Sunday, November 27, 2011

ஒரு நடிகனின் கதை..

ஒரு நடிகனின் கதை..

இவ்வுலக மோரங்க நாடக மேடை 
நவ்வுத லோடே* ஆடவர் மடந்தையர்
பவ்விய மாகவே படைத்தனர் பாத்திரம் 
செவ்விய வாழ்வதும் செத்துமோர் வீழ்வும்
அவ்வளவே யதன் நுழைவும் புறமும்..


மானிடன் வாழ்வது மாந்திடில் அறிவாய்
ஊனுடன் உயிரதும் கொண்டது கோலம்..
கோனவன் ஆயினும் கொடுங்கையராயினும்
தேனதும் தேளதும் கொட்டிடும் வாழ்வில்
ஏனது கேட்டிடில் ஏழது அங்கமாய்..


முதலாம் அங்கம் முற்றுமே அறிந்திடா
நுதலது சிறந்திடும் மழலையின் வாழ்வாம்.
முதலது தேவை பசிக்கொரு உணவாய்
அதனது இழப்பில் அழுகையும் சிணுங்கலும்
வதனம் நிறைத்திடும் மென்னகை முழுமையாய்…


ஈரது பருவம் பாலகன் தோற்றம் 
கூரிய அறிவும் கொண்டதோர் கல்வியும்
வாரிய கூந்தலும் வண்டதன் குணமும்
நேரிய தோற்றமும் நேர்மையும் கொண்டொரு
ஓரது நத்தையின் நடையதில் தயக்கம்..


மூன்றா மங்கம் காதலில் மயங்கும்
தோன்றா கவிதைகள் தோன்றியே முயங்கும்
ஆன்றோர் பகர்ந்தது ஆங்கே கசந்திடும்
ஊன்றிடும் காதலில் ஆட்டமும் பாடலும்
தோன்றிடும் உலகம் தோழியின் முகமதில்..


அங்கமது நான்கினில் பலவகை உறுதிகள்
எங்கது காணினும் வீரமே முழங்கிடும்
தொங்கிடும் வாளது தலையதன் மீதினில்
பொங்கிடும் வீரமோ விதியையும் வளைக்கும்..
அங்கமே போயினும் மானமே உயிராம்…


ஐந்ததன் அங்கமோ அன்புடன் அறிவுரை
ஐம்பதைத் தொட்டிடும் அனுபவ நியாயமும்
வயிறது விரிந்திடும் கண்ணது அயர்ந்திடும்
அயரா அனுபவம் அருங்கதை கூறிடும்
வயிரமாய் வார்த்தைகள் வந்திடும் வளமதாய்..


ஆறினில் அடங்கிடும் ஆண்மையின் தோற்றம்
வேறது உடலென வளைந்திடும் கூனதில்
ஏறிய இடைத்துணி இறங்கிடும் நழுவியே
தேறிடா நயனங்கள் சுருங்கிடும் தேடலில்
கூறிடும் வாழ்க்கையின் கொடியதோர் முடிவை..


ஏழா மதனது அங்கமே இறுதியாம்
வாழா ததொரு வாழ்வினை ஏங்கிடும்
கோழையாய்ச் சுருங்கிடும் குழந்தையாய் மனதும்
தோழமை தேடியே தொலைந்தவை யாசித்து
ஏழையின் ஐம்புலன் போய்த்திரை விழுமே..





• நவ்வுதல் - மிகுந்த ஆர்வமுடன் விரும்புதல்

எழுத ஊக்குவித்த ஷேக்ஸ்பியருக்கு நன்றி.

