Sunday, September 22, 2013

நினைவுகளின் வடுக்கள்..

நினைவுகளின் வடுக்கள்
________________________ 

வருடங்கள் கழிந்தன..
வடுக்கள் மறையவில்லை..

ஒருவருக்கொருவர் 
ஊட்டிவிட்ட கைகள்
இன்று தனித்தனி கவளங்களை 
உருட்டுகின்றன..

கண்களைத் துடைத்துவிட்ட கைகள்
ஓய்ந்துபோய்விட்டதால்
உப்பளக்குவியலாய் கண்ணீர்..

இருவேளை உணவுக்கிடையில் 
ஓராயிரம் சாப்பிட்டாயாக்கள்..

நான்கு நாட்கள் உண்ணவில்லை என்றாலும்
நாதியில்லை இன்று கேட்க..

உன்சக்தி சரிபாதியாய் இருந்தபோது 
உலக உருண்டை கால்பந்தானது..
காற்றுப் பிரிந்துபோய் இன்று
உடலே கால் பந்தானது...

இந்நிலை வருமென்றிருந்தால்
முன்னமேயே 
மரித்திருப்போம்..

உணர்வற்ற உடலாய் இன்று
காலத்தைச் செரித்திருக்கின்றோம்...

Thursday, August 29, 2013

தொலைந்து விட்ட நாம்...

தொலைந்து விட்ட நாம்..
_________________________

ஒற்றை நொடிக்குள் நாம்
ஒன்றிக் கிடந்தோம்

ஓர் ஒளியாண்டுத் தொலைவுக்குள்
தொலைந்து போனது எப்போது..?

காலனும் பிரிக்காத காதலென்றாய் நீ
காலமும் பிரிக்காத காதலென்றேன் நான்
ஒரு மூன்றாம் மனிதனின் சூதுக்குள்
கவ்வப்பட்டோம் நாம்..!

கோர்த்திருந்த நம்மனத்தினுள்
நீர்த்துப் போன நினைவலைகளுக்குள்
நீங்கிவிட்ட நமது கனவுகளை
மீட்டுக்கொள்வது இனி எங்ஙனம்..?

முதற்காதல் மட்டுமல்ல..
முறிந்த காதலும்
மறக்க இயலாதது தான்..!





Tuesday, April 23, 2013

ஒரு கணம் சிந்திப்பாய்..!

ஒரு கணம் சிந்திப்பாய்...!

உள்மூச்சு வாங்கியே ஒருகணம் மயங்கி நீ
கள்ளுண்ணும் வண்டாய் மதிமயங்கும் போதும்

எள்ளிட்ட செக்கினில் நெய்வடிதல் போலே
தள்ளாமல் நீயவனைக் கலவிடும் போதும் 

முள்மீது அமர்ந்த முதியவன் போல்நீ 
தள்ளாமை கொண்டே தடுமாறும் போதும்..

வெள்ளாமை இல்லாத உழவனைப் போல்நீ
உள்ளுக்குள் மாண்டு மருகிடும் போதும்..

புள்ளின இணையதை புலையவன் குத்திட
சுள்ளெனச் சுருண்டிடும் இணையதைப் போல்நீ

உள்ளிய தெல்லாம் உருக்குலை யும்நாள் 
தெள்ளிய நீரில் கற்களின் மோதலில் 

மெள்ளவே எழும்பிடும் வளையமாய் உன்மனம்
உள்ளிடும் என்னை தவிர்ப்பையோ அதனை..?

Monday, February 18, 2013

தேமாங்காய்.. புளிமாங்காய்...

Image

தேமாங்காய்.. புளிமாங்காய்..

தேமாங்காய்.. புளிமாங்காய் .. 
பாங்காய்த்தான் வாசித்தாள்..
பூசனிக்காய் .. முருங்கைக்காய்
இடையிடையே யோசித்தாள்..

வடுமாங்காய் போலிவளோ 
நெடுங்கனவு கண்டிருந்தாள்..
சிடுமூஞ்சித் தகப்பனையும்
கடுந்தாங்கி வளர்ந்திடுவாள்..

தெம்மாங்காய் பாட்டுபாடி 
கம்மாயில் ஓடியவள்..
அம்மா’ங்காய் இறந்தவுடன்
சும்மாடில் காய் சுமந்தாள்..

தீம்போக்காய் மேல்நின்று
மேம்போக்காய் மேய்வோரின்
பார்வைக்காய் துடித்திடுவாள்
தீமைக்காய் அழுதிடுவாள்..

ஏழைக்காய் வாய்த்திட்ட 
விதிக்காய் நினைப்பாளோ..?
கோழையாய் மடிந்திடாமல்
வாழத்தான் நினைப்பாளோ..?

காய்விற்றுப் பிழைத்தாலும்
காயம் விற்றுப் பிழைக்காமல்
செல்வாக்காய் வாழ்வாளோ..?
சொல்வாக்காய்க் கூறுங்களேன்..!!

கண்ணனின் மீரா - ஒரு காதலின் வெற்றி..!


கண்ணனின் மீரா - ஒரு காதலின் வெற்றி..!

