Monday, July 25, 2011

முத்தான மூன்று முடிச்சு..!




Monday, July 25, 2011


கதம்ப உணர்வுகள் மஞ்சு (http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்சு பதிவுத் தொடரினை இங்கே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.


பிடித்த உறவுகள்

1.அம்மா.
2. என் சகதர்மிணி
3. நட்புகள்


பிடித்த உணர்வுகள்.                

1.நட்பு.
2.காதல்...
3.தனிமை...

பிடிக்காத உணர்வுகள்.            

1.துரோகம்
2.முதுகுக்குப் பின் பேசுதல்...
3.புறக்கணிப்பு..


முணுமுணுக்கும் பாடல்கள் 

1.குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...
2.கருணைக்கு எல்லை ஏதைய்யா..?
3.உன்னைத்தானே... தஞ்சம் என்று நம்பிவந்தேன் மானே..

பிடித்த திரைப்படங்கள்

1.எம்ஜிஆரின் படங்கள்
2.பாலச்சந்தரின் படஙக்ள்
3.ரஜினி படங்கள்


அன்புத் தேவைகள்

1.சாய்ந்துகொள்ளத் தோள் வேண்டும்
2.நானுறங்க மடிவேண்டும்.
3.என்னவளே தரவேண்டும்.


வலிமையை அழிப்பவை

1.மனச்சோர்வு
2.சோகம்
3.கவலை

குட்டித் தத்துவம்

1.நண்பனைப் பின்னாலும் பகைவனை முன்னாலும் புகழ்.
2.நம்புவோர்க்கு உயிரையும் கொடு.
3.நன்றும் தீதும் நாமே கொணர்பவை.


பயமுறுத்தும் பயங்கள் 

1.கூட இருந்தே குழி பறிப்பது
2.எதிரில் சிரித்து புறம் பேசுவது
3.நம்பிக்கைத் துரோகம்

அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.முக்தி
2.முக்தி
3.முக்தி


கற்க விரும்புவது

1.ஓவியம்
2.நடனம்.
3.இசை


வெற்றி பெற வேண்டியவை 

1.இடைவிடா முயற்சி
2.நம்பிக்கை
3.இறையின் அருள்


சோர்வு நீக்க தேவையானவை 

1.இசை
2.நடனம்
3.குழந்தையின் சிரிப்பு


எப்போதும் தயாராக இருக்க வேண்டியது  

1.உதவும் மனப்பான்மை
2.அன்பு
3.இரக்கம்

முன்னேற்றத்திற்கு தேவை   

1.முயற்சி
2.இடைவிடாத முயற்சி
3.தளராத முயற்சி


எப்போதும் அவசியமானது 

1.உதவும் மனப்பான்மை
2.கருணை
3.அன்பு


பிடித்த தத்துவம் 

1.இதுவும் கடந்து போகும்
2.பசிவந்தால் பத்தும் பறந்து போம்
3.அன்பே கடவுள்


தெரிந்து தெரியாது குழப்புவது 

1.உயிர் தத்துவம்
2.மூளையின் செயல்பாடு
3.இறைவன் 


எரிச்சல் படுத்துபவர்கள்

1.வேளை கெட்ட நேரத்தில் போன்.
2.மற்றவர் மனநிலை புரியாமல் தொணதொணப்பது
3.செல்போன் விளம்பர காலர்கள்


மனங்கவர்ந்த பாடகர்கள் 

1.யேசுதாஸ்
2.எஸ் பி.
3.சி எஸ் ஜெயராமன்

இனிமையானவை 

1.அரட்டை அடிப்பது
2.கவிதை எழுதுவது 
3.மெல்லிசையில் பாடல்கள் கேட்பது.

சாதித்தவர்களின் பிரச்சனைகள் 

1.நேரமின்மை
2.மகிழ்ச்சியான தருணங்கள்
3.தனிமை இன்மை

பிடித்த பழமொழிகள்

1.வாழு வாழவிடு..!
2.நேரம் பொன் போன்றது
3.உழைப்பே உயர்வு தரும்.

 பதிவிட அழைக்கும் மூவர் 

1.செய்தாலி ( http://nizammudeen-abdulkader.blogspot.com/)
2. வித்யாசன் (http://vidhyasan.blogspot.com/)
3.தேனி சூர்யா பாஸ்கரன் 
http://www.thenisurya.blogspot.com/


அருமையான இந்த வாய்ப்பை நல்கிய மஞ்சுவுக்கு என் அன்பு நன்றிகள்..!