All the World's a Stage monologue by Shakespeare

All the world's a stage,
And all the men and women merely players:
They have their exits and their entrances;
And one man in his time plays many parts,
His acts being seven ages. As, first the infant,
Mewling and puking in the nurse's arms.
And then the whining school-boy, with his satchel
And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover,
Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress' eyebrow. Then a soldier,
Full of strange oaths and bearded like the pard,
Jealous in honour, sudden and quick in quarrel,
Seeking the bubble reputation
Even in the cannon's mouth. And then the justice,
In fair round belly with good capon lined,
With eyes severe and beard of formal cut,
Full of wise saws and modern instances;
And so he plays his part. The sixth age shifts
Into the lean and slipper'd pantaloon,
With spectacles on nose and pouch on side,
His youthful hose, well saved, a world too wide
For his shrunk shank; and his big manly voice,
Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,

Saturday, November 19, 2011

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - ஐந்து

41.2002.

பணியதில் அவன் நேர்மை பணிவினில் பண்பதனில்
பிணியெவர்க் கெனினுமவன் பரிவினைக் காட்டியதால்
துணிவுக் கொருமனிதன் என்றபேர் பெற்றதனால்
கணிணியில் சிறப்பெனவும் பணியிடம் போற்றியதே..!


42.2003.

ஓர்தங்கை கரைசேர்த்த கடமையைச் செய்தயிவன்
நார்தனி நூலாக நொந்தது போல்நொந்தும்
மார்நிறை மனத்துடனே மறுதங்கைக் கோர்வரனை
வேர்வரை வெந்தாலும் கனிமுகத்துடன் சேர்த்தான்..!


43.2004 

தனக்கென ஓர்பொருளை வாங்கிடத் தயங்கிடுவான்
சினமதை நாசியினில் சடுதியில் கொண்டாலும்
மனத்தள வில்சேர்ந்தோர் மேலது பரிவுகொண்டு
கனத்ததோர் சுமையிருந்தும் கனிவுடன் காத்திடுவான்..!


44.2005.

பணிகளில் முன்னேற்றம் பல்வித மாணாக்கர்
அணிகல னாக்கிடவே அவர்க்கொரு வழிகாட்டி
மணிகளில் மாமணியாய் மாற்றிட துணை செய்து
பிணியெது மின்றியவன் பிழைத்திருந் தனன் காணீர்..!


45.2006.

வழமையில் வாழ்வதுவும் கடமையில் கருத்ததுவும்
குழம்பிய மனத்துடனும் குமுறிடும் கடனதுவும்
நிழலெனத் தொடர்ந்திடவே நிம்மதி இழந்திடினும்
குழந்தையைப் போலவன்தான் குடும்பத்தில் வளையவந்தான்..!


46.2007

பஞ்சினில் பெருந்தீயும் பாய்ந்தது போலொருநாள்
பிஞ்சன்ன அவன் இதயம் இயங்கிட மறுத்ததுகாண்
மஞ்சென ஒருதோழி மறுதாயாய் வந்தவுடன்
தஞ்சமென தன்தாயை அவளினில் கண்டனனே..!


47.2008

அன்னையை அவன்மனந்தான் அனைவரில் கண்டாலும்
முன்னைய மாதரிடம் நுகர்ந்திடா வாஞ்சையதை 
கன்னலைத் தோற்கடிக்கும் கவின்மொழி யாளவளில்
தன்னையும் மறந்தனனே அன்னையை உணர்ந்தனனே..!


48.2009

சொத்தேதும் சேர்த்ததில்லை சொந்தமெனத் தங்கையரின்
அத்தனை சுகத்தினுக்கும் இவன்வழி காட்டிடினும்
பித்தனைப் போலிவனை பின்புறம் தூற்றினரே
அத்துடன் பெண்களிலே தங்கைகள் வெறுப்பானார்..!


49.2010

எத்தனை நல்லவனாய் இவன்வலம் வந்தாலும்
முத்தனை குணங்களதை முழுமையாய்க் கொண்டாலும்
பித்தனிவன் கடும்சீற்றம் பின்னுக்குத் தள்ளியதே 
செத்திவன் விழும்போது இக்குறை மாறிடுமோ..?


