Thursday, June 12, 2008

என்னுயிர்த்தோழி மஞ்சு!






















தன்வச மாக்கினள் தரணியெலாம் அன்பினால்
தன்னையே தந்தென் மனதினில் நிறைந்தனள்
உன்விதி உன்கையில் உன்வெற்றி உறுதியே
என்வசம் தந்திடு சோகமெலா மென்றனள்...


என்றேனும் என்கண்ணில் நோக்கிடில் நீர்த்திவலை
அன்றெல்லாம் மனம்கசிந்து கொண்டனள் மனக்கவலை
நன்றே பலபகிர்ந்து நகையூட்டி எனைஎன்றும்
முன்றானை தனில்முடிந்து கொண்டனள் என்தாயாய்...


நானுண்ணக் கண்டென் முகம்நோக்கி நின்றனள்
தேனுன்னும் குழந்தையாய் தெவிட்டாமல் நோக்கினள்
ஊனில் கலந்தேன் உதிரத்தில் கரைந்தனள்
வானில் உறைந்திட்ட என் தாயை ஒத்தனள்...


காரிருள் தனில்மூழ்கிக் கரைந்திட்ட என்னையே
ஓரிரு நாட்களில் உயிரூட்டி நிறைத்தனள்
தூரிகை எனும் அன்பால் தூயனாய் என்னையே
மாரிபோல் பொழிந்தென் மனதில் உறைந்தனள்...


முத்தாய் நகைத்து்என் முகம்துடைத்து கொஞ்சினள்
வித்தாய் நல்லெண்ணம் தனைஎன்னில் விதைத்தனள்
சொத்தாய் அன்பையும் பண்பையும் கொண்டனள்
அத்தாய் யாருமில்லை என்னுயிர்த் தோழியே!

தேன் துளிகள் ! பகுதி - 5

1.

மீளா உறக்கத்துடன் மேன்மையை அடைந்தாய்
வாளா இருந்த எம்மை வருந்தி யழச்செய்தாய்
தோளாய் நின்றாய் ஏழையர்தம் துன்பத்தில்
கோளாய் எமனுன்னை பிரித்தானே மன்னையாரே!

2.

தீக்குளிப்பர் மானிடரின் தோல்போர்த்தி அலைபவர்கள்
வாக்களிக்கக் கூட வகையாய் யோசிக்காது
ஏய்க்கப்பிறந்தவர்க்கே என்வாக்கு எனச்சொல்வார்
போக்கற்ற இம்மனிதர் பூமிக்கே பாரமென்பேன்!

3.

வாராது வருமென்று பார்த்திருந்தேன் நாள்தோறும்
சீராட்டி என்கேசம் சீர்குலைத்து -சீராக
என்னாசை என்நேசம் என்றெல்லாம் ஆதரித்து
சின்னதாய் காத்தாளென் தாய்

4.

உயர்த்தியவள் எனையிந்த சமுதாயத் தேரேற்றி
உயர்த்தி யவள் எனையீந்த தாயவளாய் மாறியவள்
உயர்த்தி யவள் செய்தளித்த பேருவகை மதிப்பினிலே
உயர்த்தியவள் பெருமை தோன்ற பாடிடுவேன் பாட்டினிலே!

5.

நானெனு மகந்தை யகற்றிடவே தினம்
தேனினு மினிய உன்நாம முரைத்தே
ஊனும் உறக்கமும் இன்றியே நாளும்
வான் புகழோனே உனை வணங்குவேன் நான் !

6.

தாயே நீதந்த முலைப்பால் மறக்கலையே
வாயமுதின் சுவை இன்னும் மாறவே இல்லையே
நீயேன் பறந்திட்டாய் எனைஇங்கே விட்டுவிட்டு
வாயேன் திரும்ப என்னை அமைதியாய் உறக்காட்டு!

7.

நான் உன்னை பார்த்தபோது நாலுவகை சொர்க்கம்
நாம் கூடிக் களித்த போதே நூறுவகை சொர்க்கம்
தேனொழுகும் பழச்சுவையை நான் சுவைத்தபோதோ
வானெல்லாம் நிறைந்துவிட்ட கோடிவகை சொர்க்கம்!

8.

பூக்களை நனைக்க ஒருபனித்துளி முயன்றதுபோல்
பாக்களை இயற்றிநான் பாரினைத்திருத்த நின்றேன்
மாக்களை மானிடராக்கவும் ஏலுமோ
சாக்கடை என்றும் சந்தனமாகுமோ?

9.

வேண்டாத ஒன்றினை வேண்டிக் கேட்டுநான்
தாண்டினேன் இறைவனின் விதிகளை - ஆண்டியாய்
ஊரெங்கும் அலைந்தபின் ஓர்நிலையும் உணராமல்
சீர்பெற வாடினேன் நான்.

10.

அறியாது போனேன் உன் அன்பை நானும்
உறிமீது விழுந்த பெருமத்து போல
குறிதவறிப் பட்ட குறும்பாடு போல் நான்
தறி கெட்டுவீழ்ந்தென் காப்பாற்றுவாயா?

11.

எந்நாளோ என்னுயிரை உனக்காய் அளிப்பதும்
அந்நாளோ உன்னிலே என்னை இழப்பதும்
உன்னால்தான் இனி இயங்கிடும் என்னுடல்
பொன்னாளே அது நான் உன்னை அணைப்பது!

12.

கவலைகள் களைந்திடு கார்முகில் கலைந்திடும்
திவலைப் பனித்துளி கதிர்கண்டு கரந்திடும்
உவகை கொள் உன்னை உலகம் அண்டிடும்
தவறு உணர்ந்தவர் வாழ்வும் செழித்திடும்!

13.

நானுண்டு எனச்சொல்வான் நகைத்து முகம்குவிப்பான்
தேனுண்டோ சுவைத்திட நாக்கு வரளுதென்பான்
வெண்ணெய் திரண்டதே வழித்து எடுஎன்பான்
மண்ணை உண்டவன் என்னையும் உண்டானே!

14.

பண்பாடு மறக்காத பெண்பாவை கண்டேன்
எண்குணத் தாளாயவள் விளங்கிடக் கண்டென்
உண்மையா யவள்தாயாய் மாறிடக் கண்டேன்
தண்குணத் தாளையென் தோழியாய்க் கொண்டேன்!

தேன் துளிகள் ! பகுதி - 4

1.

தரவேண்டும் மணவிலக்கு புரியாத மகளிருக்கு
சிரமமே இல்லாமல் மனவிலக்கு வந்தபின்னர்
வரவினும் கூடுதல் செலவென்றே ஆனபின்னர்
பரதேசம் போவதிலே மகிழ்வுண்டு கணவனுக்கு!

2.

காத்திடுவான் என் கண்ணன் எப்போதும் என்னையே
பூத்திடுவான் மத்தாப்பாய் புன்னகைக்கும் போதெல்லாம்
சோர்ந்திட்ட போதெல்லாம் சொற்களால் வருடியே
கோர்வையாய்ப் பேசியே கவர்ந்திடுவான் என் மனதை!

3.

கொண்டுவந்தவன் இங்கு விட்டுப் போவதும் தான் என்ன?
வந்து சேர்ந்த மனிதரெல்லாம் அனுபவித்தது என்ன?
உடுத்ததுணியும் உருவிக்கிட்டு எரித்துப்போகும் உறவு!
படுத்து மீண்டும் நீ எழுந்தா நன்றி சொல்லு இறைக்கு!

4.

நான் என்ற அகந்தை தான் ராவணனை கொன்றது!
வாளெடுத்து வீசியோரும் மண்ணிலே புதைந்தனர்!
பேணியதோர் அன்பும் நல்லதோர் நம்பிக்கையும்
தோள்கொடுத்து நட்பையே வளர்த்திடுமே நீஅறிவாய்!

5.

புதுமையிது என்றெண்ணிக் குழம்புகிறேன் நானும்
பதுமையாய் நான் மாறி பகரவும் ஓர் வார்த்தையின்றி
இது என்ன அதிசயம் என்றெண்ணி மயங்குகிறேன்
எதுவேண்டாம் என்றாயோ அதுவேண்டிக் கலங்குவதேன்?
மது உண்டு மயங்குதல் போல் மனதுக்குள் மறுகுவதேன்?

6.

