Monday, December 24, 2012

கவிதை நூல் வெளியீட்டு விழா..

இன்று 23. 12. 2012 ஞாயிறு அன்று சென்னை மேற்குமாம்பலத்தில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் எனது ‘’ ஒரு கவிஞனின் காகிதம். ‘’ கவிதை நூல் வெளியீட்டு விழா நிழந்தேறியது. கலைமாமணி முனைவர் திரு கரு நாகராஜன் அவர்கள் தலைமையில் குணச்சித்திர நடிகை திருமதி வடிவுக்கரசி அவர்கள் நூலை வெளியிட்டு பொன்னாடை போர்த்தி என்னை வாழ்த்தினார்கள். அவ்விழாவின் புகைப்படங்கள் சில.


Tuesday, December 18, 2012

விழா அழைப்பிதழ் - கலைவேந்தன்

அன்பார்ந்த நண்பர்களே,

உங்கள் கலைவேந்தனின் கவிதைத் தொகுப்பு ‘’ ஒரு கவிஞனின் காகிதங்கள் ‘’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.


இதோ அழைப்பிதழ் உங்களுக்காக...

படம்

புத்தக அமைப்பின் படம் :

படம்


நன்றியுடன் என்றும் உங்கள்

கலைவேந்தன்

Saturday, December 1, 2012

என்ன வாழ்க்கை இது..?

என்ன வாழ்க்கை இது...? 

வாழ்நாள் முழுதும் நான்
வடுக்களால் வாழ்ந்திருந்தேன்..
அழுக்குஎன் முகத்திருக்க
ஆடியைத் துடைத்திருந்தேன்.. 

எண்ணற்ற எதிரிகள் 
என்னெதிரில் காத்திருக்க
புண்ணாக்கும் நட்புகளைப்
புறத்தினில் வளர்த்திருந்தேன்... 

விண்ணில் மிதப்பதாய் 
வீண்கனவு பலகண்டேன்...
புண்ணில் வளர்ந்திருந்த
புழுக்களைப் புறக்கணித்தேன்..

கண்விழித்தேன் காரிருளில்
கசக்கியபின் காண்கின்றேன்..
முன்னைவிட முதிர்வுடன்
முண்டிநிற்கும் முதுமைதனை...


’’ ஊதித் தள்ளியபின் 
அணைந்துவிடும் தீவர்த்தி
உலகை எரித்திடுமோ
உன்னுறுதி அழித்திடுமோ..?

இன்றுந்தன் கண்ணெதிரில் 
நன்று நடம் ஆடிநிற்கும்
நச்சுக் கொடிகளையும் 
நன்றாய் அறுத்தெறிவாய்..’’


நன்றாய் முன்வந்து 
நான் வணங்கும் தெய்வங்கள்
நன்றே சொன்னதம்மா..
நம்பிக்கை பிறந்ததம்மா..

Thursday, November 1, 2012

மோன வெளிகள்...

மோனவெளிகள்..

ஒரு பொட்டல் வெளியில் 
யாருமில்லா மோனத்தில் 
ஓர் அமைதி 
கருவுற்று விரிவுற்றுக்
காத்திருக்கிறது..

ஆங்கே ஓர் 
ஆசையில்லை.. 
வில்லங்கமான
விசனமில்லை...

கண்ணிமைகள் அசைத்தல் கூட
கடூரமான சத்தங்களாய் மாறிப்போய்
என் காலடியில் 
விரிந்து பரவும் ஓர்
கவினுலகம் இது..

ஈங்கே 
வாட்டிவதைக்கும் 
பசியில்லை எனவே பட்டினியில்லை..
துவட்டித் துவளவைக்கும் 
தாகங்கள் இல்லை எனவே
தட்டிப்பறித்தல் 
இல்லவே இல்லை...