50.2011

இன்றுடன் இவன்வாழ்வில் சினமதைக் கைவிடுவான்
நன்றுடன் நல்வாக்கு நலம்பெற வழங்கிடுவான்
ஒன்றல்ல இரண்டல்ல ஓரைம்ப தைத்தொட்டான்
என்றும் அன்புடனே எவருடனும் இணைந்திருப்பான்..!

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - நான்கு

31.1992

இருமணம் ஒன்றியதா இல்லை நறுமணம் மயக்கியதா
திருமணம் முடிந்ததுவே திருவிழா நடந்ததுவே
இரு உடல் ஒன்றியதால் கருவனம் மலர்ந்ததுவே
ஒருவழி திறந்ததுவே உயிர்வதை தொடர்ந்ததுவே..!


32.1993

உலகியல் ஒழுகியதால் ஓர்உயிர் முகிழ்த்ததுகாண்
இலங்கிய திருமகள்தான் இதயமும் நிறைத்தனளே
சிலகணம் நினைத்ததும்தான் சீரியநினைவதுவாய்
கலங்கிய தாயவள்தான் கருணையில் பிறந்தனளோ..?


33.1994.

கற்றதோர் கல்வியதும் பெற்றதோர் அனுபவமும் 
உற்றதோர் நேர்மையனாய் உறுசெல்வம் சேர்த்ததுவே
மற்றதோர் கவலையில்லை யாயினுமோர் கவலை
பெற்றது தந்தையன்றோ ஈர்மணம் கொண்டிருந்தும்..!


34.1995

உடன்பிறவா தங்கையர்கள் ஒருதவ மிருந்தனரே 
கடன்பெற் றேனுமவன் கரைசேர்ப்ப னென்றனரே
விடமென் றறிந்திருந்தும் வினைப்பயன் மிகுந்ததனால்
கடமையின் பொருட்டவனும் கடுந்தவமிருந்தனனே..!


35.1996.

தேடாத இடமின்றி தேயாத ஓய்வின்றி
ஓடாத களமின்றி ஓயாமல் அவன் தேடி
ஆடாத நடமின்றி அயராமல் என்னாளும்
பாடாகப் பட்டவனும் தங்கைக்கு வரன்காண..!


36.1997.

வாழ்க்கையின் வனப்பதுவை வருந்தியும் கண்டவனோ
சீழ்க்கையின் ஒலிதனிலே சிலகாலம் கழிந்ததனால்
பாழ்க்கைதான் அவன்வாழ்வு என்றவன் தானிருக்க
தாழ்க்கை யுயராமல் தன்மகன் ஈன்றனனே..!


37.1998.

பட்டிடா பாடெல்லாம் பார்த்தபின் தங்கைக்கு
கிட்டிய வரனதுவாய் கிறங்கினன் மணச்செலவும் 
எட்டியதூரம் வரை எள்ளிநின்று எக்களிக்க
வட்டியில் வீழ்ந்தனன்காண் வாழ்க்கையில் தோற்றவனாய்..!


38.1999.

கிட்டிய செல்வமெலாம் கிடைக்கொரு ஆடெனவே
வட்டியெ னும்நரிதான் வகைவகையாய் உண்டதுவே
முட்டிய ரணம்தீர முகம்புதைத்து அழத்தோன்றும்
எட்டின உறவுகளோ எக்களித்து கொக்கரிக்கும்..!


39.2000.

தன்வாழ்வு போனதென்று தானழுது இருந்தாலும் 
மென்வாழ்வு வாழுகின்ற தன்சேய்கள் நலம்கொழிக்க
சின்னதோர் குறையதுவும் சிந்திடச் சம்மதியா
உன்னதன் அவன் தானேன உண்மையாய் விளம்பிடுவான்..!


40.2001.

கடமைக்குப் பெற்றதாய் பெற்றவன் கருதினாலும்
கடந்தநாள் கசப்பாகக் காரணமென் றிருந்தாலும் 
கடவுளுக் கிணையாய்த் தன்பெற்றவன் என்றதனால்
உடனிருந்து கருமங்கள் செய்ததொரு நன்மகன் தான்..!