வந்தது வசந்தமென கொண்டதொரு களிப்பும்
சந்தமுடன் கலந்துநறு மணம் பரப்பும் கவியும்
இந்திரனும் ஏங்கிவிடும் ஏந்திழையின் வனப்பும்
சிந்தைதனை மயக்கிவிடும் விந்தைஎன்ன சொல்வேன்?!

7.

பெருகவே உள்ளமது உள்ளும் வண்ணம்
சிறுகவே உண்டியது சிறுத்தைப் போலே
கருகவே மனதினில் காழ்ப் புணர்ச்சி
வருகவே வாழ்வினில் இன்பம் என்றும்!

8.

கண்ணனவன் அருளினிலே களித்திருப்போம் வாருங்கள்
கருணைமிகக் கொண்டவனாம் கார்மேக வள்ளலவன்
திண்ணமுடன் காத்திருந்து தேன்சுவையாய் வாய்மொழிந்து
அருள்வழங்கும் மன்னனவன் ஆட்கொண்டான் எனையணைத்தே!

9.

துணை நின்றாய் தூணாய் என்மனம் சரியும்போது
இணையின்றி எனைக்காத்தாய் எளிதினில் மறக்கிலேனே
உனையன்றி வேறுருவம் உலகினில் காண்கிலேனே
நினையன்றி வேறாரோ எனைக்காப்பார் சொல்கண்ணா!

10.

நீயில்லா உயிரதுவும் மதிப்புளதோ இவ்வுலகில்
தாயினைப்போல் வாரியள்ளி எனையணைத்து முத்தமிட்டு
நோய்தீர்க்கும் அருமருந்தாய் அன்பான சொல்சொல்லி
வாய்நிறைய புகழ்ந்தென்னை வாழவைப்பாய் என் தேவி!

தேன் துளிகள் ! பகுதி - 3

1.

காலம் வந்ததே காத்திருந்த கணங்கள் போய்....
நாடெங்கும் மறுமலர்ச்சிக் குரல்கள் ஒலிக்குதே
இளைஞரின் எழுச்சியும் நம்பிக்கை ஊட்டுதே...
வீடெங்கும் நம்பிக்கை விளக்கினை ஏற்றிடு!

2.

நான் செய்யும் வேலையால் நீமகிழ வேண்டும்
தேன் போன்ற சொல்லால் உன் புகழபாட வேண்டும்
கூன்பிறை நெற்றியில் முத்தமிட வேண்டும்
ஏனெனில் நீதானே நான் வணங்கும் அன்னை!

3.

என்றும் உன்னையே எண்ணத்தில் வைத்தேன்..!
ஒன்றும் அறியா மனதுடன் இருந்தேன்...!
என்றும் நிலையிலா உடலினைத் துறப்பேன்...!
அன்றும் ஆவியாய் உனையே நினைப்பேன்!

4.

அச்சொல் உன்னைச் சுட்டதா அன்பே
உன்மனம் சுட்டதோ ஊமைக் காயமோ?
என் மனம் மயங்கிக் கூறினேன் அதனை
மனந்தனில் வைத்திடவேண்டாம் கண்ணே!

5.

குருச்சேத்திரப்போருக்கு மீண்டும் ஆயத்தமாகு
தெருவெங்கும் படைகுமி;வீரர்களைத் தயாராக்கு.
குருவும்சரி சிஷ்யனும்சரி எல்லோரும் எதிரிகளே
உருவாக்கு புதுக்கீதை எதிரிகளை தரையாக்கு!

---வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள மக்களின் புதிய பாரதம்!

6.

அன்பாலே கொல்வதாலோ ஆதரித்து அணைப்பதாலோ
என்பையும் உருக்கியே என்னிடம் கரைவதாலோ
பண்பைப் பெருக்கியே பாசம் பொழிவதாலோ
உண்மை அன்பினால் எனைஉரு வாக்கினாயோ

7.

ஊக்க மது தந்தாயோ நீயெனக்கு
ஊக்கமது அளித்தாயோ என்கவிதைக்கு
ஊக்கம் அது வந்தபின் தான் நானும்
ஊக்கம் அதுபற்றிப் பாடலானேன்!

8.

அன்பாய் அணைத்து நடப்பீரே மானிரே
வம்புக்கதை பேசிப்பேசி வாழ்ந்த கதைபோதும்
துன்பத்தின் போதுமட்டும் எமைஇங்கு பூசிப்பீர்
செம்பளவு நீரிலே வாழ்ந்திடுமோ இவ்வுலகம்?

9.

அடைந்திடு மனமே அரனவன் சரணதை
உடைந்திடு முனது உளக்கு மையல்கள்
படைபல வரினும் பயமிலை தொழுது
கிடைத்திடில் அவனது அருளினி சுகமே!

10.

துணை வருவாயோ எந்தன் உயிரே
இணை பிரியாமல் எனைச் சேர்வாயோ
பிணை யாய் இருவரும் பிடியுண்டோமே
கணை இட்ட காமன் களிக்கின்றானே!

தேன் துளிகள் ! பகுதி - 2

1.

நிலைத்திருக்கும் இறையதனை எண்ணிடாமல் ஏன்மனிதா
கலைந்துவிடும் கனவுகளைக் கைக்கொண்டாய் சொல்மனிதா
நிலைகுலையும் எண்ணங்களை விட்டொழித்து நீயும்தான்
விலையிலா வாழ்வறங்கள் கைக்கொள்வாய் நீமனிதா!

2.

உண்டென்று சொல்வார் சிலர் இல்லென்பார்
கண்டவருமிலர் அதை விண்டியோருமிலர்
சிவனென்பார் சிலர் விஷ்ணுவென்பார் சிலர்
அவனன்றி அசையாது ஏதும்இது உண்மையே!

3.

செல்கிறதே என்னுயிர் என்னை விட்டே பிரிந்து
மெல்லமெல்ல அடங்கிடும் என் மூச்சு திரிந்து
சொல்லும் அற்றுப்போய் செயலும் மிகஒடுங்கி
வெல்லும் என்றுமே மரணந்தான் உணர்மனமே!

4.

எதுவென்று நீநினைத்தாய் அதுவாக அத்தனவன்
புதுமைகள் பலபுரிவான் புன்னகையால் ஆட்கொள்வான்
பதுமைபோல் அவன்முன்நீ பண்ணிசை பாடிடுவாய்
ததும்பாமல் அவனருள்தான் தந்திடுவான் கைகூப்பு!

5.

செயலினாலே மனம்புனிதம் ஆகும் கண்டீர்
முயற்சியாலே தான்முடியும் எல்லாம் காண்பீர்
துயரம் யாவும் தீர்ந்துபோகும் கடும்உழைப்பால்
வியனம் யாவும் முடியுமென்றும் அவன்அருளால்!

6.

காப்போம் கயவரின் கண்ணியிலிருந்து
கண்மணி போலே நம் நாட்டை
நல்லோர் போற்ற வாழ்ந்திடு நாளும்
சொல்லும் செயலும் ஒன்றென்றிரு!
வல்லோர் வைத்தது சட்டமென்றே
வாழ்ந்தது போதும் மாற்றிடுவோம்!

7.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்துபார் என்றும்
செயலிலும் சொல்லிலும் ஒன்றென - கையகத்தில்
தீஞ்சொற்கள் இன்றியே நாளும் மகிழ்ந்திரு
பூஞ்சோலை யாகும் உலகு.

8.

குணங்களால் அனைவரையும் வென்று
கணங்களில் அன்பினைப் பிழிந்துதந்து
மனங்கவரும் மாண்பினைப் பெற்று
சினங்குறைந்து வாழ்வோம் வாரீர்!

9.

எண்ணங்களே நம்விதைகள் - விதைப்போம்!
எழுச்சிகளே நம் கனவுகள் - கதைப்போம்!
தவறுகளே நம் முன்னேற்றப்படிகள் - மிதிப்போம்!
வெளிச்சங்களே நம் விதிகள் - உதிப்போம்!

10.

திரும்பி வந்து சேர்ந்திடடி போனசுவ டறியாமல
விரும்பித்தானே வந்தடைந்தாய் முன்னர்நீயும் இப்போது
கரும்புச்சொற்கள் கசந்ததுமேன்? கனவெல்லாம் கலைந்ததுஏன்?
இரும்பு நெஞ்சத்தாளே இளகிடுவாய் நீயும் கொஞ்சம்!

