Thursday, June 12, 2008

என்னுயிர்த்தோழி மஞ்சு!


தன்வச மாக்கினள் தரணியெலாம் அன்பினால்
தன்னையே தந்தென் மனதினில் நிறைந்தனள்
உன்விதி உன்கையில் உன்வெற்றி உறுதியே
என்வசம் தந்திடு சோகமெலா மென்றனள்...


என்றேனும் என்கண்ணில் நோக்கிடில் நீர்த்திவலை
அன்றெல்லாம் மனம்கசிந்து கொண்டனள் மனக்கவலை
நன்றே பலபகிர்ந்து நகையூட்டி எனைஎன்றும்
முன்றானை தனில்முடிந்து கொண்டனள் என்தாயாய்...


நானுண்ணக் கண்டென் முகம்நோக்கி நின்றனள்
தேனுன்னும் குழந்தையாய் தெவிட்டாமல் நோக்கினள்
ஊனில் கலந்தேன் உதிரத்தில் கரைந்தனள்
வானில் உறைந்திட்ட என் தாயை ஒத்தனள்...


காரிருள் தனில்மூழ்கிக் கரைந்திட்ட என்னையே
ஓரிரு நாட்களில் உயிரூட்டி நிறைத்தனள்
தூரிகை எனும் அன்பால் தூயனாய் என்னையே
மாரிபோல் பொழிந்தென் மனதில் உறைந்தனள்...


முத்தாய் நகைத்து்என் முகம்துடைத்து கொஞ்சினள்
வித்தாய் நல்லெண்ணம் தனைஎன்னில் விதைத்தனள்
சொத்தாய் அன்பையும் பண்பையும் கொண்டனள்
அத்தாய் யாருமில்லை என்னுயிர்த் தோழியே!

தேன் துளிகள் ! பகுதி - 5

1.

மீளா உறக்கத்துடன் மேன்மையை அடைந்தாய்
வாளா இருந்த எம்மை வருந்தி யழச்செய்தாய்
தோளாய் நின்றாய் ஏழையர்தம் துன்பத்தில்
கோளாய் எமனுன்னை பிரித்தானே மன்னையாரே!

2.

தீக்குளிப்பர் மானிடரின் தோல்போர்த்தி அலைபவர்கள்
வாக்களிக்கக் கூட வகையாய் யோசிக்காது
ஏய்க்கப்பிறந்தவர்க்கே என்வாக்கு எனச்சொல்வார்
போக்கற்ற இம்மனிதர் பூமிக்கே பாரமென்பேன்!

3.

வாராது வருமென்று பார்த்திருந்தேன் நாள்தோறும்
சீராட்டி என்கேசம் சீர்குலைத்து -சீராக
என்னாசை என்நேசம் என்றெல்லாம் ஆதரித்து
சின்னதாய் காத்தாளென் தாய்

4.

உயர்த்தியவள் எனையிந்த சமுதாயத் தேரேற்றி
உயர்த்தி யவள் எனையீந்த தாயவளாய் மாறியவள்
உயர்த்தி யவள் செய்தளித்த பேருவகை மதிப்பினிலே
உயர்த்தியவள் பெருமை தோன்ற பாடிடுவேன் பாட்டினிலே!

5.

நானெனு மகந்தை யகற்றிடவே தினம்
தேனினு மினிய உன்நாம முரைத்தே
ஊனும் உறக்கமும் இன்றியே நாளும்
வான் புகழோனே உனை வணங்குவேன் நான் !

6.

தாயே நீதந்த முலைப்பால் மறக்கலையே
வாயமுதின் சுவை இன்னும் மாறவே இல்லையே
நீயேன் பறந்திட்டாய் எனைஇங்கே விட்டுவிட்டு
வாயேன் திரும்ப என்னை அமைதியாய் உறக்காட்டு!

7.

நான் உன்னை பார்த்தபோது நாலுவகை சொர்க்கம்
நாம் கூடிக் களித்த போதே நூறுவகை சொர்க்கம்
தேனொழுகும் பழச்சுவையை நான் சுவைத்தபோதோ
வானெல்லாம் நிறைந்துவிட்ட கோடிவகை சொர்க்கம்!

8.

பூக்களை நனைக்க ஒருபனித்துளி முயன்றதுபோல்
பாக்களை இயற்றிநான் பாரினைத்திருத்த நின்றேன்
மாக்களை மானிடராக்கவும் ஏலுமோ
சாக்கடை என்றும் சந்தனமாகுமோ?

