Saturday, June 30, 2007

என் ஆங்கிலக் கவிதை

நண்பர்களே,
எனது ஆங்கிலக்கவிதை ஒன்று என்டிடிவி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

இதோ அந்த சுட்டி:
http://www.ndtv.com/ent/bookspoetrycorner.asp?id=2712
இதோ அந்த கவிதை:

Achiever verses Loser
- S Ramaswamy (கலைவேந்தன்)

After all you are a drop of the Universe
Like a nothing sweet good.
Every winning has a wonderful adverse.

And so the losing hood
Every legend maker tosses the fate
In the midst of blacken mist

You may be the runner instead
Never lose your inner good
Achiever makes the impossible

As his life’s inner jest
And a loser always does
Even more the worse the best!

கவிச் சிதறல்கள்:

1.

இப்புவியினில் பலமனிதரும்
நானெனுமொரு தலைக்கனமொடு
அலைகிறஒரு இழிநிலைக்குணம்
அழிகிறவரை ஒருவிடிவிலை

2.
உன்மனமொரு பணிவினைப்பெற
இறைவனைதினம் அடிதொழுதிடு!
இப்பிறவியில் நல்மனமுடன்
எளியவர்க்கொரு பணிசெய்திட
அன்னைக்கொரு நல்மகனென
அனுதினமுனை ஊர்போற்றிட
திருக்குறளினை பணிவுடன்படி
என்றும்அறி மெய்யிதுவென!

3.
பொங்கியெழும் வீரம்தனை
புகட்டிச்சென்றபாரதியும்
சங்கினைப்போல் மேன்மைதரும்
வாழ்வுசொன்னவள்ளுவரும
இங்கிதமாய்த் தத்துவத்தை
வழங்கிச்சென்றஅவ்வையாரும்
தங்கியிங்கு வாழ்ந்த
நல்தமிழகமேநீவாழி!

4.
அதுவே யல்லது இதுவே யென்றொரு
மயக்கம் கொண்டது மனம்
எதுவே யாயினும் பொதுவே என்றோரு
கருத்தும் சொன்னது உளம்
மதுவே யருந்தி மனமே
மயங்கி உலகைத் துய்த்தது உடல்
அதுவே யல்லவிது வேசுகமென
உய்வைக் கொடுத்தது தவம்!

5.
நாட்டில் நயம்பட உரைப்போர் பலரெனினும்
வீட்டில் விரும்பி யேற்போர் சிலர்- கூட்டில்
சீமானா யுலாவிய பொன்குஞ்சு வெளியிற்போய்
தாமாய் பொலிவிழக்கும் போ!

6.
உனக்கென்ற மனங்கொண்டு தொடங்கிடும் காரியம்
சினக்குனம் கொண்டவர் பேசிடும் வாசகம்
இனக்கண்ணை அகக்கண்ணாய் பெற்ற பேரறிஞர்
கனக்கும் மனத்துடன் கூறுவேன் பாழ்!

7.
துணிந்திட்ட மனிதனுக்கு இவ்வுலகே ஒருபந்தாம்
பணிந்தேவல் செய்தெலும்பு கேள்விக்குறி யானவனோ
துணிபோர்த்த ஓருடம்பே யல்லாது வேறென்ன
மணிபோல் நீஒலித்து இப்பூமலரச் செய்!

8
அடியினைக்காண ஒருவன் பூமிக் கடியினில்புகுந்தான்
முடியினைக்காண ஒருவன் கார் முகிலுக்குள்நுழைந்தான்.
படியளந்தோனை நெஞ்சத் தடியினில் தேடிடமறந்தான்!
முடிவிலாஅவனை ஏழை முகத்தினில் காண்போம்!

Sunday, June 17, 2007

கவித்துளிகள்

கலைவேந்தன் கவித்துளிகள்


பராபரமே பரம்பொருளே பரஞ்சொதீ பற்றற்றே
தராதரம் உணராது நல் தீது அறியாது உமை
சிராதாரமாய் உணர்ந்து தமை உருக்கி தவம் கண்டு
நராதாரி மெய் துறந்து பிறவித் துயர் களைவோமே!

**********************************************************************

போகின்றவர் கொண்டு போவதென்ன இங்கே
வாழ்கின்றவர் வைத்து வாழ்வதையே விட்டு
சாகின்ற போது காதற்ற ஊசியும் இல்லாது
வேகின்றபோது வேதனையின்றி போவதெ மிச்சம்!

**********************************************************************

காதலெனக் கூறி காமந்தனை செய்யும்
பாதகரை வெட்டிப் பாடையில் அனுப்பும்
சோதனை விதியொன்றை வைத்திடுவோம் சபைதனிலே
போதுமென விட்டோடி ஒளிந்திடுவர் காமுகரே!

**********************************************************************

முன்னேயும் பின்னேயும் நான்குபேர் பல்லக்கை
தூக்கவும் காக்கவும் நூறுபேர் கொண்டவன்
நாட்டையும் வீட்டையும் காக்காத பண்டாரம்
அவனியில் பவனியில்! ஏற்குமோ நல்மனம்?

**********************************************************************

போகுவதேன் வாழ்வின் முத்தான மதிப்புகள் (values)
வீழ்குவதேன் சான்றோரின் சத்தான விதிப்புகள்
மாள்குவதேன் மானிடன் மனச்சான் றுகள்தாம்
தோல்விதான் வந்திடுமோ மனிதனின் வேள்விக்கே?

**********************************************************************

ஈந்து வாழ்தலுக்கீடு இணை ஏதுமில்லை
தாழ்ந்து போவதில்லை தரக்குறைவும் ஏதுமில்லை
சோர்ந்துபோன மானிடர்க்கு சோறிட்டு குறைவதில்லை
காந்தம்போல் கடவுளிங்கு குடிகொள்வார் உன்னகத்தே!

**********************************************************************

அரசியல் என்றொரு மர்மக்கூடம்!
அனைவரும் அங்கே போடுவர் ஆட்டம்
இங்கே பானையில் பருக்கை தேடும்
இச்சைமுத்து பசியில் வாட்டம்!

**********************************************************************

சமத்துவம் என்பதை சமத்து வமாய் சமைத்து
சட்டுவத்தை மட்டும் காட்டிவிட்டு சாதத்தை மறைத்து
சத்துள்ளதை தான் மட்டும சுவைத்து
சொத்தை தான்சேர்த்துவிட்டு சொத்தையை தந்துவிட்ட
வித்தைதான் இங்கே ஜனநாயகம்!

**********************************************************************

மட்டற்ற மகிழ்ச்சிகள் கணநேரமும் ஏழைக்கில்லை
பற்றற்ற வாழ்க்கை வாழவும் முடியவில்லை
இரக்க மற்ற வயிறு! இறக்கவும் துணிவில்லை!
அரக்கர்கள் திருந்தும் நாள் எந்நாளோ தெளிவில்லை!


**********************************************************************

நிலையென நினைத்தே நிலைதடுமாறும் நிறைவிலாநிலைமை
நினைத்ததை நிகழ்த்திட நிதம் போராட்டம்!
நிம்மதியில்லை நித்திய நித்திரை நிரந்தரமில்லை.
நிறுவுக நிலையாய் நிம்மதி வாழ்வே!

**********************************************************************

ஒன்று மட்டும் இதயத்தை ஒப்படைத்த இறைவன்
இரண்டு கண்களால் காணவைத்தான்..
காரணம் யோசித்தேன்...
நல்லவை கெட்டவை இரண்டையும் பார்
நன்மையை மட்டுமே மனதில் வை!
காரணம் இன்றி காரியம் காணுமோ
இறைவன் கணிதம் தவறாகுமோ?


**********************************************************************

ரசிக்கின்றேன் இயற்கையை
எத்துணை மருக்கள்
எங்கள் நிலாவில்
இருந்தும் ரசிக்கின்றேன்...

