Friday, April 27, 2012

ஒரு புல்லாங்குழல் விறகானது..!


ஒரு புல்லாங்குழல் விறகானது..!

காமத்தில் உழன்று
ராகத்தை மறந்து
தனது இலக்கினை இழந்ததால்
தனது வனப்பினை இழந்தது
ஒரு புல்லாங்குழல்..!

எடுத்தவன் கையிலெல்லாம்
சுகஸ்வரம் வாசித்த அது
விரும்பியே சென்று
அவளதன் கையில் புகல்ந்து
அவலத்தை அடைந்தது..!

கண்ணனின் கையில் இருக்கவேண்டிய
கட்டுப்பாடான அந்த புல்லாங்குழல்
கேடுகெட்டவளின் கையில்
முதுகு சொரியப் பயன்பட்டது..
தன் பொலிவிழந்த அது
இன்று காமப்பசிக்கு
இரையானது..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

சில புல்லாங்குழல்கள் இன்னும்
சிறப்பினை இழக்கத் தயாராய் வரிசையில்..
சிதிலமான புல்லாங்குழலின்
சோக கீதம் அவற்றை எட்டவே இல்லை..

சீரழிந்த அந்த புல்லாங்குழல்
இப்போது தனக்காய் இல்லை
இலக்காய் ஆன மற்றவைகளுக்காய்
சோக ஓலம் எழுப்பியது..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புல்லாங்குழல்கள்
புளுகத்தெரியாதவை..
சும்மாவாய் வேடமிட்டு
அழுகை கற்காதவை..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


அழுக்குத்துணியில் அவலமாய் இருந்த
அந்த மனிதனின் கையில்
சுகமாய் சுவாசிக்கப்பட்ட புல்லாங்குழல்
சின்ன குழந்தைகளின் கைக்கு வந்ததும்
சூம்பிப்போகின்றன..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

சில புல்லாங்குழல்கள்
செதுக்கத் தெரியப்படாமல்
விறகாய் மாறின..!

சில புல்லாங்குழல்கள்
மூங்கில் காட்டிலேயே
முறிந்து போகின்றன..

சில புல்லாங்குழல்கள்
காமக் கறையான்களால்
கற்பிழக்கின்றன..

புல்லாங்குழலாய்ப் பிறப்பது
பாவம் தான்..

தவளையும் குயிலும் - 10 ( நிறைவுப் பகுதி )


நிறைவுப்பகுதி


நாளும் தேய்ந்தே நலிந்தது குயிலும்
யாரும் இல்லை காக்கவும் உயிரை
குரல்வளை நெரிந்தது குதூகலம் இழந்தது..
இதயம் வலித்தது முகமும் வெளிர்ந்தது..
களையும் இழந்தது கலையும் இழந்தது
குரலும் குழறியே கூக்குரலானது..

வனவாசகர்கள் வழிமறந்து போயினர்..
பணவரவும் தவளைக்கு குறைந்தது..
நல்லோர் வாழ்ந்தால் நச்சிடும் உறவினர்
இல்லாராகில் எச்சிலாய் மதிப்பரே..
இன்னிசைக் குயிலின் இம்சையும் கூடி
முன்னிசை யானது ஓர் பெரும் கனவாய்..
ஆயினும் பாராட்டும் கைத்தட்டலுமே
ஆகின குயிலின் ஏக்கங்களாகவே..!

குயிலின் நிலையதைக் கண்டும் தவளையோ
இல்லாதவளை இம்சிக்கும் காமுகனாய்
பொல்லாதவை சொல்லி புறமதில் தாக்கியது..
‘’ முட்டாள் பறவையே முடிந்தது உன்கதை
உடல்வனப்பிருந்தால் உடனிருப்பர் காமுகர்
வனப்பிழந்தவளோ வறுமையில் ஏகுவள்
சினமிகும் முன் சீர்செய் உன்குரல்.
பிணமாகிடுவாய் பின்விளைவிதுதான்..! ‘’

நான்கு காமுகர் கையகப்பட்ட
நனி இளம்பெண்ணாய்ச் சிலிர்த்தனள் குயிலாள்
இழப்பினை எண்ணி சுவாசம் மறந்தது குயிலும்
எங்கோ நரம்புகள் வெடித்தன..ஐயகோ
செங்கோலோச்சிய குயில்
துறந்தது இன்னுயிர்..
துடித்துத் துடித்து அடங்கியது உயிரும்..!

