Monday, September 27, 2010

ஒரு கவிஞனின் கடைசி வரிகள் - அடுத்த பகுதி..

இன்றைய குழந்தைகள் ஜனிக்கும்போதே
இணையத்தில்
பிறக்கும் வித்தையறிந்து
உலகை எட்டிப்பார்க்கின்றன..

தாய்ப்பால் மகத்துவம் குறித்து
தாய்க்கே கூகிள் உதவியால்
தகவல்தரும் குழந்தைகள் இன்று...

அந்த கவிஞனின் இளமைப்பருவத்திலோ
மார்கோனியும் மர்ஃபியும்தான்
இறக்கையற்ற தேவதைகள்...

இரண்டே முக்கால் ரூபாய் லைசன்சை
மாதந்திரம் கட்ட வழியின்றி
குட்டி டிரான்சிஸ்டரை பதுக்கிவைத்தது
அந்தக்காலம்...

பதினொருவயதில்
அந்தக்கவிஞனுக்கு கல்வித்தாகம்
அவன் தந்தைக்கோ கலவித்தாகம்..
ஆனாலும் அவனை பாதிக்கவிலலை
தந்தையின் தாக்கம்...

ஏழாம்வகுப்பின் டி பிரிவு சாந்திக்கு
எழுதியது முதல் காதல் கடிதம்
அதில் கூட
இப்படிக்கு உண்மையுள்ள என்றே
முடித்தது அவன் நாகரிகம்...
சாந்திக்கோ அது தீயைத்தொட்ட
குழந்தையின் மனநிலை...

நான்கு கிலோமீட்டர் நிதமும்
நடந்து சென்றே
அவனது பள்ளிக்காலம்
கடந்து சென்றது...

எட்டாம் வகுப்பு சந்தானம்
எட்டாத சில காமச்செய்திகளைப்
பகிர்ந்து கொண்ட போது
உயிர் நண்பனாய் மாறினாலும்
அவனது
உயிர் பிரிந்தது நாய்கடியால்...

நட்புக்கு முதல் அடி கொடுத்த மரணம்..
நட்பிலிருந்தே அவனை
நாளும் பயமுறுத்தி விலக்கியது....
இவன் நட்பால் பிறர்உயிர்போகும் என்றே
எண்ணற்ற ஆண்டுகள் எண்ணி உளைந்தான்...

அண்ணனில்லை இவனை
அடித்து துன்புறுத்த
அறிவுரை சொல்லி வழி நடத்த...
எண்ணம் போல் வாழ்ந்தான்
கல்வியில் மிகச்சிறந்தான்...
கமலா டீச்சரின்
செல்லக்குழந்தையானான்...!

தொடர வாய்ப்புண்டு...

ஒரு கவிஞனின் கடைசி வரிகள்...

ஒரு கவிஞனின் கடைசி வரிகள்...

அந்த கவிஞன் பிறந்த போது
அவன் தொப்புள் கொடியிலிருந்து
தாயைப்பிரித்து புதைக்க நேர்ந்தது...

முலைப்பால் இல்லாது பிழைப்பானா இவன்
மலைப்பால் வியர்த்தன உற்றவர் மனங்கள்...
தாயின் ஸ்தானத்தை கொடுத்துத் தாங்கின
பசுவின் ஸ்தனங்கள்...

ஒற்றைக்கொடியாய் உலாவந்தது
அந்த சிற்றுளி...
அது செதுக்கிய சோகச்சிற்பங்கள்
காட்சிக்கின்றியே கரைந்து போயின...

வந்த தாயின் முலைக்கரங்கள்
சொந்த குழவிக்கே அன்புக்கரங்களாயின...
சோர்ந்து போன இந்தக் குழந்தை
சோகவரிகளை சொந்தமாக்கியது...

ஓர்வயதில் மெல்ல நடந்து
தானே விழுந்து தானே எழுந்து
காயங்களைக் கணக்குப் பார்த்து
சாபங்களை லாபங்களாக்கின..

இரண்டாம் வயதில் ஈரடிவைத்து
முரண்டு பிடித்த விதியின்
முரட்டுக்கரங்களை
விரட்டி வளர்ந்தது அந்தக் குழந்தை...


சோற்றுப்பாலிலும் நீற்றுப்பாலிலும்
ஆற்றிக்கொண்டது தன் அரும்பசியை
வேற்றுமனிதர் தேற்றுவாரின்றி
வேதனை தீர்த்தது மூன்றாம் வயதில்...

நல்ல குழந்தைகள் நாலில் பேசுமாம்
தெய்வக்குழந்தையோ நாட்பட பேசுமாம்..
ஜுனைதாவின் ஃப்ராக்கைப் பிடித்து
சுற்றிக்களித்தது நான்காம்வயதில்...

ஆரம்பப் பள்ளியின் வாசலைமிதித்து
வாழ்க்கையின் புதுக்கணக்கு போடச்சென்றதும்
தமிழைக்கரைத்துக் குடிக்கப்போகுமுன்
அகரம் முதலாய் அளந்ததும் ஐந்தில்...!

குளத்தங்கரையின் குதூகலப்பள்ளியில்
நிலத்தடி நீரும் அமெரிக்க கோதுமையும்
வளர்த்து வந்தது வாடிய பயிரை
வயிற்றுக்காகவே விடுமுறைஇல்லை...

பட்டு நூலும் சொட்டுத் தேனீரும்
விட்டுவிடாமல் உயிரைக்காத்ததாம்..
வரிக்கு வரிதமிழைக் குடித்தவன்
வரிக்கியுடன் வாழ்க்கை கழித்தான்..

பத்மினி அக்காவும் பானுமதி அக்காவும்
தனலட்சுமி தோழியும் விஜயாவும் வாசுகியும்
துரைப்பயலும் சேகரும் சேர்ந்து
பத்து வயதுவரை இவனுடன்
பாங்காய் களித்தனர் பால்யவயதில்...

தொடர வாய்ப்புண்டு...!..

Thursday, September 9, 2010

எங்கிருந்து வந்தாய்...?




எங்கிருந்து வந்தாய்...?


எல்லையற்ற துன்பங்களுடன்
நான்ஏங்கி நின்றபோது
தொல்லைகளைப் போக்கி
நீ தாங்கி நின்றாய்....
வறண்ட என் கண்களை
வருத்தமுடன் துடைத்தாய்
சூழ்ந்து நின்ற துன்பங்களை
கருத்துடன் உடைத்தாய்....

நல்லவைகள் மட்டுமுனைச் சேருமென்றும்
சில்லறைக் கவலைகளை சிதறவிடுஎன்றும்
சொல்லிச் சொல்லியே சொர்க்கம் காட்டி நின்றாய்....

வைகறை மேகங்கள் பொய்த்தாலும் பொய்க்கா
வைகை நதியாய் மனமாட்சி செய்தாய்.....
கைகளால் துவட்டியே என்
கவலைநீரை உலர்த்தினாய்..

என் செய்தேன் நானுனக்கு
என்றே நான் கணக்கிட்டேன்...

தாயே... நீ என்னை
புன்செய்நிலமாக்கி
புழுதி நீக்கி நின்றாய்...
நன்செய் மண்ணைப்போல்
அமைதியுடன் ஏற்றேன்..
உழைத்திட்ட விவசாயி
வருமானம் பார்த்ததில்லை...
பிழைத்து நிற்கும் உயிர்களுக்கு
உணவாக்கி மகிழ்வான்..

என்னை உழுதிட்ட
விவசாயி நீ எனக்கு....
என்ன தருவேன் எனைத்தவிர
ஏதுமில்லை என்னிடத்து....!