Sunday, July 24, 2011

நான் யார்..?

நான் யார்..?

ஏழை நெசவாளனுக்கு
ஏக புத்திரன் நான்..
வாழத்தெரியாத வம்புக்காரன்..


நேசிக்கத்தெரிந்த எனக்கு
பிறர் மனங்களை
வாசிக்கத்தெரியவில்லை..


யோசிக்கத்தெரியும் ஆயினும்
பிறர் அனுதாபங்களை 
யாசிக்க அறிகிலேன்...


தமிழின் மீது மோகங்கொண்டேன்...
உமிழும் சொற்களில் தமிழைக் கலந்தேன்..
துமியும் வார்த்தைச் சதுரங்கம் அறிகிலேன்..


கண்ணில் கண்டோர் எல்லாருமே
மண்ணில் நல்லவர் என்றே உணர்ந்தேன்
புண்ணில் தானே பூர்வீகம் புரியும்..?


என்றாவது ஒருநாள்
என்றன் உடல் மாயும்..
அன்றைய பொழுதேனும்
அறியப்படுவேனா ...?


முன்னில் இருந்த உறுதிகள் போயின..
என்னில் இருந்த சினங்களும் மாய்ந்தன..
என்னில் என்னைக் காணும் எண்ணம்
முன்னில் நின்று மூச்சடைக்கின்றது...


உலகின் மீது ஒரு சினம் இல்லை
கலகம் என்பது எவரிலும் இல்லை
நானே கலகம் நானே முடிவு..


எத்தனை அமைதி ...
கண்ணில் தெரிகிறது
அத்தனையும் இழந்தேன்
இத்தனை நாளாய்...


இனியொரு உலகில் புகுவேன்
கனியொன்றிருக்க காய்தனைக் களைவேன்..
சனியென எவரையும் வருத்தமாட்டேன்...


என் தாய் இருப்பின்
மோவாய்ப் பிடித்து
கலங்காதிரு என்றே
கனிமுத்தம் தந்திருப்பாள்..


கனிந்தொரு முத்தம் தந்திடும் உறவின்றி
தனியனானேன் தவித்திடலானேன்..


ஒரு நாள் என்வாழ்வின்
கடைசிப்பக்கங்கள்
எல்லோராலும் வாசிக்கப்படலாம்..
என்புதிர் புதினத்தின் விடை
யோசிக்கப்படலாம்...


முரட்டுத்தோலின்
முதிர்பலா என்றே
முறுவல் மிகுந்திட பேசிடப்படலாம்...


அன்னாள் வானில்
மென்மையாய் மேன்மையாய்
என் கனிந்திட்ட பார்வையும்
கசிந்திட்ட விழிகளும்
ஆசிக்காய் நீட்டிய கைகளும்
என்னை உலகுக்கு
உணர்த்திடச் செய்யலாம்...


பொறுத்திட்ட பூமிக்காய்
புன்னகை தந்து
விடைபெறும் போது
கடைவிழி நீர்த்துளி
மழையாய்ப் பொழியலாம்..!

2 comments:

 1. மனம் கனக்கச்செய்யும் வரிகள் கலை :(

  குழந்தையாய் ஒரு சிலவரிகள் கண்ணீரோடு தாய் மடி தேடுவதையும்....

  நட்பில் கோரமுகம் கண்ட அதிர்ச்சியில் மனம் பதைத்து எழுதிய ஒரு சில வரிகள்....

  உறவுகளில் மேன்மையான தாய்மை உறவை இங்கே முன்னிறுத்தி சொன்னது கூட மனம் பலகீனப்படும்போது எத்தனை வயதானாலும் தாய்மடி தான் தேடுமாமே....

  கவிதைகளில் மன உணர்வுகளை காணலாம் என்று எவரோ சொன்னது இங்கே உண்மையாய் காண்கிறேன் கலை.....

  வாசிக்க வாசிக்க என்னையும் அறியாமல் கண்கள் கலங்குவது ஏன் :(

  மூக்கு நுனி கோபம் எங்கே போனது?
  புருவ சுழிப்பில் உதட்டு சுழிப்பில் நகைச்சுவை சிரிப்பு எங்கே போனது?

  வரிகளெல்லாம் கண்ணீர் கோடாய் காய்ந்து கிடப்பது ஏன்?

  உலகில் நீ கண்ட மனிதரெல்லாம் உன்னை அன்பாய் அரவணைக்காது போயினரோ? உன் அன்பை அறியாது தான் போயினரோ? இந்த அன்புக்குழந்தையின் ஓயாத கண்ணீர் துளிகள் எல்லாம் மழையாய் பொழிந்து சொல்லுமோ? இவனை இவ்வுலகம் இப்படி சிதைத்துவிட்டதென?

  வரிகளின் தாக்கம் மனதை கனக்கச்செய்கிறதே கலை...

  சோகமும் கண்ணீரும் உனக்கு வேண்டாமேப்பா....

  சிரித்து சந்தோஷமாய் வலம் வரும்படி இறைவன் உனக்கு வரம் தர வேண்டுகிறேன் கலை....

  இதுவும் கடந்து போகும்....
  இன்னல்கள் எல்லாம் மறைந்து போகும்....
  இனிய தென்றலென வந்துனைச்சேரும்....
  இடையறாது இறைவனை பிரார்த்திக்கிறேன்.....

  ReplyDelete
 2. உன் வாழ்த்துக்கும் ஆசிக்கும் மிக மகிழ்ச்சி மஞ்சு..!

  ReplyDelete