சற்றும் இரங்கா தவளையும்
குற்றம் தன்னது இல்லையென
சுற்றிலுமிருந்த கூட்டத்தில் உரைத்தது..
‘’ என்ன தான் செய்வது நானும் சொல்க..
முட்டாள் குயிலது முடிந்தவரை முயன்றேன்
அதீத நடுக்கம்.. அதீத இயலாமை
அதிதிகள் மனதை மயக்கவல்லாமல்
அநியாயமாக இறந்தது..
சுயமாகச் சிந்திக்க இயலாதகுயிலது
உயரம் என்னது என்னை எட்டுமோ..?’’

ஆங்காரம் மிகுந்த அத்தவளையும்
ஆங்கே அரசு நடாத்தியதே..
அவ்வனம் சென்றீரென்றால்
அம்மண்டூகம் இன்னும் அங்கே
இசையாய்ப்பொழிவதைக் கேட்பீர் நன்றே..
வசையது பற்றிக் கவலையும் இல்லை
வாழ்க்கையைப்பற்றிய நியதியும் இல்லை..
கூர்ந்து பார்ப்பீர் அக்கம்பக்கம்..
ஓராயிரம் தவளைகள் உங்கள் பக்கம்..!


தவளையும் குயிலும் - 9


பகுதி 9













ஓய்விலா இசையால் குரலும்
பேய்மழைப் பொழிவால் உடலும்
தேய்ந்து போய் வாடியது பாவம்..
ஓய்வும் உறக்கமும்
கெஞ்சின போதும்
தவளையின் தூண்டல்
அங்கே கூடிய கூட்டத்தின் வேண்டல்
மேலும் மேலும் குயிலை
பாடிட வைத்தது..ஆம் .. வாடிட வைத்தது..

வனத்தின் பன்முனை விலங்குகள் பலவும்
கனம் கனமாய் உணர்ந்தன இசையை..
நாட்பட நாட்பட‌
கனமழையும் கான மழையும்
குறையவும் இல்லை.
விலங்குகள் பலவரவால்
தவளையின் பணவரவும்
பல்கிப்பெருகின..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறைகள்
சொல்லிச்சொல்லியே குதறியது தவளை..
எவ்விதத்திலும் மறுப்புரை கூறா
செவ்விய குயிலும் தேய்ந்தது நாட்பட..
ஒவ்வா நிலையில் தேய்ந்தது குரலும்..
தவளையும் சளைக்காமல் கூறியது குறையும்.

'' இன்னும் பயிற்சிகள் தேவை உனக்கு..
என்னுடைய குரலைக் கவனித்தாயா..?
எத்தனை வலிமை எத்தனை இனிமை..?
அத்தனை திறமை உனக்கும் வேண்டும்..
கடந்திட்ட இரவில் கனத்தது உன்குரல்
இடைப்பட்ட இசையில் பிசிறடித்தது காண்..
குரல் ஏன் நடுக்கம்..? இசை ஏன் ஒடுக்கம்..?
இன்னும் பயிற்சிகள் தேவை உனக்கு..
உனக்கான வாசகர் கூட்டம் பெரிது
ஆயினும் பயிற்சிகள் குறைவே உனக்கு..
இன்னும் திறமைகள் வேண்டும் உனக்கு..
எனது பயிற்சிக்கட்டணம் இன்னும்
உனது கணக்கில் செலவில் இருக்கு..''

இரக்கமற்ற தவளை குயிலின் குரல்வளை
நெரித்தது மேலும் .. மேலும் ... மேலும்..!

தவளையும் குயிலும் - 8


பகுதி 8




















அவ்வனத்தில் அடுத்தநாள்
தொடர்மழை தொடங்கியது..
வானப்படுகையின் வரப்பு கிழிந்ததோ
கடலில் கொண்ட சூழ் கருவுடைத்ததோ
வருணன் மனைவியுடன் ஊடல் கொண்டானோ
தருணமின்றித் தாக்கியது பேய்மழை..