எத்தனை ஊழல்கள்
எங்கள் அரசியலில்
இருந்தும் ரசிக்கின்றேன்...

எத்தனை அசிங்கங்கள்
எங்கள் சினிமாவில்
இருந்தும் ரசிக்கின்றேன்...

ஏனென்றால் நான்
எதையும் தாங்கும்
இந்தியன் அன்றோ?


**********************************************************************

தீஞ்சுவை கவிவடிக்க தேமதுரத் தமிழ்கேட்டேன்
வாஞ்சல்யத் துடன்என்னைக் காப்பாய் வடிவேலா!
முத்தமிழ் மன்றத்து முதிர்ந்த பெருமக்கள்
சத்தமிட் டென்னை சாபமிடா வரம்தருவாய்!

**********************************************************************

நாமென்ற சொல்லை ஏற்றிடுவோம் இன்றே
நானென்ற சொல்லை மாற்றிடுவொம் நன்றே
யாமொன்றும் சளைத்தவர் இல்லை மற்றோர்க்கு
யாதும் பெறுவோம் நாம் ஒன்றிணைந்தால்!

Monday, June 11, 2007

முதியோர் இல்லம்

ஏழ்கடலுக்கு அப்பாலிலிருந்து இந்த
ஏழையைக் காணவந்தாயே!
ஆசிரம அடிமையாய் காயம் பட்ட எனக்கு
ஆதரவு சிறகால் மருந்திட வந்தாயோ?

என்னைப்பெறாத தாயே மகராசி
உன்னைப்பெற்றவளின் தேகம் மட்டுமல்ல
உள்ளிருக்கும் ஆன்மாவும் குளிரட்டும்.
உன் மகளை நீ தன்னம்பிக்கையுடன்
தன் காலில் நிற்க வை.
என் தலைமுறையுடன் போகட்டும்
தாயைக்க்காக்காத தனயன்கள் திருந்தட்டும்.

பெற்றோரின் வயிறெரிந்தால்
புல் பூண்டும் கருகிவிடும்!
இதைப்புரியாத மகவுகள்
சதையிருந்தும் பொம்மைகளே!

நீ எங்கே................?


எங்கோ திரிந்தலைந்த

என் ஆன்மாவுக்கு

உடல் பிச்சை தந்தவளே!

நான் நன்றிக்கடன் தீர்க்குமுன்

நீ சென்ற இடம் எது?

தாய்மை என்பது

நூறு பெற்றாலும்

நொந்துகொள்ளா உறவன்றோ?

ஒன்றே பெற்று விட்டு

ஒதுங்கியது ஏனோ நீ?

உன் தாலாட்டு கேட்காமல்

உறங்கலையே வெகு நாளாய்....

கற்பனைத் தாலாட்டு

எத்தனை நாள் கைகொடுக்கும்?

காதலித்த காரிகையில்

கண்டேனே உன் உருவை

கதற விட்டுப் போனாளே

அவளும் தான் உன் போல!

பார்க்கும் பெண்களில்

உன் படிவம் காண்கிறேன்.

கண்ணாடி முன் நின்று

என் வடிவம் மேய்கிறேன்

உனைத்தேடி உருக்குலைந்து

நிலவைப்போல் தேய்கிறேன்

கடவுள் போல் உருவற்றுப்

போனாயே என் தாயே!

நெஞ்சை விட்டகலா வல்லி

அவள் கண்ணோர மையெடுத்துதான்
கவிதை எழுதத் தொடங்கினேன்...

என் இதயத்தின் தசைகளைத்தான்
காகிதமாய் மாற்றினேன்...

அவள் காதோரக் குழல்களால் தான்
அந்த கவிதை நூலைக் கட்டினேன்...

ஏடெடுத்துப் படிக்கமட்டும் அந்த
ஏந்திழை அருகிலில்லை...

Wednesday, June 6, 2007

கேள்விக்கு பதிலென்ன?

உழைப்பின் குழந்தைகள்
வியர்வைகள்...
நாங்கள் நிறைய சுமந்தோம்!

உழைப்பின் பரிசு
களைப்பு....
நாங்கள் நிறைய அடைந்தோம்!

உழைப்பின் சுகம்
உறக்கம்....
எங்களுக்கு நிறைய உண்டு!

உழைப்பின் பெருமை
கருமை....
எங்கள் உடலே காட்டும்!

உழைப்பின் பலன்
ஊதியம்....
அதனை ஏன் குறைத்தீர்கள்?

பழையன கழிதலும்.....

வாழ்க்கைப் படிக்கட்டின்
கடைசிப்படியில் பாட்டி
முதல் படிக்கு
முயன்று கொண்டு பேத்தி!

பாட்டியின் கேள்வி:
உன் காலத்தில் இந்தளவாவது
விளைச்சல் காணுமா?

பேத்தியின் பதில்:
என் காலத்தில்
பசியே இல்லாதாகும்
மருந்தொன்று காண்பேன்.

பாட்டியின் ஐயம்:
என் காலம் போல்
உன் காலமும் அடுப்படியிலேயே
உருண்டு போய் விடுமோ?

பேத்தியின் தெளிவு:
அடுப்பெரிக்கச் சொல்லி
அடக்க வரும் ஆணின்
இடுப்பொடித்து அவனின்
இறுமாப்பை எரிப்போம்.

பாட்டியின் எரிச்சல்:
இக்காலம் சாதியின் பிடியில்
இடர்படுகிறதே...

பேத்தியின் தேற்றம்:
என் காலம்
சாதியின் சமாதிக்காலம்
என் போன்றோர் கையில்
சமத்துவச் சாட்டை!

பாட்டியின் அவலம்:
இன்னும் ஆண்களின்
கொட்டம் அடங்கலையே
பெண்ணுக்குத் தீங்குகள்
தொடர்கின்றனவே?

பேத்தியின் சீற்றம்:
கல்பனா சாவ்லாவின் சாதனைமுதல்
கிரண் பேடியின் கம்பீரம் வரை
முன்னேறிய நாங்கள்
இன்னும் முன்னேற
யார் தடுப்பார்கள்?
இன்னொரு பாரதி வராமலா போவான்?
எங்கள் துயரை வரையாமலா போவான்?

பாட்டியின் துயரம்:
வரதட்சணை எங்களை
வாழவிடவில்லையே
உங்கள் எதிர்காலம்
ஒளிர்ந்திடுமோ கண்ணே?

பேட்டியின் ஆறுதல்:
இன்னும் ஆண்களின்
ஆன்மா செத்துவிடவில்லை.
பத்தில் நாலு பேர்
கல்யாணக் கையூட்டை
பகிஷ்கரிக்கிறார்கள்
பத்துமே பத்தரைமாற்றாக
மாறத்தான் போகிறது.

பாட்டியின் நிம்மதி:
உன் பேச்சு கேட்டு
என் ஆன்மாவுக்குப் புல்லரிக்கிறது
எல்லாமே உன் எண்ணம்போல்
எளிதாக நிறையட்டும்!
இனி என் கட்டை
இன்பமாய் வேகும்!

பேத்தியின் முடிவுரை:
எண்ணியதை எண்ணியபடி பெற
எண்ணுவோர் திண்ணியராகட்டும்!
உங்கள் அனுபவம்
எங்களை எச்சரிக்கட்டும்!
இன்னும் பல்லாண்டு வாழ்வாய்
பாட்டி!

தமிழகமே என் தாய்வீடே...

தமிழகமே என் தாய்வீடே...

உன்னைவிட்டு வெகு தூரம் நான்

மனத்தால் அல்ல...

உடலால் மட்டுமே!

உன்னைக்குத்தி ரணமாக்கும்

உன்மத்தர்களைப் பதம் பார்க்க

உள்ளம் குறுகுறுக்கிறது...

கை கால் விலங்கிட்ட

மனோகரனின் நிலைதான்...

என் தாயின் பெரும்புதல்வன்

எம் தலைவன் பாரதி

எள்ளப் படுகிறான் சில

எருமைக்கூட்டங்களால்...

