Sunday, September 22, 2013

நினைவுகளின் வடுக்கள்..

நினைவுகளின் வடுக்கள்
________________________ 

வருடங்கள் கழிந்தன..
வடுக்கள் மறையவில்லை..

ஒருவருக்கொருவர் 
ஊட்டிவிட்ட கைகள்
இன்று தனித்தனி கவளங்களை 
உருட்டுகின்றன..

கண்களைத் துடைத்துவிட்ட கைகள்
ஓய்ந்துபோய்விட்டதால்
உப்பளக்குவியலாய் கண்ணீர்..

இருவேளை உணவுக்கிடையில் 
ஓராயிரம் சாப்பிட்டாயாக்கள்..

நான்கு நாட்கள் உண்ணவில்லை என்றாலும்
நாதியில்லை இன்று கேட்க..

உன்சக்தி சரிபாதியாய் இருந்தபோது 
உலக உருண்டை கால்பந்தானது..
காற்றுப் பிரிந்துபோய் இன்று
உடலே கால் பந்தானது...

இந்நிலை வருமென்றிருந்தால்
முன்னமேயே 
மரித்திருப்போம்..

உணர்வற்ற உடலாய் இன்று
காலத்தைச் செரித்திருக்கின்றோம்...

Thursday, August 29, 2013

தொலைந்து விட்ட நாம்...

தொலைந்து விட்ட நாம்..
_________________________

ஒற்றை நொடிக்குள் நாம்
ஒன்றிக் கிடந்தோம்

ஓர் ஒளியாண்டுத் தொலைவுக்குள்
தொலைந்து போனது எப்போது..?

காலனும் பிரிக்காத காதலென்றாய் நீ
காலமும் பிரிக்காத காதலென்றேன் நான்
ஒரு மூன்றாம் மனிதனின் சூதுக்குள்
கவ்வப்பட்டோம் நாம்..!

கோர்த்திருந்த நம்மனத்தினுள்
நீர்த்துப் போன நினைவலைகளுக்குள்
நீங்கிவிட்ட நமது கனவுகளை
மீட்டுக்கொள்வது இனி எங்ஙனம்..?

முதற்காதல் மட்டுமல்ல..
முறிந்த காதலும்
மறக்க இயலாதது தான்..!





Tuesday, April 23, 2013

ஒரு கணம் சிந்திப்பாய்..!

ஒரு கணம் சிந்திப்பாய்...!

உள்மூச்சு வாங்கியே ஒருகணம் மயங்கி நீ
கள்ளுண்ணும் வண்டாய் மதிமயங்கும் போதும்

எள்ளிட்ட செக்கினில் நெய்வடிதல் போலே
தள்ளாமல் நீயவனைக் கலவிடும் போதும் 

முள்மீது அமர்ந்த முதியவன் போல்நீ 
தள்ளாமை கொண்டே தடுமாறும் போதும்..

வெள்ளாமை இல்லாத உழவனைப் போல்நீ
உள்ளுக்குள் மாண்டு மருகிடும் போதும்..

புள்ளின இணையதை புலையவன் குத்திட
சுள்ளெனச் சுருண்டிடும் இணையதைப் போல்நீ

உள்ளிய தெல்லாம் உருக்குலை யும்நாள் 
தெள்ளிய நீரில் கற்களின் மோதலில் 

மெள்ளவே எழும்பிடும் வளையமாய் உன்மனம்
உள்ளிடும் என்னை தவிர்ப்பையோ அதனை..?

Monday, February 18, 2013

தேமாங்காய்.. புளிமாங்காய்...

Image

தேமாங்காய்.. புளிமாங்காய்..

தேமாங்காய்.. புளிமாங்காய் .. 
பாங்காய்த்தான் வாசித்தாள்..
பூசனிக்காய் .. முருங்கைக்காய்
இடையிடையே யோசித்தாள்..

வடுமாங்காய் போலிவளோ 
நெடுங்கனவு கண்டிருந்தாள்..
சிடுமூஞ்சித் தகப்பனையும்
கடுந்தாங்கி வளர்ந்திடுவாள்..

தெம்மாங்காய் பாட்டுபாடி 
கம்மாயில் ஓடியவள்..
அம்மா’ங்காய் இறந்தவுடன்
சும்மாடில் காய் சுமந்தாள்..

தீம்போக்காய் மேல்நின்று
மேம்போக்காய் மேய்வோரின்
பார்வைக்காய் துடித்திடுவாள்
தீமைக்காய் அழுதிடுவாள்..

ஏழைக்காய் வாய்த்திட்ட 
விதிக்காய் நினைப்பாளோ..?
கோழையாய் மடிந்திடாமல்
வாழத்தான் நினைப்பாளோ..?

காய்விற்றுப் பிழைத்தாலும்
காயம் விற்றுப் பிழைக்காமல்
செல்வாக்காய் வாழ்வாளோ..?
சொல்வாக்காய்க் கூறுங்களேன்..!!

கண்ணனின் மீரா - ஒரு காதலின் வெற்றி..!