மழையினால் மட்டற்ற மகிழ்ச்சி
மண்டூகங்களுக்கு மாளாது அல்லவா..?
கொண்டாட்டக்குதியலில்
குயிலை அருகிழுத்து
பயிற்சியெனும் பேரில்
உயிர்ச்சி குலைத்தது..

அக்கடும் மழையில் தன்னால்
இசைக்க வியலா நிலையைக் கூறியும்
இரக்கமே இல்லாத தவளையோ
அரக்கனாய் நின்று ஆட்டிப்படைத்தது..
பாவம் குயிலுக்கோ
குரலும் உடைந்தது..!

குளிரில் நடுங்கிய உடலைப் பொறுப்பதா?
பயிற்சியின் பேரில் நடக்கும்
கொடுமையை சகிப்பதா..?
அப்பாவிக்குயில் பரிதவித்துக் கூவியது..
ஆறுமணி நேர அடைமழையுடன்
ஆறாத ரணத்துடன் இசைமழையும்
இடைவிடாது தொடர்ந்தது அங்கே..!

தவளையும் குயிலும் - 7


பகுதி 7














பிறரைக்கெடுக்குமுன் வஞ்சகமாய் நடித்தல்
பிறப்பே அவருக்காய் என்பதாகச்சொல்லுதல்
உறவைக் கொடுத்து உயிரை எடுத்தல்
துறவறம் பூண்டாற்போலவே நடத்தல்
இவையாவும் வஞ்சகர்க் குணங்களாம்..

தயவு செய்தாற்போல்
இயல்பாய் நடித்த அத்தவளையோ
பயிற்சிக்கு கட்டணம் கட்டாயம் உண்டு..
பிறருக்கெனில் ஆயிரக்கணக்கில்
உறவானாய் உனக்கோ சற்றே குறைவு
கறாராய்ப்பேசி கச்சிதமாய் நடித்தது..!

ஏமாறப்பிறந்த எத்தனையோ பிறவிகள்
தேடினில் வையகம் முழுவதும் உண்டே..
குயிலின் இயல்பு தவளையின் நடிப்பில்
உயிரை வதைக்கப்போவது அறியாமல்
உடனே ஏற்றது தவளையின் ஆலோசனை..

ஊக்குவிக்க ஒருவர் கிடைத்தபின்
உற்சாகக் கவிமழை பொழிவதைப்போல்
பெற்றோரின் அனுமதி கிடைத்த காதலர்போல்
உற்றதோர் நம்பிக்கை ஊற்றுப்பெருக்கெடுக்க‌
கற்றதனைத்தும் காட்டியது குயிலும்..

தொட்டனைத்தூறும் தூயதோர் கேணிபோல்
கட்டுக்கோப்புடன் கானம் பொழிந்தது..
தொலைதூர விலங்குகள் தூரம் தொலைத்தன‌
அலையலையாய் ஓடிவந்து ஆரவாரம் செய்தன..
கலையழகு மிக்கதோர் இசையமுது புசித்தன..

வந்த விலங்கினங்களிடம் வஞ்சகத்தவளையும்
சந்தம் கேட்டிட சந்தா கேட்டது..
சொந்தம் என் மரம் சொந்தம் என்குயில்
வந்தவர்க்கெல்லாம் கானவிருந்துக்காய்
தந்தே தீருக தனமழைபொழிக என்றே
தந்திர தவளையும் சுரண்டியது செல்வமதை..!

தவளையும் குயிலும் - 6


பகுதி 6

















குயிலின் குரலால் குரோதம் கொண்ட
கொடூரத் தவளையின் குணம் அறியாமல்
எதார்த்தமாய் மனதில் இருப்பதைச் சொன்னது.
தன் படைப்பின் பெருமையை..அக்குயில்..!

இருதயமின்றி இரண்டகத்தவளையோ
குரூரத்தை அன்பில் தடவி
அக்கறைச் சால்வையை
அழகாய்ப் போர்த்தியது..!

