Sunday, March 20, 2011

அவனும் அவளும்..

அவன்..
அவள் ஒருத்திக்காக
உலகையே ஒதுக்கினான்..

அவளோ
உறவுகளுக்காக
அவனையே ஒதுக்கினாள்...

அவன்
புற்றுநோயால்
புலம்பிக்கொண்டு இருந்த வேளையில்
அவள்
புத்தாண்டைக் கொண்டாடினாள்..

அவனது
கனவுக்கோட்டை
செங்கல் செங்கலாய்
உதிர்கின்ற வேளையில்
அவள்
பொங்கலோ பொங்கல் என்று
உறவுகளுடன்
கரும்பு கடித்துக்கொண்டிருந்தாள்...

அவனது
உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த
உருக்கமான நேரத்தில்
தொடர்பிலா பிறப்பிற்கு
கேக் ஊட்டினாள்...
பரிசுகளும் பார்ட்டியுமாய்
பரபரப்பில் இருந்தாள்...

செம்புலப்பெயல் நீர்
கொஞ்சம் கலந்ததைப் போல்
நெஞ்சங் கலந்ததாம்
அவர்களின் நேசம்...

அவனது உயிர்மூச்சு
பிரிகின்ற நேரம்
அவளது பெருமூச்சு
காத்திடவில்லை..

Friday, March 4, 2011

எட்டு எட்டு எட்டும் வரை எட்டு..!

எட்டு எட்டு
எட்டும் வரை எட்டு..உன் இலக்கு
எட்டும் வரை எட்டு..!

எட்டும் வரை உன் லட்சியம்
எட்டும் வரை
முட்டும் வரை உன் சிரம்
வானில் முட்டும் வரை எட்டு..!

உன்வெற்றி எட்டுத்திக்கிலும்
முட்டும்வரை
கைகள் ஓய்ந்து தட்டும் வரை எட்டு..!

உன் வியர்வை கொட்டும் வரை
உழைப்பின் பெருமை தட்டும் வரை
விண்ணேறி வானைக்
கட்டும்வரை எட்டு..!

உலகெலாம் உன்பெருமை எட்டும்வரை
ஊரெங்கும் உன்புகழ் முரசொலித்துத் தட்டும் வரை
எட்டு எட்டு எட்டும் வரை எட்டு..!

எட்டாத கனவென்று ஏதுமில்லை என்றே
மட்டின்றி மாய்ந்துவிட போதுமில்லை என்றே
எட்டு எட்டு நீ எட்டும் வரை எட்டு..!

வானுனக்கு எல்லை இல்லை மேலும்
மானுனக்கு நிகரில்லை வேகம்
எட்டு எட்டு எட்டாத உயரமெல்லாம் எட்டு..!

தொட்டுவிட்ட பகை முடிக்க நீயுந்தான்
வெட்டுப்பட வெட்டுப்பட முளைத்திடுவாய் என்றே
எட்டு் எட்டு எட்டுத்திக்கும் எட்டும் வரை எட்டு..

ஒரு சந்தேகம்...
















விரலில் தீப்பற்றினால்
வெடுக்கென்று
உதறுவாய் நீ...!

பலகாரம் சுடும் மனைவிமீது
கொதிக்கும் எண்ணை பட்டுவிட்டால்
சட்டியை உடைத்தெறிவாய் நீ..!

தீக்குள் விரலை வைக்கும்
அறியாத தன்மகனை
தாவி அணைத்தே
ஆறுதல் தருவாய் நீ..!

அடுத்த வீட்டில் பற்றிய தீயை
பரிதாபம் என்றில்லாவிட்டாலும்
பாதுகாப்புணர்வு கொண்டேனும்
பறந்தோடி அணைப்பாய் நீ..!

எங்கோ நடந்த
எதிர்பாரா விளைவுகளுக்காய்
மதம் பிடித்துப்போய்
தீக்கொள்ளி கையிலேந்த
மனம் வந்ததெப்படி நண்பா..?

நாங்களும் இந்தியர் தான்..!

நீங்கள்
மாலையில் மணக்கத்தான்
நாங்கள்
நார்களானோம்...

நீங்கள்
கொடிகளாய்ப் படரத்தான்
நாங்கள்
வேர்களானோம்...

நீங்கள்
நிழல்களில் இளைப்பாறத்தான்
நாங்கள்
தருக்களானோம்...

நீங்கள்
நிறம் ஒளிரத்தான்
நாங்கள்
கருக்கலானோம்..

நாங்கள்
நெருங்கிவந்தால் மட்டும்
நீங்கள்
வெறுக்கலாமோ..?