உயிருடன் இருக்கும் போதே அவனை

உணராத சில கூட்டம்

உறைந்துவிட்ட பின் தானா

உயிர்ப்பிக்கப் போகிறது......?

முதலைக்கண்ணீர் வடிக்கும் சில கூட்டம்

சிவனை உச்சரித்து சீவனை வதைக்கிறது...

இனப்பெயரைச் சொல்லிச் சொல்லி

இனிதாய்ச் சுரண்டும் ஒரு கூட்டம்!

சட்டசபைக்குள் இறங்கி

மீன் பிடிக்கும் ஒரு கூட்டம்!

எத்தனைப் பேய்களடா

இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!

பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்

திரிஷாவின் தொப்புளில்

திரிசங்கு காணும் அவலம்!

வந்தவனை எல்லாம் வாழவைத்து

இருந்தவனை ஏமாளியாக்கும்

இருதலைக் கொள்ளி எறும்பாய்

என் இனிய தமிழகம்!

Friday, June 1, 2007

திருக்குறள்-----புதுக்குரல்! வான் சிறப்பு

திருக்குறள்-----புதுக்குரல்!

வான் சிறப்பு

1 மழையின்றி உயிர்வாழா தென்பதால் அம்மழையை
பிழையின்றி அமிழ்தமென் போம்

2 உண்பார்க்கும் உணவாகிப் பருகியோர்ககும் அதுவேயாகி
கண்போன்ற தாம்அம் மழை!

3 வான்பொய்ப்பின் வறுமைவந்து சேரும் பட்டினியால்
தானழிந்து போகும் உயிர்.

4 ஏர்கொண்டு உழுவாரோ உழவர் அரசியல்போல்
கார்மேகம் பொய்த்து விடில்.

5 கொடுப்பதும் கெடுப்பதும் நொந்தார்க்கு வழங்கிப்பின்
எடுப்பதும் எல்லாம் மழை.

6. காரின்றி காரிருள் சூழ்ந்திடுமே இப்புவியில்
வேரின்றிக் கருகிடுமே புல்.

7 பெருங்கடலும் வற்றிப்போம் பெருங்குடலும்சுற்றிப்போம்
சிறுமழையும் பெய்யாவிடில்.

8. தேரோட்டம் நின்றுபோம் திருவிழா பூசையில்லை
காரோட்டம் இல்லாவிடில்

9 பிறர்க்கென வழங்கிடும் தானமும் நல்தவமும்
பிறழ்ந்திடும் மழையின்மை யால்.

10 மழையின்றி நிலையாது இவ்வுலகம் ஒழுக்கமும்
பிழையாகி உறைந்து விடும்.

திருக்குறள்-----புதுக்குரல்! கடவுள் வாழ்த்து

திருக்குறள்-----புதுக்குரல்!
கடவுள் வாழ்த்து

1.அகரத்தில் தொடங்குமாம் அருந்தமிழ் - அதுபோல்
இகத்தினில் முதலாம் இறை!

2.பலகற்றும் ஏது பயன் பகைவனுக்கும் அருளும்
உலகன்அடி தொழா தவன்!

3.அகமதில் உள்ளான் இறைவன் - வணங்கிடின்
இகமதில் ஆயுள் நீளும்!

4. பாதகம் சாதகம் அறிந்திடா - முடிவிலான்
பாதம் பணி துன்பம் தொலை!

5. முன்வினை பின்வினை என்செயும் - இறைவனின்
முன் உனை அர்ப்பணித் தால்!

6. ஐம்புலன் அடக்கியோன் பொய்யிலா ஒழுக்கமே
மெய்வாழ்வு என்றே அறி!

7. தனக்குநிகர் இல்லா தாந்தோன்றியனை உணர்ந்தோர்
மனக்கவலை மாய்ந்து விடும்.

8. அறவழி காப்போன அடி பணிந்தோர் அல்லாது
பிறவ்ழி காண்பது அரிது.

9. முதல்வனை வணங்கா தலையின் முகமெங்கும்
உதவிடா செவி கண்களே!

10.அப்பன்தன் பாதம் பணிந்திடா அறிவிலான்
இப்பிறவி கடத்தல் அரிது!

கலைவேந்தனின்.... காதல் கதை

கலைவேந்தனின்.... காதல் கதை

பகுதி_ஒன்று


அவன்....

கல்லூரியில் நுழையும்போது

வெள்ளைத்திரையாகத்தான்

உள்ளத்திரை ஒளிர்ந்தது...

மங்கிய ஓவியமாகத்தான் அந்த

மங்கை முதலில் நுழைந்தாள்...தனது கவிதைகளை

உரசிப் பார்க்கும்படி

அந்தக் கவிஞன்

அவளிடம் வேண்டினான்...

காகிதத்தின் கவிதையை மட்டுமா

அவனது சோக முகவரிக்ளையும்

அவள் சோதனை செய்தாள்...

உள்ளத்தின் ஓரத்தில்

சற்றே இடம் பிடித்தாள்...

விடிந்தும் விலகாத

விடியல் பனி போல்--அவன்

வியர்த்தான்..

பின்னர் அவளது காதலின்

மொழி பெயர்த்தான்....

கவிதைகளைப் பற்றிய விமரிசனத்துடன்

அவனைப்பற்றிய கரிசனமும் வெளியிட்டாள்...

அப்போது

உண்மைக்காதலின்

தரிசனமும் வெளிப்பட்டது....
பகுதி_இரண்டு

அந்தக் கவிஞனின் கவிதை வேள்வி

அவளது

ஆர்வ நெய்யால் வளரத் தொடங்கியது...

இருவரரின் இடைவெளியும்

தளரத் தொடங்கியது...


அவளது முக விசாலம்

அவளது அக விலாசத்துடன்

அரவணைந்த ஒன்று...

கவிதைகளாலேயே அவளுக்கு

ஆபரணங்கள் அணிவித்தான்...அகத்தில் மட்டுமல்ல

முகத்திலும் அவள் குழந்தையே!

அவளுக்குச் சிரிப்பைப் புகட்டினான்..

தனது சோகத்தை அகற்றினான்..

தனது பெருமைகளை மட்டுமல்ல

வறுமைகளையும் அவளுக்கு

அறிமுகப்படுத்தினான்...

அன்பு வார்த்தைகள் மட்டுமல்ல..

ஏழ்மை வாழ்க்கையும் எடுத்துக்கூறினான்..அந்த

வெள்ளைச் சிரிப்புக்காரி...

உள்ளத்தை மட்டுமே வேண்டினாள்

உள்ளதை ஏற்றுக்கொண்டாள்...
பகுதி_மூன்று

இரண்டு நாட்கள் சந்திக்கவில்லை எனில்

இருவருமே இறந்து பிழைத்தனர்...

கண்கள் சந்திக்கும்போது

கண்ணீர்தான் சாட்சியாய்

உள்ளக்கூண்டில் ஏறி நின்றது....அவள் வியந்தாள் இப்படி:

'' என் இதயக் கோயிலில்

இத்துனை விரைவில்

இவ்வளவு அழகாக

அன்புநீர் தெளித்து

அழகிய கவிக்கோலம்

போட்டது யார்?''எப்போதாவது அவன் முகத்தில்

துன்பரேகை மின்னலிட்டால்

துடித்துப்போனாள் அவள்!

'' என் உள்ளக் கண்ணாடியை

உன்னிடம் ஒப்படைத்தேன்..

எச்சரிக்கைக் குறைவால்

உடைத்து விடாதே ''

கவிஞனின் இந்த வேண்டுகொள்

'' நான் உடைந்தாலும் என்றும் உடையாது

எந்தன் கண்ணாடி ''

என்ற பதிலுடன் முத்தமிட்டது!


பகுதி_நான்குஅன்றுவரை

பிறர் கூறிய காதல் அனுபவங்களே

அந்தக் கவிஞனின்

கவிதைகளாய்க் கருத்தரித்தது..