'' பெருமைப்பட இதிலொன்றும்
பெரிதாய் இல்லை...
இன்னும் சாதகம் நீ பெற வேண்டும்..
மின்னும் தாரகை ஆகிடலாம் நீ..
என்னைப்போல ஏற்ற பயிற்சி
யார் தருவாரிவ் வனமதில் உனக்கு..?

என்னுடனிருந்தால் ஏற்றம் பெறுவாய்..
என்னிலும் யாரிடம் காண்பாய் பெருவாய்..?
தற்சமயம் நீ கற்றுக்குட்டியே..
என்வசம் நீவா வெற்றிகிட்டுமே.. ''

தவளையின் குரோதம் உணரா குயிலும்
அவலமாய் நம்பியே சரணடைந்ததுவே..

'' அன்பின் நண்ப..அருமை அருமை..
அறிந்தே மகிழ்ந்தேன் உனது பெருமை..
நீதான் இசையுலகின் மொசார்ட்* உணர்ந்தேன்..
நீதான் கானக்குரவன் அறிந்தேன்..
தான்சேன் உன்னில் அடக்கம் என்பேன்..
தருவாயுன் குருவுபதேசம்..
ஐயா நீவிர் அனைத்தும் கற்றவர்..
ஐயமின்றிப் பகிர்வேன் நாதத்தின் உரு நீ..
எனக்கும் தருவாய் அவ்வருள் முழுதும்..
என்னிசைநிலத்தை முழுதும் உழுதும்
கானப்பயிரை பயிர்த்திடு நீயும்..
நானுன்னடிமை இனி எந்நாளும்..!! ''

அந்தக்குயில் அத்தவளையின்
விரித்தவலையில் மாட்டியது ஐயகோ..!!

தவளையும் குயிலும் - 5


பகுதி 5


















குயிலின் குதூகலம் வானைத்தொட்டது.
தன்படைப்பின் பெருமை கேட்பின்
வயமிழக்காதோர் எவருளர்..?
படைப்பின் பெருமை துய்ப்போர் புகழில்
அடையும் சிகரம் உலக இயல்பாம்..

’’என் இசையை விரும்பினாயா..?
என் குரலில் மயங்கினாயா..? ‘’
மீண்டும் மீண்டும் கேள்வியால்
வியந்தது குரலரசி..!

’’ ம்ம்ம்..பரவாயில்லை..
இசைமிக நீளம் என்பது தொல்லை.
குரலினிமை இனிதெனினும்
குரல்வளம் இன்னும் மெருகிடப்படலும்
இசைக்குறிப்பு இன்னும் மேம்படலும்
உன் குரலில் நான் கண்ட குறைகள்..’’

ஒரு சங்கீத வல்லுனரின் சாகசம்போலவும்
கல்விகற்கும் மாணவனுக்கு அறிவுரை போலவும்
காதலனுக்கு காதலியின்
கட்டளைகள் போலவும்..
அத்தவளை அழகாய் விமரிசனம் வைத்தது..

ஆணவம் அறியாக்குயிலும் அதனின்
ஏளனம் புரியாநிலையில் உரைத்தது:
‘’ அப்படியாயின் இன்னும் என்னை
செப்பனிட்டுக் கொள்வேன். நன்றியுனக்கு..
இப்படி புகழ்ந்தது உந்தன் பெருமை.
சுப்புடுகூட தோற்றார் பெருமை..’’
குயிலின் குரலில் உண்மை ஒலித்தது.
தவளையின் இறுமாப்பு ஏனோ ஒளிந்தது.
மேலும் குயிலின் வாசகம் அதனை
தாழா மனிதனின் சீரன்ன மிளிர்த்தது..

’’ எனது குரலொன்றும் தெய்வீகமல்லதான்
காக்கைக்குஞ்சினைப்போல் பொன்குஞ்சு மட்டுமே..
ஆக்கம் நிறைந்த உன் ஆதங்கம்
தாக்கம் கொடுத்தது இன்னும் மிளிரவே..
தாயாய் வந்தாய் தயவும் புரிந்தாய்
சேயாய் உந்தன் அறிவுரை கேட்பேன்..
பண்படுத்து என்னை
பயன்படு எனக்கு.. நீயே என் குரு..! ‘’

குயிலின் இரக்கம் தவளைக்கு ஊட்டம்..
கொண்டது ஆட்டம் கொடுஞ்செயல் எண்ணமுடன்
கொடுமையைத் தொடர்ந்தது..!!

