Friday, August 19, 2011

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..
செங்கதிரோனின் பொன்னிறக்கரங்கள் 
எங்கும் தொட்டிடா கங்கைப்பூவே
மங்கையர் பூவினில் மயங்கிடு தல்போல் 
எம்கை கண்டதும் சிவந்திடும் பூவே
கொங்கை கண்ட குழவியைப் போல்தான் 
உள்ளம் கவர்ந்த குங்குமப்பூவே..
தன்கை நம்பிய தரமிகு உழவன் 
செங்கை வளர்த்த செம்மலர்ப் பொழிலே
கங்கைப் பூவே உன்னெழில் கண்டு 
மயங்கி மகிழ்ந்தேன் நற்சுவை தாராய்..


உண்டிநல் நிறைந்த உன்மத்தன் போல் 
கண்டுனை மகிழ்ந்தேன் கங்கைப்பூவே.
மண்டின நினைவினில் மயங்கியே மகிழ்ந்துனை 
மாந்தித் திளைத்திட மயங்கிடும் மனதை
முண்டி யடித்தே முடக்கி னன்யான் 
தண்மையின் அழகில் மடக்கினை பூவே
கொண்டு மகிழ்ந்துன் கோலம் கண்டிட 
உண்டு திளைத்துன எழிலதைப் பருகிட
உன்வடி வழகினில் உருகிக்களித்திட
பண்டைய நாள்முதல் பரிதவித்தனன் யான்...!


சிறுகக் குழைந்தே சிற்றிதழ் சிவந்திட
நறுமணம் கொண்டே நாடியைக் கவர்ந்திட
குறுமுகை செவ்விதழ் குவிந்து சிரித்திட
சிறுநகை புரிந்துன் இதழதை சுவைத்திட 
குறுகுறுத் திடுமென் குவிந்தநல் உதடும்
உன்னெழில் கண்டபின் ஊனினை மறந்தே 
முன்னெதிர் வந்துன் சிந்திடும் தேன்மழை
சின்னதோர் தேர்வடம் சிறுவர்கை பட்டதும்
மின்னலாய் ஒளிர்ந்திடும் ஓரதிசயம் போல்
கன்னலே உன்மது என்மதி மயக்கிடும்..!

Friday, August 12, 2011

கலையும் - காதலும்..கலையாக் காதலும்..!..(2)

படம்
2. 

தொட்டுப் பரவிய‌ 
இனிய சாரலாய்
பட்டும் படாமலும் 
அணைத்திட்ட தழுவலும்
விட்டும் விடாமலும் 
மழையின் தூறல்போல்
சொட்டும் காதலில் 
சொக்கவைத்த முத்தமும்
கட்டிய குழலது 
காற்றில் பறந்திட‌
பட்டுக்கழுத்தினில் 
பதிந்திட்ட ஈரமும்
மொட்டாய்க் கூம்பிய 
முகமது மலர்ந்திட‌
கட்டியணைத்துக் 
கூறிய கதைகளும்
விட்டகுறை தொட்டகுறையாய்
விரிவாய்ப்பேசிய காதலுரைகளும்
எட்டப்போயினும் 
ஏங்கிட வைத்ததே..!

கனவுகளின் வயது 65..!


படம்கனவுகளின் வயது 65..!

வருடங்கள் பல உருண்டோடிவிட்டன..
நம் தாத்தாவுக்கு எள்ளுருண்டைகளும்
அவரின் தாத்தாவுக்கு கொள்ளுருண்டைகளும்
வைத்துப் ப்டைத்து
நம் கடமையைச் சரிவர செய்துவிட்டோம்..


கண்ணீர்விட்டு வளர்த்த இப்பயிரைக்
கருகத்தான் விடவில்லை நாம்..
வளமான உரத்திற்காக
உருகத்தான் விட்டுவிட்டோம்..


அண்ணல் காட்டிய வழிகள் நெடுகவும்
அருகம்புல் வளர்த்துவிட்டோம்..
அவர் வைத்திருந்த கைத்தடிக்கு
தங்கப்பூண் மாட்டிவிட்டோம்..


கோடித்துணிக்கு வக்கற்றிருந்த 
சில குடும்பங்கள்
கோடிகளில் வலம் வரவிட்டோம்..


சுதந்திரக்காரணத்தால் 
சிறை நிறைந்த காலம் போய்
தந்திரக்காரர்களுக்காய் 
சுகவாசஸ்தலங்களாக்கினோம்..


கல்வியில்லா கிராமங்களில் கூட
செல்விகள் சித்திகள் செல்வங்கள் 
மானாட்ட மயிலாட்டஙக்ள்
நாமாட வைத்துவிட்டோம்..


இனி என்ன செய்யப்போகிறோம்..?

நாம் நன்றாய் உறங்கலாம்..
கனவுகள் நன்றாய் வளர்க்கலாம்..
வல்லரசாய் சிறக்கலாம்..
எதிர்காலத் தலைமுறைக்கு 
தலை சிறந்த லாலிபாப்கள் வழங்கலாம்..


ஆம்.. நிறைய யோசிக்கலாம்..
கலாம் கலாம் கலாம்..
விறைத்து நின்று 
சந்தர்ப்பக்காற்றினில் படபடக்கும் 
தேசிய கொடிக்காய் 
கண்கலங்க வணங்கலாம்..!

Thursday, August 11, 2011

கலையும் - காதலும்..கலையாக் காதலும்..!

படம்

தொலைவில் இருந்தும் 
தொலைக்காத காதலும்
விலையிலா வார்த்தையில் 
வழங்கிடும் வாஞ்சையும்
கலைத்துவிட்ட தலையைக் 
கோதிய வருடலும்
மலைக்க வைத்ததோர் 
மனங்குளிர் முத்தமும்
தொலைத்துத் தேடும் 
சில சிறு ஊடலும்
மலையளவு சோகம் 
குறைத்த கூடலும்
கலைந்த கூந்தலைக் 
கோதிடும் காதலும்
குலைந்த ஆடையைக் 
கண்டபின் நாணமும்
சிலையாய்க் கண்டு 
வியந்த கோலமும்
நிலைத்து நிற்குமே 
பசுமையாய் நெஞ்சிலே..!

காதல் தொடரும் ..!

Tuesday, August 9, 2011

எங்கே போகிறோம்..?

எங்கே போகிறோம்..?

படம்

கலை வளர்த்த தமிழகத்தில் கல்விக்கு 
உலை வைக்கும் நிலை இன்று..!

நீதி மான்களின் கண்களில் 
விவாதப்புல்வெளிகள்..

பாதியாய்போனது கண்கட்டிய 
நீதிதேவதையின் அரையாடை..

மீதியும் போவதற்குள் 
மீட்போன் வருவானா..?

என்றேனும் வழி பிறக்கும் ஏழையின் சிரிப்பில் 
இறைவன் விழி திறக்கும் என்றெல்லாம்
நன்றே சொல்லி வழக்கின்றி போகும் 
சில அறிஞர்களால்
நம்பிக்கை ஒளி வீசினாலும்
சுவிஸ் வங்கியில் சிறுத்தைகளின் சேமிப்புகள்
புயல்காற்றாய் விளக்கணைக்கிறது..

நாலு பேர் கத்திச்சொன்னால்
நாயம் தான் என்று நாறபது பேரின்
நாவடைக்க வைக்கும் அரசியல் களம்..

விலை போகாத அரசியல்வாதி 
உண்டா இல்லையா என்னும் 
பட்டிமன்றம் நடக்கிறது தினமும்..!

எங்கே போகிறோம் நாம்..?