வாழ்வில் உணர்ந்த போது அவனுக்கு

வார்த்தைகள் திணறின...

அந்தக் கவிஞனைச் சந்திக்கும்வரை

ஆண்களைப் பொறுத்து அவள்

ஊமையாகவே இருந்தாள்...

அவளது நாணப் போர்வை

அவனது கவிதை வாளால் கிழிந்தது...

புதுப் பெண்மையுடன் அவள்

புத்துயிர்த்தாள்...

தாயின் முகவ்ரி கண்டிடாத அவன்

முதன்முதலில்

தாயுள்ளம் அறிந்தான்....

காதலின் அர்த்தத்தை

காதலியாய் விளக்கினாள்...

மனைவியின் மகத்துவத்தை

மனத்தளவில் உணர்த்தினாள்...

ஆம்...

தாயாய் காதலியாய் மனைவியாய்

பரிணமித்தாள்...

இருவரும் தததமக்குள்

குழந்தை ஆயினர்....

தமக்குள் சிறு குடில் கட்டினர்..

உறவுகளைத் தம்முடன் ஒட்டினர்..

மனத்தளவில் அந்தக் குழந்தைகள்

குழந்தைகளை ஏந்தினர்..

மகிழ்ச்சிக் கடலினுள் நீந்தினர்...


பகுதி_ஐந்துகவிஞனின் துன்பத்திற்கு

புன்னகை மருந்து பூசினாள்..

மெல்ல மெல்ல இருவரது உள்ளமும்

ஒட்டி உறவாடியது...

ஆனால்

ஒருவரை ஒருவர்

மூச்சுக்காற்றால் கூடத்

தொட்டுக்கொள்ளவில்லை

இருவருக்கும் இடையில் பண்பாடு

கை கோர்5த்து உலவியது...

அவனது அர்த்தமுள்ள பார்வையை

'' இந்தப் பிறவியில் மட்டுமல்ல

வரும் பிறவி தோறும்

இருவரும் கைகோர்த்து

உலாவரவேண்டும்.....''

என்று அவள் மொழி பெயர்த்தாள்....

கடவுளுக்குச் சூட்டக் கூட

பூ வாங்கியறியாத அவன்

அவளுக்கு அழகூட்ட

பூக்கடை தோறும் மலர்களின்

விலாசம் விசாரித்தான்...

அவள் கன்னங்களின் ஒப்புமையால்

ரோஜா மலர்

அவளால் அழகு பெற்றது....

முதல் முறையாக அவன் இதயம்

ஒருகணம் நின்றது!


பகுதி_ஆறு


ஒருவருக்கொருவர்

குடும்பச்செய்திகளை

பரிமாறிக்கொண்டனர்..

அவள் இருந்து வரும்

நாற்றங்கால் பற்றியும்

வளரப்போகும் வயல் வெளி பற்றியும்

விசாலமான விலாசம் கண்டனர்...இடை இடையே சிலநேரம்

இருவரது உடல்களும்

கூட்டல் கணக்காகிவிடத் துடித்தது...

ஆனாலும்

பண்பாட்டுப் பெருக்கல் தான்

இருவரது மனங்களையும்

வகுத்துச் சென்றது..

வார்த்தைச் சுகங்களாலேயே

வாழ்க்கைச் சுகங்கள் கழிந்தன...

தனிமை ஒருமுறை இவர்களைத்

தள்ளாட விட்டது உண்மை

ஆனால்................

அவளது பெண்மையும் அவனது உணமையும்

விரகத்தீயை விரட்டிவிட்டது!காதல் பாடம் வளர்ந்து வரும்போதே

கல்லூரிப் பாடம் குறுகிவந்தது

கல்லூரிவாழ்க்கை முடியப்போவதை எண்ணி

கண் கலங்கினர்...

ஒருவர் புன்னகை மற்றவர் கண்ணீரைத் துடைத்தது...

அப்போது......

திடீரெனப் பத்து நாட்கள்

தீயென வந்தது!பகுதி_ஏழுபத்து நாட்கள் பாட விடுமுறை...

அவள்

உயிரை இவனிடம் விட்டுவிட்டு

உடலுடன் சென்னை சென்றாள்..

இவன் உயிர்

உடலை இங்கே விட்டுவிட்டு

அவளுடன் சென்னை சென்றது!மனத்தளவில் பிரிவில்லை எனினும்

நான்கு கண்கள் பத்து நாட்கள்

இமைக்க மறந்தன....

காவிரி மணலில் படுத்து

விண்மீன்களிடையே

அவளைத்தேடினான்....

சூன்யம் கண்டு வாடினான்...

கல்லூரிபாடங்கள்

கண்களில் ஏறவில்லை..

காதலி ஏக்கம் அவனை

அனாதைக் குழந்தை ஆக்கியது....

தினசரி அவள் வரவை எண்ணி

கண்கள் பூத்தன...

கண்ணீர்ப்பூக்கள் கோர்த்தன...

அவளது வழக்கமான வழித்தடங்களை

கண்களால் முத்தமிட்டான்...

மனதுக்குள் மட்டும் சத்தமிட்டான்...

பத்து நாட்களில்

பதது வகை நரகங்கள்

பரிச்சயமாயின....

அவளும் சென்னையில்

நடமாடும் பிணமானாள்...

நாயகன் நினைவுடன்

நாட்களை ஓட்டினாள்...

அந்தக் குழந்தை

தனது இந்தக் குழந்தைக்காக

பரிசுகள் வாங்கி வந்தபோது...

இந்தக் குழந்தை

கையில் பரிசுகளுடன்

அந்தக் குழந்தையைத் தாங்கியது!

பத்து நாட்களின் சோகங்களை

பார்வைகளில் கரைத்தனர்...

மீண்டுமொரு வசந்த காலம்

பூத்துவந்தது...

இருவரது உயிர்களையும் காத்துவந்தது..


பகுதி_எட்டு


இவர்களது காதல் வளர்ச்சியை

பலர் விமரிசனம் செய்தனர்.

சிலர் கரிசனம் காட்டினர்..

அவளது தோழிகள் அவளை

வார்ததைகளால் அறைந்தனர்..

காதலைத் தொல்காப்பியம் மட்டுமே

தத்து எடுத்துள்ளதா?

அகநானூறு மட்டுமே காட்டும்

சித்து விளையாட்டா அது?

காப்பியங்கள் மட்டும் காதல் உரிமை

காப்பிரைட் எடுத்துள்ளதா?

தாஜ்மகாலை வியக்கும் மனித உள்ளம்

ஷாஜஹானையும் மும்தாஜையும்

மறந்து போனதேன்?

உண்மைக் காதலைச்

சுற்றி நினறு தூற்றுவதேன்??

அவசர அவசரமாய் அதற்கு

சவப்பெட்டி தயாரிப்பதேன்?

நாட்டு மக்களிடமிருந்து காதல்

நாடு கடத்த வேண்டிய ஒன்றா?

படித்தவராக வேடமிடும் பாமரர்கள்

சுற்றி நின்று அக்காதலரைச்

சுட்டெரித்தனர்..

ஆனாலும் அந்த

ஆனந்தக் குயிலகளுக்கு

ஆதரவுச் சாமரம் வீசிய

நட்பு வள்ளல்களும் இருந்தன!

இணைப்பறவைகளின்

இணைப்பைப் புரிந்து கொண்டு

எதையும் செய்யத் துடித்தது ஓர் இதயம்...

அந்தக் காதல் இதயங்களைக்

கனிவுடன் வருடியது...

பகுதி_ஒன்பது

நாளொரு கடிதமும்

பொழுதொரு பூரிப்புமாய்

இன்ப வானில் மிதந்தன

அந்த மென்மைப்பூக்கள்!

பல்கலைக்கழகப் பாடத்திட்டமோ

ஆய்வேட்டின் வடிவில் அவர்களுக்கு

ஆதரவு கொடி ஏற்றியது...