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - மூன்று

21.1982.

இருபது வயதுகளில் இளைஞரெலாம் இன்பமுறும்
விருப்பமெலாம் அவன்துறந்து விதியின் வழிஏகினனே
தருவதற்கு நீர்வளந்தான் இன்றியது கருகுதல் போல்
தருவதற்கு எவருமின்றி திருவதற்கு ஏங்கினனே..!


22.1983.

கல்லூரி வாழ்வதனில் களிப்புமிகக் கண்டிடினும் 
கல்லூரில் வாழ்ந்துவந்த பாறைமன ஊர்மக்கள்
செல்லாத காசு இவன் செங்கல்வி பெறுவது ஏன்..?
சொல்லூற வாழ்த்திடினும் செயலூறத் தூற்றினரே..!


23. 1984.

இளங்காளை இவன்மெதுவாய் இளங்கலையன் ஆகினன்தான்
விளங்காத விதியதனை விதிர்விதிர்க்க வென்றனன்தான்
களங்கமிலா இவன் உள்ளம் கல்வியகம் பிரசித்தம்
களங்காணப் புறப்பட்டான் கல்வியதால் பணிதேடி..!


24.1985.

அற்றைக் கிருந்த பணியின்மைப் பிரச்சினையும் 
முற்றும் கற்றிடவும் முதுகலைக்கு வித்திடவும்
கற்றை நூல்நெய்து கலைவண்ணப் புடவைசெய்து
கற்றும் கொண்டிவனோ கலிவயிறும் நிறைத்தனனே..!


25.1986.

முதுகலைப் பயின்றிட்ட முன்வசந்த காலமதில்
புதுகலையாம் காதலிலும் கைதேர்ந்து சிறந்திடவே
வ்து கலையாள் வந்தனளே வாழ்வதற்கு வழிகாட்ட -
அதுகலைந்து போனதுமே மதுவதனில் மூழ்கினனே..!


26.1987

முதுகலையும் பணிகாட்டத் தவறிய நிலையதனில்
எதுவழி யென்றிவனும் தலைதெறிக்க நிற்கையிலே
புதுவழியாய்ப் புகுந்தனனே பத்திரிகை நிருபனாய்
அதுபோதா தென்றிவனும் இளங்கல்வி யும்பயின்றான்..!


27.1988.

பட்டங்கள் பல பெற்றும் பட்டபாடு தீரவில்லை
பிட்டங்கள் தெறிக்க இவன் பணிதேடிக் களைத்தபின்னர்
விட்டவிதி இவன் தன்னை விரட்டியதே தலைநகரம்
இட்டமாய் ஏவல்பல செய்தவனும் உயிர்வாழ்ந்தான்..!


28.1989.

கருணைக் கடலன்ன கடவுளவன் கண் திறக்க
திருவருளால் திறைதேடி வந்தவனும் பணிகண்டான்
ஒருவரது உதவியையும் ஒருபோதும் பெற்றிடாமல்
திருவதனின் முகம்கண்டான் முதன்முதலாய் வாழ்க்கையிலே..


29.1990.

பட்டதுன்பம் போனதென்று சிறுநிமிரல் கண்டவனோ
விட்டகுறையது தொடர வீடதனின் வறுமைதீர
கிட்டியது அத்தனையும் கொட்டியவன் குடும்பமது
முட்டமுதன் முதலாய் வயிறார உண்டதுவே..!


30.1991.

எத்தனை ஏக்கங்கள் ஏந்திழையின் ஈர்ப்புகள்
அத்தனையும் ஒவ்வொன்றாய் அகற்றியவன் தன்னில்லம்
முத்தனைய அன்னமதை முழுவயிறாய் உண்டிடவே
சித்தனைப் போலவே சிந்தையதில் சிறந்திருந்தான்..!