Sunday, July 24, 2011

இன்றைய மனிதர்கள் - மரபுவழிப்பார்வை யொன்று..!




இன்றைய மனிதர்கள் - மரபுவழிப்பார்வை யொன்று..!

வெள்ளமென தோன்றி நிற்கும் தன்னரிப்பைத் தான்தீர்க்க
கள்ளமாய்க் கலந்தேனும் களிதீரக் காண்கின்ற
குள்ள நரிக்கூட்டந்தான் கூடிக்கூடிப் பேசிடினும்
உள்ளம் நிறை நண்பரென உருவாகி நிற்பாரோ..?


உண்மைக்கு விலையில்லை பகட்டுக்கே பவிசெனவே
கண்மையால் கண்ணதுவின் கோணலை மறைத்தால் போல் 
பெண்மைக்கும் போற்றிவைத்த மாண்மைக்கும் பழிசேர்த்து
தண்மையின்றிப் பொய்பேசும் மாந்தர் தாம் நிலைப்பாரோ..?


நாளெல்லாம் கதைபேசி நாலுகுணம் தான் துறந்து
வேளைக்கொரு வாசகரைத் தேடுகின்ற நூலகமாய்
மூளையது பிறழ்ந்திவர் முன்னோரைத் தான்மறந்து 
கீளையது தான்விட்டு வேறுகிளை பாய்கின்றார்..!


பழகிய கணம் மறந்து பகட்டுக்குத் தான்மயங்கி
அழகிய கணங்களை அக்கணமே தான்மறந்து
நிழல்களின் பிரதிதனை நித்தியம் என நினைந்து
தழலுணரா எறும்பெனவே தான்கெட்டு அழிகின்றார்..


நிதர்சனம் அறியாமல் நிதானந் தானிழந்து 
முதல்முதல் கண்டறிந்த முத்துக்களை தானெறிந்து
விதம் விதமாய் மலர்கண்டு வியந்துநிற்கும் வண்டினமாய்
இதயம் தொலைத்து இவ்வாழ்வைத் தொலைத்திடுவார்..!


இம்மனிதர் நிலைகண்டு சினமெதுவும் வரவில்லை
தம்மை உணராத தரமதனை அறியாத
பொம்மை மனிதரென நகைபுரிந்து நிற்கின்றேன்
இம்மையும் மறுமையும் துலங்கிட வாழ்த்துகின்றேன்..!

மே 18- ஒருகண்ணீர் அஞ்சலி...

மே 18- ஒருகண்ணீர் அஞ்சலி... 




ஆண்டொன்று போனது அழிவுக்கோ குறைவில்லை
மாண்டவர் ஓலங்கள் மறையவும் இல்லை
வேண்டாத கடவுளில்லை அவருக்கும் வக்கில்லை
தூண்டிலின் மீன்களாய் துயர்படும் எம்மினம்...

எம்மினம் காத்திட இறைவனின் தூதனாய்
தம்முயிர் கருதா தன்னலத் தலைவனாய்
சிம்மமாய் சிங்களன் கருவறுத் திடவே 
அம்மா வீரன் தம்பிவந் துதித்தனன்...

அந்தோ அதனிலும் வந்ததே சோதனை
எந்தாய் போன்றவன் எம்மினம் காத்தவன்
செந்தனல் அன்னவன் சுருண்டனன் துரோகத்தால்
வந்தது பேரிடி இருகரு ணாய்களால்...

சோர்விலா துழைத்தவன் தோல்வியை மிதித்தவன்
போர்முனை யாகட்டும் சூழ்வினை யாகட்டும்
மார்தட்டி நின்றவன் மாருதம் போன்ற்வன்
கூர்வாள் முனையிலும் கண்ணிமைக் காதவன்

வலிமிகு காடையர் கண்களை எரித்தவன்
புலிஎனப் புகுந்து புடைத்தொழித் தழித்தவன்
மெலிதொரு சூதினில் மருண்டனன் காணீர்
வலிகொடுத் தவனும் தமிழனே காண்பீர்..

இன்னாள் எமக்கொரு செந்நாள் காண்பீர்
இன்னா செய்தோர் இழிபெற உழைப்போம்
செந்நா கொண்டே சிதைத்தவன் கருணா
அன்னோர் எண்ணம் கடிதினில் சிதைப்போம்...

வீழ்வது விளைவதற்கே என்னும் 
விதியினைக் கைகொள்ளுவோம்..
தாழ்வது மீண்டும் பாய்வதற்கே என்று 
தரணிக்குக் காட்டிநிற்போம்..

