Saturday, November 19, 2011

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - நான்கு

31.1992

இருமணம் ஒன்றியதா இல்லை நறுமணம் மயக்கியதா
திருமணம் முடிந்ததுவே திருவிழா நடந்ததுவே
இரு உடல் ஒன்றியதால் கருவனம் மலர்ந்ததுவே
ஒருவழி திறந்ததுவே உயிர்வதை தொடர்ந்ததுவே..!


32.1993

உலகியல் ஒழுகியதால் ஓர்உயிர் முகிழ்த்ததுகாண்
இலங்கிய திருமகள்தான் இதயமும் நிறைத்தனளே
சிலகணம் நினைத்ததும்தான் சீரியநினைவதுவாய்
கலங்கிய தாயவள்தான் கருணையில் பிறந்தனளோ..?


33.1994.

கற்றதோர் கல்வியதும் பெற்றதோர் அனுபவமும் 
உற்றதோர் நேர்மையனாய் உறுசெல்வம் சேர்த்ததுவே
மற்றதோர் கவலையில்லை யாயினுமோர் கவலை
பெற்றது தந்தையன்றோ ஈர்மணம் கொண்டிருந்தும்..!


34.1995

உடன்பிறவா தங்கையர்கள் ஒருதவ மிருந்தனரே 
கடன்பெற் றேனுமவன் கரைசேர்ப்ப னென்றனரே
விடமென் றறிந்திருந்தும் வினைப்பயன் மிகுந்ததனால்
கடமையின் பொருட்டவனும் கடுந்தவமிருந்தனனே..!


35.1996.

தேடாத இடமின்றி தேயாத ஓய்வின்றி
ஓடாத களமின்றி ஓயாமல் அவன் தேடி
ஆடாத நடமின்றி அயராமல் என்னாளும்
பாடாகப் பட்டவனும் தங்கைக்கு வரன்காண..!


36.1997.

வாழ்க்கையின் வனப்பதுவை வருந்தியும் கண்டவனோ
சீழ்க்கையின் ஒலிதனிலே சிலகாலம் கழிந்ததனால்
பாழ்க்கைதான் அவன்வாழ்வு என்றவன் தானிருக்க
தாழ்க்கை யுயராமல் தன்மகன் ஈன்றனனே..!


37.1998.

பட்டிடா பாடெல்லாம் பார்த்தபின் தங்கைக்கு
கிட்டிய வரனதுவாய் கிறங்கினன் மணச்செலவும் 
எட்டியதூரம் வரை எள்ளிநின்று எக்களிக்க
வட்டியில் வீழ்ந்தனன்காண் வாழ்க்கையில் தோற்றவனாய்..!


38.1999.

கிட்டிய செல்வமெலாம் கிடைக்கொரு ஆடெனவே
வட்டியெ னும்நரிதான் வகைவகையாய் உண்டதுவே
முட்டிய ரணம்தீர முகம்புதைத்து அழத்தோன்றும்
எட்டின உறவுகளோ எக்களித்து கொக்கரிக்கும்..!


39.2000.

தன்வாழ்வு போனதென்று தானழுது இருந்தாலும் 
மென்வாழ்வு வாழுகின்ற தன்சேய்கள் நலம்கொழிக்க
சின்னதோர் குறையதுவும் சிந்திடச் சம்மதியா
உன்னதன் அவன் தானேன உண்மையாய் விளம்பிடுவான்..!


40.2001.

கடமைக்குப் பெற்றதாய் பெற்றவன் கருதினாலும்
கடந்தநாள் கசப்பாகக் காரணமென் றிருந்தாலும் 
கடவுளுக் கிணையாய்த் தன்பெற்றவன் என்றதனால்
உடனிருந்து கருமங்கள் செய்ததொரு நன்மகன் தான்..!

No comments:

Post a Comment