அமைதிப் பூங்காவாய் என் மனம்..
மவுனமே இனிய சங்கீதமாய் 
மனதைக் கொள்ளை கொள்ளும்
உருவிலா விரல்கள் என் மனதை
வீணையாய் மீட்டி நிற்கும்..

ஓர் மென்மையான 
ஆழ்நிலை உறக்கத்தை
மெல்லப்பரவ விட்டு
உயிரை இலேசாக்கி 
எங்கோ பறக்க வைக்கும்..!!


கீழ்க்கண்ட ஆங்கிலக்கவிதையின் மொழிபெயர்ப்பு இது..!


Against Nature....

On a desert
Without a single creature
With no longings
With no desire
With a heart
That is still !
All is calm
No angry movements
Only the even flutter
Of the eyelids
Covering the vastness 
Of the firmament
And the stretch of the land 
below my feet...
No quench or apetite
For , A palatable peace
fills my mind
Not a single sound
Yet a silent music
Gently touches my heart
The formless fingers 
Soothing and leading it 
On and on to a 
devouring sleep...

Monday, October 22, 2012

இன்று நான் அழுகின்றேன்..


அன்று எனது முலைகள் 
வலிக்க வலிக்கத்தானே
உனது பசியைப் போக்கினேன்..?

உனது வாசம் என்னைத்திளைக்க
அந்த வாசத்தில் என்னைத் தொலைக்க
எனது நேசம் உன்னை வளைக்க
என்னைத் தொலைத்துத் தானே 
உன்னை நான் வளர்த்தேன்..?

கணவன் இழந்தவளுக்கு 
காமுகர்கள் இடும் பட்டம்..?
காசுகேட்கா வேசியவள்..

அவர்களின் காமக்கணைகள் 
அத்தனையும் முறித்தேன்..

உனது சோகமுகங்கள் 
கண்டால் மட்டும் வெறித்தேன்..

என்னை அடகுவைத்து உன்னை மீட்டேன்..
என்னை விறகாக்கி உன் குளிர் போக்கினேன்..

அன்று நீ ஆய் போனாய்.. 
அருவெருப்பின்றிக் கழுவினேன்..

இன்று எனக்கு இல்லாய்ப் போனாய்
இதயமே வற்றிப்போனேன்..

எங்கிருந்தாலும் மகனே நீ..
என்னாளும் நன்கு வாழ்வாய்..
என் வயிறு எரியவில்லை.. 
உன் குலம் தழைத்து ஓங்கும்..

உன் வாரிசு உனக்கு நாளை
என் நிலைதந்தால் மகனே
நீபடும் வேதனை உணர்ந்தேன்.. 
இன்று நான் அதற்காய் அழுகிறேன்..!

Friday, September 28, 2012

கலையாமல் கலைக்கும் கலை..


கலையாமல்கலைக்கும்கலை. ஆயிரம் பேருக்கு பிரியாணிப்பொட்டலமும்

ஆளுக்கு முன்னூறு ரூபாயும்..

ஐநூறு அடியாட்களும் 

கொண்ட மாநாடுகள்..

மேடைகளில் வீர வசனங்கள்.

கோஷமிட சிறப்பான முன்னூறுபேர்

கூட்டம் சேர்க்க முன்னாள் நடிகைகள்

தலைமட்டும் பெரிதாக வால் போஸ்டர்கள்

கடை வசூல் செய்ய அடியாட்கள்

பதினெட்டு அடி உயர கட் அவுட்டுகள்

வழியெங்கும் கொடிக்கம்பங்கள்

வாழ்க ஒழிக ( தான் வாழ்க எதிரி ஒழிக) கோஷங்கள்

வழியெங்கும் தண்ணீர்ப்பந்தல் 

அடிக்கடி தீக்குளிப்பு அறிவிப்புகள்

தேர்தல் நேரத்தில் தாராளமாய்த்’தண்ணீர்’..