9.

வேண்டாத ஒன்றினை வேண்டிக் கேட்டுநான்
தாண்டினேன் இறைவனின் விதிகளை - ஆண்டியாய்
ஊரெங்கும் அலைந்தபின் ஓர்நிலையும் உணராமல்
சீர்பெற வாடினேன் நான்.

10.

அறியாது போனேன் உன் அன்பை நானும்
உறிமீது விழுந்த பெருமத்து போல
குறிதவறிப் பட்ட குறும்பாடு போல் நான்
தறி கெட்டுவீழ்ந்தென் காப்பாற்றுவாயா?

11.

எந்நாளோ என்னுயிரை உனக்காய் அளிப்பதும்
அந்நாளோ உன்னிலே என்னை இழப்பதும்
உன்னால்தான் இனி இயங்கிடும் என்னுடல்
பொன்னாளே அது நான் உன்னை அணைப்பது!

12.

கவலைகள் களைந்திடு கார்முகில் கலைந்திடும்
திவலைப் பனித்துளி கதிர்கண்டு கரந்திடும்
உவகை கொள் உன்னை உலகம் அண்டிடும்
தவறு உணர்ந்தவர் வாழ்வும் செழித்திடும்!

13.

நானுண்டு எனச்சொல்வான் நகைத்து முகம்குவிப்பான்
தேனுண்டோ சுவைத்திட நாக்கு வரளுதென்பான்
வெண்ணெய் திரண்டதே வழித்து எடுஎன்பான்
மண்ணை உண்டவன் என்னையும் உண்டானே!

14.

பண்பாடு மறக்காத பெண்பாவை கண்டேன்
எண்குணத் தாளாயவள் விளங்கிடக் கண்டென்
உண்மையா யவள்தாயாய் மாறிடக் கண்டேன்
தண்குணத் தாளையென் தோழியாய்க் கொண்டேன்!

தேன் துளிகள் ! பகுதி - 4

1.

தரவேண்டும் மணவிலக்கு புரியாத மகளிருக்கு
சிரமமே இல்லாமல் மனவிலக்கு வந்தபின்னர்
வரவினும் கூடுதல் செலவென்றே ஆனபின்னர்
பரதேசம் போவதிலே மகிழ்வுண்டு கணவனுக்கு!

2.

காத்திடுவான் என் கண்ணன் எப்போதும் என்னையே
பூத்திடுவான் மத்தாப்பாய் புன்னகைக்கும் போதெல்லாம்
சோர்ந்திட்ட போதெல்லாம் சொற்களால் வருடியே
கோர்வையாய்ப் பேசியே கவர்ந்திடுவான் என் மனதை!

3.

கொண்டுவந்தவன் இங்கு விட்டுப் போவதும் தான் என்ன?
வந்து சேர்ந்த மனிதரெல்லாம் அனுபவித்தது என்ன?
உடுத்ததுணியும் உருவிக்கிட்டு எரித்துப்போகும் உறவு!
படுத்து மீண்டும் நீ எழுந்தா நன்றி சொல்லு இறைக்கு!

4.

நான் என்ற அகந்தை தான் ராவணனை கொன்றது!
வாளெடுத்து வீசியோரும் மண்ணிலே புதைந்தனர்!
பேணியதோர் அன்பும் நல்லதோர் நம்பிக்கையும்
தோள்கொடுத்து நட்பையே வளர்த்திடுமே நீஅறிவாய்!

5.

புதுமையிது என்றெண்ணிக் குழம்புகிறேன் நானும்
பதுமையாய் நான் மாறி பகரவும் ஓர் வார்த்தையின்றி
இது என்ன அதிசயம் என்றெண்ணி மயங்குகிறேன்
எதுவேண்டாம் என்றாயோ அதுவேண்டிக் கலங்குவதேன்?
மது உண்டு மயங்குதல் போல் மனதுக்குள் மறுகுவதேன்?

6.

வந்தது வசந்தமென கொண்டதொரு களிப்பும்
சந்தமுடன் கலந்துநறு மணம் பரப்பும் கவியும்
இந்திரனும் ஏங்கிவிடும் ஏந்திழையின் வனப்பும்
சிந்தைதனை மயக்கிவிடும் விந்தைஎன்ன சொல்வேன்?!

7.