தேன் துளிகள் ! பகுதி - 1

1.

நிறைபவ னென்றே நினைத்தேன் என்னை
உறைபவ னாகிடத் துடித்தேன் உன்னுள்
சிறையிட என்னை அளித்தேன் உனக்குள்
குறையில் லாதவன் அல்லன் யானே!

2.

சந்தேகமே பொசுக்கிவிடும் உன்தேகமே என்றுணர்
வந்தே எரிக்கும் உன் வாழ்வை நீ அறி
சந்தமுள்ள வாழ்வை அழித்தெரியும் கண்டுணர்
சொந்தங்களும் சேராமல் சோகம் வரும் தெளி!

3.

கொன்றுவிடு உன்னுள் உறங்கும் கோபந்தனை
வென்றுவிடு மனதின் காமவி காரந்தனை
மென்றுவிடு உன்னுள் உயிர்க்கும் கோரந்தனை!
சென்றுவிடு ஆழமாய் ஓமெனும் ஒலியினில்!

4.

மதுசூதனா மனதை மயக்கும் மணிவண்ணா
இது சரியா உன் லீலைதகுமா என் மன்னா
பொதுவில் வந்தென்னைக் களவு செய்ய
இதயம் வைத்ததென்ன சொல்லடா கண்ணா!

5.

காத்தாயே டாக்டர் என்னை நீ
கடும்நோய்ப்பிணியிலிருந்தே!
சீத்தாவை அனுமான் தசகண்டன்
சீண்டாமல் காத்ததைப்போல்!
தேத்தியெ விட்டாய் என்னை
தேரைப் போல் இருந்தேன் நானே
காத்திட்டாய் என்னை நீயே
தேரைப்போல் மாற்றி னாயே!

6.

சிகரத்திலேறி முகவரி தேடு!
சிந்தனைமுழுதும் சிவப்பினை ஏற்று!
நிந்தனை இன்றி வாழ்ந்திடப்பாரு!
நிலவினைத்தொடலாம் கைகளை உயர்த்து!

7.

தரணியதில் தைரியந்தான் வழிநடத்தும் உன்னை!
பரபரப்பாய் பேசவைக்கும் உன்வியக்கும் செயல்கள்!
சாந்தமுடன் விவேகமுந்தான் வெல்லவைக்கும் உன்னை!
பாந்தமுடன் பேசு உனது வார்த்தைகளே வெல்லும்!

8.

சூன்யமாய் உள்ளே நுழைந்ததன் பின்னர்நீ
வானளவு உள்ளில் வளர்ந்ததும் தேனாய்
இனித்திடும் அன்புரைகள் வாரிவழங்கி என்னை
நுனிமுதல் கால்வரை மாற்றினாய் நீ!

9.

ஏதுஇடம் இல்லாதவனுக் கிவ்வுலகில் என்றும்
போதுவதை சீருடன் நீதிரட்டு அல்லாது
சூதுவாதின்றியே நீயிருப்பின் எல்லோரும்
ஊதியே தள்ளிடுவார் பார்!

10.

முத்தான வரிகள் முழுமையாய் போட்டு
சத்தான சுவையுடன் சந்தங்கள் சேர்த்து
வித்தான கருத்துக்கள் பலவும் சேர்த்து
கொத்தான கவிதை படைத்தோமே இன்று!

காலம் கடந்த ஞானம்

நீண்டகால சோகமொன்றைப்
பகிர்ந்துகொள்ளப்போகிறேன்...
மாண்டவர்கள் மீண்டகதை
பறையடிக்கப் போகிறேன்...
ஆண்டான் அடிமை என்றதொரு
அவலம் சொல்லப் பொகிறேன்..
வேண்டிப்பெற்ற சாபமொன்றின்
சோகம் சொல்லப்போகிறேன்..

காந்தியென்ற மனிதர் சொன்ன
உண்மை பொய்யாய்ப் போனதே
சாந்தி சமாதானமெல்லாம்
காற்றில் பறக்கலானதே...
மாந்தரெல்லாம் மாக்களாகி
மானம் இழக்கலானதே...
வேந்தராட்சி போனபின்னும்
வேங்கைவேட்டை வாட்டுதே!

இல்லறங்கள் செழிக்கவேண்டி
இலக்கியங்கள் சொன்னதும்
நல்லறங்கள் தழைக்கவேண்டி
நல்லவர்கள் நவின்றதும்
சொல்ல முடியாதபடி
சோர்ந்து போகலானதே
வெல்லவழிகள் ஏதுமின்றி
வேதனைகள் வாட்டுதே!


புவி தழைக்க புதிய நீதி
நாளை வந்து சேருமோ
தவிக்கும் ஏழைவர்க்கமும்
தாகம் தீர்ந்து உயிர்க்குமோ
கவிகள் பாடி உலகையே
கரைகள் ஏற்ற முடியுமோ?
செவிகள் குளிர ஏழ்மை மறைந்த
செய்தி கேட்க இயலுமோ?

Sunday, May 25, 2008

எனக்குப் புரிகிறது......!

எனக்குப் புரிகிறது......!

எச்சிலை நீ விழுங்கும் போதெல்லாம்
என் மேல் கொண்ட காதலையும் விழுங்குவாய்
எத்தனை நாள் திரைபோட்டுக்கொள்வாய் நீயும்?
தன்னை மறந்த உன் வார்த்தைகளில்
உன்னை மறந்து உன் காதலும் வழிகிறது
இனிப்பைக்கண்ட குழந்தையின் எச்சிலாய்...!
எத்தனை விரட்டினாலும் விலகாத
புண்மேல் ஈக்களாய் எண்ணங்கள்
சுற்றி வரும் உன்னை....!
மருந்திட்டால் போய்விடும்
பருக்கள் அல்ல ...
இது காதல்........!

எனது குறுங்கவிகள் சில!

எனது குறுங்கவிகள் சில!

1.
அங்கமாக்கி அனைவரையும் அணைத்து செல்வோம் வா!
தங்கமான தாய்நாட்டுக்குப் பெருமை சேர்ப்போம் வா!
சிங்கம்போல சிலிர்த்தெழுந்து சிறுமை தீர்ப்பொம் வா!
பங்குபோடும் பகைவர்களைப் பதறவைப்போம் வா!
2.
ஞாலத்தி லுன்னைக் கொணர்ந்திட்ட தாயைநீ
கோலமாய் கூடத்தில் வைத்துநீ கும்பிடு!
மூலமே அவள்தா னென்பதை உணர்ந்திடு
சூலமேந்திய மகிஷாசுரி அவளென்று போற்றிடு!!
3.
சுயநலமே வாழ்க்கையென்று எண்ணியிராதே
கயவர்களின் எண்ணிக்கையில் கலந்துவிடாதே
மயங்கிப்போய் மதிகலங்கி சிறுமைப்படாதே
உயர்வான மனிதன் நீ மறந்து விடாதே!
4.
மாறவே மாறாத மமதை மயக்கும்
மனிதனின் மனவமைதி மன்னிப்பில் மட்டுமே
மன்னிக்கும் மனங்களை மனிதம் மதிக்கும்
மன்னியுங்கள் மற்றவரை மன்னுலகம் மகிழும்!
5.
கண்டேன் பாசத்தின் எல்லைதனை உன்னில்
உண்டென்று உணர்ந்தேன் தாய்மையும் உலகில்
அன்புக்கு அணையில்லை அடக்கிட வழியில்லை
உன்முன் தோற்பதில் என்றுமே வெற்றியே!
6.
வாழ்வீரே யென்றெமை வாழ்த்தியே மகிழ்ந்துடன்
தோழமை காட்டிட்ட தேவியாய் - கோழைமை
போயின்று யார்வரினும் நேர்நின்றெ திர்நோக்கித்
தாயினைப் போல்காக்கும் சேய்!
7.
ஒருமுறை பார்க்கத் துடித்தும் வராமல்
திருமுகம் காட்ட மறுத்தாய் - கருவண்ண
கண்ணனே என்னை திருடிய கோமானே
உன்னையே தாஎனக்கின்றே உனை!
8.
உயிர்கரைந்து நின்றதடி எந்தனுள்ள முந்தான்
வயிரமாய் மின்னுதடி உன்னால் - பயிருக்காய்
மழைபொழிந்து காத்திட்ட வானமாய் என்னுள்
நுழைந்தவளே நீயென்றும் வாழி!
9.
இதுவன்றோ காதலென நானறிந்தேன் வான்மதியே
மதுவருந்தும் போதுணரும் மயக்கத்தை நானறிந்தேன்
தேமலரின் புத்துணர்வா இல்லை - இதுபோழ்தில்
சோமபானம் போலுணர்ந்தேன் நான்!
10.
சமைத்திடு மனமுடன் மணாளன் வருவான்!
சமைத்திடு மணமுடன் மன்னவன் வருவான்!
சமைத்திடு கனிவுடன் கண்ணாளன் வருவான்!
சமைத்திடு இனிப்புடன் கண்ணனே வருவான்!
11.
கண்டுகேட்டு ணர்ந்துனை சேர்ந்திட வந்தேனே
விண்டிலா சோர்வுடன் ஓடோடி - கோபமாய்
ஒருபார்வை பார்த்திட்டாய் ஒடுங்கினேன் நானே
திருவருள் செய்திடு நீ!