ஆய்வுச்சிந்தனைகளும்

வாழ்வுச் சிந்தனைகளும்

பின்னிப்படர்ந்து பிணைத்தது அவர்களை!

பொறுப்புள்ள தாம்பத்யம் போல்

திட்டமிட்டு வளர்ந்தது அவர்கள் ஆய்வு!

இடையிடையே......

மனதுக்குள் அவர்கள் நடத்திய

குடும்ப நாடகத்தில்

குழந்தை உறுப்பினர்களும்

குடியேறினர்....

காதல் மொழியால்

தாலாட்டும் பாடினர்....ஒருநாள் இருவரும்

கும்பேசுவரனை

கும்பிடப் போயினர் தனியாய்...

மெல்ல கை கோர்த்து

பிரகாரம் சுற்றினர்...

முதல் முதலாய் அந்த

கன்னிகையின்

கை தொட்டபோது

மனதுக்குள் நிறைய மத்தாப்பூ!

கைகளை இறுக்கினான்

காதலி மெய் மறந்தாள்..

தணலி இட்ட நெய் போல் உருகினாள்!

கோயில் என்ற நினைவிருந்தும்

சிற்பங்களைக் கண்டபோது

கட்டவிழ்ந்தது இருவரின் கட்டுக்கோப்பு!

ஆம்....

கட்டியணைத்தனர் காலம் மறந்து!

ஐந்து நிமிடங்கள் இன்னும் அந்த கவிஞனின்

ஐந்து யுகங்களாய் ஆழ்மனத்தில்....
பகுதி_பத்துஇன்னுமொரு ஐந்து நாடள்

இடியாய் வந்தது...

அவளின் குடும்பம் சுற்றுலா போனது...

பெங்களூர் நகரம் இவளது வரவால்

மேலும் குளிர்ந்தது...

பிருந்தாவனத்தில் காதல் கனவுகளுடன்

காதலன் நினைவுகளுடன்

உலா வந்தது அந்த

திருவாரூர்த் தேர்!

மைசூர் அரண்மனையில்

மகாராஜாவாய் அவனையும்

மகாராணியாய்த் தன்னையும்

பதவிப் பிரமாணம் செய்வித்து மகிழ்ந்தாள்...

அவளது மகிழ்ச்சியில்

இவன் மனம் நெகிழ்ந்தது...அன்றொருநாள்-----

கல்லூரிப் பழமரம் தேடி

களிப்புடன் வந்த பறவைகள்

தங்கள் கூட்டுக்குப் பறக்குமுன்

பிரிவு உபசாரவிழா நடத்தியது...இந்த காதல் பறவைகள்

சுமக்கவியலாத சோகத்தையும்

விளக்க இயலாத விசாரத்தையும்

ஒருங்கே சந்தித்தன...

ஒரு வகுப்புப் பறவைகள் அனைத்தும்

உள்ளம் திறந்து கூவின!

வகுப்புச் சட்டசபையில்

காதல் பிரேரணையை

வாழ்க்கை உறுப்பினர் அரங்கேற்றினர்..

மற்றக் குயில்களும் இவர்களுக்கு

வாழ்த்துப்பா இசைத்தனர்...

புகைப்படம் எடுக்கும்போதும்

உள்ளங்களைப் போலவே

ஒன்றி நின்றனர்....

அந்தக் கவிஞனின் மறக்கவியலா

மனக்காட்சிகளில்

இதுவும் ஒன்று!!


பகுதி_பதினொன்று


எததனையோ ஏக்கக் கனவுகளுடன்

தேர்வுகளுக்குப் படித்தனர்...

ஒருவருக்கொருவர்

உரையாடிஉரையாடி

தேர்வு நாட்களை

வசந்த ஊஞ்சலில் வைத்துப் பார்த்தனர்...

இறுதித் தேர்வன்று அவன்

உறுதி இழந்து உருகிவிட்டான்..

அவள் மறுநாள்

தனது சொந்த ஊரைச்

சிறப்பிக்கப் போகிறாள்...

கல்வி பயின்ற மண்ணை விட்டு

கால் பிரிய மனமில்லை...

கவிஞனின் நினைவு அவள்

காலைச்சுற்றி வந்தது...

அவள் தழுது கூறினாள்:

'' எங்கிருந்தாலும் நாம்

ஒன்றாகவே சுவாசிப்போம்...

நான்.....

தாய் வீடு செல்லும்

உங்கள் மனைவி!!

விரைவில் உங்கள் இல்லம் கண்டு

உயிர் பிழைப்பேன்!!

அது வரை

உறுதிக் கயிற்றால் உங்கள்

உடலைக்காப்பேன்...

நீங்கள் என் உயிரைக் காருங்கள்!

நாற்றங்காலின் முழுச்சம்மதம்

கிடைத்தாலும் அல்லவெனினும்

இந்தப் பயிர் உங்கள்

வயலுக்கே சொந்தம்''

இப்படிக்கூறி

இதயத்தை இறுக்கிகொண்டு

அவள் விடை பெற்றாள்....பகுதி_பனிரெண்டுஎப்படியோ அந்த

இரண்டு உயிர்களும்

தனித்தனியே

சுவாசிக்கலாயின...

வாரம் ஓரிரு மடல்களாயினும்

வரைவேன் என்றாள்..

'' உன் மடல் கண்டு தான்

என் உடல் இயங்கும் '' என்றான்..வந்த மடலுக்கு இவ்வாறு

விடையளித்தான்:

'' வேலை கிடைத்ததும்

வேளையும் வந்து விடும்...அந்த

நாளை எண்ணி

நாட்காட்டி பார்த்திரு

இடையில் வேறு மாலை வந்தால்--

பணிவுடன் மறுத்து விடு பூவே! ''தேர் உல்வும் ஆரூரில் அவள்

தேயலானாள்....

விரைவில் அவளை அடைய வேண்ட

வேலை தேடித் தேடி

வேதனையில் அழுந்தினான் அவன்!

சிறு தூறலுடன்

மழை நின்றுவிடுவது போல

சில மடல்களுக்குப் பின்

அவள் சிலையானாள்..ஆம்

அவள் சிறையானாள்!!

தினமும் வானம் கண்டு ஏங்கும்

ஏழை விவசாயி போல

தபால் காரன் வழி பார்த்து

தடம் மயங்கினான்...பகுதி_பதின்மூன்றுஅந்த இலக்கியப் பட்டங்கள்

அனைத்தும் அவனுக்கு

வேலை வாய்ப்பைத்

தரவில்லை---ஆம்

ஏழைக்கு வாய்ப்பேது??

அந்த தேவதையை

உயிர்ப்பித்த சிற்பிகள்

நல்லவர்கள் தாம் ஆனாலும்

அவர்கள் சமூகக் கயிற்றால்

ஆட்டிவைக்கப்பட்ட

தோல் பொம்மைகளே!

எந்தத் தகுதியின்மை

அந்தக் கவிஞனின்

மறுதலிப்புக்குக் காரணமோ?

சாதி வேலிதான்

பாதித்ததோ?

அவர்களின் ஆகாயமனங்கள்

குறுகிப்போனது

சாதி இருட்டினாலா?

அந்தக் கவிஞன் ஏழையானது

காதல் குற்றமோ?

அதன் தண்டனை

இரண்டு இதயங்களின்]

ஆயுள் அழுகையோ?

இயற்கை வெளியில்

இயங்கிப் பறக்கும்

இணைப்பறவைகள்

தங்களுக்குள் சாதிப்போர்வை

போர்த்துகிதறதா?

சுகமாய்த் திரியும் புள்ளிமான்கள்

திருமணத்திற்காக

அந்தஸ்து பேரம் பேசுகிறதா?

பல வண்ணங்கள் கொண்டாலும்

மயில்தோகை அழகல்லவா?