பெருகவே உள்ளமது உள்ளும் வண்ணம்
சிறுகவே உண்டியது சிறுத்தைப் போலே
கருகவே மனதினில் காழ்ப் புணர்ச்சி
வருகவே வாழ்வினில் இன்பம் என்றும்!

8.

கண்ணனவன் அருளினிலே களித்திருப்போம் வாருங்கள்
கருணைமிகக் கொண்டவனாம் கார்மேக வள்ளலவன்
திண்ணமுடன் காத்திருந்து தேன்சுவையாய் வாய்மொழிந்து
அருள்வழங்கும் மன்னனவன் ஆட்கொண்டான் எனையணைத்தே!

9.

துணை நின்றாய் தூணாய் என்மனம் சரியும்போது
இணையின்றி எனைக்காத்தாய் எளிதினில் மறக்கிலேனே
உனையன்றி வேறுருவம் உலகினில் காண்கிலேனே
நினையன்றி வேறாரோ எனைக்காப்பார் சொல்கண்ணா!

10.

நீயில்லா உயிரதுவும் மதிப்புளதோ இவ்வுலகில்
தாயினைப்போல் வாரியள்ளி எனையணைத்து முத்தமிட்டு
நோய்தீர்க்கும் அருமருந்தாய் அன்பான சொல்சொல்லி
வாய்நிறைய புகழ்ந்தென்னை வாழவைப்பாய் என் தேவி!

தேன் துளிகள் ! பகுதி - 3

1.

காலம் வந்ததே காத்திருந்த கணங்கள் போய்....
நாடெங்கும் மறுமலர்ச்சிக் குரல்கள் ஒலிக்குதே
இளைஞரின் எழுச்சியும் நம்பிக்கை ஊட்டுதே...
வீடெங்கும் நம்பிக்கை விளக்கினை ஏற்றிடு!

2.

நான் செய்யும் வேலையால் நீமகிழ வேண்டும்
தேன் போன்ற சொல்லால் உன் புகழபாட வேண்டும்
கூன்பிறை நெற்றியில் முத்தமிட வேண்டும்
ஏனெனில் நீதானே நான் வணங்கும் அன்னை!

3.

என்றும் உன்னையே எண்ணத்தில் வைத்தேன்..!
ஒன்றும் அறியா மனதுடன் இருந்தேன்...!
என்றும் நிலையிலா உடலினைத் துறப்பேன்...!
அன்றும் ஆவியாய் உனையே நினைப்பேன்!

4.

அச்சொல் உன்னைச் சுட்டதா அன்பே
உன்மனம் சுட்டதோ ஊமைக் காயமோ?
என் மனம் மயங்கிக் கூறினேன் அதனை
மனந்தனில் வைத்திடவேண்டாம் கண்ணே!

5.

குருச்சேத்திரப்போருக்கு மீண்டும் ஆயத்தமாகு
தெருவெங்கும் படைகுமி;வீரர்களைத் தயாராக்கு.
குருவும்சரி சிஷ்யனும்சரி எல்லோரும் எதிரிகளே
உருவாக்கு புதுக்கீதை எதிரிகளை தரையாக்கு!

---வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள மக்களின் புதிய பாரதம்!

6.

அன்பாலே கொல்வதாலோ ஆதரித்து அணைப்பதாலோ
என்பையும் உருக்கியே என்னிடம் கரைவதாலோ
பண்பைப் பெருக்கியே பாசம் பொழிவதாலோ
உண்மை அன்பினால் எனைஉரு வாக்கினாயோ

7.

ஊக்க மது தந்தாயோ நீயெனக்கு
ஊக்கமது அளித்தாயோ என்கவிதைக்கு
ஊக்கம் அது வந்தபின் தான் நானும்
ஊக்கம் அதுபற்றிப் பாடலானேன்!

8.

அன்பாய் அணைத்து நடப்பீரே மானிரே
வம்புக்கதை பேசிப்பேசி வாழ்ந்த கதைபோதும்
துன்பத்தின் போதுமட்டும் எமைஇங்கு பூசிப்பீர்
செம்பளவு நீரிலே வாழ்ந்திடுமோ இவ்வுலகம்?

9.

அடைந்திடு மனமே அரனவன் சரணதை
உடைந்திடு முனது உளக்கு மையல்கள்
படைபல வரினும் பயமிலை தொழுது
கிடைத்திடில் அவனது அருளினி சுகமே!