மனிதன்.......வாழ்ந்தானாவீழ்ந்தானா?

மனிதன்.......வாழ்ந்தானாவீழ்ந்தானா?


எதிர்முகன் கூறுகிறான்:

நால்வகை வருணமாய் மனிதனைக் கூறிட்டு

தோல்வகையைக் கண்டு சாதியும் கற்பித்து

சால்வையைப்போர்த்தி அரசியல் நடத்தி

தோல்விதான் கண்டான் மனிதன் இவ்வுலகில்


நேர்முகன் பதில்:

நீர்வகை கண்டு நிலம் புதுப்பித்தான்

ஏர்முனை கொண்டு எழில்வளம் செய்தான்.

தேர்முதல் கார்வரைப் புதினங்கள செய்தான்

ஓர் இனம் ஒருகுணம் என்றனன் மனிதன்!


எதிர்முகன் கூறுகிறான்:

புரட்டுகள் திருட்டுகள் எங்குமே பரவின

வரட்டு வாதங்கள் வலம் பலவந்தன

திரட்டலும் சுரண்டலும் விதிகளாய் மாறின

மிரட்டுதல மனிதனின் வேதமாய் ஆனதே!


நேர்முகன் பதில்:

இலக்கியம் பலகண்டு இசைபட வாழ்ந்தான்

கலைபல கவின்மிக கற்றறிந்தனன் அவன்

உலகியல் பலவறிந் தொழுகினன் வாழ்வினில்

நிலையிலா நிலைகளம் உணர்ந்தனன் மனிதன்!


எதிர்முகன் கூறுகிறான்:

போர்பல செய்து பூமியைப் புரட்டினான்

கூர்வாள் கொண்டு கொடுமைகள் புரிந்தான்

வேர்பல கொன்று விருட்சத்தை எரித்தான்

சேர்முகம் கண்டு செய்வினை செய்தான்!


நேர்முகன் பதில:

வனமதை அழித்து வனப்புகள் செய்தான்

சினமதைக் குறைத்து சீர்பல பெற்றான்

குணமதைக் கொண்டுநல் காவியம் படைத்தான்

உணவினுக்கென ஓர் உன்னதம் அறிந்தான்!

ஆதலினால் காதலிப்பீர்!




ஆதலினால் காதலிப்பீர்!

காதல்..........!
உயிரை எடுப்பதும்
உயிர்ப்பித்து காப்பதும்!

காதல்..........!
என்பையும் தயங்காமல் தந்திடும்
எண்முனை அன்புக்கரம்!

காதல்..........!
எள்முனையளவும் ஐயமில்லாமல்
ஏந்திடும் தூண்!

காதல்..........!
கசிந்துருகும் கண்ணில் வரவழைக்கும்
கண்ணீரல்ல குருதி!

காதல்..........!
ஏழையென்றும் பாராமல்
எங்கும் நிறைந்திருக்கும்!

ஆதலினால்
காதலிப்பீர்!

புரியலையே.......!

புரியலையே.......!

பஞ்சத்திலும் கொஞ்சமாய் கிள்ளியெடுத்து
மிஞ்சியதிலும் கெஞ்சிக் கெஞ்சி
ஊட்டிவளர்த்த என் அன்புமகன்
கொஞ்சிப்பேச வந்தமனைவிக்கு முன் என்னை
வஞ்சனை கொண்டு விரட்டியதேன்?

புரியலையே!

பத்துவிரலும் தேயத்தேய
பத்துப்பத்துப் பாத்திரங்களை
ஒத்தையாய் கழுவி இவன்
மொத்த வயிற்றையும் கழுவினேனே?
சித்திரம்போல் ஒருமனைவி கண்டு
கொத்திவிட்டானே பாம்பாய் ஏன்?

புரியலையே!

ரெண்டுபிள்ளை நான்பெத்தா
விண்டுபோகும் பாசமுன்னு
கொண்டாட ஒருமகனை
செண்டுபோல பெத்தேனே
ஒண்டியாப்பொறந்ததால
வண்டிவண்டியா பாசம்கொட்டி
சண்டியனாய் அவன் மாற
கண்டுகொள்ள ஆளில்லாம
பரிதவிச்சு கிடக்கேனே அது ஏன்?

தலைவிதியா?

புத்தாண்டு இரண்டாயிரத்தெட்டு!

புத்தாண்டு இரண்டாயிரத்தெட்டு!


அன்பைக்கு ழைத்துநல் லில்லறம் தான்வளர்த்து
என்பை உருக்கிடும் நோய்போக்கி - தன்மையாய்
மாண்புடைய தாக்கியே இவ்வுலகை மாற்றிடும்
ஆண்டி ரண்டாயிரத் தெட்டு.


வன்முறைகள் ஓய்ந்திட தீவிர வாதங்கள்
நன்முறையாய் மாறியே நாடெங்கும் - அன்புடன்
பாங்குடன் கல்வியும் பல்கலைகள் யாவுமே
ஓங்கிடுமி ரண்டாயிரத் தெட்டு.

வரலாறு போற்றிட வேண்டும் நம்மை
சிரமீது தாங்கிட வேண்டும் - கரங்கோர்த்து
முன்னேறு வோமிங்கு நாளும் வரவேற்போம்
பொன்போலி ரண்டாயிரத் தெட்டு.

தீஞ்சுவைப் பாக்கள் புனைந்து திறம்பட
தேன்சுவைப் பாமாலைச் சூட்டி - வான்புகழ்
கொண்டதாய் மாற்றியே தீந்தமிழை விண்ணுக்கு
விண்டிடுமி ரண்டாயிரத் தெட்டு.

நினைவுகளாய்......!

நினைவுகளாய்......!


நாம் உதிர்க்கும் வார்த்தைகள்
காற்றில் கரைகின்றன...!
நாம் பரிமாறிக்கொண்ட
எழுத்துகள்
காலத்தில் மறைகின்றன......!
அவை ஏற்படுத்திய
தாக்கங்கள் மட்டுமே
நம் இதயங்களில்
என்றும் என்றென்றும்
நினைவுகளாய்த்
தேங்கிவிடுகின்றன.......!

இயற்கை அழகு..........!



இயற்கை அழகு..........!

மேகம் முட்டும் வானுக்கென்றும்
எல்லை இல்லை இங்கே
தாகம் தீர்க்க மட்டும் எண்ணும்
மேகக்கூட்டம் அங்கே
வேகம் இன்னும் வேகம் என்னும்
காற்றின் ஊட்டம் நன்றே
மோகம் கொண்டே முயங்கச் சொல்லும்
வானின் பந்தல் உண்டே.....!... .....................(1)

வானும் மண்ணும் முத்தம் இட்டு
பாடம் சொல்லிச் செல்லும்
நானும் நீயும் சொல்லை மாற்றி
நாமும் சொல்லச் சொல்லும்
தேனும் நீயும் ஒன்றா என்றே
தேடல் செய்யச் செய்யும்
மீனும் மானும் இங்கே வந்து
அழகில் வெட்கிச் செல்லும்....!. ....................(2)


வானும் மண்ணும் முத்திக்கொள்ள
பாலம் போடும் மேகம்!
கானம் பாடி ஆட்டம் போடும்
வானம் பாடிக்கூட்டம்!
மோனம் கொண்டு மோகம் கொல்ல
தூண்டிச் செல்லும் மேகம்!
மானம் போயின் சாதல் என்று
சொல்லி நிற்கும் குன்றம்!........! .......................(3)

அன்பெனப்படுவதியாதெனின்.......!