சந்திரனைத்தொட்டுவிட்டு

செவ்வாய்க்குத் திட்டமிடும்

ஆறறிவுப் பிறவிகள் மட்டும்

சாதி பார்ப்பதேன்? அந்தஸ்து தேடுவதேன்?

சாதி மாறினால்

இரத்த தர்மம்

பச்சை நிறத்தில் பரிணமிக்கிறதா?

ஏழையின் குருதி அசுத்தமானதா?பகுதி_பதினான்கு (கடைசி???)கடவுளே இல்லையென்று

பகுத்தறிவு பந்தயம் வைக்கிறது...

சாதியை பட்டும்

சந்தனமாய் கருதுகிறதே...

தமிழ் நெறிகளில் ஆண் பெண் எனும்

இரண்டே சாதிகள்தானே

காலம் காலமாய் கருதப் பட்டன?

நல்லவர் தீயவர் சான்றோர் கீழோர்

இவர் தவிர

எங்கே முளைத்தனர்

செட்டியார்களும் பிள்ளைமார்களும்?

எது எப்படியோ

சாதி அரக்கனோ அந்தஸ்து வேடனோ

அந்த இணைப்பறவைகள்

அறுக்கப்பட்டன...

(நீண்ட காலம் போய் விட்டது)இதோ

அவள் மனத்திலஒருவனையும்

உடலில் ஒருவனையும்

சுமக்கிறாள்...

அவன்....

வாழ்க்கைச் சூறாவளியில்

எங்கோ சுற்றி

இதோ

உங்களிடம் நியாயம் கேட்கிறான்....

'' காதலிப்பது குற்றமா?

அதன் தண்டனை

ஆயுள் அழுகையா?''

" நில்... கவனி...செல் "

இது எனது கல்லூரிக்காலத்தில் கல்லூரியில் நடந்த கவியரங்கில் நான் வாசித்த கவிதை.


தலைப்பு: " நில்... கவனி...செல் "

அறிவு எனும் இமயத்தை
அளந்துவிட்ட டென்சிங்கே
அவைத்தலைவா!
வணக்கம்,

காவிரிப்பாசனத்தை நம்பியுள்ள
கழனிகள் போல்
பாவிரிக்க வந்துள்ள
பாவலர்களே...
இந்த அவைக்கு ஏற்ற வயதில்லை
என்றாலும வாய்ப்பளித்த
கல்வி வித்தகரே முதல்வரே!

எல்லோருக்கும்
என் பணிவான வணக்கங்கள்!

மகன் தாயை வாழ்த்துவது
முறையல்ல என்றே
தமிழ் வாழ்த்தைத்
தவிர்க்கின்றேன் சிறு பிள்ளை நான்!

நில் கவனி செல்
எனும் தலைப்பில்
வா கவி சொல் என்ற
உங்கள் அடிபணிந்து
சமர்ப்பிக்கிறேன்:
பகட்டுகளின் பவனிகளை
பளபளக்கும் அணிவகுப்பை
நின்று..கவனித்து..செல்லும்
வருங்கால இந்தியத் தூண்கள்
விளக்கில்லா நெற்றிமாடங்களை
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை ஏன்??

பகல்களில் விண்மீன்களை
எதிர் நோக்கும் இளைஞரே
வெள்ளை நிலாக்களை
வெறுத்து ஒதுக்குவது ஏன்?

சற்றே கவனியுங்கள்:

இமைகளில் படபடப்பு
இந்தியக் கொடியினைப் போல்
கலைமகளின் சீருடையில்
கலைந்து போன ஓவியங்கள்..
சுழன்றடித்த சூறாவளியில்
அணைந்து போன
குங்குமத் தீபங்கள்...
கண்ணுக்குள் காமனின்
திருவிளையாடல்...
இமைகளில் செருகி விட்ட
மன்மதனின் மலர்க்கணைகள்..
இந்த தேய்பிறைகள்
ஏனோ
இளைஞர்களால்
வெறுக்கப் படுகிறது...
கவனியுங்கள்!
கவிஞர்களே.....
மரத்தின் உச்சாணிக்கொம்புகளையே
ரசித்துக் கொண்டு செல்லும்
சிந்தனைக் கவிஞர்களே..
நில்லுங்கள்...

உங்கள் காலடியில்
உயிர்விட்டுக் கொண்டிருக்கும்
இந்த இளம் குருத்துகளையும்
சற்று கவனியுங்கள்...

விண்ணில்
இந்திரன் மாளிகை எழுப்ப முயலும்
வித்தகர்களே சற்றே நில்லுங்கள்..
ஆட்டம் கொண்டுவிட்ட
அடித்தளத்தையும்
கவனியுங்கள்...
பின்னர்
ஆகாயக் கோட்டையை
ஆராயச் செல்லுங்கள்...

தேசீய அழுக்கினை
தேய்க்க சுறு சுறுக்கும்
அரசியல் வெளுப்பாளர்களே
நில்லுங்கள்...
உங்கள் உடையை
முதலில் கவனியுங்கள்..

சாதித் திரிக்கு
நெருப்பூட்டச் செல்லும்
வேலி ஓணான்களே..
நில்லுங்கள்...
உங்கள் தாடியின் நெருப்பைக்
கவனியுங்கள்...

ஓட்டுப் போட
ஓட்டமாய்ச் செல்லும்
ஆட்டுக் கூட்டங்களே...
நில்லுங்கள்...
வேட்பாளனின் கைகளைக்
கவனியுங்கள்...
அங்கே இருப்பது
கருணை யல்ல
கசாப்புக்கத்தி!

(இப்போது நிலை மாறுகிறது
இந்தக் கவிதைகளுக்குப் பின்...)

நில்லுங்கள்...
இங்கே
பல அடிமைகளின்
அணிவகுப்பு
அடிவருட அல்ல!
கவனியுங்கள்...
அவர்கள் கைகளில்
பணிவுகள் அல்ல
பயங்கர ஆயுதங்கள்...
ஆண்டான்களே
உயிர் பிழைத்துச் செல்லுங்கள்...

சுரண்டெலிக் கூட்டங்களே
நில்லுங்கள்...
புரண்டெழுந்துவரும்
புரட்சி வெள்ளத்தைக்
கவனியுங்கள்...
ஏழைகளின் ஆயுதங்கள்
எரிமலையில் பழுக்கப்பட்டவை..
இதயச் சம்மட்டியால்
இழைக்கப் பட்டவை..
விலகிச் செல்லுங்கள்
வேறு வழியே இல்லை...

பெண்ணடிமை

ஈன்றெடுத்து ஆண்மையை
சான்றோனாக்கும் பெண்மையை---

இட்டழைக்கும் போதெல்லாம்
கட்டிலுக்கு வந்து நிற்கும்
அந்த கட்டழகுப் பெட்டகத்தை---

சுட்டிச் சொற்களால் அன்புக்
கட்டிகளை ஊட்டுகின்ற
அந்த சிட்டுக் குருவிகளை---

தோல்வி கண்டு துவளும் போது
தோள் கொடுத்து ஆண்களை
ஊக்குவிக்கும் தோகையை---

இந்த
ஆண் வர்க்கச் சாட்டைகள்
ஆட்டி வைப்பது ஏன் ஏன்?

காயங்கள் விழும்போது
காதல் மருந்திடுவாள்...

மாயங்கள் மறைக்கும்போது
மாற்று மருந்திடுவாள்...

வாழ்க்கைப் படகை
வாய்ப்பாய் செலுத்துவாள்...


குழப்பத்தின் குழந்தைகள் ஆண்கள்
தெளிவு விளக்கேற்றுவது பெண்கள் !

நஷ்டம் கண்ட வியாபாரிகள் ஆண்கள்
கஷ்டத்தில் உதவுவது பெண்கள் !

ஆயிரம் சிந்தனையில் ஆண்கள்
அளவோடு சிந்திப்பது பெண்கள் !

போற்றவேண்டாம் அவர்களை
தூற்றாமல் காத்திருங்கள் பெண்களை !

