday, February 7, 2012

சறுக்கல்..


ஒற்றைக் காம்பில் உதித்த மலர்..
தன்னை உணர்ந்த போதிமரம்..

ஒருகாலை பூமியில் ஊன்றி 
மறுகாலுக்காய் மனதை ஊன்றிய
ஊன்றுகோல் ஒட்டவைத்த சான்றுகோல்..

வானுயர்ந்த எண்ணக்கோபுரங்களுடன் 
ஓர் ஒற்றைத்தூண்..

அடிமரம் பழுதானாலும் அங்கங்க‌ள் விழுதாகும்
ஆலமரம்..

ஒருக்கால் சறுக்கியதால்
மறுகால் படைக்க மறந்த 
இறைவனுக்கும் ஊனமோ..?