கண்ணனின் மீரா - ஒரு காதலின் வெற்றி..!

கலைவேந்தன்


1.

சோராமல் எனைநோக்கித் தொழுதிடு முந்தனுடன்
சேராமல் இருந்திடக் கன்னெஞ்ச முண்டோசொல்
பேராயுதந் தனைத் தூர்த்திடு மென்வலிமை
மீராஉன் உருகுதலில் மாண்டது என்சகியே..!

2. 

எனைநாளும் நீதுதித்தாய் எனைநோக்கிக் கண்வளர்த்தாய்
முனைந்தோர்க் கெப்போதும் முறிவிலை நீயறிவாய்
முனைமுள்ளில் நடமாடும் பனித்துளி போல்நீதான் 
நினைத்தாயே உன்னருகில் நானுண்டு என்சகியே..!

3.

நல்லோர்க்கும் இல்லோர்க்கும் என்னாளும் குறையாமல்
வல்லமைக் கேற்றாற்போல் வாரியே வழங்கிடும்
நல்லூழின் உள்ளார்ந்த கருப்பொருளாய் யானுண்டு
நல்லோளே உன்னுடனே நானுண்டு என்சகியே..!

4.

கொற்றவனை உற்றவனாய் பெற்றவள்நீ யென்றாலும்
மற்றவர்தாம் பெற்றதொரு சிற்றுணர்வுப் பார்வையின்முன்
குற்றமாய்நீ கண்ணனை நினைந்தது நிலைத்ததனால்
அற்றையவர் நஞ்சுமதை நீயுண்டனை என்சகியே..!

5.

அஞ்சனையின் அன்புமகன் ஆண்டொருநாள் பெற்றதுபோல்
பஞ்சுமலர் மனமுடையாள் பெற்றிருந்தாய் உளவலிமை
மஞ்சுவது மறைத்ததனால் மறைந்திடுமோ ஆதவமும்
தஞ்சமென வந்தவளே நானுண்டு என்சகியே..!

6.

எந்தோளில் சாய்ந்திருந்தாய் உன்நிழலில் யானிருந்தேன்
செந்தாழை மடலதுவில் மணம்மறைந்த வண்ணம்
முந்தானை தனிலெனையே முடிந்துவைத்தாய் என்னவளே
தந்தேனு னக்கெனையே தாங்கிடுவாய் என்சகியே..!

7

சிற்றாடை யுடுத்தியுனை நல்லாடியில் ரசித்தனைநீ
அற்றைப் பொழுதுமுதல் பெற்றனை எனையுன்னுள்
கற்றைச் சிறுகுழலில் என்குழலும் சிக்கியதோ
எற்றைக்கும் நானுனக்கு எல்லாமே என்சகியே..!

8.

முற்றாயுனை யுணர்ந்து முழுமதியாய் ஆனபின்னர்
நற்றாயும் நல்லதொரு பாங்கியரும் ஆயினன்யான்
பற்றோடு எனைநினைந்து பாட்டினில் நீமகிழ்ந்தாய்
பெற்றாயே உன்தவத்தால் பெருமாட்டி என்சகியே..!

9.

சுற்றியெனைத் தொழுதுவர சுந்தரச் சேவகிகள் 
பற்றியெனைக் களித்திட பாவையர்கள் கோடிநிதம்
வற்றிடா ஊற்றெனவே வழங்கினர்தான் காதலினை
சிற்றிடையாள் நீஎனக்கு எப்போதும் என்சகியே..!

Tuesday, February 5, 2013

பாவம் ... அவன்..!


பாவம் .. அவன்..!

உன் புதுக்காதலனுடன்
உனது புது அனுபவங்களில்
நமது அனுபவங்களின் எச்சமிருக்கலாம்.

ஒருசில நெருடலான கணங்கள்
உனக்குள் எட்டிப்பார்த்திருக்கலாம்..

குதுகல நினைவுகளின் ஊடே
உன் பழைய கத்திக் குத்துகள்
மின்னலாய் வந்து போயிருக்கலாம்..

இனி
உனக்குள் உறுத்தல் வந்துபோக
அவசியமில்லை..

நமது முத்தங்களால் நைந்துபோன
எனது உதடுகளை
செப்பனிட்டுவிட்டேன்..

முதுகில் உறைந்த ரத்தத்துளிகளை
மீண்டும் துளிர்க்கவைத்துவிட்டேன்..

அட்டை போல் ஒட்டி இருந்த
உனது நினைவுகளை
ரத்தம் பீய்ச்சிட பிய்த்து எறிந்துவிட்டேன்.

உனது உரசல் இல்லாமல்
உயிர்க்கக் கற்றுவிட்டேன்.

தலையணையின் ஈரங்களை
பிரிவுக் கதிர்களால்
உலர்த்தியும் விட்டேன்.

நமது சங்கமக் குமிழ்களை
நைச்சியமாய் உடைத்தெறிந்துவிட்டேன்.