அன்பெனப்படுவதியாதெனின்.......!


தன்னலமே இல்லையென்று
பறையடித்துச் சொல்லும்...!
என்னவன் தான் என்னவள் தான்
என்றுரக்கச் சொல்லும்...!

பொன்புகழ் தான் கோடி கோடி
நாடி வந்தபோதும்
உண்மை அன்பு என்றும் வெல்லும்
உண்மை என்று சொல்லும்..!

கோடி நன்மை ஓடிவந்து
வாசல் தட்டும் போதும்
நட்பும் அன்பும் போதுமென்று
நல்ல மனம் சொல்லும்..!

நானும் நீயும் என்று சொல்லும்
வார்த்தை மாறிப்போகும்
நாமும் நாமும் என்றுசொல்லி
நாளும் ஏங்கச் சொல்லும்!

அடியும் வலியும் பெற்ற போது
அணைத்து சேர்த்துக் கொஞ்சும்
அன்பு காட்டி தலைகலைத்து
ஆறுதலைக் கூறும் !

அடிமைப்பெண்

அடிமைப்பெண்


அடங்கிபோவது வாழ்க்கை என்று
எவர் சொன்னார் பெண்ணே?

அனுசரிப்பதாய் எண்ணி
அடகுவைத்தாய் உன்னை
இதன் பெயர் வாழ்க்கையா?

நீ அடங்கியதால் ஒரு
அடிமைத்தலைமுறை உருவாகும்
அறிவாயா நீ?

தன் ஆசாபாசங்களைக்
குழி தோண்டிப் புதைத்துவிட்டு
தன்னவனுக்காய்
தன் நிறம்மாற்றும் வித்தையை
எங்கிருந்து கற்கிறாய் நீ?

பச்சோந்திகூட பகற்பொழுதில் மட்டுமே
தன் நிறம் மாற்றும்....
இச்சைகளை மூட்டை கட்டி
எத்தனை நாள் உனமனதைக்கொல்வாய்?

உன் கூட்டுப்புழு வாழ்க்கையை
உன்னதம் என்று சொல்லாதே
உன்மத்தம் என்று சொல்!

ஒரு வம்சத்தையே
அடிமை வம்சமாக்கி
துவம்சமாக்கி விடாதே!!!

வாக்குமூலம்!!

வாக்குமூலம்!!

உன்னைத்தழுவும்போதெல்லாம்
என்னைமட்டுமே நினைத்திருந்தேன்
எத்தனை சுயநலக்காரன்
இப்போது புரிகிறது
மன்னித்துவிடு என் மலர்க்கொடியே......!

சொன்ன சொற்கள் கொடிதென்று
அப்போது உணரவில்லை
தனிமையில் வெதும்பி
விட்டத்தின் மேல் விளையாடிக்களிக்கும்
இணைப்பல்லிகளின் விட்டுக்கொடுப்பில்
உன்னை உணர்ந்தேன்
மன்னித்துவிடு என் மல்லிகைக்கொடியே!

என் அன்பு பெரிதா உனது பெரிதா
எத்தனை கடினம் நிர்ணயிகக என்ற
என் இறுமாப்பு தகர்ந்தது...!
இதோ
உனது மனம்நோக வைத்த என் அன்பு
எத்தனை கொடிதென உணர்ந்தபோது
நிர்வாணமாய் உணர்கிறேன்...
மன்னிப்பாயா என் மலர்க்கொத்தே!

உனக்குப்பிடித்த வண்ணம் அறிந்தேன்
உன் காதல் எண்ணம் புரிந்தேன்
உன்னைத்தழுவும் வகையறிந்தேன்
எனக்காய் நீ வாழும் திண்ணம் அறிந்தேன்
என்னைத்தழுவியபோதெல்லாம்
எரிந்து சாம்பலான உன்சுயமறிய மறந்தேனே
மன்னிப்பாயா என் மனதறிந்தவளே!

தன்னலமின்றி தன்னையே தருவது அன்பு
உன்னன்பில் அதைமட்டுமேகண்ட நான்
என்னவோ தெரியவில்லை
ஆதிமுதல் உன்னை
அடக்கவே எண்ணி இருந்திருக்கிறேன்!
இன்று உணர்ந்தேன் என் தவறை
என்னை மன்னிப்பாயா என் மனைவியே!?!

பெண்மை வாழ்க!

பெண்மை வாழ்க!


தேனிலினிய சொல்வழங்கி
தேற்றுவிக்கும் பெண்மனம்!
ஊனில் கலந்து உயிரை உருக்கி
உயர்வு செய்யும் பெண்ணினம்!
வேனில காலத்தென்றலாக
வாழவைக்கும் உயிரினம்!
மானிடத்தைக் கருத்தரிக்கும்
பெண்மை என்றும் வாழ்கவே!

ஆணினத்தின் தவறுகளை
அனுசரிக்கும் பெண்மனம்
பேணிப்பேணி உறக்கமின்றி
பேதையாகும் ஓரினம்
நாணிக்கோணி சுயமிழந்து
நாளும்தேயும் பெண்ணினம்
ஏணியாக மானிடத்தை
ஏற்றும் பெண்மை வாழ்கவே!

தாய்மையெனும் பாரந்தாங்கி
தரணி காக்கும் பெண்குலம்
வாய்மையெனும் தீயில்தினம்
வாட்டம்காணும் மெல்லினம்
தூய்மையெனும் தூபம் காட்டி
துலங்கவைக்கும் உயரினம்
ஓய்மை இன்றி நித்தமும்
உருகும் பெண்மை வாழ்கவே!

உன் மடியில் மரித்துவிட ஆசை...!

உன் மடியில் மரித்துவிட ஆசை...!


என்னை கலைத்துவிடேன் என்று
அலைபாயும் உன் உச்சி முகர்ந்துவிட ஆசை...!

பரபரவெனும் குறும்பு பார்வையால்
எனை அளக்கும் உன் கண்களை
என் கண்களால் அணைத்துக்கொள்ள ஆசை...!

கோபத்தில் சிவக்கும் உன் மூக்குநுனியில்
செல்லக்கடி கடித்து முத்தமிட ஆசை...!

படபடவென பொரியும் வார்த்தைகளின் இடையில்
மூச்சுத்திணற நீ அறியாது உன்னை கட்டிக்கொள்ள ஆசை...!

உன் காதுமடல்களை வலிக்காமல்
மெதுவாய் உரசி மெல்ல கடித்துவிட ஆசை...!

என்னை ஆதரவாய் அணைக்கும் உன்
கைகளுக்குள் என்னை அமிழ்த்திவிட ஆசை...!

ரேகை அழிந்த உன் பட்டுக்கைகளில் என்
கன்னத்தை தாங்கிக்கொள்ள ஆசை...!

உன் கண்ணுக்குள் கனவாய் மலர்ந்துவிட ஆசை...!
உன் கண்ணுக்கு இமையாய் இருந்துவிட ஆசை...!

உன் காயங்களுக்கெல்லாம் மருந்தாய் மாறிவிட ஆசை...!
உதிரமாய் உன் நரம்புகளில் புது ஊற்றென ஓட ஆசை...!

உன் மனதை மெல்ல மயிலிறகால் வருடிவிட ஆசை...!
உயிராய் உன்மூச்சுக்காற்றில் கலந்துவிட ஆசை...!

உன் அழகுப்புன்னகையில் ஒரே ஒரு துளி அன்பிற்காய்
உன்னிடமே என்னை மொத்தமாய் விற்றுவிட ஆசை...!

என் இறுதி மூச்சு காற்றில் கரைய
உன் மடியில் மரித்துவிட ஆசை...!

தமிழ்த்தாயே நீ வாழி!

தமிழ்த்தாயே நீ வாழி!