Friday, November 18, 2011

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - இரண்டு

11.1972.

பாலக் கல்வியது பவ்யமாய்க் கற்றபின்னர்
மேலே படித்திட வசதியேது மிலையெனினும்
ஓலமிட்டு இவன்செய்த ஓயாத போராட்டம்
குமர குருபரப் பள்ளியது கண்டதுவே...!


12, 1973

ஏழாம் வகுப்பினிலும் இவன் சீண்டல் குறையவில்லை
ஆழாக்கு உயரத்தில் இவனிருந்தும் சாந்தியிடம்
தாழாத காதலினால் மடலெழுதிச் சேர்த்துவிட்டு
ஏழையவன் இன்கனவாய் ஏலாமல் போனதுகாண்..!


13.1974.

கொட்டாமல் விழித்து நிதம் கூர்மையனாய் வாசித்து
எட்டாமது படிவத்தில் ஏழாம் தரம் வந்தபோழ்து
முட்டைக் கண்ணனவன் சந்தானம் மிகநட்பாய்
விட்டுவிட்டுச் சென்றனன் காலனின் அழைப்பதனால்..!


14.1975.

பதின்ம வயதுக்குள் பவ்யமாய் நுழைந்த யிவன்
சதியேதும் உணராமல் தீக்கூட்ட மதில்கலந்தான்
விதியென்றே சொல்லுவதோ வீண்பழிகள் ஏராளம்
மதிநுட்பச் செய்கையினால் மீண்டெழுந்து வந்தனனே..!


15.1976.

பத்தாம் வகுப்பதனில் பலகுழப்ப மேகங்கள் 
அத்தனையும் எதிர்நோக்கி ஏழ்மையையும் வென்றயிவன்
வித்தனாய் முகிழ்ந்தனன் தான் விதியின் கைவிலகிடுமோ
சொத்தேதும் இல்லாமல் சொந்தமாய் உழைத்தனனே..!


16.1977.

வசவுகள் வாழ்த்துகள் வறுமையதன் ஏளனங்கள்
கசவுகளின் இடியிடையே கனவுகளின் தாலாட்டு
நெசவதுதான் கைகொடுத்து நேர்மையனாய் வைத்திடவே
வசந்தமாய் மேல் கல்வி வாசித்தான் இவ்வேழை..!


17.1978.

ஏழையாய் பிறந்தனன் தான் என்றாலும் எப்போதும்
கோழையனாய் வாழவில்லை கோபம்தில் குறைவில்லை
வாழ வழிகண்டான் வாசித்தும் மேலுழைப்பில் 
தாழாமல் தறிநெய்தே தறிகெடாமல் வாழ்ந்துவந்தான்..!


18.1979.

பள்ளியதில் ஓர்வயது கூட்டியே பதிந்ததனால் 
கிள்ளியெடுக்கவும் சதையேது மின்றி இவன்
முள்ளில் வாழ்ந்தாற்போல் இக்கிள்ளை வாழ்ந்ததனால்
எள்ளிநகையாடும் எலும்பினனாய் இவன் தேகம்..!


19.1980.

கணிதமும் அறிவியலும் கலந்திவன்தான் படித்தாலும்
கணித்ததனில் மதிப்பெண்கள் கணிசமாய்ப் பெற்றாலும்
கணித்ததொரு விதியதனின் கைவழியே நடமிட்டு
கணிதக்கல்வியது இயலாமல் தமிழ்படித்தான்..!


20.1981.

போராட்டம் தீரவில்லை பொழுதுநிதம் வாட்டியது
சீராட்டம் செய்துதர சிறந்ததொரு உறவின்றி
ஏராரும் வழியதனில் எருதுகள் செல்வதுபோல்
நீராரும் கண்களுடன் நீந்தினனே விதியாற்றை..!

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - ஒன்று

ஐம்பதில் வளைந்திடுமோ..?