உன் புதுக்காதலனுக்கும் இந்த
புதுப்பித்துக்கொள்ளும் கலையைக்
கற்றுக்கொடுத்துவிடு..

பாவம்..

அவனாவது பிழைத்துப் போகட்டும்.

Monday, December 24, 2012

கவிதை நூல் வெளியீட்டு விழா..

இன்று 23. 12. 2012 ஞாயிறு அன்று சென்னை மேற்குமாம்பலத்தில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் எனது ‘’ ஒரு கவிஞனின் காகிதம். ‘’ கவிதை நூல் வெளியீட்டு விழா நிழந்தேறியது. கலைமாமணி முனைவர் திரு கரு நாகராஜன் அவர்கள் தலைமையில் குணச்சித்திர நடிகை திருமதி வடிவுக்கரசி அவர்கள் நூலை வெளியிட்டு பொன்னாடை போர்த்தி என்னை வாழ்த்தினார்கள். அவ்விழாவின் புகைப்படங்கள் சில.


















Tuesday, December 18, 2012

விழா அழைப்பிதழ் - கலைவேந்தன்

அன்பார்ந்த நண்பர்களே,

உங்கள் கலைவேந்தனின் கவிதைத் தொகுப்பு ‘’ ஒரு கவிஞனின் காகிதங்கள் ‘’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.


இதோ அழைப்பிதழ் உங்களுக்காக...

படம்

புத்தக அமைப்பின் படம் :

படம்


நன்றியுடன் என்றும் உங்கள்

கலைவேந்தன்

Saturday, December 1, 2012

என்ன வாழ்க்கை இது..?

என்ன வாழ்க்கை இது...? 

வாழ்நாள் முழுதும் நான்
வடுக்களால் வாழ்ந்திருந்தேன்..
அழுக்குஎன் முகத்திருக்க
ஆடியைத் துடைத்திருந்தேன்.. 

எண்ணற்ற எதிரிகள் 
என்னெதிரில் காத்திருக்க
புண்ணாக்கும் நட்புகளைப்
புறத்தினில் வளர்த்திருந்தேன்... 

விண்ணில் மிதப்பதாய் 
வீண்கனவு பலகண்டேன்...
புண்ணில் வளர்ந்திருந்த
புழுக்களைப் புறக்கணித்தேன்..

கண்விழித்தேன் காரிருளில்
கசக்கியபின் காண்கின்றேன்..
முன்னைவிட முதிர்வுடன்
முண்டிநிற்கும் முதுமைதனை...


’’ ஊதித் தள்ளியபின் 
அணைந்துவிடும் தீவர்த்தி
உலகை எரித்திடுமோ
உன்னுறுதி அழித்திடுமோ..?

இன்றுந்தன் கண்ணெதிரில் 
நன்று நடம் ஆடிநிற்கும்
நச்சுக் கொடிகளையும் 
நன்றாய் அறுத்தெறிவாய்..’’


நன்றாய் முன்வந்து 
நான் வணங்கும் தெய்வங்கள்
நன்றே சொன்னதம்மா..
நம்பிக்கை பிறந்ததம்மா..

Thursday, November 1, 2012

மோன வெளிகள்...

மோனவெளிகள்..

ஒரு பொட்டல் வெளியில் 
யாருமில்லா மோனத்தில் 
ஓர் அமைதி 
கருவுற்று விரிவுற்றுக்
காத்திருக்கிறது..

ஆங்கே ஓர் 
ஆசையில்லை.. 
வில்லங்கமான
விசனமில்லை...

கண்ணிமைகள் அசைத்தல் கூட
கடூரமான சத்தங்களாய் மாறிப்போய்
என் காலடியில் 
விரிந்து பரவும் ஓர்
கவினுலகம் இது..

ஈங்கே 
வாட்டிவதைக்கும் 
பசியில்லை எனவே பட்டினியில்லை..
துவட்டித் துவளவைக்கும் 
தாகங்கள் இல்லை எனவே
தட்டிப்பறித்தல் 
இல்லவே இல்லை...

அமைதிப் பூங்காவாய் என் மனம்..
மவுனமே இனிய சங்கீதமாய் 
மனதைக் கொள்ளை கொள்ளும்
உருவிலா விரல்கள் என் மனதை
வீணையாய் மீட்டி நிற்கும்..

ஓர் மென்மையான 
ஆழ்நிலை உறக்கத்தை
மெல்லப்பரவ விட்டு
உயிரை இலேசாக்கி 
எங்கோ பறக்க வைக்கும்..!!


கீழ்க்கண்ட ஆங்கிலக்கவிதையின் மொழிபெயர்ப்பு இது..!


Against Nature....

On a desert
Without a single creature
With no longings
With no desire
With a heart
That is still !
All is calm
No angry movements
Only the even flutter
Of the eyelids
Covering the vastness 
Of the firmament
And the stretch of the land 
below my feet...
No quench or apetite
For , A palatable peace
fills my mind
Not a single sound
Yet a silent music
Gently touches my heart
The formless fingers 
Soothing and leading it 
On and on to a 
devouring sleep...