தமிழ்மொழியைச் சொல்லசொல்ல
உள்ளமெல்லாம் குளிர்ந்திருக்கும்
அமிழ்தமிழ்தென பலமுறை சொல்
தமிழெனத் தான் ஒலித்திருக்கும்
உமிழ்ந்ததெலாம் கவிகள் என்றே
பிறமொழிகள் உரைத்திருக்க
துமியளவும் குறையாநல்
சுவைமிகுந்த மொழி தமிழே!


இயலிசையும் நாடகமும்
இயைந்த மொழி தமிழ் மொழியாம்
குயிலோசை சந்தத்திற்கும்
கவிவரையும் மொழிவளமாம்
தயிர்கடையும் ஓசையிலும்
தகுதிபெற்ற கவிப் பாக்கள்
உயிரூட்டம்தரும் வார்த்தை
உடைந்ததையும் ஒன்று சேர்க்கும்!

வருமழையின் சடசடப்பு
கவிதை மழை ஆகும்தமிழ்
தருவதெலாம் ஓசைநயம்
தகரஒலி மொழியல தமிழ்
முருகன் முதல் அருகன் வரை
மொழிந்தமொழி தமிழ்மொழியாம்
அருவி யொலி குறவஞ்சியும்
குதுகலிக்கும் மொழியெம்மொழி!


இசையுடனே பாடஒரு
இனிய கவி பாரதியும்
வசையற்ற பண்ணிசைத்து
வழங்கிநின்ற பலகவிகள்
விசையுற்ற பந்தினைபோல்
இயங்கிவரும் மானிடமும்
தசைகுருதி யாய் இணைந்துநல்
தமிழ்மொழியைப் போற்றினரே!

கலைவேந்தனின்.....மீராவின் கண்ணன்!



கலைவேந்தனின்.....மீராவின் கண்ணன்!


1.
ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்..
ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்!
மீராவின் குரல்கேட்டும் வாராத தேனோ
சீராட்டி நீயென் குழல்கோது கண்ணா!

2.
என்றாவது உன்னுள் கலந்திடத் தானே
என்றன் உயிரைக் கையகம் வைத்தேன்
இன்றோ நாளையோ இடறாமல் நீயும்
நன்றே வந்து நகையாட்டு கண்ணா!

3.
நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
ஓயாமல் உன்னை பாராட்டு வேனே
வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
சேயாக என்னை சீராட்டு கண்ணா!

4.
துயிலாடும் போதென் துகிலாடு மென்று
துணைகாக்க உன்னை தருவாயென் றெண்ணி
துயில்துறந் தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே என்மாயவனே எனைகாத்திடு கண்ணா!

5.
தீராமல் விளையாடி ஓயாத உன்னை
சேராமல் எங்ஙனம் நான்வாடி நிற்பேன்?
ஓராயிரம் முறை உன் நாமம் சொல்வேன்
பாராமுகம் ஏனோ பார்த்திடு கண்ணா!

6.
பூதகி மார்பில் பூவிதழ் பதித்தாய்
சாதலின் மூலம் சாபமும் தீர்த்தாய்
ஓதிட ஓதிட உன்நாமம் இனிக்கும்
வேதத்தின் மூலனே வெல்எனை கண்ணா!

7.
பார்த்தனின் மயக்கம் தெளிவித் தவனே
தேர்தனை வலித்து தேர்வித தவனே
ஓர்முறையேனும் என்னருகில் வா
மார்பகம் புதைந்துன் மனம்மகிழ் கண்ணா!

8.
பூவிதழ் உந்தன் பூமணம் காண
தாவியுன் செவ்விதழ் சுவைத்திட ஏங்கும்
பாவியென் பாவம் தொலைத்தெனை ஏந்தியே
ஓவிய மாயுறைந் திடவா கண்ணா!

9.
உந்தன் ஓர்முத்தம் பெறவேண்டி நானும்
எந்தன் ஓர்ஜென்மம் இழப்பேனே கண்ணா!
சிந்தும் ஓர்முத்து இதழமுதம் என்றும்
எந்தன் ஓராயுள் காத்திருக்கும் கண்ணா!

10.
கண்ணாடி முன்நின்று பார்த்தே உன்னைப்
பெண்ணாக நான் மாற்றினேனே! நானும்
நீயாக மாறித்தான் போனேன் என்றும்
சேயாக என்னோடு வாழாயோ கண்ணா!

11.
ஆயர் பாடியில் வாழ்ந்திட்ட போதும்
மாயப் போர்வைகள் போர்த்திட்டபோதும்
வேயப் புல்லாங் குழலூதும் போதும்
தூயன் உன்மீதென் காதலென்றுமே கண்ணா!

12.
உலகமே என்னைக் கூறுஇட்ட போதும்
கலகமே செய்தென்னைக் கொன்றிட்டபோதும்
விலகவே சொல்லியே விலங்கிட்டபோதும்
நிலைமாற மாட்டேனே நீங்கேனே கண்ணா!

13.
என்மேனி காத்தது பசலை என்றும்
உன்மேனி தழுவவே உருகினேன் என்னை
தின்னாலும் மண்ணுக்கு தரமாட்டேன் உயிரை
உன்னுடைமை என்றுமே என்னுயிர் கண்ணா!

14.
காதலர் என்றே பலபேரும் சொல்லியே
பாதக காமமே கலந்திட வந்தார்
சோதனை என்றே எத்தனை வந்திடினும்
நாதனே உன்சரண் அடைவேனே கண்ணா!

15.
கட்டாய மென்னுடன் புரிந்திட்ட போதிலும்
சுட்டாலும் என்மேனி பட்டாலும் புண்பல
விட்டாலும் சிறையில் ஏறுடன் தனித்துமே
தட்டாமல் உன்னுடனே கலப்பேனே கண்ணா!

16.
வேதமே மூலமாம் சான்றோர்க்கு என்றென்றும்
சாதமே தெய்வமாம் ஏழைகளுக் கென்றென்றும்
பாதமே கடவுளின் பகதருக் கென்றென்றும்
நாதனே நீயேஎனக் கென்றென்றும் கண்ணா!

17.
தலைசீவிப் பூச்சூட்டும் போதும் மாய
நிலைகாட்டும் கண்ணாடி முன்நின்ற போதும்
குலையாமல் உடையணியும் போதும் உந்தன்
விலையிலா மெய்க்காதல் உணர்கிறேன் கண்ணா!

18.
நடக்கின்ற போதும்உன் நினைவு மஞ்சத்தில்
கிடக்கின்ற போதும்உன் உணர்வு உணவு
படைக்கின்ற போதும்உன் கனவு மரணம்
கிடைக்கின்ற போதும்உன் நினைவுதான் கண்ணா!

19.
நீராடும் போதென் உடலினைத் தழுவிடும்
நீராக நீமாறித் தழுவிட வேண்டும்
சீராக நீவந்து சிக்கெடுக்க வேண்டும்
போராடும் என் கூந்தல் உனக்காக கண்ணா!

20.
நீயூட்ட வாராமல் எந்தன் உணவும்
சேயூட்ட இல்லாத தாய் போல நானும்
தாயூட்ட வாராத சேய் போல நீயும்
ஓயாத போராட்டம் ஏனின்று கண்ணா!

21.
வழிப்பாதை எதிர்பார்த்து நானும் என்றும்
விழிப்போர்வை விரித்திட்டேன் உனக்காக மன்னா!
எழில்கூடும் உன்னுதல் என்றென்றும் என்னை
விழிமூட மறந்திடச் செய்திடும் கண்ணா!

22.
குழந்தையாய் நீ பேசும் போதும் என்னை
மழலையால் தாலாட்டும்போதும் என்றும்
நிழலைப்போல் நீஎன்னைத் தொடர்ந்திட்ட போதும்
பழங்கண்ட மந்தியின் நிலைகொண்டேன் கண்ணா!

23.
ஒருபார்வை உனதென்னைக் கொல்லும் மறுபார்வை
திரும்பவும் உயிர்ப்பிக்கும் இதுவென்ன மாயம்
இரும்பினை கவர்ந்திழுக்கும் காந்தமாய் நீயும்
துரும்பினைப் போலவே நானுமாய் கண்ணா!

24.
நீயாட நான்பாட வேண்டும் சிலநேரம்
ஓயாமல் நீபாடவேண்டும் மயங்கியே
தீயாட்டம் போல்நானும் சதிராட்டம் போட்டு
தேயாத நிலா உன்மேல் விழவேண்டும் கண்ணா!