1.1962

அணங்கொருத்தி யவளுடந்தான் அண்ணலவ னிணைந்ததனால்
சுணங்கியவள் கருவாகிப் பெற்றனளோர் குழவியுந்தான்
இணங்கியவள் பெற்றதொரு சாபமுந்தான் பலித்ததுவோ
பிணங்கியவள் பிணமானாள் குழவியவன் அழுதனனே..!


2.1963.

பெற்றவளை யிழந்ததனால் முலையமுது இன்றியவன்
உற்றதொரு தந்தையவன் ஏழ்மையதன் பலன்சுகித்தான்
மற்றைவர் மழலையர்கள் மகிழ்வுடனே களிக்கையிலே
முற்றமதில் முட்டியது தேய்ந்திடவே வளர்ந்தனவன்..!


3.1964.

மெல்லமாய்க் காலூன்றி வெல்லமாய்ப் புன்னகைத்து
செல்லமாய் அணைப்போர்கள் இல்லனாய் வளர்கையிலே
இல்லையோர் சுகமெதுவும் முல்லையது வனந்தனிலே
மெல்லமாய் முகிழ்த்ததுபோல் கிள்ளையவன் வளர்ந்தனனே..!


4.1965.

வாரிய ணைத்தவனை உச்சிமோந்து கன்னமதில்
மாரியாய் முத்தமிட்டு மகிழ்வூட்ட யாருமின்றி
ஓரியாய் வளர்ந்தவனை ஓர்பாட்டி ஆதரித்தாள்
சேரிணையாய் யாருமின்றி சேவலது வளர்ந்ததுவே..!


5.1966.

சிங்கமது அவன்பிறப்புக் கட்டமதில் அமைந்ததனால்
தங்கமதைக் கட்டியன்பால் தளைபோட ஆருமின்றி
எங்கனும் அவன்சீற்றம் பிறவியதன் குணமாகி
வங்கமதன் புயலதுவாய் வகுப்பொன்றில் சேர்ந்தனனே..!


6.1967.

தனிமையதில் வளர்ந்ததனால் தண்மையது குறைவெனினும்
கனிமொழியில் சிறந்தவனாய் கல்வியதில் வல்லுனனாய்
இனியதொரு சில்வண்டு இசைப்பதுபோல் தமிழ்மொழியில்
பனிமழையாய் பண்ணிசைத்து பார்ப்பவரைக் கவர்ந்திழுத்தான்..!


7.1968

ஓருண்மை பகிர்வதனால் ஒழுங்கீனம் கருதாதீர்
பேருமது இராமன்தான் பெண்களுடன் பழகுவதில்
சீருமது குறைவில்லை சீண்டுவதில் சிறுமியரை
ஓருவகை கண்டவனும் ஒருவகையில் கிருட்டிணன்தான்..!


8.1969.

எண்வயதில் எண்மதிதான் எழுத்ததனில் விற்பனனாய்
கண்மையது இட்டவனும் காரிகைபோல் சிலநேரம்
பெண்மையதன் நளினமும் பெற்றதனால் களிப்புற்றான்
உண்மையதைப் பகிர்வதிலே ஒருபோதும் தயங்கிலனே..!


9.1970.

நான்காம் படிவமதில் பள்ளியதன் நாயகனாய்
வான்தானி வனெல்லை என்றெவரும் போற்றிடவே
மீன் தான் நீர்நிலையில் துள்ளியது வீழ்வது போல்
மான் தான் போலிவனும் ஏழ்மையையும் மறந்தனனே..!


10.1971

பள்ளிப் பருவமதில் சிட்டெனவே பறந்தாலும்
துள்ளித் திரிந்தவனும் தூய்மையனாய் வளர்ந்தாலும்
எள்ளி நகைத்தவர்கள் ஏழ்மையதை ரசித்தாலும்
உள்ளியது பெற்றனவன் கல்வியதில் சிறந்தனனே..!