பெண்கள்
பட்டங்கள் ஆளவந்தால்
பரிகசிக்கப் படுகிறார்கள்....
சட்டங்கள் ஏற்ற வந்தால்
சபிக்கப்படுகிறார்கள்...
இங்கே ஆண்களின்
சல்லடைச் சட்டங்களே
சரித்திரமாக்கப் படுகின்றன...

பெண் வாசகர்கள்
தங்கள் வாழ்க்கைப் பத்திரிகையில்
வாழ்நாள் உறுப்பினராக
முன் பணம் கட்டுமுன்
முதியோராகின்றனர்...

காதலைப் பற்றி காவியங்களில்
கண்ணீர் வடித்துவிட்டு...
வாழ்க்கையில்
பெண்களை மட்டுமே ஓடுகாலி
என்கிறார்கள்...
ஏனென்றால்
அவன் ஆண்பிள்ளையாம்
சாண்பிள்ளையே ஆனாலும்!

நம்பிக்கை தீபமேற்றி
மனைபுகும் நல்லாளை
நாலு காசுக்காக
விலை பேசும் விலைமகன்கள்!

விடிவை எதிர் நோக்கி
விழிகளில் கனவுடன் அவள்...
விலை பேசி பேசி வீணாய்ப் போகும்
விடியா முக மூத்தவளின் சகோதரர்கள்
சில ஆண்கள்!..

பெண்ணுரிமை சமத்துவம்
ஏட்டளவில்தான் இன்றும்
நடைமுறையில் இன்னும்
நல்லதங்காள் கதைகள்தான்!!!

மறு வாழ்வு

மறு வாழ்வு

அந்த மல்லிகை
மணத்தை இழக்குமுன்
மணத்தை இழந்தது...

வெள்ளைச் சேலை அவளது
மனத்துக்கேற்ற சீருடையானது...

எதிர்காலம் கறுப்பிருட்டு
கண்களிலோ வண்ணக் கனவுகள்...

இரண்டாம் இன்னிங்ஸ்
விளையாட வந்தவன்
பரிசுத் தொகை போதாதென்று
பறந்தே விட்டான்...

இதோ
அவளது மூத்த அண்ணனின்
மூன்றாம் திருமண ஏற்பாடுகள்
மும்முரமாய்....

வாழ்க்கை

வாழ்க்கை

பல கற்றும் பெருந்தன்மை கொண்டவன்தான் மனிதன்
படைப்பினிலே உயர்வுபெற்ற தூய நல்ல புனிதன்!
சலனமின்றி அமைதி பெற்ற மௌனநிலை மனதும்
சலிப்பின்றி கண் துஞ்சா உழைப்பும் தான் வாழ்க்கை!

கொடுத்தவர்க்கே கிடைத்திருக்கும் புரிந்த புதிர் அன்பு,
கொடுமையான மனிதருக்கும் உதவுகின்ற பண்பு,
எடுத்தாலும் குறையாத நிறைசெல்வம் கல்வி, இவை
எப்போதும் நிறைந்திருக்கும் பெட்டகம்தான் வாழ்க்கை!

மதுவழகி மயக்கத்தில் மயங்கிடாத ஆணும்
மமதையெனும் கிறக்கத்தில் விழுந்திடாத பெண்ணும்
எதுவரினும் எதிர் கொள்ளும் இரும்பு போன்ற மனமும்,
எப்போதும் நிம்மதியும் நிறைந்ததுதான் வாழ்க்கை!

இரண்டு பெற்று இனிதாக வளர்த்துவரும் திறமை
இல்லையெனில் வறண்டிடுமே இல்லறத்து வளமை,
மிரண்டு வரும் மழலைக்கு மகிழ்வான முத்தம்
மிச்சமின்றி வழங்கிவிடும் தாயன்பே வாழ்க்கை!

இல்லாமை இல்லாமல் ஆட்சி செய்யும் இல்லாள்
இறையன்பும் நிறைந்திருக்கும் இதயம் கொண்ட நல்லான்
கல்லாமைஎனும் ஆமை நுழையாத இல்லம்
கற்கண்டாய் இனித்திடுமே இவை நிறைந்த வாழ்க்கை!

எங்கேயடி நீ?

எங்கேயடி நீ?ஈன்றபின் பாலூட்டுவது
பசுவின் கடமை!
என் நெஞ்சைத் தூண்டி
நினைவுகளைக் கோதுவது
உன் கடமைதானேயடி?
என் சந்தோஷக் கணங்களை
ஏந்திக்கொண்ட நீ
காலனுடன் போராடும்
இக்கணம் எங்கேயடி?

உறவுகள் ஆறுதலை
உதட்டால் நவில்கின்றன..
ஊனமுற்ற இக்கணம்
ஊன்று கோல் நீ தானேயடி?
சல்லாப நினைவுகள்
ஒடுங்கிவிட்டன...
இந்த சாபக்கணங்களில்
அணைக்கக் கூட வேண்டாம் நீ
கடைக் கண்ணால்
கருணைமட்டும் காட்டு...

தாயைக் காணாத எனக்கு
நீயெ தெரிந்தாய்...
என் கண்கள் மங்கிப் போயினும்
அகக்கண் முழுவதும் நீயே தானடி...
அழும் குழந்தைக்கு தானே
அரவணைப்புத் தேவை..
வந்து விடு நீ
என் கடைசி மூச்சுக்காற்றை
எள்ளளவாவது சேமித்துப் போ!

ஒரு பக்தனின் வேண்டுதல்...

ஒரு பக்தனின் வேண்டுதல்...

வேண்டும் வேண்டும்...

பஞ்சம் இல்லாத பாரதம் வேண்டும்...
லஞ்சம் இல்லாத அரசியல் வேண்டும்...

பயமே இல்லாத மனிதர் வேண்டும்...
சுயநலம் இல்லாத மனநிலை வேண்டும்...

தட்சிணை இல்லாத வரன்கள் வேண்டும்...
கட்சிகள் இல்லாத தமிழகம் வேண்டும்...

பட்டினி இல்லாத வாழ்க்கை வேண்டும்...
தட்டினில் குறையாத உணவுகள் வேண்டும்...

ஏக்கம் தராத மகளிர் வேண்டும்...
தூக்கம் மறுக்காத இரவுகள் வேண்டும்...

வாட்டம் இல்லாத வாழ்க்கை வேண்டும்...
ஆட்டம் இல்லாத திரைப்படம் வேண்டும்...

நஞ்சம் இல்லாத நாகம் வேண்டும்...
வஞ்சம் இல்லாத பகைவர்கள் வேண்டும்...

வேண்டும் வேண்டும் எல்லாம் வேண்டும்...
வேண்டிட மறந்த பிறவும் வேண்டும்...

தயவு செய்து எழுப்பாதீர் அவரை...

தயவு செய்து
எழுப்பாதீர் அவரை.....


பணத்தை கொட்டி
பஞ்சணையில் வாங்கியதல்ல
பரம நித்திரை....

விலை தந்து பெறுவதல்ல
விரும்பும் போது வருவதே
விழைவான உறக்கம்...

உழைத்து களைத்து
உதிரமாய் வியர்வை சிந்தி
உருக்குலையும் போது வரும்!

மனதில் சுழலும்
மனைவியின் கவலை
மகனின் மழலை இவைதாம்
மஞ்சமும் தலையணையும்...

கடன் வாங்கி உழுது
கனவுடன் பயிரிட்ட
கழனி நினைவுகள்
கனவாய் மோதும்...

மகிழ்வான தூக்கம்
மாத்திரையால் அல்ல-
மன நிம்மதியால் தானே!!

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம்

சட்டையில் பொத்தான்
பிய்ந்துள்ளதடி முண்டமே!
கைக்குட்டை எங்கேயடி
கடன்காரியே!
ஷீவைக் கொண்டுவா
சனியனே!
காலை உணவை எடுத்து வையடி
கழுதை!
நேரமாகுது எனக்கு
இலக்கிய மன்றத்தில்
சொற்ப்பொழிவாற்றனும்
'பெண்ணடிமை' கொடுமைக்கு
எதிரா!!!