தவளையும் குயிலும் - 4


பகுதி 4


அடுத்த நாளிரவு..
அனைவரின் உற்சாகம் மீண்டும் பொங்கவே
குயிலும் தன் தலையசைத்து
சந்தோஷத்தில் வாலசைத்து
ஒருகண் மூடி இறகுகள் சிலிர்த்து
தொன்டையைக் கனைத்து
தொடங்கியது இசையை..

அப்போதுதான்
தன் கரகரக்குரலால் குயிலின்
இசைத்தவத்தைக் கலைத்தது தவளை..

தனது குறுகிய குகையில் உடலைமறைத்து
தலைமட்டும் நீட்டியது தவளை
வஞ்சக மனிதன்
நெஞ்சகம் மறைத்து
கொஞ்சிய குரலில்
குழைவது போல
சிண்டுகள் முடிய முனைவது போல‌
மண்டூகம் தனது
மவுனம் கலைத்தது..
மந்தமாய்க் கனைத்தது..!

சாகசம் அறியா மழலைக்குரலில்
குயிலும் வியந்து கேட்டது..
'' ஏதும் சொல்ல எத்தனமோ..?
பேதம் எதுவும் கண்டீரோ குரலில்..?
சாதகக்குறைவோ..? சங்கீதப்பிழையோ..?
ஏதுவாகினும் மனந்திறப்பாய்..''
என்றது குயிலும்
வலையில் வீழ்ந்திட
வசமாய் நின்றது..!

வாக்குக்கேட்கும் வஞ்சக அரசியல்வாதி
வாஞ்சையாய் மொழிவதுபோல்தான்
பலியாக்கும் ஆட்டின்
நலம்விசாரிக்கும் தொனிதான்..
நகை கேட்கும் நங்கைபோல்தான்..
சிகை கலைத்துக் கூறியது தவளை..
'' இம்மரத்தின் சொந்தக்காரன்..
இவ்வனத்தின் நல்லிணக்க தலைவன்
நாளும் மகிழ்விக்கும் நல்லவன் நான் தான்..
செவ்வையாய் இசைத்து
இவ்வனம் காக்கிறேன்..
நேற்றுமுதல் உன் சத்தமும் கேட்கிறேன்..
என் இன்குரல்தான் இங்கே
பலருக்கு பூபாளம்..
என் இசைக்கரம்தான் இங்கே
சிலருக்கு சிகைகோதும்..
என்னால் இங்கே
அனைவரும் மலர்கின்றனர்..
நேற்றுமுதல் ஏனோ
அனைவரும் அலறுகின்றனர்..''
என்ற
தவளையின் சூசக வாசகங்கள்
கவலையின் குழியில்
அழுத்தின குயிலை..!!


தவளையும் குயிலும் - 3


பகுதி ‍ 3






















அந்த ஆலமரமே
ஓர் இசைக்கோயிலானது.
அந்தக் குயில் அங்கே தாலாட்டப்பட்டது..
நாராச ஒலிகளால் நரகங்கண்டவர்கள்
நவரச இசைவிருந்தில்
பரவசம் பெற்றனர்..

தாயின்மடியில் தனைமறந்து உறங்கின‌
நேற்றுவரை அடம்பிடித்த
குட்டிக்குரங்குகள்..
ஒரு
புனிதத்தல வருகையாய்
ஒவ்வொரு விலங்கும்
அந்த ஆலமரத்தில்கூடி
தம்மை புனர்வசந்தத்தில்
புதுப்பித்துக் கொண்டன..
குயிலின் இசை நிறைவடைந்த
ஒவ்வொருமுறையும்
கைத்தட்டுகளால் அந்த
காடே அதிர்ந்தது..