10.

துணை வருவாயோ எந்தன் உயிரே
இணை பிரியாமல் எனைச் சேர்வாயோ
பிணை யாய் இருவரும் பிடியுண்டோமே
கணை இட்ட காமன் களிக்கின்றானே!

தேன் துளிகள் ! பகுதி - 2

1.

நிலைத்திருக்கும் இறையதனை எண்ணிடாமல் ஏன்மனிதா
கலைந்துவிடும் கனவுகளைக் கைக்கொண்டாய் சொல்மனிதா
நிலைகுலையும் எண்ணங்களை விட்டொழித்து நீயும்தான்
விலையிலா வாழ்வறங்கள் கைக்கொள்வாய் நீமனிதா!

2.

உண்டென்று சொல்வார் சிலர் இல்லென்பார்
கண்டவருமிலர் அதை விண்டியோருமிலர்
சிவனென்பார் சிலர் விஷ்ணுவென்பார் சிலர்
அவனன்றி அசையாது ஏதும்இது உண்மையே!

3.

செல்கிறதே என்னுயிர் என்னை விட்டே பிரிந்து
மெல்லமெல்ல அடங்கிடும் என் மூச்சு திரிந்து
சொல்லும் அற்றுப்போய் செயலும் மிகஒடுங்கி
வெல்லும் என்றுமே மரணந்தான் உணர்மனமே!

4.

எதுவென்று நீநினைத்தாய் அதுவாக அத்தனவன்
புதுமைகள் பலபுரிவான் புன்னகையால் ஆட்கொள்வான்
பதுமைபோல் அவன்முன்நீ பண்ணிசை பாடிடுவாய்
ததும்பாமல் அவனருள்தான் தந்திடுவான் கைகூப்பு!

5.

செயலினாலே மனம்புனிதம் ஆகும் கண்டீர்
முயற்சியாலே தான்முடியும் எல்லாம் காண்பீர்
துயரம் யாவும் தீர்ந்துபோகும் கடும்உழைப்பால்
வியனம் யாவும் முடியுமென்றும் அவன்அருளால்!

6.

காப்போம் கயவரின் கண்ணியிலிருந்து
கண்மணி போலே நம் நாட்டை
நல்லோர் போற்ற வாழ்ந்திடு நாளும்
சொல்லும் செயலும் ஒன்றென்றிரு!
வல்லோர் வைத்தது சட்டமென்றே
வாழ்ந்தது போதும் மாற்றிடுவோம்!

7.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்துபார் என்றும்
செயலிலும் சொல்லிலும் ஒன்றென - கையகத்தில்
தீஞ்சொற்கள் இன்றியே நாளும் மகிழ்ந்திரு
பூஞ்சோலை யாகும் உலகு.

8.

குணங்களால் அனைவரையும் வென்று
கணங்களில் அன்பினைப் பிழிந்துதந்து
மனங்கவரும் மாண்பினைப் பெற்று
சினங்குறைந்து வாழ்வோம் வாரீர்!

9.

எண்ணங்களே நம்விதைகள் - விதைப்போம்!
எழுச்சிகளே நம் கனவுகள் - கதைப்போம்!
தவறுகளே நம் முன்னேற்றப்படிகள் - மிதிப்போம்!
வெளிச்சங்களே நம் விதிகள் - உதிப்போம்!

10.

திரும்பி வந்து சேர்ந்திடடி போனசுவ டறியாமல
விரும்பித்தானே வந்தடைந்தாய் முன்னர்நீயும் இப்போது
கரும்புச்சொற்கள் கசந்ததுமேன்? கனவெல்லாம் கலைந்ததுஏன்?
இரும்பு நெஞ்சத்தாளே இளகிடுவாய் நீயும் கொஞ்சம்!

தேன் துளிகள் ! பகுதி - 1

1.

நிறைபவ னென்றே நினைத்தேன் என்னை
உறைபவ னாகிடத் துடித்தேன் உன்னுள்
சிறையிட என்னை அளித்தேன் உனக்குள்
குறையில் லாதவன் அல்லன் யானே!

2.

சந்தேகமே பொசுக்கிவிடும் உன்தேகமே என்றுணர்
வந்தே எரிக்கும் உன் வாழ்வை நீ அறி
சந்தமுள்ள வாழ்வை அழித்தெரியும் கண்டுணர்
சொந்தங்களும் சேராமல் சோகம் வரும் தெளி!