எங்கும் எப்போதும்...

எங்கும் எப்போதும்... 


எனக்குப் பிடிக்குமென
என் மனைவி ஆசையாய் சமைத்த
கத்தரிக்காய் குழம்பு கசக்கிறது...

எப்போதும் மனம் கவரும்
என் மகனின் மழலை மொழி
எள்ளளவும் ருசிக்கவில்லை...

நான் விரும்பிப் பார்க்கும்
அரட்டை அரங்கம்
நாராசமாய் ஒலிக்கிறது...

தங்கைக்கு மகன் பிறந்த
தொலை பேசித் தகவல்
தங்கவே இல்லை மனதில்...

தங்கை திருமண
கடனும் வட்டியும் தான்
இங்கும் அங்கும் எங்கும் எப்போதும்...

தேடல்

தேடல்


எங்கெல்லாமோ
அலைந்து திரிந்து
நாய் படாத பாடு பட்டு
நாலா பக்கமும் ஓடித்தேடி
கண்ணில் பட்டவர்
எல்லோரையும் கேட்டு
கடைசியில் கண்டு கொண்டேன்
தாய் மடியில் நிம்மதியை!

எங்கும் எதிலும்

05.05.2002 ஆனந்த விகனில் பவள விழா கவிதைப்போட்டியில் வெளியாகி வாசகர்களால் தெரிவு செய்யப்பட்டு மூன்றாம் இடத்தைப்பெற்று மொத்தம் 7000 ரூபாய் பரிசு பெற்ற கவிதை!

கள்ளச்சாராயம்
காய்ச்சிய பணத்திலும்
உடலை விலை பேசி
விற்று வந்த பணத்திலும்
ஏழைத் தாலியின்
அடகுப் பணத்திலும்
ஈட்டிக்காரனின்
வட்டிப் பணத்திலும்
புன்னகைத்த முகத்துடன்
காந்தி படம்!

முற்றுப் பெறாத முன்னுரைகள்


முற்றுப் பெறாத முன்னுரைகள் 

அவன்
தன் வசந்த காலக் கனவுகளை
அரங்கேற்றக் காத்திருந்தான்...
இடையில் தான்
அந்த
கருச்சிதைவு...
வடித்த உதிரத்திற்கு அளவில்லை...
உவமை இழந்த கவிதை போல
வெளுத்துப் போனான்...

காவியச் சிற்பம் செதுக்குவதாய் எண்ணி
காலம் காலமாய்
கல்லுடைத்தான்....
வாழ்நாள் முழுக்க
வாக்களித்தே உருக்குலைந்த
இந்திய மக்கள் போல!

இமய மலையை இடிப்பதாய் எண்ணி
கறையான் புற்றைக்
காலி செய்தான்...
இன்றைய பத்திரிகைகள் போல!

மிகுந்த பிரயாசையுடன்
சிரமப் பட்டு
அல்லல் பட்டு
உரிமைக்குக் குரல் கொடுத்தான்...
பாம்பு வாய்த் தவளைப் போல!

அவன் இமைகளைக்
கண்களே கிழித்தன...
இன்றைய அரசியல்வாதியைப் போல!

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம்

இங்கே...
கலை மகளுக்குக்
கை விலங்கிட்டுவிட்டு
அலை மகளுக்கு
ஆரத்தி எடுக்கின்றனர்...

திருவோட்டைக் கூட
அரை விலைக்கு விற்றுவிட்டு
கையேந்துவதற்குத் தயாராய்
அரசாங்கம்....

வாய் கொள்ளும் உணவுக்காக
கரும்பு வயலையே
துவம்சம் செய்யும்
அதிகார யானைகள்...

என்றாவது விடியுமென்று
ஏற்றி வைத்த நம்பிக்கை
நம்பிக்கை விளக்குடன்
திருவாளர் பொதுஜனம்....

பாரத தேசத்து பாவப் பயிர்கள்...பாரத தேசத்து பாவப் பயிர்கள்...

பாதையோரத்துப் பாவங்களின்
விழியோரத்தில் நீர்ப்பூக்கள்..

தேசீயக் கொடிக்கம்பம் போல்
மெலிந்த தேகங்கள்
வாழ்விலும் தேக்கங்கள்...

வாழ்க்கையில் சாவைப் பார்த்துவிட்டு
சாவிலே இன்பம் காணத் துடிப்பவர்கள்...

இவர்களுக்கு வசந்தம் வருவதேயில்லை
சிலர் அதை ஆயுள் குத்தகை எடுத்ததால்..

மாதம் ஒருமுறை
வானத்தில் தோசை தரிசனம்..
பிற நாட்களில் மௌன அமாவாசை...

தூக்கத்தில் கூட
துக்கக கனவுகள்..

இவர்களுக்கு விழிப்புணவு வராமல்
பார்த்துக் கொள்ளும் இன்றைய சினிமாக்கள்...
கதைகளில் வாலிபத்தைக் காட்டி
நிஜங்களை கிழமாக்குபவர்கள்...
உழைத்துச் சலித்த இந்த ஊமையர்களை
குருடராக்கவும் செய்யும் ரசவாத வித்தைகள்...

இனி
ஒரு விதி செய்வோம்
அதை விளக்கமாய் வீதியில் வைப்போம்!

கணக்கு உதைக்குது.

எங்க கணக்கு வாத்தியார்
சரியாச் சொல்லிக்கொடுக்கலை...

வட்டம் மாவட்டம்
வரைஞ்சு காட்டலை...

வாக்குச் சதவீதம்
போட்டுக்காட்டலை...

வறுமைக் கோடு
கிழிச்சிக்காட்டலை...

புறம்போக்குப் புள்ளிவிபரம்
புரிய வைக்கலை...

ஸ்விஸ் பேங்கைப் பத்தி
சொல்லவே இல்லை...

எங்க கணக்கு வாத்தியார்
சரியாச் சொல்லிக் கொடுக்கலை...

தீர்ப்பு

தீர்ப்பு
(கோத்ரா கலவரத்தில் பலர் மாண்ட போது நான் எழுதிய கிறுக்கல் வரிகள்)

அடிக்கடி டி.வி. பார்க்கும்
என் எல்.கே.ஜி. மகன் கேட்டான்,
'கோத்ராவில என்னப்பா?'
தடுமாறிப்போன நான்
ஒரு மாணவன் தன் சக மாணவனை
அடிப்பதாகச் சொன்னேன்.
' டீச்சர் கிட்ட சொல்லலாமே'
பிஞ்சு உள்ளம் பரிவாகச் சொன்னது.
டீச்சரும் சேர்ந்தடிக்கும்
அவல நிலையை அழகாகச் சொன்னேன்.

தளரவில்லை அவன்!
தீர்ப்பளித்தான் இப்படி...
'டீச்சரை சஸ்பென்ட் செய்யல்லியா?'

கரெஸ்பாண்டெட்டும் கயவனாய் இருப்பதை
நாசூக்காய் சொல்ல நாவில்லாமல்
நட்ட மரமாய் நான் !!!

ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

கடுமையான உழைப்பினால்
உன் ஆயுள் ரேகை அழிந்தது.......

அரசியல் வாதிகளின்
ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன்
அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......

எண்ணற்ற சினிமாக்களால்
உன் புத்தி ரேகை மழுங்கியது........

லாட்டரிச் சீட்டுகளைச் சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேகை
உருக்குலைந்தது........

தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
அலைந்து திரிந்ததில்
உன் திருமண ரேகையும்
தொலைந்து போனது.....

முதுமை ரேகை மட்டுமே
முறியாமல் உள்ளது.......

கொஞ்ச நாட்கள் கழிந்தால்
உன் குறையெல்லாம் போய் விடும் போ !