25.
முகம்வாடி நான் சோர்ந்த போதும் எந்தன்
அகம்வாடி தணலின்மேல் துடித்திடும் போதும்
முகம் தாங்கி என்னையுன் மடிமீது போட்டு
இகம்தாங்கும் பூதேவி போல்காப்பாய் கண்ணா!

26.
இப்புவியை நீங்கிட நான் நினைத்தாலும்
தப்பென்று சொல்லிநீ தடுத்திடு கண்ணா!
எப்போதும் என்னருகில் நீ இருந்தென்னை
தப்பாமல் என்னைநீ காப்பாயா கண்ணா?

27.
நீராடி என்கூந்தல் சிக்கெடுக்கும் போதும்
சீராடிஎன்னுடலை மணமூட்டும்போதும்
ஓராடி முன்நின்று எனைப்பார்க்கும் போதும்
போராடிஉனை விரட்டி உடுத்துவேன் கண்ணா!

28.
உன்பட்டுக் கன்னத்தில் ஓர்முத்தம் பதித்து
மென்பட்டு உதட்டினில் மெல்லமாய் மோதியே
கண்பட்டுப் போகுமுன் கண்ணோட்டம் கழித்து
என்பட்டு உள்ளத்தில் மகிழ்வேனே கண்ணா!

29.
மாறாத அன்பும் மன்னிக்கும பண்பும்
மீறாத சொல்லும் மேம்பட்ட செயலும்
கூராக என்னைக் குத்திடும் பார்வை
மீராவாம் என்னை மயக்குதே கண்ணா!

30.
சுந்தரப் பார்வையால் சுண்டியிழுத் தென்னை
வந்தும யக்கியே வாத்சல்ய மாய்ப்பேசி
நந்த கோபாலனே என்நாயகனே நீயும்
எந்தன் மனம்கவர்ந்தாயே கண்ணா!

31.
மோகனப் புன்னகை யால்சுண்டி யேஎன்னை
மேக வண்ணனே நீயும் மயக்கினாய்
வேகமாய் வந்து உள்ளம் கவர்ந்தாய்
தாகம் தீர்த்தென்னையே ஆட்கொள்வாய் கண்ணா!

32.
நாகத்தின் மீதுன் நர்த்தனம் கண்டே
சோகம் தீர்த்தனர் தேவர்கள் அன்று
மோகம் கொண்டுன் மேல்பாய்ந்தனர் கோபியர்
யோகமே வேண்டினேன் நானுன்னை கண்ணா!

33.
சற்றே தலை சாய்த்து சிரித்திடுவாய் அழகாக
உற்றுநோக்கி கண்ணிமைத்து ஓர்நொடியில் எனைஉருக்கி
குற்றம்புரிந்தவன் போல்நீயுன் முகம் வைத்து
பற்றிலா தவன்போல்எனைப் பார்த்திடுவாய் கண்ணா!

34.
அன்பாய்ப்பேசியே அரவணைப்பாய் அக்கறையாய்
என்பும் உருக்கிடும் உன்பாசப் பொழிவினில்தான்
முன்பே மயங்கினேன் முறுவலில் மெய்மறந்தேன்
உன்பேர் சொல்லியே உறஙகுகிறேன் கண்ணா!

35.
பஞ்சுபோல் உன்கன்னம் பட்டுபோன்ற உன்மார்பு
மஞ்சுபடர் மலைபோல நீலவண்ணம் உன்மேனி
தஞ்சமென வந்தோரைத் தாங்கிடும் தாயுள்ளம்
வஞ்சமிலா வாளிப்பு எனைமயக்கி விடும்கண்ணா!

36.
தாய்போல வந்தாய் எனைத் தோள்தாங்கி நின்றாய்
வாய்பேசிப் பேசியே வாழ்த்திட்டாய் நீஎன்றும்
மாய்மாலம் செய்திடும் இப்புவியில் இருந்தென்னை
தூய்மையுள்ளத்தோனேஎனைத் துணைகொள்வாய்கண்ணா!

37.
எத்தனை சோதனை நீவைத்த போதினும்
அத்தனை காதல் பெருகுதே உன்மேல்
அத்தனைச் சுற்றிடும் பித்தனைப் போலவே
முத்தனை உன்முகம் மறக்கிலேன் கண்ணா!

38.
ராதையை உன்னருகில் பாதியாய் வைத்தாய்
பாதை யறியா புள்ளிமான் போலவே
பேதையாம் என்னையும் உன்னருகே ஓரமாய்
கீதையின் நாயகா சேர்த்துக்கொள் கண்ணா!

39.
கோபியர் பலருண்டு போற்றிடவே உன்னை
பாபியரு முன்னை போற்றிடக் கண்டேன்
தாபத்தில் மகளிரும் சுற்றினர் உன்னையே
கோபாலா உன்மேல் உயிர்வைத்தேன் கண்ணா!

40
சாதனை செய்யும் சாதகன் நீயே
போதனை செய்யும் கீதையும் நீயே
வேதனை தீர்க்கும் வேதமும் நீயே
சா தனை போக்கும் கடவுளே கண்ணா!

41.
என்றும்உன் நலம் காணத்துடிக்கிறேன் நானும்
கன்றினைக் காத்திடும் தாய்ப்பசு போலவே
ஒன்றுமே நேராமல் காத்திடுவேன் உன்னை
அன்றியும் வேறேதும் பணியுண்டோ கண்ணா!

42.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந் தென்னை
காப்பிட்டு காத்திடும் காதலன் நீயே
பூப்போல என்றுமே பேதை நான் உன்னை
காழ்ப்பின்றி காத்திடுவேன் கார்வண்ணக் கண்ணா!

43.
சோர்ந்து சுருங்கியே சோகமாய் நானும்
கார்மழை போலவே கண்ணீரில் மூழ்கினேன்
கூர்ந்து நோக்கியும் குளிர்நகை பூட்டியும்
சேர்ந்தே என்னுடன் சிரிப்பாயே கண்ணா!

44.
ஊனுறக்கம் இன்றியே உன்னினைவில் நானும்
தேனுக்குள் விழுந்திட்ட உன்மத்த வண்டு போல்
வான்மதி கண்டலரும் வண்ணமிகு அல்லிபோல்
நான்உன்னைக் கண்டதும் மலர்கிறேன் கண்ணா!

45.
எத்தனை அலட்சியங்கள் நீ செய்த போதிலும்
அததனை அன்பென் மனதிலே ஊறிடும்!
பித்தி என் கனவுகள் கைகூடா தொழிந்திடினும்
அத்தன் உனை மறவா பக்தை நான் கண்ணா!

46
அம்மையுமாய் அத்தனுமாய் ஆசிதரும் ஆசானாய்
இம்மையும் மறுமையும் இன்மையாக்கும் இறைவனாய்
செம்மையும் வழங்கும்நல் அரசனாய் என்றும் நீ
எம்மையும் நீங்காது இருப்பாயோ கண்ணா?

47.
உன்னையே வழிநோக்கி உருகினேன் நானும்
என்னையே இழந்துநான் உன்னிலே கலந்திட்டேன்
பொன்னையும் பொருளையும் வேண்டிலேன் என்றுமே
என்னையும் கைவிடல் கூடுமோ கண்ணா!

48.
ஆயிரம் கோபியர் ஆர்ப்பரிப்பர் உன்மேன்மை
வாய்நிறைய உச்சரிப்பர் உன்நாமம் என்றும்
ஆயினும் என்னுயிராய் உன்னையே என்றுமே
சாயினும் வாழினும் ஏற்றிருப்பேன் கண்ணா!

49.
நீ சிரிக்க புன்னகை தொற்றிக் கொள்ளும்
பூ விரிக்க மணம்பரப்பும் முல்லைபோலே ;
தாய் சிரிக்க தாவி வரும் குழந்தை போல
தூயவனே நீ சிரிக்க மகிழ்வேன் கண்ணா!

50.
சந்தோஷக் கணங்களிலும் உன் நினைவே என்றும்
என் தோஷக் கணங்களிலும் உந்தன் எண்ணம்
சிந்தனை முழுவதிலும் வியாபிக்கும் உன்னுருவம்
வந்தெனை அணைத்திடவே அருள்வாயே கண்ணா!

