Sunday, September 9, 2007

பதில் சொல் என்னுயிரே.....



பதில் சொல் என்னுயிரே.....

மாரியம்மாவும்
மேரியம்மாவும்
கருணைக் குன்றுகள் தாம்.....

மாரியப்பனும்
மேரி சூசையும்
மணந்தது இங்கே தான்....

கிருஷ்ணனும்
கிறிஸ்டோபரும்
காதலித்தது இங்கே தான்....

மீனாட்சியின் உள்மூச்சும்
கருணை மேரியின் வெளிமூச்சும்
ஸ்பரிசிப்பது இங்கே தான்....

கற்பூர வெளிச்சமும்
மெழுகுவத்தி வெளிச்சமும்
சங்கமிப்பது இங்கே தான்.....

இருகோயில்களுக்கும்
வந்திறங்கிய செங்கற்களும்
ஒரே சூளையிலிருந்து தான்...

ஆண்புறா கோயிலிலும்
பெண்புறா சர்ச்சிலும் தானே
உறங்குகின்றனவாம்....

இத்தனை ஒற்றுமைகளும்
இங்கே அமைந்திருக்க
உன் தந்தை பூசாரியும்
என் பங்குத்தந்தையும்
சம்பந்திகளாய் மாறுவரோ?

தோளாட்டுப்பாடல்



தோளாட்டுப்பாடல்

தாயின் தாலாட்டும்
தாய்மாமனின் தோளாட்டும்
எல்லா மகவுக்கும் கொடுப்பினை இல்லை...
எனக்களித்த் இறைவனுக்கு நன்றி...
அன்று கருடன் தாங்கிய விஷ்ணு
அகில உலகம் அள்ந்தான்...
மாமன் தாங்கிய நான்
அன்பு உலகம் அளப்பேன்...
கண்ணனின் தாய் மாமன் அல்ல நீ!
தன்னுயிர் கருதா தாயின்
மறு உருவம் நீ!
என் தாயிட்ட பிச்சையாகிய
என்னுயிருக்கு காவலனாய்
என் தாய் மாமனே நீ!
என் கைகளுக்கும் வலு வரட்டும்..
தோள் தாங்கிய உன்
தாள் தாங்குவேன்!
அது வரை
நன்றியெனும் சிறு பொரியை
நானளிப்பேன் சுவைத்துக்கொள்!
சிறிய பூவுலகம் எனைத் தாங்கும்
ஹெர்குலிஸே நன்றி நன்றி!

படக் கவிதை -1

படக்கவிதை - 2

அன்னையே வணங்குகிறேன்!




அன்னையே வணங்குகிறேன்!

அழகிய மலரினில் அமர்ந்திட்ட தேவியே
அடியவன் வேண்டுதல் கேட்டிடு நீ!
தழலினில் விழுந்திட்ட புழுவினைப் போலிங்கு
தவித்திடும் இவன் குரல் கேட்டிடு நீ!
நிழலினைப் போலிங்கு தொடர்ந்திடும் விதியெனை
நிம்மதி குலைப்பதைப் பார்த்திடு நீ!
இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!

கொடுமைகள் புரிந்திட்ட அசுரரைக் கொன்றன்று
கொற்றனைக் காத்திட்ட தேவியும் நீ!
அடுத்தடுத் தெனையிங்கு ஆட்டிடும் ஊழ்தனை
அற்றொழித் துடனென்னைக் காத்திடு நீ!
விடுதலை யொன்றின்றித் துடித்திடும் அடியவன்
வீழ்ந்துந்தன் பாதங்கள் பணிந்திடுவேன்!
குடுகுடு வென்றுடன் சடுதியில் காத்திட
குமரனின் தாயுன்னை வேண்டுகிறேன்!

ஐங்கரன் தாயுனை அனுதினம் போற்றியே
அடிதொழு துளமுடன் வணங்கிடுவேன்!
பைங்கனி சுவையொத்த உன்பெய ரோங்கிட
பாமரன் நானுனைப் போற்றிடுவேன்!
பைங்கிளி தோளினில் பாங்குடன் அமர்ந்திட
பார்ப்பவ ருளம்குளிர் விப்பவளே!
பைங்குழல் மகுடத்தைத் தாங்கிட ஜோதியாய்
பாரினில் வந்தெனைக் காத்திடுவாய்!