முந்தின இரவு வெற்றிலை பாக்குடன் 

ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்

கள்ள ஓட்டு போட கையாட்கள்

ஓட்டுப்பெட்டிகளைக் கைப்பற்றும் கிண்ணரர்கள்

இவை எதுவும் இல்லாததால்

மீண்டும் பிறந்துவந்த 

மஹாத்மா காந்தி

தேர்தலில் தோற்றுப்போனார்..!

தமிழ்மன்றத்தின் 10 வதுஆண்டுவிழாவில் கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்ற எனது கவிதை.

Friday, September 21, 2012

நீ அழகுதான் கண்ணே..

Image


நீ அழகுதான் கண்ணே!


சித்திரத்தில் கண்ட உன்னை
சிதறாமல் பார்த்தபோது
தத்தித்தாவி தகித்துப்போய்
தவிக்கின்ற இதயத்தை
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
பலவிதமாய் முயற்சித்தேன்!
ஒத்திருக்க வில்லையடி
உன் முகமும் சித்திரமும்!


முதன் முதலாய் கண்டுவிட்டு
முத்தமிட ஆசைப்பட்டேன்...
வதனம் கண்டு தயங்காமல்
வாரிக்கொள்ள ஆசைப்பட்டேன்...
தனியான இடம் பாத்து 
தழுவிகொள்ள் துடித்திருந்தேன்....
இனியாரும் நமைப்பிரிக்க 
இயலாதென யோசித்தேன்!


வாகனத்தில் நாம் வந்தோம்
வானத்தில் நான் மிதந்தேன்
பாகம் ஒரு உமை கொண்ட
பரமசிவன் போல் களித்தேன்...
யாரும் பார்க்காமல் 
இன்பமாய் தழுவிகொண்டேன்
சீரும் சிறப்புமாய்
சிந்தாமல் வாழவைப்பேன்!


சக ஊர்தி பார்க்குமென்று 
சங்கடங்கள் மிகக் கொண்டோம்
சகபயணி இலையெனினும் 
சாரதியின் கண் மறைத்தோம்
முகம்பார்த்து அகம்வேர்த்தோம்
முடிந்தவரை மூச்சுவிட்டோம்!
நகம் கடித்து தரைசுரண்டி நீ
நகைமுகத்தால் நளினம் செய்தாய்!


அகமகிழ்ந்து அணைத்துன்னை 
இட்டதொரு கனிமுத்தம்
முகமலர்ந்து ஏற்றனைநீ 
முன்வந்து முறுவலித்தாய்..
சிகைகோதி உன்கழுத்தை 
சீண்டிவிளை யாடுகையில் 
முகைவிட்ட முன்கொடிபோல்
மடிதன்னில் விழுந்தனை நீ..


சிரந்தாழ்த்தி நாம்செய்த 
சிறுக்குறும்புதனை எண்ணி
வரந்தந்த தேவனுக்கு 
வாழ்த்துகளைச் சொரிந்துநின்றோம்..
புரவிதனில் போகுமொரு 
புதுவீரன் நானானேன்..
இரதமொன்றில் வீற்றிருக்கும்
இலக்குமியாய் நீயானாய்..


எல்லையின்றி நீண்டிடாதோ
எம்பயணம் என்றேங்கி 
நல்லாள் நீ என்மார்பில் 
நாணியே நீசுகித்தாய் 
வில்லை வளைத்தொரு 
விந்தையைச் செய்தான்போல்
முல்லைக் கொடியாளுன்
முகம் நோக்கி கர்வங்கொண்டேன்..!

Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 91 - 100

91.

யாரென்று கூறினால் காதலுக்கு ஆட்டனத்தி 
யாருமாதி மந்தியும் காண்.


92.

நயந்து தெளிதலே நட்புக் கணியாம் 
பயனில் பதருடன் நட்பு.


93.

தாழ்ந்துசெல் எந்நாளும் தீதொன்றும் வாராது
வாழ்ந்திடும் ஆறென் றறி.


94.