51.
நாமமுனை அனுதினமும் செப்பிடுவேன் தளராமல்
காமனும் தானெனைக் கொல்ல அம்பெய்த போதும்
சோமனும்தான் குளிர்விக்க வந்த போதும் உந்தன்
தாமரைப் பாதந்தனை விடுகிலேனே கண்ணா!

52.
காழ்ப்புடன் நம்காதல் மனங்களைப் பிரிக்கவே
தீப்புண்ணாய் வார்த்தைகள் கொட்டிடும் போதும்,
வேப்பெனப் பார்வைகள் கசந்திட்ட போதுமே
காப்பாய் நம் காதலை கார்மேகக் கண்ணா!

53.
கனவுலகில் நீஎன்றும் எனை யணைத்தாய்
நனவுலகில் உனைக் காணக் காத்திருந்தேன்
எனதாக்கி உனைத் தழுவத் துடித்திருந்தேன்
மனமாளும் மாதவனே வாராய் கண்ணா!

54.
சித்திரத்தில் உனை என்றும் கண்டிருக்க
பித்தியாய் உனைக் காணத் தவமிருந்தேன்
சித்திரை வெய்யிலில் கடுமழையாய் நீயும்
முத்துதிரும் சிரிப்புடனே முகிழ்த்தாய் கண்ணா!

55.
உனைக்கண்ட நேரமென் சிந்தை தன்னில்
பனைவெல்லம் ருசிகண்ட மந்தி போலே
தனைமறந்த உன்மத்தம் ஊறக் கண்டேன்
எனையாண்டு எடுத்தணைக்க வாராய் கண்ணா!

56.
சித்திரத்தில் நான் கண்ட கண்ணன் தானோ
சித்தமெலாம் நிறைந்திருந்த மாயன் தானோ
முத்தமிட நான் துடித்த மன்னன் தானோ
பித்தாகி அணைத்திடுவேன் வாராய் கண்ணா!

57.
நான் வாழ ஆதாரம் நீதான் என்றும்
மான் வாழா தம்மிணைதான் மரித்துப்போயின்
தேனூறும் அதரத்தால் முத்தம் தந்து
வான்போல எனை நீயும் காப்பாய் கண்ணா!

58.
மின்னிணைப்பு தந்துவிட்ட பதுமை போலே
உன்னணைப்பு என்றென்றும் என்னைக் காக்கும்
பின்னணைத்து பின்கழுத்து முகர்ந்தாய் நீயும்
என்னினைவு இழந்துவிட்டேன் ஏற்பாய் கண்ணா!

59.
என்மார்பைத் தொட்டணைத்து மகிழ்ந்த போதும்
உன் மார்பை எனக்கரணாய் அளித்தபோதும்
உன் கைகள் என்கூந்தல் அளையும்போதும்
மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தேன் கண்ணா!

60.
ஈருடலும் ஓருடலாய் கலந்த போதும்
தேர்போன்று என்னிடையில் தவழ்ந்தபோதும்
சீராய் நீ காது மடல் வருடும் போதும்
ஓர்மூச்சாய் உன்மூச்சில் கலந்தேன் கண்ணா!

61.
உன்னருகில் நானுரசி நின்ற போதும்
என்னிதழில் நீஉரசி மகிழ்ந்த போதும்
மின்னணுவில் ஓர் மாற்றம் கண்டாற்போல
சின்னதோர் பூகம்பம் உணர்ந்தேன் கண்ணா!

62.
உன் மடியில் எனை யமர்த்தி மகிழ்ந்த போது
பின்முடியில் ஓர்கற்றை உன்மேல் தழுவி
என்மனம்தான் குளிர்ந்துபோய் குலுங்கும் வண்ணம்
உனை இம்சைசெய்தாலும் மகிழ்ந்தாய் கண்ணா!

63.
வானில்லா நிலவாம் நான் நீயில்லாமல்
தேனில்லா மலராய் நான்தேய்ந்தே போவேன்
ஊனின்றி கூட நான் வாழ்ந்திருப்பேன்
நான் வாழ உன்மூச்சு தேவை கண்ணா!

64.
ஓர்நாள் நான் உன்மடியில் துயின்ற போது
கார்மேகம் கலைந்துவந்து கவிழ்ந்தாற் போல
போர்முகத்தில் வெற்றிகண்ட மன்னன் போல
ஆர்ப்பரித்தேன் அகமகிழ்ந்தேன் அழகுக் கண்ணா!

65.
ஓராசை என் மனதில் என்றும் கொண்டேன்
நேராக உனைத்தூக்கி இடுப்பில் வைக்க
பேராசைஎன்றே நான் காத்திருந்தேன்
சீராசை என்றேநீ வந்தாய் கண்ணா!

66.
கண்ணாலே உன்னுருவம் காணும்போது
கண்ணுக்குள் உனைவைக்க முயற்சி செய்தேன்
கண்ணெதிரே நீயின்றி வாடும்போது
கண்ணுக்குள் உன்னுருவம் கண்டேன் கண்ணா!

67.
எழிலூற்றாய் எனக்காய் நீ காட்சியளிப்பாய்
விழிநிறைய உன்னுருவம் பருகித்திளைப்பேன்!
குழலூதிநீ மறைந்தபோது அழுது நிற்பேன்
தழலினில் துடிக்குமெனை காப்பாய் கண்ணா!

68.
மோகமாய் புன்னகைத்து வசமாக்கி கோபியரை
வேகமாய் களித்து நீ விளையாட்டு காட்டுகையில்
தாகமாய் வந்தமான் வறண்டகுளம் கண்டதுபோல்
சோகமாய் ஏங்கிநான் பார்த்திருப்பேன் உனைகண்ணா!

69.
எனக்காய் நீ என்றாவாய் எனைமட்டும் கொஞ்சிடுவாய்
எனக்காத்து ஏங்குகின்றேன் என் குறை நீதீர்ப்பாயா
உனக்காய் மட்டுமே உயிருடனே காத்திருப்பேன்
மனக்காயம் தனைதுடைத்து எனைக்காப்பாய் என்கண்ணா!

70.
கோடைவெயிலுக்குப் பின்வரும் மழைபோல் நீ
வாடிநிற்கும் எனைமீட்க ஓடியே வருவாயா?
வாடைக்காற்றிலே வாட்டமுற்ற மலர்போல் நான்
ஓடிவந்தெனை காத்து உயிர்ப்பிப் பாயா கண்ணா!

71.
பாராமுக முந்தன் எனதுயிரை துடிக்கவைக்கும்
சேராதுன் மனதை சேய்பசியால் துடிப்பதுபோல்
நீராவிவெயில்பட்டு மறைவதுபோல் தவிக்கின்றேன்
நாராயணனாம்உன் அடிமையன்றோ நான்கண்ணா!

72.
கொஞ்சமாய் நீ பேசி முகம் நோக்க விலை எனினும்
வஞ்சமே இன்றி நான் வலம்வருவேன் உனைஎன்றும்
தஞ்சமே நானென்றும் உன்னன்பு மடியணைப்பில்
நெஞ்சம் நிறைய உனை காதலிப்பேன் கண்ணா!

73.
மாசில்லாமனத்துடன்தான்மன்னவனேஉனைநினைத்தேன்
காசில்லா இதயமிது கருணை செய் கார்முகிலா
நேசமது நான் வைத்தேன் நாகுழறி பேசிவிட்டேன்
பாசமுடன் எனை மன்னித் தருள்வாயா நீகண்ணா?

74.
இத்தனை பாராமுகம் என்னுயிரை உருக்கிடுமே
அத்தன் உனை யன்றி ஆர்பாதம் தொழுதிடுவேன்
பித்தனைப்போல்உன்காலைப்பற்றி நின்றேன்மன்னவனே
முத்தனைய பல்லழகா மன்னித்திடு எனைகண்ணா!

75.
உன்னினைவே எனைநாளும் உயிரூட்டி வாழவைக்கும்
என்னுயிரும் உடலுமுனை அனுதினமும் ஏங்கி நிற்கும்
தன்னினைவே இன்றிஉனை எந்நாளும் போற்றுகின்றேன்
மன்னவனே எனைஏற்று மகிழ்விப்பாய் என்கண்ணா!