இனத்துரோகிகளைக் கண்டு களையெடுப்போம்... எம்மினம் நல்வாழவு பெற என்றும் இணைவோம் ... ஒற்றுமை ஓங்குக...

இந்நாளை எம்மினத்துக்காய் நினைவு கூர்வோம்...

கண்ணீருடன் 
கலை...

நான் யார்..?

நான் யார்..?

ஏழை நெசவாளனுக்கு
ஏக புத்திரன் நான்..
வாழத்தெரியாத வம்புக்காரன்..


நேசிக்கத்தெரிந்த எனக்கு
பிறர் மனங்களை
வாசிக்கத்தெரியவில்லை..


யோசிக்கத்தெரியும் ஆயினும்
பிறர் அனுதாபங்களை 
யாசிக்க அறிகிலேன்...


தமிழின் மீது மோகங்கொண்டேன்...
உமிழும் சொற்களில் தமிழைக் கலந்தேன்..
துமியும் வார்த்தைச் சதுரங்கம் அறிகிலேன்..


கண்ணில் கண்டோர் எல்லாருமே
மண்ணில் நல்லவர் என்றே உணர்ந்தேன்
புண்ணில் தானே பூர்வீகம் புரியும்..?


என்றாவது ஒருநாள்
என்றன் உடல் மாயும்..
அன்றைய பொழுதேனும்
அறியப்படுவேனா ...?


முன்னில் இருந்த உறுதிகள் போயின..
என்னில் இருந்த சினங்களும் மாய்ந்தன..
என்னில் என்னைக் காணும் எண்ணம்
முன்னில் நின்று மூச்சடைக்கின்றது...


உலகின் மீது ஒரு சினம் இல்லை
கலகம் என்பது எவரிலும் இல்லை
நானே கலகம் நானே முடிவு..


எத்தனை அமைதி ...
கண்ணில் தெரிகிறது
அத்தனையும் இழந்தேன்
இத்தனை நாளாய்...


இனியொரு உலகில் புகுவேன்
கனியொன்றிருக்க காய்தனைக் களைவேன்..
சனியென எவரையும் வருத்தமாட்டேன்...


என் தாய் இருப்பின்
மோவாய்ப் பிடித்து
கலங்காதிரு என்றே
கனிமுத்தம் தந்திருப்பாள்..


கனிந்தொரு முத்தம் தந்திடும் உறவின்றி
தனியனானேன் தவித்திடலானேன்..


ஒரு நாள் என்வாழ்வின்
கடைசிப்பக்கங்கள்
எல்லோராலும் வாசிக்கப்படலாம்..
என்புதிர் புதினத்தின் விடை
யோசிக்கப்படலாம்...


முரட்டுத்தோலின்
முதிர்பலா என்றே
முறுவல் மிகுந்திட பேசிடப்படலாம்...


அன்னாள் வானில்
மென்மையாய் மேன்மையாய்
என் கனிந்திட்ட பார்வையும்
கசிந்திட்ட விழிகளும்
ஆசிக்காய் நீட்டிய கைகளும்
என்னை உலகுக்கு
உணர்த்திடச் செய்யலாம்...


பொறுத்திட்ட பூமிக்காய்
புன்னகை தந்து
விடைபெறும் போது
கடைவிழி நீர்த்துளி
மழையாய்ப் பொழியலாம்..!

இத்தனை இன்னல்கள் ஏன் படைத்தாய்..?





இத்தனை இன்னல்கள் ஏன் படைத்தாய்..? 


படம்


ஒரு வேளைச்சோற்றுக்கு 
ஓராயிரம் பிழிபாடுகள்...

ஒட்டிய வயிற்றினை 
சிறிது விரித்திட
முந்தானை விரித்துப் போராட்டங்கள்..

மணியரிசி கண்ணில் காண
பிணிகள் பல காணும் அவலம்...

ஓசையின்றி குழந்தை உறங்கிட
வேசை போலவே ஓலங்கள் பலப்பல..

ஆசை ஆசையாய் ஈன்ற மகவுக்கு 
ஆடை அணிவிக்க மார் நழுவிய போராட்டங்கள்..

நோயுற்ற கணவன் நோவு தீரவே
பாவிகளிடம் கற்பு மீட்புச் சமர்கள்...

எத்தனை கோடி இன்னல்கள் வைத்தாய்
எங்கள் இறைவா..!
எம்மை ஏனோ இங்கே படைத்தாய்..?