Friday, June 1, 2007

பெண்ணடிமை

ஈன்றெடுத்து ஆண்மையை
சான்றோனாக்கும் பெண்மையை---

இட்டழைக்கும் போதெல்லாம்
கட்டிலுக்கு வந்து நிற்கும்
அந்த கட்டழகுப் பெட்டகத்தை---

சுட்டிச் சொற்களால் அன்புக்
கட்டிகளை ஊட்டுகின்ற
அந்த சிட்டுக் குருவிகளை---

தோல்வி கண்டு துவளும் போது
தோள் கொடுத்து ஆண்களை
ஊக்குவிக்கும் தோகையை---

இந்த
ஆண் வர்க்கச் சாட்டைகள்
ஆட்டி வைப்பது ஏன் ஏன்?

காயங்கள் விழும்போது
காதல் மருந்திடுவாள்...

மாயங்கள் மறைக்கும்போது
மாற்று மருந்திடுவாள்...

வாழ்க்கைப் படகை
வாய்ப்பாய் செலுத்துவாள்...


குழப்பத்தின் குழந்தைகள் ஆண்கள்
தெளிவு விளக்கேற்றுவது பெண்கள் !

நஷ்டம் கண்ட வியாபாரிகள் ஆண்கள்
கஷ்டத்தில் உதவுவது பெண்கள் !

ஆயிரம் சிந்தனையில் ஆண்கள்
அளவோடு சிந்திப்பது பெண்கள் !

போற்றவேண்டாம் அவர்களை
தூற்றாமல் காத்திருங்கள் பெண்களை !

பெண்கள்
பட்டங்கள் ஆளவந்தால்
பரிகசிக்கப் படுகிறார்கள்....
சட்டங்கள் ஏற்ற வந்தால்
சபிக்கப்படுகிறார்கள்...
இங்கே ஆண்களின்
சல்லடைச் சட்டங்களே
சரித்திரமாக்கப் படுகின்றன...

பெண் வாசகர்கள்
தங்கள் வாழ்க்கைப் பத்திரிகையில்
வாழ்நாள் உறுப்பினராக
முன் பணம் கட்டுமுன்
முதியோராகின்றனர்...

காதலைப் பற்றி காவியங்களில்
கண்ணீர் வடித்துவிட்டு...
வாழ்க்கையில்
பெண்களை மட்டுமே ஓடுகாலி
என்கிறார்கள்...
ஏனென்றால்
அவன் ஆண்பிள்ளையாம்
சாண்பிள்ளையே ஆனாலும்!

நம்பிக்கை தீபமேற்றி
மனைபுகும் நல்லாளை
நாலு காசுக்காக
விலை பேசும் விலைமகன்கள்!

விடிவை எதிர் நோக்கி
விழிகளில் கனவுடன் அவள்...
விலை பேசி பேசி வீணாய்ப் போகும்
விடியா முக மூத்தவளின் சகோதரர்கள்
சில ஆண்கள்!..

பெண்ணுரிமை சமத்துவம்
ஏட்டளவில்தான் இன்றும்
நடைமுறையில் இன்னும்
நல்லதங்காள் கதைகள்தான்!!!

No comments:

Post a Comment