கூறுஞ்சொல் குற்றமின்றி நேர்வழியில் சேர்ந்திடில்
வேறெதுவும் தீங்கில்லை காண்.


95.

வீழ்ந்துப்பின் ஏற்றம் விடிவுபெற்றோன் வாழ்வதனில்
ஊழ்வதுவும் தோற்கும் சமர்.


96.

காதலே மேலென்று காய்ந்தே கிடந்திடுவோர்
மாய்தலே காண்பர் அறி.


97.

ஓதுகின்ற நான்மறை ஓர்நாளும் காவாதே
தீதுடன் நின்ற மனம்.


98.

உள்ளத்துப் போர்மூளும் ஊனுருகும் ஆங்கொரு
கள்ளமனம் கொண்டோர் நிலை.


99.

ஒருமொழிச் சொல்லில் உளறிக் குளறின் 
வருமந்தக் காதல் அறி.100.

கண்டுயிர்த்தேன் காரிகையின் கண்ணிரண்டை அல்லாது
பண்டே மடிந்தேன் அறி.
 

எனது குறட்பாக்கள்..! 81 -90

81.

வியப்பினைத் தந்து விவேகமும் மாய்த்துப்
பயனறச் செய்யுமாம் சூது.


82.

பேச்சினில் பேதையாய் வேடமிட்டே நாடோறும்
மூச்சினைக் கொல்பவள் பாழ்.


83.

பணமென்றால் பத்தும் மறந்திடு வோரில்
குணமொன் றமைவது ஏது.


84.

தவிர்க்குஞ் செயல்களை நீக்காது ஆற்றின்
தவிக்கும் நிலைவரும் காண்.


85.

சாவும் பிணியுடன் சார்ந்துவரும் மூதுமையும்
மேவிய மானிடரில் இல்.


86.

சொற்சுவை யாங்கே சுயமாய் நிறைந்ததாய்
பொற்குவையாய் சொக்கும் கவி.


87.

இயக்குவா னிச்சையில் இச்சகம் என்றும்
இயக்குனன் ஈசன் அறி.


88.

ஒருமொழிச் சொல்லில் உளறிக் குளறின் 
வருமந்தக் காதல் அறி.


89.

நாளொன்றில் எண்ணிடா நாழிகை யேதுமில்லை
வாளாய்ப் பிளக்கும்முன் சொல்.


90.

கண்ணிரண்டு பெற்றும் பயனென்கொல் மாலவன்
கண்ணன்தாள் காணா தவன்.

எனது குறட்பாக்கள்..! 71 - 80

71.

நானென்னும் மாயையினை நீங்கியே தாழ்ந்திடில்
மானுடன் காண்ப துயர்வு.


72.

விரைந்துதவா நட்பு வினயமிலாக் காதல்
உரைத்திடின் பூஉலகில் பாழ்.


73.

அன்பெனும் ஆயுதம் ஆற்றாத தொன்றுண்டோ
மன்னும் புகழீட் டுமது.


74.

சேருவோர் தன்குணம் சேறுடன் சேர்ந்திட்ட
நீரன்ன என்றே உணர்.


75.

செப்புமொழி ஆயிரம் செவ்வியன ஆயினும்
ஒப்பில் தமிழதுவே காண்.


76.

கூறிய கூரிய சொற்கள் இருபுறம்
கூரிய வாளுக்கு நேர்.


77.

செப்பிடு வித்தையினில் செல்லுமோர் மாந்தனுக்கு
செப்பிடு நல்லுரை நீ.


78.

பாருட னொத்து பாவனை காவாக்கால்
யாருமே மதியார் போ.


79.

பேச்சினில் பேதையாய் வேடமிட்டே நாடோறும்
மூச்சினைக் கொல்பவள் பெண்.


80.

இங்குளன் இல்லையில்லை அங்குளன் என்றின்றி
நெஞ்சுளனை நாளும் நினை.