இதுதான் கீதமென்று
கீதைமேல் கைவைக்காமல்
கிச்சுக்கிச்சின கிளிகள்..

தொலைதூரத்திலிருந்து
அலையலையாய் ஊர்ந்து
ஆலமரத்தின்கீழ் கூடிய‌வாத்துகள்
வாத் வாத்தெனும் வாழ்த்தொலிகளால்
குயிலை நனைத்தன..

ஏகாந்த இசையில் எப்போதுமிருந்து
ஏங்கிய குயிலுக்கோ
ஏகோபித்த வாழ்த்துகள்
புதுமையாய் தோன்றின..

மீண்டும் மீண்டும் தன் குரல்வீணையை
மீட்டியது அக்குயில்..
விடிந்ததும் தெரியவில்லை.
விளக்குவைத்ததும் புரியவில்லை..
புரிந்தது என்னமோ அங்கே
குயிலின் இசை நர்த்தனம் மட்டுமே..!

தவளையும் குயிலும் - 2

பகுதி ‍ 2















அந்த வனமே அதிரடியாகவும்
கற்களால் எறிந்தும் பண்பட்ட
சொற்களால் எறிந்தும்
விற்களைக்கொண்டே வளைத்த நாணிலும்
மிரட்டி அடிபணிய எடுக்கப்பட்ட முயற்சிகள்
ஊழல்கட்சிகளுக்கே
மீண்டும்மீண்டும் வாக்களிக்கும்
கோழைவாக்காளரைப்போல்
சற்றும் மனம் தளரா
தொய்விலாக் குரலில்
தொடர்ந்தது தவளை..

முற்களாய் வதைக்கும் நக்கலும்
கிளைக்குழந்தைக் கொம்புகளைக் கொண்டே
உதைக்கும் முயற்சியும்
வனவரசனுக்கான குமுறலும் கோபமும்
விட்டெறிந்த செங்கற்களும்
விரயமாய்ப்போனதில்
விட்டுத்தொலைத்தன விலங்குகளனைத்தும்..!

எல்லா பொல்லாக்கணங்களுக்கும்
என்றேனும் விடியலுண்டே..
செல்லாக் காசுகளும் சிலநேரம்
சேவைகள் பெறுமே..

நந்தவனமாய அந்த நொந்தவனத்திற்கு
வந்தனள் கோகிலம் வரமாய் அனைவர்க்கும்..
தன் துல்லிய குரலால் பாடிய கோகிலம்
சொல்லி சொல்லி அடித்தது
தவளையின் ஆணவத்தை..
ஆலமரத்தின் பொந்துக்குள் தப்பித்து
ஓலமிட்டே பிழைத்த அத்தவளைக்கு
ஓர் ஆப்பாய் வந்ததாம் கோகிலம்..
ஆம் விடியலுக்காய் வியர்த்த விலங்குகளுக்கு
ஓர் வாய்ப்பாய் வந்ததாம் ஆங்கே..

வறண்ட பாலையில் வடிந்ததொரு வேனல் மேகம்
மருண்ட வனமக்களுக்கு
வரமாய் கோகிலம் தன்
ஸ்வரத்தை கொடுத்தே
ஸ்திரமும் கண்டது..!!

தவளையும் குயிலும்.. -1

தவளையும் குயிலும்..!!












அந்தவனத்துக்கே ஒரு
நந்தவனப்பெருமையுண்டு..
குரங்குகளும் கோகிலங்களும்
கூடிக்களித்திருந்த வனம்..
சொந்தங்கள் எல்லாம் கூடிப்பரிமளித்து
வந்தவரை எல்லாம் வாழவைக்கும் வனம்..

அப்படியொருவனத்தில்
அடர்ந்ததோர் ஆலமரத்தில்
ஆலையில்லாஊருக்கு இலுப்பையாயும்
சேலையில்லா மகளுக்கு தாவணியாயும்
இன்னிசை விருந்தளிக்க
பண்ணுடன் இசைத்தது
ஒரு கரகரப்பிரியைத் தவளை..!
விடியலில் தொடங்கி இரவின்
முடியல் வரை அதன் இசைப்
படையல் தொடர்ந்தது..