3.

கொன்றுவிடு உன்னுள் உறங்கும் கோபந்தனை
வென்றுவிடு மனதின் காமவி காரந்தனை
மென்றுவிடு உன்னுள் உயிர்க்கும் கோரந்தனை!
சென்றுவிடு ஆழமாய் ஓமெனும் ஒலியினில்!

4.

மதுசூதனா மனதை மயக்கும் மணிவண்ணா
இது சரியா உன் லீலைதகுமா என் மன்னா
பொதுவில் வந்தென்னைக் களவு செய்ய
இதயம் வைத்ததென்ன சொல்லடா கண்ணா!

5.

காத்தாயே டாக்டர் என்னை நீ
கடும்நோய்ப்பிணியிலிருந்தே!
சீத்தாவை அனுமான் தசகண்டன்
சீண்டாமல் காத்ததைப்போல்!
தேத்தியெ விட்டாய் என்னை
தேரைப் போல் இருந்தேன் நானே
காத்திட்டாய் என்னை நீயே
தேரைப்போல் மாற்றி னாயே!

6.

சிகரத்திலேறி முகவரி தேடு!
சிந்தனைமுழுதும் சிவப்பினை ஏற்று!
நிந்தனை இன்றி வாழ்ந்திடப்பாரு!
நிலவினைத்தொடலாம் கைகளை உயர்த்து!

7.

தரணியதில் தைரியந்தான் வழிநடத்தும் உன்னை!
பரபரப்பாய் பேசவைக்கும் உன்வியக்கும் செயல்கள்!
சாந்தமுடன் விவேகமுந்தான் வெல்லவைக்கும் உன்னை!
பாந்தமுடன் பேசு உனது வார்த்தைகளே வெல்லும்!

8.

சூன்யமாய் உள்ளே நுழைந்ததன் பின்னர்நீ
வானளவு உள்ளில் வளர்ந்ததும் தேனாய்
இனித்திடும் அன்புரைகள் வாரிவழங்கி என்னை
நுனிமுதல் கால்வரை மாற்றினாய் நீ!

9.

ஏதுஇடம் இல்லாதவனுக் கிவ்வுலகில் என்றும்
போதுவதை சீருடன் நீதிரட்டு அல்லாது
சூதுவாதின்றியே நீயிருப்பின் எல்லோரும்
ஊதியே தள்ளிடுவார் பார்!

10.

முத்தான வரிகள் முழுமையாய் போட்டு
சத்தான சுவையுடன் சந்தங்கள் சேர்த்து
வித்தான கருத்துக்கள் பலவும் சேர்த்து
கொத்தான கவிதை படைத்தோமே இன்று!

காலம் கடந்த ஞானம்

நீண்டகால சோகமொன்றைப்
பகிர்ந்துகொள்ளப்போகிறேன்...
மாண்டவர்கள் மீண்டகதை
பறையடிக்கப் போகிறேன்...
ஆண்டான் அடிமை என்றதொரு
அவலம் சொல்லப் பொகிறேன்..
வேண்டிப்பெற்ற சாபமொன்றின்
சோகம் சொல்லப்போகிறேன்..

காந்தியென்ற மனிதர் சொன்ன
உண்மை பொய்யாய்ப் போனதே
சாந்தி சமாதானமெல்லாம்
காற்றில் பறக்கலானதே...
மாந்தரெல்லாம் மாக்களாகி
மானம் இழக்கலானதே...
வேந்தராட்சி போனபின்னும்
வேங்கைவேட்டை வாட்டுதே!

இல்லறங்கள் செழிக்கவேண்டி
இலக்கியங்கள் சொன்னதும்
நல்லறங்கள் தழைக்கவேண்டி
நல்லவர்கள் நவின்றதும்
சொல்ல முடியாதபடி
சோர்ந்து போகலானதே
வெல்லவழிகள் ஏதுமின்றி
வேதனைகள் வாட்டுதே!


புவி தழைக்க புதிய நீதி
நாளை வந்து சேருமோ
தவிக்கும் ஏழைவர்க்கமும்
தாகம் தீர்ந்து உயிர்க்குமோ
கவிகள் பாடி உலகையே
கரைகள் ஏற்ற முடியுமோ?
செவிகள் குளிர ஏழ்மை மறைந்த
செய்தி கேட்க இயலுமோ?