கலைவேந்தன்


1.

சோராமல் எனைநோக்கித் தொழுதிடு முந்தனுடன்
சேராமல் இருந்திடக் கன்னெஞ்ச முண்டோசொல்
பேராயுதந் தனைத் தூர்த்திடு மென்வலிமை
மீராஉன் உருகுதலில் மாண்டது என்சகியே..!

2. 

எனைநாளும் நீதுதித்தாய் எனைநோக்கிக் கண்வளர்த்தாய்
முனைந்தோர்க் கெப்போதும் முறிவிலை நீயறிவாய்
முனைமுள்ளில் நடமாடும் பனித்துளி போல்நீதான் 
நினைத்தாயே உன்னருகில் நானுண்டு என்சகியே..!

3.

நல்லோர்க்கும் இல்லோர்க்கும் என்னாளும் குறையாமல்
வல்லமைக் கேற்றாற்போல் வாரியே வழங்கிடும்
நல்லூழின் உள்ளார்ந்த கருப்பொருளாய் யானுண்டு
நல்லோளே உன்னுடனே நானுண்டு என்சகியே..!

4.

கொற்றவனை உற்றவனாய் பெற்றவள்நீ யென்றாலும்
மற்றவர்தாம் பெற்றதொரு சிற்றுணர்வுப் பார்வையின்முன்
குற்றமாய்நீ கண்ணனை நினைந்தது நிலைத்ததனால்
அற்றையவர் நஞ்சுமதை நீயுண்டனை என்சகியே..!

5.

அஞ்சனையின் அன்புமகன் ஆண்டொருநாள் பெற்றதுபோல்
பஞ்சுமலர் மனமுடையாள் பெற்றிருந்தாய் உளவலிமை
மஞ்சுவது மறைத்ததனால் மறைந்திடுமோ ஆதவமும்
தஞ்சமென வந்தவளே நானுண்டு என்சகியே..!

6.

எந்தோளில் சாய்ந்திருந்தாய் உன்நிழலில் யானிருந்தேன்
செந்தாழை மடலதுவில் மணம்மறைந்த வண்ணம்
முந்தானை தனிலெனையே முடிந்துவைத்தாய் என்னவளே
தந்தேனு னக்கெனையே தாங்கிடுவாய் என்சகியே..!

7

சிற்றாடை யுடுத்தியுனை நல்லாடியில் ரசித்தனைநீ
அற்றைப் பொழுதுமுதல் பெற்றனை எனையுன்னுள்
கற்றைச் சிறுகுழலில் என்குழலும் சிக்கியதோ
எற்றைக்கும் நானுனக்கு எல்லாமே என்சகியே..!

8.

முற்றாயுனை யுணர்ந்து முழுமதியாய் ஆனபின்னர்
நற்றாயும் நல்லதொரு பாங்கியரும் ஆயினன்யான்
பற்றோடு எனைநினைந்து பாட்டினில் நீமகிழ்ந்தாய்
பெற்றாயே உன்தவத்தால் பெருமாட்டி என்சகியே..!

9.

சுற்றியெனைத் தொழுதுவர சுந்தரச் சேவகிகள் 
பற்றியெனைக் களித்திட பாவையர்கள் கோடிநிதம்
வற்றிடா ஊற்றெனவே வழங்கினர்தான் காதலினை
சிற்றிடையாள் நீஎனக்கு எப்போதும் என்சகியே..!

Tuesday, February 5, 2013

பாவம் ... அவன்..!


பாவம் .. அவன்..!

உன் புதுக்காதலனுடன்
உனது புது அனுபவங்களில்
நமது அனுபவங்களின் எச்சமிருக்கலாம்.

ஒருசில நெருடலான கணங்கள்
உனக்குள் எட்டிப்பார்த்திருக்கலாம்..

குதுகல நினைவுகளின் ஊடே
உன் பழைய கத்திக் குத்துகள்
மின்னலாய் வந்து போயிருக்கலாம்..

இனி
உனக்குள் உறுத்தல் வந்துபோக
அவசியமில்லை..

நமது முத்தங்களால் நைந்துபோன
எனது உதடுகளை
செப்பனிட்டுவிட்டேன்..

முதுகில் உறைந்த ரத்தத்துளிகளை
மீண்டும் துளிர்க்கவைத்துவிட்டேன்..

அட்டை போல் ஒட்டி இருந்த
உனது நினைவுகளை
ரத்தம் பீய்ச்சிட பிய்த்து எறிந்துவிட்டேன்.

உனது உரசல் இல்லாமல்
உயிர்க்கக் கற்றுவிட்டேன்.

தலையணையின் ஈரங்களை
பிரிவுக் கதிர்களால்
உலர்த்தியும் விட்டேன்.

நமது சங்கமக் குமிழ்களை
நைச்சியமாய் உடைத்தெறிந்துவிட்டேன்.

உன் புதுக்காதலனுக்கும் இந்த
புதுப்பித்துக்கொள்ளும் கலையைக்
கற்றுக்கொடுத்துவிடு..

பாவம்..

அவனாவது பிழைத்துப் போகட்டும்.