ஆனந்த ராகம் இசைப்பதாய் எண்ணி
அடிக்குரலில் துடிக்கவைத்தது..
மற்ற உயிரினங்களின் உயிர்கள்
ஊசலாடின என்றாலும்
அடங்கா மருமகளை அடக்கவியலா
அத்தையவளைப்போலவே
அத்தவளையை அடக்க
எத்தகு வழியுமின்றி
மொத்தமாய் விழித்தன..

அமைதியானவரின் அடக்கம் கண்டு
ஆட்டம் போடும்
குடிகாரனைப்போலவே
உற்சாகம் பெற்றே
வனங்களின் இனங்களை
வதைத்தது அத்தவளை..!!

Tuesday, April 10, 2012

பெண்பாவைக்காய் ஒரு வெண்பா மாலை..

1.

முன்பார்வை யொன்றினில் நோயுற்றேன் பின்னருன்
வன்பார்வை யொன்றினில் வாடினேன் - உன்பார்வை
செய்திட்ட மாயங்கள் கொஞ்சமில்லை என்னுயிரே
மெய்தொட்டுச் சென்றிடவே வா.



2.

உன்னாலே நானுயிர்த்தேன் உன்னாலே தான்ஜனனம் 
உன்னால்தான் சாவெனி லென்வரமே - உன்னையான்
கண்ணாலே பார்த்தாலே கன்றுபோல் துள்ளிடுவேன்
கண்மையுன் ஓரணுவாய் நான்.



3.

அறிந்திடேன் உன்னுள்ளம் ஆய்ந்திடேன் சித்தம்
எறிபந்து பாய்ந்திடு மன்ன - குறிநோக்கி
தீப்பரவும் வேகமதில் உன்னன்பில் என்னுயிரே
மூப்புவரை வாழ்ந்திடுவேன் நான்.



4.

நின்றேன் நெடுமரமாய் நானும் உவகையுடன்
ஒன்றேன் இனிஉலகில் எப்பொழுதும் - நன்றே
உனையெண்ணி வாழ்ந்திடுவேன் நாள்தோறும் அன்பே
பனைமரத்தின் வண்டென நான்.



5.

வாராது வந்தவளைப் பார்த்திருந்தேன் நாள்தோறும்
சீராட்டி என்கேசம் சீர்குலைத்து - சீராக
என்னாசை என்நேசம் என்றெல்லாம் ஆதரித்து
சின்னதாய் காத்தாளென் தாய்.



6.

போவேனோ நீங்கி உனைவிட்டு தூரமாய்
சாவேனோ நான்வழி தான்மறந்து - ஆவேனோ
நோயாலோ தீயாலோ வல்வினையின் நாவாலோ
போயினும் ஓர்ப்பேன் உனை.



7.

காத்திடுவா ளென்னன்னை எப்போது மேயென்னை
பூத்திடுவா ளோர்மத்தாப் பாயென்னை - ஆர்த்தேயான்
சோர்ந்திட்ட போதெல்லாம் சொற்கவரி வீசியவள்
சேர்த்திடுவாள் நெஞ்சில் நிதம்.





8.

காத்திருக் கின்றேனுன் கண்பார்த் தலுக்கென
பூத்திருக்கு மென்கண்கள் உன்விழி - போர்த்தலுக்காய்
நொந்தவிந் தேயான் நொறுங்கி விடும்முன்னர் 
வந்தணைப் பாயென் சகி.



9

அதிர்ந்து உரைத்திடாள் ஆர்ப்பரித்தே கூவாள்
முதிர்ந்த தொருமனமும் தன்னில் - உதிர்ந்து 
அழிந்திடாமல் சீர்பெறவும் தன்மகவை நாளும்
விழித்திருந்து காத்திருப்பாள் பெண்.


10.


உண்மை புறத்தொதுக்கி ஊர்ப்பேச்சில் தான்மயங்கி
தண்மை இழந்தே தரங்கெட்டு - பெண்மையதன்
சீர்கெட்டுப் பேரிழந்து போயதாய பெண்ணினத்தால்
ஊர்கெட்டுப் போகும் அறி.